ஆமினா முஹம்மத்
ஒரு வாசகனை இலகுவாக தன் மொழிக்குள் பயணப்படவைக்கும் மந்திரம் கற்றவனே நல்ல எழுத்தாளர் என்பேன். மனதிற்கு கட்டளையிட மறுத்து மூளை சோர்வுற்றபோதுதான் இந்த முடிவுக்கு வந்திருந்தேன்.
வாங்கி வைத்திருக்கும் புத்தகத்தை வாசித்தாக வேண்டும் என்ற சுய நிபந்தனையோடு வாசிக்கத் தொடங்கிய ஒரு புத்தகத்தை இரண்டு நாட்களாக பாடுபட்டும் இரண்டு சிறுகதைகளைத் தாண்ட என் மூளை ஒத்துழைக்கவில்லை. சோர்ந்து போனது. நிபந்தனைகளிடம் மன்னிப்பு கோரிவிட்டு இலகுவான வாசிப்பைத் தரும் வேறொரு புத்தகத்தை நாடியபோதுதான் மீரான் மைதீன் எழுதிய இரண்டு புத்தகங்கள் இருந்ததைக் கண்டு அதிலொன்றைத் தேர்ந்தெடுத்தேன். காவியலோகம்.
இதற்கு முன் மீரான் மைதீன் பிரபலமான எழுத்தாளராக அறியப்பட்டும்கூட புனைவுகளின் மீது பெரும்நாட்டமில்லாததால் எந்த புத்தகமும் வாசித்திருக்கவில்லை. அவரின் எழுத்து மீது முதல் பரிட்சயமாக காவியலோகம் அமைந்திருந்தது.
காலம் கடந்தும் வாசகனின் எல்லைக்குள்ளாகவே உயிர்ப்போடு சுழன்றடிக்கும் இலக்கியங்கள் படைப்பதுதானே ஒவ்வோர் எழுத்தாளனின் பெருங்கொண்ட கனவாக இருக்கும்? சொல்லப்போனால் எல்லோராலும் கொண்டாடப்படக் கூடிய ஒரு வடிவத்தை உருவாக்க வேண்டுமெனதான் ஒவ்வொருமுறையும் எழுதுகிறான். தகுதியானவை அதில் வெற்றிப்பெறுகின்றன.
காவியலோகமும் அத்தகு முயற்சிதான். காலம்கடந்தும் வாசகபரப்பில் உலாவும் அல்லது வாசகன் தன் எழுத்தை நோக்கி வரவழைக்கும் ஒரு யுக்தியை காவியலோகத்தின் மூலமாக மீரான் மைதீன் கையாண்டிருப்பதாக புரிய முடிகிறது. பின்னட்டை வாசகங்கள் அதைத் தெரியப்படுத்துகின்றன.
காவியலோகம் ஒரு நாவல். அதுவும் 80 பக்கம் உள்ள நாவல். இத்துடன் முடிவுறும் குறுநாவலாக இல்லாமல் இது முதல் பகுதி. இன்னும் 7 பகுதிகள் வெளிவரவிருக்கின்றன.
கதையோட்டத்தை உடைக்காமல் நாவல் பற்றி பேசுவது மிக்கச் சவாலானது. அந்த சவாலை மனதில் நிறுத்தி இப்பதிவை எழுதத் தொடங்குகிறேன். அதனால் என் வாசிப்பனுபவத்தை மட்டுமே பகிர்ந்து தப்பிக்கப் பார்க்கிறேன்.
எடையற்ற இறகோ, பஞ்சின் துகளோ அலையலையாக மிதக்க வைப்பது வருடும் மென்காற்றின் வேலையல்லவா? எவ்வளவு கண்கொள்ளாக் காட்சியது? அதுபோன்றே வாசிப்பிலும் நிகழ வேண்டும். காற்றின் வேலையை எழுத்துகள் மேற்கொள்ளும்போது வாசிப்பாளன் மனம் பூஜ்ஜிய எடையில் சென்றுவிடும். அப்படியான வாசிப்பனுபவத்தைத் தந்திருந்தது காவியலோகம்.
முதல் பக்கத்தில் மீரான் கதைச் சொல்லத் தொடங்கும் முதல் பத்தியிலேயே ‘பருவம் பிசகிய பலாவை பிய்த்த கதையாகிவிடும்’ என ஓர் உதாரணத்தைக் காட்டுகிறார். நேரடியாகக் கதைக்குள் நம்மை இழுத்துச் செல்வதற்கு முன்பாக முன்கதைச் சுருக்கத்தைச் சொன்னால் அது விரிந்துகொண்டு செல்லலாம், அது தேவையற்ற ஒன்றாக குழப்பம் விளைவிப்பதாக இருக்கலாம். அதனால் அது தேவையில்லை, நேரடியாக விஷயத்திற்குப் போகலாம் என தோள்தட்டிச் சொல்வதற்காக ஓர் ‘எக்ஸ்யூஸ்’க்கு நல்லதொரு வட்டார உதாரணத்தைச் சொல்கிறார். அழகு.
பின்புறம் இரு ஆண்கள் பேசிக்கொண்டு வருகையில் முன்னிருக்கும் டிரைவர் ஆவலோடு கேட்கும் ஒரு சிறு சம்பவத்தைக் கூட, “அவன் காதுக்கருகில் ஆவல் நிறைந்த ஒரு புதிய முகம் இருக்கிறது.” என குறிப்பிடுகிறார். வரிக்கு வரி வாசகனைக் கட்டிப்போட்டு கதைக்கும் நிறைய விஷயங்கள் பக்கங்கள் முழுதும் விரவிக் கிடக்கின்றன.
இப்படிதான் கதையோட்டம் மனதிற்கு நெருக்கமாகத் தொடங்கியது.
சேது, கதைசொல்லி, நந்தனா, ஆட்டோ ட்ரைவர் இமானுவேல் ஆகிய நான்கு கதாபாத்திரங்களுக்குள் மட்டுமே நிகழ்கிறது நாவல். ஒரு ஜின்னும் உண்டு! அந்த அமானுஷ்யம்தான் நாவலின் சுவாரசியத்தை மெருகேற்றுகிறது. மட்டுமன்று கதைசொல்லியின் வர்ணிப்பும் கூட முக்கிய அங்கம்.
‘மதில்மேல் பூனையாக’- என எழுதாகச் சொல்லிவிட்டு கடந்துபோகக் கூடிய வாக்கியங்களைக் கூட ‘மதில் மேல் உலாவும் பலவீனமான பூனையைப் போல இரண்டாம்கெட்டானாய் இருக்கிறது மனது’ என்பதாக அழகூட்டும் மொழிநடை அபாரம்.
“சேது நான் ஒன்று சொல்கிறேன். எங்கு போனாலும் சிமிட்டும் நேரத்தில் அங்கிருக்கும் 10 பொருட்களையாவது கவனியுங்கள். இது ஒரு பயிற்சி. உங்கள் மனம் பெரிதாகி உள்ளம் பலப்படும்.” என்ற பத்தி கதையின் இறுதி பக்க நெருக்கத்தில் கண்டேன். அது சேதுவுக்கும் நமக்குமான அறிவுரை. ஆனால் இந்த அனுபவத்தால்தான் மீரானால் தன் நாவலில் வித்தைகளைக் காட்ட முடிகிறது போலும்.
ஒரு கதைக்குள்ளாகவே பத்துவிதமான கிளைக்கதைகளைத் தொடுத்துவிட்டு, குழப்பிடாமல் நிகழ்க்கு மீட்டி மீண்டும் கதையோட்டத்தில் பயணிக்கச் செய்கிறார். நான்கு கதாபாத்திரங்களுக்குள் பாம்பு, சாத்தான், ஜின், தூக்கில் தொங்கிய மனிதன், சுருட்டு புகையின் அமானுஷ்யம் என சுவாரசியத்தை அவரால் புகுத்த முடிந்தது அதே ‘கண்சிமிட்டும் நேரத்தில் பத்துப்பொருள்’ யுக்தியால்!
புத்தகத்தில் என்னைப் புன்னகைக்க வைத்த பத்திகளில் ஒன்று சாத்தான் பற்றியது. சாத்தான் மீதெல்லாம் நியாயம் கற்பிக்க முடியுமா? காவியலோகம் செய்கிறது. “கடவுளோடு அதீத நட்பில் இருந்த சாத்தானுக்கு தனது இடப்பெயர்ச்சி எவ்வளவு வலி நிறைந்ததாக இருக்கும்? அதனால்தான் தூக்கி வீசப்பட்ட சாத்தான் பூமியில் விழுந்த பிறகு அவரின் வன்மம் முழுவதும் ஆதாம் மற்றும் அவ்வா மீறி திரும்பி இருந்தது.” என்கிறார்.
“நகரின் விலை உயர்ந்த தேநீர் கடையிலிருந்து ஒரு கால் டாக்ஸியில் டீ வாங்கிக் கொண்டு வருமாறு தொலைபேசி வாயிலாக ஆணை பிறப்பிக்கிறான் சேது.” என்பதாக ஓரிடத்தில் பத்தி வாசிக்கக் கிடைத்தது. கொஞ்சம் நிறுத்திக்கொண்டேன். சாதாரண டீ! ப்ளாஸ்க்கில் வாங்கி வந்தால் போதுமானது. பத்து ரூபாய் டீக்கு எதற்காக 30 மடங்கு செலவு செய்ய வேண்டும் என்ற யோசனை மேலிடும்போது கதைசொல்லி புன்னகைத்தபடி நம்மிடம் சொல்வார் “புது திடீர் பணக்காரன்! அவன் பணக்காரனான விஷயத்தை இவ்வுலகுக்கு சாத்தியமான எல்லா வகையிலும் சொல்லியாக வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால் இப்படியாகச் செய்ய வேண்டியதாகிறது.”
அதேபோல் ஆட்டோ டிரைவர் இமானுவேல் தூரத்தில் நின்று போன் பேசிக்கொண்டிருக்கும் காட்சியைக் குறிப்பிட்டுவிட்டு அது கட்டாயம் காதலியாகதான் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என அடித்துச் சொல்கிறார். ஏனாம்? ஆண், தனக்கு விருப்பமான பெண்ணிடம் பேசும் போது அவன் உடம்பில் உள்ள எல்லா நாடி நரம்புகளும் முகத்துக்கு வந்துவிடுமாம்.
நந்தனாவுடன் கதைசொல்லியும் சேதுவும் ஆட்டோவில் போக வேண்டும். நந்தனா பக்கத்தில் தான் தான் அமர வேண்டும் என மும்முரமாய் திட்டமிடுகிறான் சேது. ஆனால் அது நிகழவில்லை. “அவசரத்தில் மனிதன் மிகக் கடுமையான குழப்பவாதியாகிவிடுகிறான் என்பதால் அவன் கை மிகப் பிரமாண்டமான வாய் கொண்ட அண்டாவில் கூட நுழையாது.” என அந்த தோல்விக்கு காரணத்தை விவரித்த இடம் போல் வாசிப்பில் ஆசுவாசப்படுத்தி மகிழ்வூட்டும் வித்தைகள் அதிகம் நிகழ்த்தியிருக்கிறார்.
ஜாலியான வாசிப்பனுபவம் உறுதி. அதுவல்லாமல் சுவாரசியம் கூட்டும் நிறைய வாக்கியங்கள் அணிவகுத்திருந்தது. அவை மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்துபவை. ஆலோசனைகள் வழங்குபவை. நேரடியாகவே கைகுலுக்கிவிட்டுப் பேசுபவை.
“சக மனிதன் மனரீதியாக வெல்வதற்கு நீங்கள் தோற்றுக் கொடுப்பது அன்பின் மிக அரிய காரியம் ஆகும்.”
“பணமும் பவிசும் உள்ளவனின் வாக்குகள் தனித்துவமான ருசியும் மணமும் இருக்கிறது.”
“எல்லாவற்றிலும் மனிதன் வெல்வதும்கூட துரதிஷ்டவசமானது. தான் நிறைய தோற்றுப் போவது போன்ற ரசனை இந்த வாழ்வில் முக்கியமானது. வெற்றி என்பது ஒரு வெறுமையில் கொண்டு போய் விடுகிறது. எனவேதான் பல வெற்றியாளர்கள் ஒரு பைத்தியக்காரனைப் போல கூறுகெட்ட தனமாக நடந்து கொள்கிறார்கள்.”
“அங்கு புதிய இடம் ஏதேனும் பார்க்கலாம் என்று நகரில் நடந்து கொண்டிருந்தேன். ஒரு புதிய நகரில் சில அடையாளங்களை கணக்கிட்டு கொண்டு கால் போன போக்கில் நடப்பதுதான் அழகானது.”
“எவ்வகையிலாவது எல்லா மனிதர்களுக்கும் சாந்தம் அவசியப்படுகிறது.”
“அவர்களிடம் இருப்பது அவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டால், பிறகு அவர்களிடத்தில் உனக்கு என்ன வேலை? ரகசியப்படுத்து. ரகசியப்படுத்துவதுதான் ஞானத்தில் பிரதானம்.”
இன்னும் நிறைய வரிகளை குறிப்பெடுக்காமல் விட்டுவிட்டேன். மேலுள்ளவை அதிகம் என்னைக் கவர்ந்தவை.
இறுதி பக்கத்தின் முடிவான எழுத்துடன் முற்றுப்பெறாமல் புத்தகத்தை மூடிவைத்த பின்னரும் அதன் அதிர்வலைகளை உடல் அனுபவிக்க வேண்டும். ஆலுவா நகர இரட்டை பால்கனி வீடு, காயல் நடைபாதை உள்ளிட்ட கதைகளத்தில் இருந்து நினைவு மீள காலம் எடுத்துகொண்டிருக்கிறது.
ஒரு சஸ்பென்ஸ் கதையாக நகரும் நாவல் இறுதிவரை அதே தவிப்பிலேயே வாசகனை வைத்திருக்கிறது. அடுத்த பகுதிக்காக காத்திருக்க வைக்கும் யுக்தியில் நிச்சயமாக மீரான் வென்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
————————————-————-
காவியலோகம் (நாவல்)
மீரான் மைதீன்
சுவடு பதிப்பகம்
பக்கம் : 80
விலை ரூ.130/-
————————————————–
Leave a reply
You must be logged in to post a comment.