அன்புள்ளவர்களே….
உங்களைத் தான்.
முதற்கண் நற்றமிழ் நல் வணக்கம்.
அதிகாலைக் குயிலின் ஆனந்தக் குரலிசையை அழகின் சொற்களால் அளிக்கமுடியுமா உங்களால்..?
மேகமே சிலிர்த்திறங்கி வர, மயிலாடும் நடனத்தை அப்படியே தமிழின் தூரிகைச் சொற்களில் தர முடியுமா உங்களால்..?
வறுமை புசிக்கும் பசியை வார்த்தைகளில் படம் எடுக்கத் தெரியுமா உங்களுக்கு..?
நிலவொளிப் பால்சோற்றை நினைவேட்டில் குறித்திருக்கிறீர்களா..?
முரண்பாடுகளாலான மானுடத்தின் முகவரியைச் சொல்ல முடியுமா உங்களால்..?
அறியா சனங்களுக்கும் அரியாசனங்களுக்குமான அடிப்படையை அறிந்தவரா நீங்கள்..?
மலை உச்சிக்கும் பள்ளத்தாக்குக்கும் இடைப்பட்ட தூரத்தை மொழியால் அளக்கும் மனம் உங்களிடம் இருக்கிறதா..?
காதலின் அலைபாயும் தீபத்தைக் காப்பதற்காக, காற்றுடன் போராடும் கைகள் உங்களுடையதா..?
‘புள்ளி’கள் மறைந்திருக்கும் கல்வி வணிகத்தின் புதிரவிழ்த்துப் பார்க்கத் தெரியுமா..?
அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்குத் தான்.
கடலை விடவும் பெரிய கற்பனை வளமும் வானமும் கவிஞருக்கே உரியன என்பதால்
உங்கள் பாடுபொருள் உங்கள் விருப்பம். அகத்தில் தொடங்கலாம். யுகம் தாண்டியும் முடிக்கலாம். நகப்பூச்சை எழுதலாம். நகைப்பேச்சை எழுதலாம். தகுமான தலைப்பெடுத்துதங்கத் தமிழில் பாடலாம்
தமிழில் கவிதை எழுதத் தெரிந்த யாரும் எழுதலாம். ஒரு நல்ல கருப்பொருள் கொண்டு உங்கள் வாழ்நாளின் ஆகச் சிறந்த எழுத்தை, கவிதையை எழுதுங்கள். இன்ன வகைமையில் தான் எழுத வேண்டும் என்ற கட்டெல்லாம் இல்லை. மரபிலும் எழுதலாம். புதுமை/நவீனம் கொண்டும் எழுதலாம். ஹைக்கூ எனப்படும் துளிப்பா-வாகவும் எழுதலாம். ஒவ்வொரு வகைமைக்கும் தனித் தனிப் பரிசுகள் என்பதும் மேலும் ஒரு மகிழ்வான செய்தி.
பரிசுகள் விவரம்:
ஆம், இலக்கணம் மீறா மரபுக் கவிதை எனில்
முதற் பரிசு – ₹. 7500.
இரண்டாம் பரிசு – ₹. 5000.
மூன்றாம் பரிசு – ₹. 2500.
ஆறுதல் பரிசு ஐந்து பேருக்கு தலா ₹. 1000.
புதுக்கவிதை அல்லது நவீன சிந்தனைக்கான கவிதை எனில்
முதற் பரிசு – ₹. 7500.
இரண்டாம் பரிசு – ₹. 5000.
மூன்றாம் பரிசு – ₹. 2500.
ஆறுதல் பரிசு ஐந்து பேருக்கு தலா ₹. 1000.
மேலும், சிறந்த சரியான இலக்கணத்தில் அமையும் ஹைக்கூ (துளிப்பா)க்களுக்கு
முதற் பரிசு – ₹. 5000.
இரண்டாம் பரிசு – ₹. 3000.
மூன்றாம் பரிசு – ₹. 2000.
ஆம், மொத்தப் பரிசுத் தொகை ₹. 50,000.
கவிஞர் என்பவர் அனைத்து வகைமையிலும் கவியெழுத வல்லமை மிகுந்தவராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இம்மூன்று வகைமையிலும் எழுதி அனுப்பலாம் என்று அறிவிக்கிறோம்.
போட்டி தொடர்பாக, நடத்துபவர்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளல் ஆகாது. எந்த ஐயமும் இப்பதிவிலேயே கேட்கப்பட வேண்டும். மீறித் தொடர்பு கொண்டால் அவர் தகுதி இழக்கக் கூடும்.
வானத்தின் கீழுள்ள எதுகுறித்தும் நீங்கள் எழுதலாம். என்றாலும் மதநெறி, தனிமனிதத் தாக்குதல்கள், அரசியல் சார்புகள், காழ்ப்புகளைத் தவிர்க்க வேண்டும்.
எழுதுங்கள். வாழ்த்துகள். 🎉🎉🎉
விதிமுறைகள் :
- தமிழ் மொழி அறிந்த, உலகின் எந்தப் பகுதியில் வசிப்பவரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். வயது வரம்பு இல்லை.
- நடுவர்களின் முடிவே இறுதியானது; உறுதியானது; அதன் மீதான மேலதிகக் கருத்து விவாதங்கள் அனுமதிக்கவோஅங்கீகரிக்கவோ படமாட்டாது.
- ரியாத் தமிழ்ச்சங்க செயற்குழுஉறுப்பினர்கள் -ஆட்சி மன்றகுழுவினர் – அதன் உள்ளமைப்பு உறுப்பினர்கள் யாரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி இல்லை.
- குறைந்த அளவில் 16 வரிகளும் அதிகமாய் 40 வரிகளுக்கு மிகாமலும் இருத்தல் நலம்.
- தமிழ்க் குழுமங்கள் மற்றும் நாளேடுகளில் கவிதைப்போட்டிகள் பற்றிய அறிவிப்பும் அதன் முடிவுகளும் அறிவிக்கப்படும்.
- மூன்று போட்டிகளிலுமே முதல் மூன்று பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசுக் கவிதைகளுக்கு பரிசுத் தொகையுடன் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
- இந்தப் போட்டியை எந்த நேரத்திலும் எந்த நோக்கத்திற்காகவும் நிறுத்தவோ விதிமுறைகளை மாற்றிக் கட்டமைக்கவோ ரியாத் தமிழ்ச் சங்க அமைப்புக்கு முழு உரிமை உண்டு.
- கவிதைகளை 01 ஆகஸ்ட் 2024, 00:00 முதல் அனுப்பத் தொடங்கலாம். படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31 ஆகஸ்ட் 2024, 23:59 மணி வரை.
- தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கவிதைகள் ரியாத் தமிழ்ச் சங்க ஆண்டு விழா மலரில், வலைத் தளத்தில், மடலாற் குழுமத்தில் உரியவர் பெயரோடு வெளியிடப்படும். ரியாத் தமிழ்ச்சங்க வெளியீட்டு நூலாகவும் வரும்.
- ஒருவரே மூன்று வகையிலும் இக் கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு போட்டியிலும் ஒருவர் தலா ஒரு கவிதை மட்டுமே எழுத அனுமதி. மூன்றும் தேர்வு பெறும் நிலையில் ஏதேனும் ஒன்று மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.
எப்படி கலந்துகொள்வது?
- கவிதைகளை ஒருங்குறி (Unicode) அமைப்பில் நேரடி மின்னஞ்சலாகவோ அல்லது இணைப்புக் கோப்பாகவோ (Using MS Word) rtskavithai2024@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
- கவிதை அனுப்புவோர் தங்களின் முழு அஞ்சல் முகவரி, தொடர்பு தொலைபேசி/அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்பவேண்டும்.
- கவிதைகள் இந்தப் போட்டிக்கென்றே பிரத்யேகமாக எழுதப்பட்டதாக இருக்கவேண்டும். இதுவரை எந்த அச்சு ஊடகத்திலும் – இணையத்திலும் – இணைய மடலாற் குழுமத்திலும் – செய்திக் குழுமங்களிலும் இன்னபிற ஊடகங்களிலும் வெளிவரவில்லை என்ற உறுதிமொழி மற்றும் ஆக்கியவர் கையொப்பமிட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
- போட்டி முடிவு வரும்வரை முகநூல் ட்விட்டர் (X) உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களிலும் கவிதைகளைப் பகிரக் கூடாது.
- கவிதைகளை அனுப்புகையில் மரபுக் கவிதை என்றால், ‘ரியாத் தமிழ்ச் சங்கம் – உலகளாவிய மரபுக்கவிதைப் போட்டி – 2024’ என்றும் புதுக்கவிதை என்றால், ‘ரியாத் தமிழ்ச் சங்கம் – உலகளாவிய புதுக்கவிதைப் போட்டி – 2024’ என அஞ்சலிலும், மின்னஞ்சலிலும் தவறாமல் குறிப்பிட வேண்டும். ஹைக்கூவுக்கும் இதுபோன்றே.
நீங்கள் விரும்பும் எந்தத் தலைப்பிலும் ஒரு மரபுக்கவிதையோ அல்லது புதுக்கவிதையோ அல்லது ஹைக்கூ(துளிப்பா) வோ அல்லது மூன்றுமோ எழுதி அனுப்பலாம். மூன்று வகைமையிலும் கவிதைகள் எழுத விரும்புவோர் வெவ்வேறு தலைப்புகளை எடுத்துக்கொள்ளலாம். ஒருவருக்கு வகைமைக்கொன்றாக மூன்று கவிதைகளே ஏற்கப்படும்.
இங்ஙனம்,
நெறியாள்கைக் குழு,
ரியாத் தமிழ்ச்சங்கம்,
ரியாத், சவூதி அரேபியா.