பால்கரசு சசிகுமார்
நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர் ராஜா எனக்குப் பரிந்துரைத்த புத்தகம் ‘திருடன் மணியன்பிள்ளை’. மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட சுயசரிதை நாவல் என்றாலும் எழுத்துநடை எளிமையாகவும் வாசிப்பதற்கு விறுவிறுப்பாகவும் இருந்தது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள இரவிபுரம் என்னுமிடத்தில் மிகவும் பிரபலமான ‘கொடுந்தற’ என்ற குடும்பத்தில் ஒருவனாகப் பிறந்த மணியன்பிள்ளை, காலப்போக்கில் எப்படி குற்றவாசனையுள்ள மனிதனாக மாறுகிறார் என்பதைப் பேசும் புத்தகம்தான் இது.
தன்னுடைய அறியாப் பருவத்தில் உறவுக்காரப் பெண்ணொருத்தியின் தூண்டுதலின் காரணமாக முதல் முதலில் திருட ஆரம்பித்து, காலப்போக்கில் தன்னுடைய அடிப்படைத் தேவைக்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் திருடுவதையே தன் தொழிலாக ஆக்கிக் கொள்கிறார்.
கையில் தேவைக்கு அதிகமாகப் பணம் கிடைக்கும்போது மனிதனின் மனம் தன்னுடைய சுயத்தை இழந்து எந்தத் தவற்றையும் செய்வதற்கு உடன்படுகிறது என்பதை அவரது வாழ்க்கையின் அனுபவங்கள் நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
ஒருமுறை ‘திருடன்’ என்று அறியப்பட்ட ஒரு மனிதனை, இச்சமூகமானது அவன் நல்லவனாக மாறித் திருந்தி வாழ்ந்தாலும் அல்லது வாழ முயன்றாலும் அவனை ஏற்றுகொள்வதில்லை. செய்த குற்றத்திற்காக முதலில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் மணியன்பிள்ளை, பின்பு செய்யாத குற்றங்களுக்காகவும் வாழ்வின் பெரும்பாலான வருடங்களைச் சிறையிலேயே கழிக்கிறார்.
இவருடைய திருட்டுகள் பெரும்பாலும் சாகசம் நிறைந்தவையாகவே இருக்கிறது. இவரது செயல்பாடுகள் இச்சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத மனிதத் தன்மையற்றவையாக இருந்தாலும் உணவுக்கு வழியின்றித் தவிக்கும் ஏழைகள், நோய்வாய்ப்பட்டிருக்கும் மனிதர்கள், நண்பர்கள் என பலருக்கும் உதவும் நல்ல மனமும் இவரிடம் அடங்கியிருக்கிறது.
காவல்துறையில் பிடிபட்டவுடனேயே தான் செய்த திருட்டுக்களை ஒப்புக் கொள்வதுடன், பிறகு நீதிமன்றத்தில் தனக்காக எந்த வழக்கறிஞர்களையும் நியமித்துக் கொள்ளாமல் தானாகவே தன் வழக்கை குறுக்கு விசாரணைகள் செய்து நீதிபதிகளையும், காவல்துறையினரையும் தன்னுடைய வாதத்திறமையால் திணறடிக்கிறார். சில இடங்களில் நீதிமன்றமும், காவல்துறையும் இவருடைய குறுக்கு விசாரணைகளுக்கு முன் தோற்றுப் போய்விடக் கூடாதென்று சமரசம் செய்துகொள்கிறது.
திருட்டுத்தொழில் மூலமாகக் கிடைத்த பணத்தின் பெரும்பகுதியை இவர் விலைமகளிருக்காகவே செலவு செய்கிறார். தான் செய்வது தவறு என்னும் குற்றவுணர்ச்சி இவரிடம் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது!
ஒரு கட்டத்தில் இவரே திருந்தி வாழ நினைத்தாலும், இச்சமூகமும், காவல்துறையும் விடுவதாயில்லை. பிறகு மீண்டும் மீண்டும் திருட ஆரம்பிக்கிறார். திருட்டுத் தொழில் மூலம் சம்பாதித்த பணத்தையெல்லாம் மது, மாது ஆகியவற்றில் செலவிட்டுத் தீர்த்த பின்பும் இறுதிவரை தன்னோடு, அனைத்து துன்பங்களையும் தாங்கி நின்ற தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு திருந்தி வாழ்வதற்காக மைசூருக்குச் சென்று வீதியோரத்தில் பருத்திப் பால் கடையைத் தொடங்குகிறார்.
பிறகு சலீம் பாட்சா என்ற பெயரில் புகையிலை வியாபாரத்தில் ஈடுபட்டுத் தன்னால் ஆன உதவிகளை எல்லாம் மக்களுக்குச் செய்து கொடுத்து மக்கள் செல்வாக்கைப் பெறுகிறார். அதன் விளைவாக மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுகிறார். அப்போதைய கர்நாடக மாநில முதலமைச்சரான குண்டுராவுடன் சேர்ந்து ஹெலிகாப்டரில் பறக்கும் அளவிற்கு மைசூரில் இவரது வளர்ச்சி அமைகிறது.
1983இல் இவர் மைசூரில் இருப்பதைக் கேள்விப்பட்ட கேரளக் காவல்துறை இவரை மைசூரில் வைத்துக் கைது செய்கிறது. சம்பாதித்த அனைத்துச் செல்வங்களையும் இழந்து வெறுங்கையுடன்தான் இவர் கேரளத்திற்குத் திரும்புகிறார்.
பின்பு தமிழ்நாட்டில் துவரங்குறிச்சியில் மர வியாபாரம் செய்து இலட்சாதிபதியாக வாழ்ந்து கொண்டிருந்த போது 1988இல் மீண்டும் கைது செய்யப்பட்டு 1995 வரை சிறைச்சாலையில் இருந்திருக்கிறார்.
சிறைச்சாலையானது மனிதர்கள் தாங்கள் செய்த தவற்றை உணர்ந்து திருந்துவதற்கு வழி செய்வதாக அமைய வேண்டும். தவறு செய்தவர்கள் கிடைக்கவில்லையென்றால் கிடைத்தவர்கள் மீது அனைத்து வழக்குகளும் சுமத்தப்படுகின்றன. காவல்துறையின் இருவேறு முகங்கள் இங்கு வெளிப்படையாகக் காட்டப்பட்டுள்ளன.
மக்களை நல்வழிப்படுத்துவதற்காக அமைய வேண்டிய நீதிமன்றமும், காவல்துறையும் பணத்திற்காகவும், பதவிகளுக்காகவும் எந்தத் தவற்றையும் செய்யத் தயங்குவதில்லை. தான் இனிமேல் திருடுவதில்லை என்று தீர்மானித்து நேர்மையாக வாழ்ந்து வருகின்றபோதும் பல திருட்டு வழக்குகள் இவர் மீது காவல்துறையால் சுமத்தப்படுகின்றன என்பது சமூகத்தின் ஒரு சாபக்கேடாகும்.
நன்றி : படம் இணையத்திலிருந்து