அத்தியாயம் 29
பல்வீர் தன்னுடைய சட்டையைச் சரி செய்துகொண்டார். கழுத்துப்பட்டையைக் கட்டியபோது முதல்முறை நீளமாக வந்தது. அடிக்கடி செய்தால் ஒழுங்காக வரும். சரி செய்து நேராகக் கட்டினார். விடுதி அறையின் வாசல் அழைப்பு மணி பாடியது.
அவசரமாகத் திறக்கப் போகும் வழியில் மிதியடி தடுக்கியது. சகுனம் என்ற வார்த்தை அவர் மனதில் தோன்றியது. இந்த வார்த்தையெல்லாம் கேள்விப்பட்டு எவ்வளவு நாள் ஆகிறது. எப்படி திடீரென்று தோன்றுகிறது? வெளியே ஒரு கருஞ்சட்டைச் சீருடை.
“ஐந்து நிமிடம்.. தயாராகிவிட்டேன்.” கோட்டை மாட்டவேண்டியதுதான் பாக்கி.
டெல்லியின் அதிகாலையில் ஜூலை முடிவிலும் கொஞ்சம் பனி போலத் தெரிந்தது. குளிரவில்லை. ஆனால் எட்டு மணிக்கு வியர்க்க ஆரம்பித்துவிடும். நடப்பதைத் தவிர்க்க பல்வீருக்கு ஒரு சிறு மின்சார வண்டியைத் தந்திருந்தார்கள். அந்த வண்டியே அவரை அழைத்துப்போனது. நல்லவேளை, வழி சொல்லியிருந்தாலும் நினைவில் இருக்கமுடியாத சந்துபொந்துகள். அத்தனையையும் தாண்டி வண்டி நின்ற இடம் ஒரு பெரிய கோட்டை போல இருந்தது. முகலாய கட்டட அமைப்பு தெரிந்தாலும் ஆங்காங்கே தெரிந்த கண்ணாடி குளிரூட்டப்பட்ட அறைகள் நவீனத்தையும் காட்டிக் குழப்பின. மின்வண்டி பல்வீரை முதல் வாசல் தாண்டி கட்டடத்தின் வாசல் பாதுகாப்பறையில் நிறுத்தியது.
கண்ணைக்காட்டி ரேகை ஒத்தி உள்ளே சென்றால் இன்னொரு சிறு பாதுகாப்புப் பரிசோதனை அறை.
“நேரில் முதல் முறை சந்திக்கிறோம் அல்லவா?” பிரஜாபதி கண்ணில் சில நாட்களின் தூக்கமின்மை தெரிந்தது.
“ஆம் டாக்டர்.”
“டாக்டர் எல்லாம் வேண்டாம். பிரஜாபதி என்று அழைத்தால் போதும். உங்களை இங்கே வரவழைத்தது ஒரு அவசரப் பதவி உயர்வு. தமிழ்நாட்டு இண்டெலிஜன்ஸ் அதிகாரியிலிருந்து தென் மண்டலத்துக்கு அதிகாரியாக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் சடகோபனைக் கைது செய்த அதிகாரி என்பதால்”
பல்வீருக்கு வாயெல்லாம் பல். “அவர் மேல் என்ன வழக்குப் போடப்பட்டிருக்கிறது?”
“அதற்கு இப்போது அவசரமில்லை. கூடவே கைது செய்தீர்கள் அல்லவா? டைசன்தானே அவன் பெயர்?”
டைசன்தானே முதல் குற்றவாளி. சடகோபனை அவன்கூட இருந்ததால்தானே கைது செய்தோம். இவர் என்ன குழப்புகிறார்? கேள்வியைக் கேட்காமல் ஆமோதித்தார் பல்வீர்.
“அவன் தப்பித்துவிட்டான். சென்னையில் ஒரு பெரிய திட்டம் தயாராகிறது என்று கேள்விப்படுகிறேன். அங்குதான் போயிருக்கக்கூடும் என்று தகவல்கள் வருகின்றன.”
“தப்பித்துவிட்டானா? எப்படி? சிறையில் இருந்தெல்லாம் தப்பிக்க முடியுமா என்ன? லொகேட்டர் எதுவும் இல்லையா?”
“லொகேட்டர் தேவைப்படாத இடத்துக்குத்தான் அனுப்பியிருந்தோம். இருந்தாலும் சாமர்த்தியமாகத் தப்பிவிட்டான். லாஜிஸ்டிக்ஸ் துறையில் குளறுபடி செய்துவிட்டார்கள். மேல் தகவல்களை நீங்கள் டெல்லி காவல்துறையிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள். அவனை உடனடியாகப் பிடிக்க வேண்டும். அதுதான் உங்கள் முதல் வேலை.” பிரஜாபதி கிளம்பும் அவசரத்தைக் காட்டினார்.
“ஆகஸ்ட் ஒன்றாம் தேதி விருது வழங்கும் விழாவில் இந்த டைசனை வைத்து ஏதாவது கலவரம் செய்யத் திட்டம் போட்டிருக்கிறார்களா?” சென்னையில் இவ்வளவு பெரிய குழு இருப்பதாகச் சந்தேகம் கூட எழுந்ததில்லையே..
“கலவரம் செய்யத் திட்டம் மாதிரித் தெரியவில்லை. விருது விழாவைக் குலைக்கத் திட்டம் போடுகிறார்கள் என்றுதான் தகவல்.”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஹூபர்ட் குடுவையிலிருந்து நீரை எடுத்து முகத்தில் வேகமாக அடித்துக்கொண்டார். ஒரு துவாலையை எடுத்து அழுத்தித் துடைத்ததில் முமக் சிவந்து ரத்த வண்ணம் ஆனது.
விடுதி அறை மிகச் சிக்கனமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒரு கட்டில் மிகக் குறுகிய இடைவெளியில் கழிப்பறைச் சுவருக்கு அருகில். ஒரே ஒரு ஜன்னல். காற்றுவராமல் மூடி வைக்கப்பட்டிருந்தது. படுக்கையில் இருந்து முடைநாற்றம் அடித்தது.
“எதுவும் பிரச்சினை இல்லையே?” என்று கேட்டான் டைசன். ஹூபர்ட் இல்லை என்று தலையாட்டினார்.
டைசன் கட்டிலின் நுனியில் அமர்ந்தான். ஹூபர்ட் தெளித்த நீர் கட்டிலிலும் கொட்டியிருக்கிறது. அனிச்சையாக நகர்ந்தான். ஹூபர்ட் மன்னிப்புக் கேட்கும் பாவனையில் கையசைக்க ”அதனால் ஒன்றும் இல்லை. இவனுக்கு இதெல்லாம் பழக்கம்தான்.” என்றான். இதென்ன தன்னைத்தானே படர்க்கையில் சுட்டிக்கொள்கிறான்?
ஹூபர்ட்டின் குழப்பத்தை உணர்ந்தவன் போல டைசன்,” உருவம்தான் டைசன். இப்போது அவன் வழியாகப் பேசுவது உங்கள் நண்பன்தான்.. எப்படி இருக்கிறாய் ஹூபர்ட்?”
ஹூபர்ட் விரைவாகச் சிந்தித்தார். “அனந்தன்? நினைவுக் கட்டமைப்பை வலைப்பின்னலுக்குள் கொண்டு வந்துவிட்டீர்களா?”
“அதுதான் ஹூபர்ட். இருபது வருடம் கழித்துப் பேசினாலும் ஒரே நொடியில் பழைய அத்தனை விஷயங்களையும் நினைவுக்குக் கொண்டு வந்தது மட்டும் இல்லாமல் என்ன நடந்திருக்கும் என்று ஊகித்தும் விட்டீர்களே?”
“எனக்கு அந்த அளவுக்கெல்லாம் மதிப்பு கொடுக்காதீர்கள் அனந்தன். ஊகங்களை விடக் குழப்பங்கள்தான் அதிகமாக இருக்கின்றன.”
“எனக்கும் அப்படித்தான் இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் ஏதோ ஒரு விஷயத்தில் கோபம் வந்தது. கோபம் என்ற உணர்ச்சியின் விசித்திரம் மனதுக்கு வித்தியாசமாகப் பட்டது. கொஞ்சம் கொஞ்சமாகக் கேள்விகள், அவற்றின் விடைகளுக்கான தேடல்கள், விடை கிடைத்ததில் இன்னும் கோபங்கள்..” டைசன் மூலமாக அனந்தன் எல்லா விஷயங்களையும் சொன்னார்.
திவ்யா கதை, பிரஜாபதி பிரவீணின் திட்டம், சடகோபன் அஷோக் எல்லாக்கதையையும் பொறுமையாகச் சொல்லிவிட்டு, “பாவ்னா என்றொரு பெண்ணை கேம்ப்ரிட்ஜில் பார்த்தீர்களே, அவள் இப்போது என்னுடன் தான் இருக்கிறாள். அவள் சொல்லித்தான் நீங்கள் வருவது தெரியும். உடனே செயல்பட ஆரம்பித்தேன். இந்த டைசன்”, தன்னைத்தானே சுட்டிக்கொண்டு, ”அரசாங்க ட்ரக்கில் இருந்து குதித்துத் தப்பித்திருந்தான். அவனை வைத்து உங்களுடன் பேசவேண்டியது இப்போதைக்கு முக்கியமான விஷயம்.”
“என்ன அவசரம்? நீங்கள் டெல்லி வரவில்லையா? உங்களுக்கும்தானே விருது?”
“ஒரு நிமிடம் அந்தப்பட்டியலைப் பாருங்கள் ஹூபர்ட். உங்களுக்கே புரியவில்லை?”
“யோசித்துக்கொண்டுதான் வந்தேன். மூளை ஆராய்ச்சி, முப்பரிமாண அச்சு ஆராய்ச்சி, மூளை மருத்துவர்கள், உடல் அச்சடிப்பு விற்பன்னர்கள் – இவர்கள்தான் இந்த நானூறிலும் இருந்தார்களே ஒழிய, கணித மேதைகள், வரலாறு பொருளாதாரம் சமூக மேம்பாடு என்று வழக்கமாக கௌரவிக்கப்படும் ஒருவர்கூட இல்லை என்பது எனக்கு விசித்திரமாகப் பட்டது..”
“அதே சந்தேகம்தான் எனக்கும். அந்தப்பட்டியல் – இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வெவ்வேறு வகையில் மின்வழிப் பயணம் என்பதைச் சாத்தியமாக்கியவர்கள், மூளைக் கட்டுப்பாடு என்பதை ஆராய்ச்சி செய்தவர்கள் – அத்தனை பேரும் அடங்கிய பட்டியல். அதை மீறி ஒருவர்கூட இல்லை.”
ஹூபர்ட் பட்டியலை வேகமாக மீண்டும் பார்த்தார். டைசன்.. அட.. அனந்தன் சொல்வது சரிதான்.
“இந்த நானூறு பேரும் இல்லை என்றால், என்ன நடந்தது, யார் நடத்தினார்கள், யாருக்கு ஆதாயம் என்பதை யாராலும் தெரிந்துகொள்ளவும் முடியாது, ஆதாரங்களும் இருக்காது.”
“அப்படியென்றால்?”
“இந்த விழாவில் எதோ பிரம்மாண்டமாக நடத்தப் போகிறான் பிரவீண். அது என்ன என்று தெரிய வேண்டும். அதற்கு..”
“நீங்களும் என் வலைப்பின்னலுக்குள் வரவேண்டும். அதற்கு டைசன் உதவி செய்வான்.” தொடர்ந்தார் அனந்தன், டைசனாக.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
காலை விடியத் தொடங்கி இருந்தது. கோபியின் நாட்காட்டி ஜூலை 29 என்று மாறியது. அன்றைய வேலைகளைப் பட்டியலிட்டுக் காட்டியது. வேலைகளைத்தான் செய்யப்போகிறேனா இன்று? இரவு முழுக்கத் தூங்காதது கண்ணை இழுத்தாலும் வாழ்நாளில் இல்லாத அதிர்ச்சிகளை ஓர் இரவில் பெற்றது தூக்கத்தை மீறி அட்ரினலின் சுரக்க வைத்தது. ஒரு நொடி எல்லாம் கனவு போலத்தான் இருந்தது. கண்ணைக்கசக்கிக் கொண்டு சுற்றிப்பார்த்தால் வரவேற்பறையில் ஒவ்வொருவர் ஒவ்வொரு நிலையில் சாய்ந்து அவனைப்போலவே தூக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாமல் இருந்தது நடந்தது எல்லாம் நிஜம்தான் எனச் சொன்னது.
கௌஷிக் மட்டும் தூங்கிக்கொண்டிருந்தான். அவனுக்கு மட்டும்தான் இரவு தெரிந்த விஷயங்களில் தனிப்பட்ட பாதிப்பு ஒன்றும் இல்லை. கதை கேட்பதுபோலக் கேட்டுவிட்டுத் தூங்கிக்கொண்டிருக்கிறான்.
அப்பா அவருடைய சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டிருந்தார். தூங்குகிறாரா? இல்லை. அவர் உதடு அவ்வப்போது அசைந்தது. யாரிடமோ பேசிக்கொண்டிருக்கிறார். மனம் மூலம் பேசுவதற்கு உதடு பழக்க தோஷத்தில் அசைந்துகொண்டிருக்கிறது.. எந்தக் கருவியும் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு யாரிடமோ பேசுகிறார் என்று நேற்று யாராவது சொல்லியிருந்தால் சொன்னவரை மனநல மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருப்பேன். ஆனால் இன்று?
அஷோக் கண்ணில் நீர் வழிய ஒரு புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மகளாகத்தான் இருக்கவேண்டும். பாவம். அவருடைய மகள் இறந்துவிட்டாள் என்பதைத் தூண்டிவிட்டிருக்கக்கூடாது. கோபி அங்கிருந்த திவ்யா படத்தைப் பார்த்தான்.
பாவ்னாவும் அஸ்வினிவும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம் கவனிக்க முயன்றான். “அம்மா இறந்தபோது கருவுற்றிருந்திருப்பாரா?” கோபிக்கு பாவ்னாவைத் தன் தங்கை என்றது உறைத்தது. இதை விசாரிக்க வேண்டும். அந்த பிரஜாபதியை விசாரிக்க முடிந்தால்..
அனந்தன் திடீரென்று நாற்காலியில் இருந்து எழுந்தார். “கோபி.. இன்னிக்கு ஜூலை 29ஆ?”
“ஆமாம்பா..”
“நீ உடனே டெல்லி போயாகணும். இங்க இருக்க மத்தவங்களும்.”
கோபி யோசித்தான். பல்வீர் டெல்லி போயிருப்பதாகத் தகவல். அவரிடம் சொன்னால் விடுமுறையை ரத்து செய்து வரச் சொல்லிவிடுவார். ஆனால் அந்தத் தகவலும் பிரஜாபதியிடமே போகும். பிரஜாபதி கோபியைச் சந்தேகித்தது நினைவுக்கு வந்தது. ஆனால் பல்வீர் பார்த்துக்கொள்வான்.
“பல்வீர் டெல்லி போயிருக்கார். அவரைக்கேட்டா என்னை வரச்சொல்லிடுவார். மத்தவங்க?”
”இவங்க ரெண்டுபேரும் கார்ல வந்தாங்க. அவங்க அப்படியே திரும்பிப்போகட்டும்.“
“நானும் அவங்ககூடப் போறேன்.” என்றாள் அஸ்வினி. “ஒரு விஷயம் மறக்கறீங்க. இவங்க இரண்டுபேரும் இங்க வந்தது தேனிலவுக்கு மட்டுமில்லை. என்கூடப் பேசறதுக்கும்தான். சப்ஜெக்ட் மேட்டர் எக்ஸ்பர்ட்னு நானும் அவங்ககூடப் போகலாம்.”
அனந்தன்,”அவள் சொல்றது சரிதான். செய்யப்போகும் வேலைக்கு நிறையப்பேர் வேணும்.” சொல்லிக்கொண்டே அலமாரியைத் திறந்து ஒரு குளிர்பதனப் பெட்டியை எடுத்தார். “இதுல நெட்வொர்க்கிங் நானோ கம்ப்யூட்டர்ஸ் இருக்கு. போதும்னுதான் நினைக்கிறேன்.”
அமைதியாக இருந்த அஷோக், “நானும் போகிறேன்.” என்றார் தீர்மானமாக.
”எப்படி? நிறைய ஆபத்து இருக்கிறதே” என்றான் கோபி.
“பிரஜாபதியின் திட்டத்தில் வெடிமருந்துக்கு வேலை இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க உங்களையெல்லாம் விட நான்தான் சரி. உயிருக்கு ஆபத்தைப்பற்றியெல்லாம் கவலைப்படும் நேரமில்லை இது” அஷோக் தெளிவாகத்தான் இருந்தார்.
”நானே கேட்கத்தான் நினைத்தேன், ஆனால் தயங்கினேன். நீங்கள் சொல்வது சரிதான்.” அனந்தன் பெட்டியை கௌஷிக்கிடம் கொடுத்தார். ”காரில் வைத்துக்கொள்ளுங்கள். அங்கே டைசனை வாங்கிக்கொள்ளச் சொல்கிறேன்.”
”டெலிபோர்ட்ல நானும் அஷோக்கும் போறோம்னா மெமரில நேத்து நாம பேசினதெல்லாம் இருக்குமே?” கோபி கவலையுடன் கேட்டான்.
“அதைச் சமாளிக்க முடியும். என்னுடைய மெத்தட்லதான் இன்னும் டெலிபோர்ட்டிங்ல மெமரி எடுக்கறது, அனலைஸ் பண்றது, வேற ஊருக்கு அனுப்பறது எல்லாம் பண்ணிகிட்டிருக்காங்க. அந்த வொர்க்கிங் ஸ்டைல் எனக்குத் தெரியும்ன்றதால, என்ன மெமரியெல்லாம் பிரச்சினை தரக்கூடியதோ அதையெல்லாம் என்க்ரிப்ட் பண்ணிடலாம். அரசாங்கத்தோட பழைய மெத்தட்ல அந்த அளவுக்கு அனலைஸ் பண்ண முடியாது. வேற இடத்துக்குப் போய் ஒரு சின்ன ட்ரிக்கர் பண்ணினா, எல்லாம் ஞாபகத்துக்கு வந்துடும், உணர்ச்சிகள் சகிதம்..”
“அந்த ட்ரிக்கர் யாரு பண்ணுவாங்க?” கேட்டுக்கொண்டிருக்கும்போதே கோபிக்கு ஒரு அழைப்பு வந்தது.
“கோபி. பல்வீர். டெல்லிக்கு வந்திருக்கேன். ஒரு முக்கியமான அசைன்மெண்ட். ஒரு ஆளைப் பிடிக்கணும்..” பல்வீர் பதட்டமாக ஆனால் உற்சாகமாகப் பேசினார்.
“யாரு? அந்த டைசன்தானே?” கோபி அவசரமாகச் சொல்லிவிட்டு உதட்டைக் கடித்துக்கொண்டான்.
தொடரும்…