தீபாவளி சிறப்புச் சிறுகதை
திப்பு ரஹிம்
“என்னங்க நாளைக்கு தீபாவளி. இன்னும் நீங்கள் பட்டாசு எதுவும் வாங்கவில்லை. எப்பதான் வாங்குவீங்க?” என்றாள் சுகந்தி.
“நான் என்ன பணத்தை வச்சிக்கிட்டா வாங்காம இருக்கிறேன்? ஏற்கனவே துணிமணிக்குனு நிறைய கடன் வாங்கியாச்சு. இந்த மாசம் சரியா வேலையும் கிடைக்கல… என்னய என்ன செய்யச் சொல்ற?” என்றான் முனியாண்டி.
“அதெல்லாம் எனக்கு தெரியாது நம்ம கிட்ட இருக்குறது ஒரே புள்ள எப்படியாவது நீங்க பட்டாசு வாங்கி கொடுங்க”
“லூசு மாதிரி பேசாத எனக்கு மட்டும் ஆசை இல்லையா… கையில காசு இல்ல… என்ன செய்ய சொல்ற?” இலேசாக சண்டை வருவது போல இருந்தது.
“சரி சரி நல்ல நாளும் அதுவுமா சண்டைக்கு வராதீங்க… நான் ஒரு ஐடியா சொல்றேன் கேக்குறீங்களா?”
“சரி சொல்லு என்ன பெருசா சொல்லப் போற? யார்கிட்டயாவது கடன் வாங்க சொல்லுவ”
அவனைப் பார்த்து முறைத்த சுகந்தி சற்று சமாதானமாகி, “போன வருஷம் அடகு வச்சோமே ஒரு நகை அதை திருப்பி வித்துட்டு பட்டாசு வாங்கிக்கலாம்”
“என்னடி சொல்ற? உன்கிட்ட இருக்கிறது அந்த ஒரே ஒரு தோடு மட்டும் தான் அதைப் போய் விக்க சொல்ற? பைத்தியம்”
“போன வருஷம் தீபாவளிக்கு வச்சது அதுக்கு வட்டியும் கட்டல. இன்னும் கொஞ்ச நாள்ல அதுவே மூழ்கி போயிடும், நமக்கு இல்லைன்னு ஆகப்போகுது. எப்படியாவது அவங்க கிட்டப் பேசி அதை வித்துட்டு மிச்சக் காசையாவது வாங்கிட்டு வாங்க”
மனைவி சொல்வதும் சரியாகப்பட்டது ஒரே ஒரு மகனை வைத்திருக்கிறான். அக்கம் பக்கத்தில் எல்லோரும் வெடிவெடிக்கும் போது மகன் மட்டும் அழுது கொண்டிருப்பதை அவனால் பார்க்க முடியாது.
******
வட்டிக்காரர் வீட்டு வாசலில் நின்று கொண்டு ‘சார் சார்’ என்றான்.
வட்டிக்காரர் என் மனைவி கதவை திறந்து கொண்டு “யார் நீங்க? என்ன வேணும்?”
“வணக்கம்மா போன வருஷம் ஒரு நகை அடகு வச்சேன். அதை திருப்பலாம் என்று வந்திருக்கிறேன் சார் இல்லைங்களா..?”
“சார் வெளியில போய் இருக்காங்க. சரி உங்க பேர் சொல்லுங்க” என்று கேட்டுக் கொண்டு வட்டிக்கடைக்காரரின் மனைவி கணக்கு நோட்டை எடுத்து ஒரு ஆண்டுக்கு முன்பிருந்த பெயர்களை எல்லாம் தேடினாள். முனியாண்டி என்ற பெயரில் எந்த நகையும் அடகு வைக்கவில்லை என்பதை அறிந்து கொண்டு… கணவனுக்கு தொலைபேசினாள்.
“என்னங்க முனியாண்டி என்பவர் வந்திருக்கார் போன வருஷம் நகை வைத்தாராம்… திருப்ப வேண்டி நிற்கிறார் நோட்டில் அவருடைய பெயரே இல்லையே?”
தொலைபேசியின் மறுமுனையில் இருந்த வட்டிக்காரர் “நீ போன அவர்கிட்ட குடு நான் பேசுகிறேன்”
தொலைபேசியை முனியாண்டி இடம் கொடுத்தாள். “சார் அந்த நகையை கொடுத்தீங்கன்னா வித்துட்டு அசலையும் வட்டியையும் கட்டிட்டுறேன்”
“அப்படியா சரி போயிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வாங்க நகை லாக்கர்ல இருக்கு நானும் எடுத்துட்டு வந்துடுறேன்”
ஒரு மணி நேரம் கழித்து வந்த முனியாண்டியை அமர சொல்லிவிட்டு கணக்கு காண்பித்தார்.
“உங்களோட நகைய நானே திருப்பி வித்துட்டு வந்துட்டேன் அதுல பாருங்க உங்க நகை 916 இல்லை. உங்களை ஏமாற்றி இருக்கிறார்கள். நான்தான் அப்படி இப்படி பேசி நகை விற்றுவிட்டு வந்தேன். ஆறு கிராம் இன்னைக்கு உள்ள நிலையில தள்ளுபடி எல்லாம் போக 40 ஆயிரம் தான் கிடைத்தது”
“இதுல 20 ஆயிரம் ரூபாய் நீங்க வாங்கி இருக்கீங்க ஒரு வருஷத்துக்கு வட்டி 9,600 வந்திருக்கு எழுத்துக்கூளி டேக்ஸ் எல்லாம் ஒரு 1500 ஆக மொத்தம் 31 ஆயிரத்து நூறு வருது மிச்சம் உங்களுக்கு 8 ஆயிரத்து 900 ரூபாய் பாக்கி இருக்கு. நீங்க சரியா வட்டியையாவது கட்டணும். இல்லன்னா ஆறு மாசத்துல திருப்பி விடனும் இப்படி விட்டுட்டீங்கன்னா இன்னும் கொஞ்சம் நாலிள் நகையே இல்லைன்னு ஆயிருக்கும் உங்களுக்கு” என்று சொல்லிவிட்டு 8900 ரூபாயோடு நூறு ரூபாய் சேர்த்து ஒன்பதாயிரமாக கொடுத்தார்.
இவர் சொல்லியது எதுவுமே முனியாண்டிக்கு விளங்கவில்லை என்றாலும் எல்லாம் தெரியும் என்பது போல தலை ஆட்டிக் கொண்டே இருந்தான். ‘இந்த பணமாவது கிடைத்ததே’ என்ற மகிழ்ச்சியில் பெருமூச்சு விட்டுட்டு போனான்.
வட்டிக்காரரின் மனைவி கேட்டாள் “என்னங்க அவர் நகையை எங்க வச்சிருந்தீங்க கணக்கிலேயே வரலையே”
“போன வருஷம் தீபாவளிக்கு நம்ம கிட்ட இருந்த காச தான் அவர் கிட்ட கொடுத்தோம். அப்ப நாம தீபாவளிக்கு என்ன செய்வது அதான் அப்பவே அவருடைய நகையை வித்து விட்டேன். அதில் தான் நாம் தீபாவளி போன வருஷம் கொண்டாடினோம்”
அதைக் கேட்டதும் அவளுக்கு தூக்கி வாரி போட்டது. “ஏங்க இப்படி செஞ்சீங்க? இடையில் நகையை திருப்பி கேட்டால் என்ன செஞ்சிருப்பீங்க?”
“அடி பைத்தியம் தீபாவளி, ரம்ஜான், பள்ளிக்கூட பீஸ் கட்டணும்னு இவங்ககிட்ட இருக்க சின்ன சின்ன நகையை கொண்டு வந்து வைப்பாங்க. ஆனா அதை அவங்களே மறந்துடுவாங்க! காசு இல்லன்னு தானே நம்ம கிட்ட வராங்க? அப்புறம் எப்படி திருப்புறதுக்கு மட்டும் காசு வரும்?”
“என்னங்க இதெல்லாம் பாவம் இல்லையா?”
“அடியே இது தொழில் இதுல பாவம் புண்ணியம் எல்லாம் பார்க்க முடியாது. நீ கை நிறைய போட்டுருக்கியே வளையல் அதெல்லாம் இப்படி சம்பாதித்தது தான்” என்று சாதாரணமாக சொல்லிவிட்டு போனார்.
தன் கையில் கிடக்கும் வளையல்களை ஆசையோடு பல நாட்கள் பார்த்திருக்கிறாள் வட்டிக்கடைக்காரரின் மனைவி. இப்பொழுதும் அந்த வளையலை பார்த்தாள். முதன்முறையாக அது அவளுக்கு அருவருப்பாக தெரிந்தது.
நன்றி : படம் இணையத்திலிருந்து