அபு பர்ஹானா
காற்றின் அலைவரிசையில் எங்கோ ஒலிக்கும் , கடலோர கவிதை படத்தின் அடி ஆத்தாடி !! இளமனசொன்னு ரெக்கக் கட்டி பறக்குது சரிதானா ? என்ற பாடலின் கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச் சண்டை கண்டாயோ !! படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ !! எசை கேட்டாயோ … ஜானகி காதல் தொனியில் படிக்கும் வரிகள் கீர்த்தனாவின் காதுகளில் ஊடுருவிச் செல்கிறது.
அவள் முகம் வெட்கத்தாலும் காதலாலும் மலர்ந்திருந்தது. தன்னுடன் படிக்கும் தமிழரசன் மீது அவளுக்கே அறியாமல் காதல் அரும்பியிருக்கிறது. கல்லூரிக்குக் சென்று விட்டு கீர்த்தனா மகிழ்ச்சியோடு திரும்பி வந்தாள்
கீர்த்தனா முதல் வருடம் படிக்கும் கல்லூரியில் தமிழரசன் மூன்றாவது வருடம் படிக்கிறான். அதில்லாமல் கீர்த்தனா படித்த பள்ளியில் தான் தமிழரசனும் படித்தான். ஒரே ஊர், ஆனால் வெவ்வேறு தெரு !!! வெவ்வேறு சாமியைக் கும்பிடுபவர்கள் !!
கருப்பும் வெள்ளையும் கலந்த திராவிட நிறம் , சுருண்ட முடி, எப்போதும் சிரிப்போடு காணப்படும் வட்ட முகம் , அடர்த்தியான மீசை , பருமனும் ஒல்லியுமில்லாத உடல் வாகு, போலீஸ் போன்ற கம்பீரமான உயரம் என ஒரு அரசனை போலவே தமிழரசனும் இருப்பான்.
அவனைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துக் கொண்டேகிருக்கும். அந்தக் கூட்டம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். தானும் அந்தக்கூட்டத்தில் ஒருத்தியாகி அவனை அருகிலிருந்து ரசிக்க மாட்டோமா என, கீர்த்தனா நிறைய நாட்கள் ஏங்கியிருக்கிறாள்.
பள்ளியில் நடைபெறும் பேச்சுப்போட்டி ,கட்டுரைப் போட்டி போன்ற போட்டிகளில் அவன் தன் முதலிடம். பெயரில் மட்டுமில்லை அவன் மூச்சிலும் தமிழ் கலந்திருக்கிறது. பள்ளி , பஸ் , கல்லூரி என எல்லாயிடங்களிலும் பார்த்துப் பார்த்து அவளின் கண்கள் வழியே மனதுக்குள் நுழைந்து விட்டான்.
பலமுறை அவனோடு பேச நினத்திருக்கிறாள். கூச்சமும் பயமும் அவளைத் தடுத்திருக்கிறது. சில நாள் அருகில் வரை சென்றவள் அவனின் பார்வை போதும் என நினைத்து நகர்ந்து விடுவாள். தமிழரசனும் இவளைப் பார்த்ததும் சிறு புன்னகையை மலரச் செய்வான்.
அந்தப் புன்னகையும் வில் போன்று வளைந்து இணைந்திருக்கும் புருவங்களும் கீர்த்தனாவை தொந்தரவு செய்துக் கொண்டேயிருக்கின்றன.
நான்கு கண்கள் எழுதும் வண்ணக் கவிதை தானே காதல் !!!
பலமுறை அவனோடு பேச முயற்சி செய்து , பார்வை ஒன்றே போதுமென எண்ணி நகர்ந்து விடுவாள்.
பெண்களின் கண்களை பார்த்து பேசும் அவனின் தோரணை பிடிக்கிறதா ? பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கண்ணியம் பிடிக்கிறதா ? என அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை… ஆனால் அவள் நெஞ்சில் ஆணின் மனத்தை பரப்பி நானும் சொந்தம் என்ற எண்ணம் தரும் மகிழ்ச்சி மீறி வானைத் தாண்டுகிறது. அவனோடு வாழத் தோன்றுகிறது.
கடலலைகள் கரையிடம் அனுமதி வாங்கிக்கொண்டு மணலை அரித்து செல்வதில்லையே !! அரித்துச் செல்லும் மணல் போல அவன் மீதான காதலில் அவள் சரிந்துக் கிடக்கிறாள்.
காதலும் மரம் போலத்தான் !! எங்கு, எப்படி துளிர்க்கும் என்றெல்லாம் தெரியாது.. மண்ணோடு நேசம் கொண்டு மரம் முளைப்பது போல மனதோடு நேசம் கொண்டு காதல் முளைக்கிறது.. முளைத்தது !!!!
என்னைப் போலவே நீயும் காதல் கொண்டாயா ? என தமிழரசனிடம் கேட்பதற்கு முன், தான் காதல் வயப்பட்டத்தை தன் தோழியிடம் சொல்லிவிடத் துடிக்கிறாள் !!!
அம்மாவின் இற(ழ)ப்பிற்கு பிறகு கீர்த்தனாவின் சுகம், துக்கம், ஏமாற்றம் , வலி, அழுகை , சிரிப்பு என எல்லாச் சமயத்திலும் உறுதுணையாக நின்றதும் நிற்பதும் அந்தத் தோழி தான். அவளோடு பேசிவிட்டு சிறிது நேரம் மடியில் படுத்திருந்தால் எல்லா பாரங்களும் காற்றில் நீங்கி இலேசாகி விடும்.
தனது நிழல் மற்றும் காற்றினால் அணைப்பும் அரவணைப்பும் தரும் அந்தத் தோழி வேறு யாருமில்லை !! கொல்லைப் புறத்தில் பரந்து விரிந்து நிற்கும் விளா மரம் தான்.
மரத்திற்கு எத்தனை வயசிருக்கும் பாட்டினு சிறுவயதில் கீர்த்தனா கேட்க , என் மாமியா காலத்துக்கு முன்னாடி இருந்தே இந்த மரம் இருக்காம். நூறு வருஷத்துக்கும் மேல இருக்கும்.. கிழவன் கிழவிக்கு தான் வயசாயிட்டுனா தோல் சுருங்கி கூன் விழுந்துடும். ஆனா இந்த மரம் வயசான பொறவு தான் பச்சை பசேல்ன்னு துளிர்க்குது, காய் காய்க்குது !! இந்த மரத்துக்கு வயசே ஆகல .. எனச் சொன்னாள் பாட்டி !!
நூறாண்டுகளை கடந்த மரம் , கம்பீரமாக நிற்கும் !!
பாட்டி சொல்வது உண்மை தான். ஒருமுறை கூட விளா மரம் காய்ந்து பார்த்ததில்லை. அதே போல மரத்தில் எப்போதும் குருவி , கிளி, காக்கா , மைனா என பறவைகள் கூட்டம் கூட்டமாகவே இருக்கும். சுற்று வட்டரத்திலேயே இருக்கும் ஒரே விளா மரமும் இதுதான். இருபது வருடங்களுக்கு முன் அடித்த புயல் மழையில் பெரும்பாலான மரங்கள் வீழ்ந்துவிட இந்த விளா மரம் மட்டும் வீழா மரமாக நின்றது.
ஐந்தாறு பேர்கள் சேர்ந்து கட்டிபிடிக்கும் அளவிற்கு தடித்த மரம். கிளை கிளையாக பிரிந்து வளர்ந்திருக்கும். சீசன் சமயங்களில் அனைத்து கிளைகளிலும் கொத்துக் கொத்தாக காய்கள் காய்த்துத் தொங்கும். கீர்த்தனாவின் சிறு வயது நினைவுகள் முழுவதையும் இந்த விளா மரம் ஆக்கிரமித்துக் கொண்டது. எப்போது பார்த்தாலும் மரத்தில் தான் குடியிருப்பாள்.
கிளையில் ஏறி படுத்து அதனை வருடிக் கொடுத்துக்கொண்டே பேசுவாள். மரமும் அவள் பேச்சுக்கு இலைகளை அசைத்து பதில் சொல்லும்.
தேங்காய் போல ஓடு கொண்ட விளாம் பழம் அவ்ளோ எளிதாக உடையாது. ஆனால் மிக உயரத்தில் இருந்து விழும் ஒன்றிரண்டு பழங்கள் உடைந்து விடும். விழித்த கண்ணுக்கு பழுத்து விழும் விளாம் பழங்களைப் பொறுக்குவது தான் கீர்த்தனாவின் முதல் வேலை.
நன்றாக பழுத்த விளாம் பழத்தின் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை தனித்துவமானது. ருசித்தவர்களுக்கு மட்டுமே அதன் சுவை தெரியும்..
சீசன் சமயங்களில் , பழுத்த விளாம் பழங்களைச் சர்க்கரை பாகு சேர்த்து ஜாம் போல கிண்டி சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாடுகளுக்கு கொடுத்து விடுவார்கள். பழம் பழுக்கத் தொடங்கியதுமே , என் பொண்ணு விளாம் பழம் கேக்குதுனு பக்கத்து வீட்டு பாக்கியம் அக்கா கேட்பதற்கு முன்பே ஜாம் கிண்டி கொடுத்து விடுவாள் பாட்டி. பழங்களை தின்று விட்டு அந்த மரத்திற்கு துரோகம் செய்ய எப்படி தான் மனசு வந்ததோ ??
பழுத்தப் பழங்களை எடுக்கவும் , திருடவும் ஒரு கூட்டம் வரும். குளிக்க போகும் பெண்கள் முந்தானையில் பழங்களை அள்ளிப்போட்டுச் செல்வார்கள். இதனால் இரவின் பிந்திய நேரங்களில் கொல்லைப் புறத்தில் சலசலப்பு கேட்டுப் கொண்டேயிருக்கும்.
ஒருநாள் அதிகாலை 3 மணிக்கு சலசலப்பு சத்தம் அதிகம் கேட்கவே பாட்டி விழித்து விட்டாள். கூடவே கீர்த்தனாவும் !! பக்கத்து வீட்டை சார்ந்த பாக்கியம் அம்மாவின் வீட்டுக்காரர் மரத்தின் மீது ஏறி பழங்களை பறித்துப் போட்டு விட்டு கீழே இறங்குகிறார். வேட்டியை மடித்து கட்டி அதினுள் பழங்களை போடுகையில் பாட்டி பார்த்து விட்டாள்.
எப்பா !! நீங்க கேட்டா நான் தர மாட்டேன்னு சொல்ல போறேன்னா ? இப்படி திருட்டுத்தனமா வந்து ஏன் எடுக்கணும்னு பாட்டி கேக்க , எங்களுக்கு திருடனும்னு ஒரு அவசியமில்லை !! நீங்களே வச்சிக்கோங்க உங்க பழத்தை !! ஊர்ல இல்லாத மரம் வளக்குறாங்கன்னு சுவற்றுக்கு அந்தப் பக்கம் நின்னு பாக்கியம் சத்தம் போட , அதிகாலை நேரம் போர்களமானது.
ஏன் பாட்டி இப்படி பேசுறாங்க? கீர்த்தனா கேட்க ஏதோ கோவத்தில் பேசுறா !! யார்தான் செய்த தவறை ஒப்புக்கொள்வார்கள். குற்றவுணர்ச்சியை இப்படி தான் காட்டுவாங்கனு பாட்டி சொன்னது அவளுக்கு அப்போது புரியவில்லை.
பாட்டியின் மறைவுக்கு பிறகு பாக்கியம் அவ்வளவாக பேசுவதில்லை. ஏனென்றால் கீர்த்தனாவின் அப்பாவை பற்றி அவளுக்கு தெரியும். முன் கோபக்காரன். கோபத்தில் தராதாரம் தெரியாமல் பேசுவார்.
பாக்கியத்தின் பொண்ணு , காதல் திருமணம் செய்து விட்டு வந்து நிற்கையில், அவர்களை ஊரை விட்டு ஒத்தி வைக்க வேண்டுமென கறாராக பேசியது கீர்த்தனாவின் அப்பா தான். காரணம் ஜாதி கலப்பு திருமணம்.
இதனாலேயே அவர்களோடு பேச்சு வார்த்தையே வைப்பதில்லை. பாட்டியோடு எல்லாம் முடிந்தது !! சண்டையும் பேச்சும் …
தெருமுனையில் திரும்பும் போது விளா மரத்தின் இலைகள் பறந்து வந்துக் கொண்டிருந்தன. அதில் சில இலைகள் கீர்த்தனாவின் கால்களைத் தழுவிக் கொண்டது. அந்த இலையைக் குனிந்து எடுத்து துப்பட்டாவில் துடைத்து ஒரு முத்தம் கொடுத்து கையிலிருக்கும் புத்தகத்தில் வைத்தாள்.
மரத்தின் இலைகள் ஏன் இங்கே வரைக்கும் வந்திருக்கிறது என அவளுக்கு அப்போது விளங்கவில்லை. அம்மா , பாட்டி , விளா மரத்திற்கு பிறகு காதல் பூத்ததாலோ என்னவோ மனதிலேயே சிரித்துக் கொண்டு வருகிறாள்.
தூரத்திலிருந்து வரும்போதே மரத்தை பார்த்துக்கொண்டே வரும் கீர்த்தனா இன்றைக்கு மறந்து விட்டாள். பக்கத்தில் வந்ததும் ஏதோ உணர்வு வந்தவளாய் நிமிர்ந்து பார்க்கிறாள். மரத்தின் கிளைகளும் இலைகளும் தெரியவில்லை.. மேகம் பளிச்சென்று தெரிகிறது.
வீட்டின் முன்னே குவிந்துக் கிடக்கும் பெரிய பெரிய மரக்கட்டைகளையும் இலைகளையும் துப்பரவு தொழிலாளர்கள் வண்டியில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இனிமே எந்த சிறுக்கியாவது பேசுவாளா ?” என மீசையை முறுக்கியவாறே பேசிட்டு இருக்கும் அப்பாவிடம் ஆணவமும் கோபமும் கொப்பளிக்கிறது. முகத்துல எதையோ சாதித்த உணர்வு தெரிகிறது. பக்கத்து வீட்டு பாக்கியமும் அவர்கள் வீட்டு திண்ணையிலிருந்து இதனை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
காலையில் கல்லூரிக்கு கிளம்புகையில் , சலசலவென தனது கிளைகளை அசைத்து டாடா சொன்ன மரத்திற்கு என்ன ஆச்சோனு நினைக்கும் போதே அவள் நெஞ்சு படப்படவென துடிக்க ஆரம்பித்து விட்டது. ஓட்டமும் நடையுமாக வீட்டிற்குள் வந்து கொல்லைக்கு ஒடுகிறாள். அங்கே
கம்பீரமாக நின்ற மரம் தரையோடு தரையாக வெட்டப்பட்டுக் கிடக்கிறது. மிடுக்கான களிறு , மடிந்து தரையில் கிடப்பது போன்று வீழ்த்தப்பட்ட விளா மரம் பரிதாபமாகக் கிடக்கிறது. அதன் இலைகளும் காய்களும் பல மீட்டர் தூரத்திற்கும் சிதறிக் கிடக்க, வேரானது பக்கத்து வீடு வரை ஊடுருவி சென்று அவர்களுக்கும் தன்னுடைய பிணைப்பைக் காட்டியிருக்கிறது. இந்த பிணைப்பு தான் , தன் வீழ்ச்சிக்குக் காரணமென மரம் அறிந்திருக்க வாய்ப்பில்லை !!
கடவுளே !! கடவுளே … இப்படிச் செய்ய உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு? நூறு வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நின்ற மரத்தை இப்படி பண்ணிடீங்களே !!
பின்ன என்ன ? மரத்தோட வேர் அவ வீட்டுக்குள்ள போயி வீட்டை ரெண்டாக உடைச்சிடுமாம் !! இலைகள் எல்லாம் அவங்க கொல்லையில சேர்ந்து குப்பையாகுதாம். மரத்தை வச்சவனுக்கு அதை பராமரிக்க வக்கில்லனு பேசிட்டு இருக்கா !அந்த பாக்கியம்.
பொண்ணை ஒழுங்கா வளர்க்க துப்பில்லாதவ , என்னைய பார்த்து ஒரு கேள்வி கேட்றக்கூடாதுனு தான் மரத்தை வெட்டிட்டேன்.
கடும் புயலை கூட சமாளித்து வீழா மரமாக நின்ற மரம் , ஆணவம் மற்றும் கவுரவத்தின் காரணமாக வெட்டி வீழ்த்தப்பட்டு விட்டது.
வறட்டு கவுரவத்திற்காக நூறாண்டுகள் பெருமை பேசிய தன் ஆயுளையே குறைத்தவர்கள் இப்போது முளைத்த உன் காதலை ஏற்று நீட்டிப்பார்களா? என்ற தனது இறுதிச் செய்தியை கீர்த்தனாவிற்கு சொல்லிவிட்டு தான் போயிருக்கிறது அந்த மரம்.
கவுரவத்திற்காக பெருமை மிகுந்த மரத்தை வெட்டி வீழ்த்தியவர்கள் காதலர்களை கொலை செய்யக் கூட தயங்க மாட்டார்கள். ஏனென்றால் மனித உயிர்களை விட சாதி பெருமை தான் உயர்ந்தது என்ற நஞ்சு கலந்த சமுதாயத்தில் வாழும் புழுக்கள்.
தனது தோழி கடத்திய செய்தியை புரிந்துக் கொண்டவளாக தனது காதலை தமிழரசனிடம் சொல்ல வேண்டாமென முடிவெடுத்து விட்டாள். மரத்தை தான் காப்பாற்ற முடியவில்லை. தன் காதலையாவது காப்பாற்ற, விளா மரத்தின் வேர்களில் அதனைப் புதைத்து விட்டாள்…
மரம் துளிர்த்தாலும் இனி கீர்த்தனா மனதில் காதல் துளிர்க்கப் போவதில்லை !! தமிழரசனோடு அவளின் காதல் அத்தியாயம் மரித்து விட்டது.
மரங்களும் காதல் கொண்ட மனங்களும் வீழ்வதில்லை !! இதுபோன்ற அற்ப காரணங்களுக்காக வீழ்த்தப்படுகின்றன.
நன்றி : படம் இணையத்திலிருந்து