தொடர்கதை: காதல் திருவிழா

அத்தியாயம் – 18

கல்பனா சன்னாசி

முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க :

அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3
அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6
அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9
அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12
அத்தியாயம்-13 அத்தியாயம்-14 அத்தியாயம்-15
அத்தியாயம்-16 அத்தியாயம்-17

ழைய நினைவுகளில் இருந்து மீண்ட சுப்ரியா போர்வையை விலக்கி வெளியே வந்தாள்.

சாவித்ரி இன்னும் கத்திக் கொண்டிருந்தாள்.

இவளுக்குப் புத்தி பேதலித்து விட்டதாக அரற்றினாள்.

கண்டுகொள்ளாமல் நாளை நகர்த்தினாள் சுப்ரியா.

மதியம் போல் வக்கீலிடம் இருந்து போன் வந்தது.

“செவ்வாய் கிழமை முதல் கவுன்சிலிங் செஷன் இருக்கு. ரெடியா இருங்க.”

இந்த முறை நீதிமன்ற வளாகத்தை மிதிக்கும்போது அவ்வளவாக பதட்டம் இருக்கவில்லை சுப்ரியாவுக்கு.

ஆனால் வண்டி வண்டியாக கவலை மட்டும் மனசுக்குள்.

எவ்வளவு முயற்சித்தும் விழிகளில் தெரிந்த சோகத்தை மறைக்க முடியவில்லை.

அஷோக் வந்திருந்தான் – தந்தையுடன்.

மெலிந்திருந்தான்.

அவன் பார்வையில் சமீப காலமாகத் தெரிகிற வன்மம் சற்று குறைவாக இருக்கிற மாதிரி தோன்றியது சுப்ரியாவுக்கு.

பழைய பரிவு கூட லேசாக எட்டிப் பார்த்ததோ?

ச்ச்சே … இருக்காது.

எல்லாம் என் கர்ப்ப கால மயக்கங்கள்.

தலையை உலுப்பிக் கொண்டாள் சுப்ரியா.

“பொண்ணு எல்லாம் போய் பாத்துட்டு வந்தாச்சு. நாள் குறிக்க வேண்டியதுதான் பாக்கி” – சுந்தரேசன் வழக்கம் போல் தன் மகனின் இரண்டாவது திருமணத்தைப் பற்றி பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார் – சுப்ரியா – சாவித்ரி காதுகளில் விழும்படி.

கூடவே, “உங்களுக்கு மாப்பிள்ளை பாக்க வேண்டிய வேலையே இல்லை. ஏற்கெனவே மாமன் மகன்தான் ரெடியா இருக்கானே..?” என்று நக்கல் வேறு.

சாவித்ரி என்னவோ அதிசயமாக மௌனமாக இருந்தாள்.

சுப்ரியா கருக்கலைப்புக்கு ஒத்துக்கொள்ளாதது அவளை வெகுவாக நலிவடையச் செய்திருந்தது.

வழக்கமான பதில் பேச்சு, எதிர் பேச்சு இல்லாமல் அமைதியாக இருந்து விட்டாள்.

“அஷோக் – சுப்ரியா.. உள்ளே போங்க..”

சீருடை அணிந்த சிப்பந்தி குரல் கொடுத்தார்.

வழக்கமான இறுக்கத்துடன் இருந்தார் அந்தப் பெண் நீதிபதி.

அவருக்கு முன்னால் அஷோக் மற்றும் சுப்ரியா.

“சொல்லுங்க மிஸ்டர் அஷோக். நீங்க விவாகரத்து கேட்கிறதுக்கான அடிப்படை காரணம் என்ன?”

“எனக்கு விவாகரத்து வேண்டாம் மேடம். நான் என் மனைவியோட சேந்து வாழப் பிரியப்படுறேன்.”

தூக்கி வாரிப் போட்டது சுப்ரியாவுக்கு.

சரேலென நிமிர்ந்தாள்.

அஷோக்கை ஏறிட்டாள்.

அவன் எதுவுமே நடவாதது போல் மிகவும் அமைதியாகத் தெரிந்தான்.

பெண் நீதிபதி, “ஓ அப்டியா? உங்க ஸ்டாண்டை மாத்திக்கிட்டீங்களா? இப்ப காஞ்சுகல் ரைட்ஸ் கேக்குறீங்களா?”

“யெஸ் மேடம்.”

“ஏன்? எதுக்காக?” சுப்ரியா நீதிபதியை மறந்தாள். கோர்ட்டை மறந்தாள்.

நேரடியாக அஷோக்கை கேட்டாள்: “திடீர்னு ஏன் இந்த மாற்றம்?”

“நீ கர்ப்பமா இருக்கிறது எனக்குத் தெரியும். நம்ம குழந்தைக்காகத்தான் நாம சேந்து வாழணும்னு நான் விரும்புறேன்”

சட்டென்று ஏதோ உள்ளுக்குள் உடைபட்டது சுப்ரியாவுக்கு.

குழந்தைக்காகத்தானா?

எனக்காக இல்லையா?

என் மேல் கொண்ட காதலுக்காக இல்லையா?

இல்லை. என் மேல் காதலே இல்லையா?

“ஹலோ.. சுப்ரியா.. சுப்ரியா..” முகத்துக்கு முன்னால் நீதிபதி சொடுக்குப் போடவும் நிதானத்துக்கு வந்தாள் சுப்ரியா.

“என்ன மேடம் கேட்டீங்க..?”

“சரியாப் போச்சு. எந்த லோகத்துலம்மா இருந்தே இவ்ளோ நேரம்? ம்? அதாவது உங்க கணவர் உங்க கூட சேந்து வாழணும்னு பிரியப்படறார். நீ என்னம்மா சொல்றே?”

“எனக்கு விவாகரத்து வேணும்” என்றாள் சுப்ரியா – பிடிவாதம் தலை தூக்க.

“பைத்தியம் மாதிரிப் பேசாதே சுப்ரியா. நம்ம குழந்தையை சுமந்துகிட்டு இருக்கே நீ. இப்ப போய்.. விவாகரத்து அது இதுன்னு பேசிக்கிட்டு…”

“கரெக்ஷன். அது நம்ம குழந்தை இல்லை. என் குழந்தை. அதை நான் தனியாவே வளத்துப்பேன். உங்க பரிதாபம் எனக்குத் தேவையில்லை”

“லூஸாடி நீ? ஒண்ணா வாழலாம்னு சொல்றேன். பரிதாபம் புண்ணாக்குன்னு பேசிக்கிட்டு இருக்கே?”

“மைண்ட் யுவர் லாங்க்வேஜ் மிஸ்டர் அஷோக். இது கோர்ட்”

வலுக்கட்டாயமாக ஆவேசத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான் அஷோக்.

“நீங்க ரெண்டு பேரும் உங்க ஸ்டாண்டை சொல்லிட்டீங்க. கோர்ட் இந்த கேஸை விசாரிச்சு தீர்ப்பு சொல்லும். இப்ப நீங்க ரெண்டு பேரும் போகலாம்.”

நீதிபதி அறையை விட்டு இருவரும் வெளியே வந்தனர்.

“சுப்ரியா. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” நெருங்கிய அஷோக்கை, “எனக்கு உங்க கிட்டப் பேச வேண்டியது ஒண்ணுமில்லை”, அலட்சியப்படுத்தி, “வாம்மா போலாம்.” காலில் வெந்நீரை கொட்டிக் கொண்டது போல் அங்கிருந்து விரைந்து வெளியேறினாள் சுப்ரியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *