அத்தியாயம்-19
ஆர்.வி.சரவணன்
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க…
அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3
அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6
அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9
அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12
அத்தியாயம்-13 அத்தியாயம்-14 அத்தியாயம்-15
அத்தியாயம்-16 அத்தியாயம்-17 அத்தியாயம்-18
மதன் என்ன செய்வதென்று தெரியாமல் செயலற்று அமர்ந்திருந்தான். இது வரை அமைதியாக இருந்த விஜயராகவன் கத்தினார்.
“ஒரு பொண்ணு கிட்ட மயங்கி கிடக்கிறதினால தான் நீதி நியாயம் பேசி என்னை அசிங்கப்படுத்தியிருக்கியா..?”
மதன் அப்பா பேசியதை கேட்டு டென்சனானான்.
“எங்கப்பா மேல இருக்கிற பழிய போக்கு . அப்ப தான் உன்னை கல்யாணம் பண்ணிக்குவேன்னு அவ சொன்னாளா..?” விஜயராகவன் பல்லை கடித்தார்.
மதன் கோபத்தின் உச்சிக்கே போனான்.
“நீங்க எந்த பொண்ணு கிட்ட மயங்கி ,10 லட்ச ரூபாய் பணத்தை ஆட்டைய போடுறதுக்கு மூர்த்தி மேல பழிய போட்டீங்கனு நான் தெரிஞ்சிக்கலாமா..? அதுவும் நீங்க சம்பாரிச்ச பணம் இல்லே. தாத்தா அம்மாவுக்காக கொடுத்த பணம்”
விஜயராகவன் மதனின் பேச்சு பொறுக்க மாட்டாமல் காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து அவன் மேல் எறிந்தார். அது மதனின் அருகே வந்து விழுந்தது.
“ராஸ்கல். பெத்த அப்பன் கிட்டயே எதிர்த்து பேசறியா..?” எழுந்து கைகளை ஓங்கி கொண்டு அடிக்க ஓடி வந்தார்.
மதனின் அம்மா இடையே புகுந்து தடுத்தாள்.
விக்கி மதன “நீ எழுந்தரிச்சு ரூமுக்கு போ ” என்று அவசரப்படுத்தினான்.
“விடுடா… என்ன பண்றார்னு பாரத்திடலாம் ” என்றான் மதன்.
விக்கி இப்போது மதனை விட்டு விட்டு விஜயராகவனை பிடித்து கொண்டான்.
” விடுங்கப்பா இப்படிலாம் நீங்க செய்யலாமா..?”
மதன் கைகளை கட்டி கொண்டு அப்பாவை பார்த்தவாறே அமர்ந்திருந்தான். அவனது அந்த தெனாவெட்டு அவரை இன்னும் மிருகமாக்கியது.
பக்கத்தில் இருந்த ரூமிற்கு அவசரமாக சென்று மேஜை டிராயரை திறந்து துப்பாக்கியை எடுத்து வந்தார்.
மதனின் அம்மா அலறி கொண்டே சென்று அவரது கையை பிடித்து கொண்டாள்.
“இங்க பாருங்க. கோபத்துல எதுனா பண்ணிட்டு பின்னாடி அவஸ்தைபட போறது நீங்கதான். ப்ளீஸ் கண்ட்ரோல் ஆகுங்க” என்றவள், மதனைப் பார்த்து “டேய் நீ கிளம்பி வெளில போடா” எனக் கத்தினாள்.
“ப்ளீஸ்டா நீ கிளம்பு” விக்கி அவனை எழுப்பினான்.
மதன் எழுந்தான்.
“மூர்த்தி தனி ஆளாக இருந்திருந்தாலும் இந்த நியாயத்தைத்தான் நான் பேசியிருப்பேன். பெத்த புள்ளையோட புத்தியக்கூட தெரிஞ்சிக்காத அப்பாவா இருக்கீங்களே..?” என்று சொல்லி கொண்டிருக்கும் போது டிவியில் பிரேக்கிங் நியூஸ் ஓட ஆரம்பித்தது.
‘அறிமுக இயக்குநர் மதன் இயக்கிய இதன் பெயர் காதல் என்ற திரைப்படம் தமிழகத்தில் வெளியான தியேட்டர்களில் இதுவரை வசூலித்திருக்கும் தொகை 200 கோடி ரூபாயை தாண்டியிருக்கிறது. அவரது அடுத்த படத்தை தயாரிக்க விரும்புவதாக இது வரை 7 தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. மதன் தற்போது தயாரிப்பாளர் ரங்கராஜனின் நிறுவனத்திற்கு படம் செய்து தர ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்கிடையில் அவரது படத்தில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன் என்று நடிகர் பிரதீப் சொல்லியுள்ளதால் மதன் ஒப்பந்தமாகி இருக்கும் படத்திலேயே அவர் நடிக்க கூடும் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.’
இந்த செய்தி களேபரமான வீட்டின் சூழ்நிலையை கொஞ்சம் மாற்றியது என்றே சொல்ல வேண்டும். சில விநாடிகள் மௌனமாய் நகர, “எனக்குப் பொண்டாட்டினா அது பிரியாதான். எங்கம்மாவை தவிர அதை தடுக்கிற உரிமை யாருக்கும் இல்ல.” உறுதியாக சொல்லி விட்டு மதன் வெளியில் வந்தான்.
நடக்க ஆரம்பித்தான். வாசலில் நின்ற செக்யூரிட்டி சல்யூட் அடித்தான். பதிலுக்கு தலையசைக்க கூட முடியாதவனாக தென்னந்தோப்பிற்குள் நடந்தான்.
“அது என்ன துப்பாக்கிய தூக்கிட்டு வர்றீங்க. அதுவும் பிள்ளைய எதிர்த்துகிட்டு…” மதனின் அம்மா கத்தினாள்.
“அவன் மட்டும் என்னென்ன பேசினான்…பார்த்தீல்ல”
“நீங்க பேசினீங்க.அவனும் பேசினான்.”
“ஏற்கனவே உன் பிள்ளை கொடுத்திட்டிருக்கிற டார்ச்சர் போதும்… நீயும் பண்ணாத. பிள்ளைக்கு ஓவரா சப்போர்ட் பண்றே”
“நான் பண்ணுவேன். என் பிள்ளை மட்டும் எனக்கு பிறக்கலைனா நான் மலடினு முத்திரை குத்திட்டு உங்கம்மா உங்களை வேறொரு பெண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க. நீங்களும் அம்மா சொல் பேச்சுக்கு மதிப்பு கொடுத்தாகணும்னு எனக்கு ஒரு சக்களத்திய கொண்டு வந்திருப்பீங்க…”
“சரி தொணதொணனு பேசாத.”
“என் பிள்ளைக்கு பிரியா தான் பொண்டாட்டி… நானும் முடிவு பண்ணிட்டேன்.” என அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே கௌரி தயக்கமாக உள்ளே வந்தாள்.
“என்ன கௌரி?”
“வேலைய விட்டு நின்னுக்கறேன்னு சொல்லிட்டதால இனிமே நாங்க நீங்க எங்களுக்கு கொடுத்திருக்கிற வீட்ல இருந்தா நல்லாயிருக்காது. அதனால கிளம்பறோம்.” கண்ணீர் விட்டாள்.
“உன்னை நான் தான் பார்த்து மூர்த்திக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். எங்களை விட்டுட்டு டக்குனு போறதுக்கு எப்படிம்மா மனசு வருது.”
“அவரோட நிம்மதி முக்கியம் இல்லியா. ரொம்ப காயப்பட்டுட்டார்.”
“எங்க போவீங்க?”
“எங்கக்கா வீடு இருக்கு. அங்க போறோம்.”
“மூர்த்தி கிட்ட சொல்லு. அப்பா கடைசி வரை இருக்க சொன்னாரு. ஆனா இப்படி பாதியில விட்டுட்டு போறது தப்புன்னு.”
“அதற்கு பதில் தான் பெத்த பெண்ணையே உங்களுக்கு தாரை வார்த்து கொடுக்கறோம்னு அவர் சொல்லிட்டாரே”
“சரி… என் மருமகளைப் பத்திரமா பார்த்துக்க. சம்பந்தம் பேசறதுக்கு வரோம்”.
கௌரி தலையாட்டினாள்.
வெளியில் ஒரு டெம்போ வந்து நிற்க… மூர்த்தி ,கௌரி , பிரியா மூவரும் தங்களது சாமான்களை ஏற்ற ஆரம்பித்தனர்.
இதை பார்த்து கொண்டிருந்த விக்கி செக்யூரிட்டியிடம் அவர்களுக்கு உதவி செய்ய சொன்னான். ஆனால் மூர்த்தி மறுத்து விட்டார்.
இதை தூரத்தில் கவனித்து கொண்டிருந்த மதன் அருகே வந்தான். தன் பங்குக்கு சில சாமான்களை எடுத்து வைத்தான்.
மூர்த்தி ” தம்பி நீங்க இத செய்யலாமா..?”
“நான் உங்க மாப்பிள்ளை. உதவி பண்ணலாம் தப்பில்ல.” சோர்ந்திருந்த மூர்த்திக்கு அவனது வார்த்தைகள் தெம்பைத் தந்தன.
சூட்கேஸ் ஒன்றைத் தூக்க முடியாமல் பிரியா தூக்கி கொண்டு வர, மதன் அவளருகில் சென்று சூட்கேஸை ஒரு பக்கம் பிடித்தான். இருவருமாக அந்த சூட்கேசை டெம்போவில் ஏற்றும் போது ஒருவரை ஒருவர் மோதி கொண்டனர். மின்சாரத்தை தொட்டது போல் உணர்ந்தனர்.
“எங்க போறீங்க?”
“எங்கக்கா வீட்டுக்கு தான் தம்பி. அம்மா கிட்டயும் சொல்லிட்டேன். கல்யாண பேச்சு வார்த்தைக்கு வரதா சொல்லியிருக்காங்க” கௌரி சொன்னாள்.
ஆச்சரியான மதன் உடனே தலையசைத்தான். கூடவே மூர்த்தியிடம் “பிரியா கிட்ட கொஞ்சம் பேசணும்.”
“பேசுங்க தம்பி “
பிரியா தனியே வர இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
“உங்கப்பா சம்மதம் சொல்லிட்டார். நான் பிடிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க போறேன். ஆனா உனக்கு என்னை பிடிச்சிருக்கானு தெரிஞ்சிக்க ஆசைப்படறேன்.”
“இதென்ன கேள்வி?”
“உனக்கு என்னை பிடிச்சிருக்கா… அதைச் சொல்லு. அப்பாவுக்காக உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா அத என்னாலே ஏத்துக்க முடியாது”
“அதைத் தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போறீங்க…?”
“ம்… போஸ்டர் அடிச்சு ஒட்டுவேன்.” கடுப்படித்தான். பிரியா புன்னகைத்தாள்.
“நீ எந்திரம் அல்ல.உணர்வு பூர்வமான ஒரு பெண். உன்னோட உணர்வுகள்ல நான் இருக்கேனானு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கேன். நான் எழுதின படைப்பு நல்லாருக்கானு ரசிகர்கள் கிட்டக் கேட்டு தெரிஞ்சிக்கிற மாதிரி தான் இதுவும். பேரு மட்டும் தான் மதன் ஆனா ஒரு பொண்ண மடக்கக் கூட தெரியல.” சலித்து கொண்டான்.
மீண்டும் புன்னகைத்தாள்.
அப்போது விக்கி எதிரே வந்து தயங்கி நிற்க ” வாடா இங்க என்ன ரொமான்ஸா நடக்குது “மதன் எரிச்சலாய் சொன்னான்.
“மீடியாகிட்ட உங்க கல்யாணம் பத்தி சொல்ல சொன்னே. சொல்லிட்டேன்.பொண்ணு போட்டோ வேணும்னு கேட்கறாங்க.”
மதன் பிரியாவை பார்த்தான்.
“ரீசன்டா எதுவும் நான் எடுக்கல.”
” சரி. இப்படி நின்னீங்கன்னா எடுத்துக்கிறேன்.”
” புடவை சிம்பிளா தான் இருக்கு. ” இழுத்தாள்.
” நீ சிம்பிளா இருந்தாலே பேரழகு தான்” பிரியா முறைப்பது போல் பார்க்கவே அவளை ஒரு தென்னை மரத்தின் அருகே நிற்குமாறு சொன்னான் மதன். பிரியா தன் செல் போன் எடுத்து கேமராவை ஆன் செய்து தன் முகத்தை ஒரு முறை சரி பார்த்து கொண்டாள். விக்கி மதனை பார்த்து புருவம் உயர்த்தினான்.
விக்கி படம் எடுக்க போகும் வேளையில் ” சாரி. அவர் எடுக்கட்டுமே” என்றாள்.
விக்கி உடனே மதனிடம் கொடுக்கவே மதன் ஆச்சரியப்பட்டு அவளை செல்போனில் க்ளிக் செய்தான். படம் எடுத்த பின்பு அவளிடம் காட்டினான். அவள் “ஓகே நான் வரேன்” என்று கிளம்பினாள்.
“வாழ்த்துகள் மச்சி.”
“அவ மனசில நான் இருக்கேனா தெரிஞ்சிக்க அவ கிட்ட கேட்டா அத தெரிஞ்சிகிட்டு என்ன பண்ண போறேங்கிற மாதிரி கேட்கறாடா.”
“டேய் ட்யூப்லைட்… இத கூட நீ புரிஞ்சுக்கலியா…”
“என்ன?”
“அவங்கப்பா பார்த்த மாப்பிள்ளை, பொண்ணு போட்டோ வேணும்னு கேட்டவுடன் பிரியா கோபப்பட்டுச்சு. ஆனா இப்ப உன்னை கல்யாணம் பண்ணிக்க முடிவான உடனே மீடியாக்கு போட்டோ கொடு்க்கணும்னு கேட்டவுடன் என்ன சொன்னுச்சு. இந்த ட்ரெஸ் ஓகே தானானு கேட்டுச்சு. தன் செல்போன்ல ஒரு முறை முகத்தைப் பார்த்து திருப்தியாக, போட்டோவுக்கு சிரிப்போட போஸ் கொடுத்துச்சு. படம் எடுத்த பின்னாடி செல்போனை வாங்கி சரியா வந்திருக்கானு பார்த்துகிச்சு. இதற்கு மேல அந்த பொண்ணு உன்னை விரும்புதுங்கிறதுக்கு என்னடா ப்ரூப் வேணும்?”
“அவ வாயால அத சொல்லணும்னு ஆசைப்படறேன்டா”
” பேராசை தான் உனக்கு”
ஆட்டோ ஒன்று வரும் சத்தம் கேட்க, மதன் திரும்பி பார்த்தான். ஆட்டோ வந்து நிற்கவும் கௌரியும் பிரியாவும் ஏறி கொண்டனர். டெம்போவில் மூர்த்தி ஏறி கொள்ள அது கிளம்பியது. ஆட்டோவும் அதனுடனே கிளம்ப, ஆட்டோவிலிருந்த பிரியா மதனை பார்த்து சிரித்தாள். கண்களால் செல்போனை பாருங்க என்று ஜாடை காட்டினாள்.
மதன் தன் செல்போனை பார்த்தான். மெசேஜ் வந்திருந்தது.
“காதல் படம் எடுத்து ஜெயித்தவருக்கு ஒரு பொண்ணோட உணர்வை புரிஞ்சிக்க தெரியலயா”
மதன் உற்சாகமாகி “வாவ்” என்றான்.
மீடியாவில் மதன் பிரியா திருமண செய்தி வைரலாக ஆரம்பித்திருக்க, தன் வீட்டில் இதை பார்த்த முத்து பற்களைக் கடித்தான். தனக்கு கிடைக்காதவள் எவனுக்கும் கிடைக்க கூடாது என்று முணுமுணுத்தான். யாருக்கோ போன் செய்து பேசினான். தன் பைக்கை எடுத்து கொண்டு வேகமாக கிளம்பியவனின் பைக்கில் இருந்த பையில் பெரிய அரிவாள் ஒன்று இருந்தது. வழக்கமாக காத்திருக்கும் ரோட்டிற்கு வந்த முத்து டெம்போ மற்றும் ஆட்டோவிற்காக காத்திருக்க தொடங்கினான்.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
அடுத்த திங்கள் இத்தொடர் நிறைவு பெறும்