அத்தியாயம் 32
பிரஜாபதி நீதிமன்ற அறையின் பின்பக்கமாக உட்கார்ந்திருந்தார். சடகோபனும் டைசனும் குற்றவாளிக்கூண்டில் நின்றிருந்தார்கள். இரண்டு காவலாளிகள் மட்டும் கொஞ்சம் பின்பக்கம் நின்றிருக்க மற்றபடி நீதிமன்றம் காலியாகத்தான் இருந்தது. சக்சேனா நீதிபதி இருக்கையில் அமர்ந்துகொண்டிருந்தார்.
”சடகோபன், எம் ஃபில் பி எச் டி. இவ்வளவு படித்திருக்கிறீர்கள், சரித்திர ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஏன் இந்தத் தீவிரவாதம் எல்லாம்?”
”நான் செய்ததில் என்ன தவறு இருக்கிறது? என் ஆராய்ச்சி மாணவனை அழைத்துவரும்போது ஏதோ பிழை ஏற்பட்டிருக்கிறது. டெலிபோர்ட்டிங்தான் அதற்குப் பொறுப்பேற்கவேண்டும்.”சடகோபன் பேசும்போதே தன் வாதம் வலுவற்றது என்று புரிந்தது. எந்த வழக்கறிஞரும் இல்லாத நீதிமன்றம். இது விசாரணை இல்லை, தீர்ப்பு சொல்ல மட்டுமே கூடியிருக்கும் அமைப்பு. என்ன பேசினாலும் பயன் இல்லை.
“உங்கள் மேல் உள்ள வழக்கு அது அல்ல. திவ்யா அனந்தன் என்னும் வழக்கறிஞர் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டு, அவர் டெலிபோர்ட் செய்த அதே நாளில் லாஜிஸ்டிக்ஸ் வண்டிகளை வழிமறித்து அவர் பயணத்தைக் குளறுபடியாக்கி அவரைக் கொன்ற குற்றம். திரு டைசன் டெம்ப்ஸி மேல் சட்டவிரோதப் பயண வழக்குதான் இருக்கிறது.”
சடகோபன் அதிர்ந்தார். இருபதாண்டுகள் பழைய வழக்கு. அப்போதே நடத்தி முடித்து குற்றம் நிரூபிக்கப்படாமல் வெளியே விட்டார்களே.
‘கேள்’ என்றது அனந்தன் குரல்.
கேட்டார்.
“அப்போது போதுமான சாட்சிகள் இல்லை. இப்போது இருக்கின்றன. தொழில்நுட்ப பாதுகாப்பு ஆலோசகர் திரு தேஜி குமார் பிரஜாபதியின் விசாரணையில் எல்லாம் தெளிவாக இருக்கின்றன.”
சடகோபன் பிரஜாபதியைப் பார்த்தார். பிரஜாபதியின் கண்கள் ’முன்பே சொன்னேன் இல்லையா’ என்று சிரித்தன.
“டைசன் டெம்ப்ஸி. இந்தியாவுக்கு எதற்கு வந்தீர்கள்?” சக்சேனா திடுமென ஆளை மாற்றிப் பேச ஆரம்பித்ததில் சடகோபன் குழம்பினார். ‘அவ்வளவுதான். இனி உன்மீது விசாரணை இல்லை. முடித்துவிட்டான் பிரஜாபதி.’ என்றார் அனந்தன் உள்ளிருந்து.
‘நல்லதுதான். எல்லாம் முடிஞ்சுபோச்சு. இனி அல்லாட வேண்டாம். உன்னால முடிஞ்சதைச் செஞ்சு பாத்துட்டே.’ சடகோபன் கவலை பயம் எல்லாம் நீங்கிவிட்ட விரக்தியில் பதிலாக நினைத்தார்.
“திரு சடகோபன் என்னை அழைத்திருந்தார். சில வெடிகுண்டு வேலைகளுக்காக.” டைசன் பதில் சொன்னான்.
சக்சேனா விசாரணையைத் தொடர்ந்தார். “வெடிகுண்டு வைப்பது சட்ட விரோதம் என்று தெரியாதா?”
“எல்லா வெடிப்பும் சட்டவிரோதம் இல்லையே. இவர் அழைக்கும்போது ஒன்றும் சொல்லவில்லை.”
“நினைவுகளை மாற்றி அழைத்துவருபவர்கள் அனுமதி பெற்றா வெடிக்கப்போகிறார்கள்? அந்த அறிவு கூட உங்களுக்கு இல்லையா?”
டைசன் அமைதியாக இருந்தான்.
பிரஜாபதி திடீரென எழுந்தார். “நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?”
“விசாரணை அதிகாரியாக நீங்களே பணிபுரிந்ததால் தாராளமாகக் கேட்கலாம்.”சக்சேனா சலுகை அளிப்பதைப் போல கட்டளைக்கு அடிபணிந்தார்.
“டைசன். உங்களை அழைத்து வந்தது யார்?”
“சடகோபன் தான் முதலில் என்னிடம் பேசினார். ஆனால் அழைத்து வந்தது வேறு நபர்.”
சடகோபன் உள்ளுக்குள் பதறினார். ‘யார் பேரைச் சொல்லப்போறான்?’
‘என் பேர்தான். சொல்லச் சொன்னதே நான்தானே’ என்றார் அனந்தன்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அறைக்கதவு திறந்தது. உள்ளே இருந்தவர் ஆச்சரியப்பட்டார். “சார்.. நீங்கள் எப்படி இங்கே?” என்றவர் அவசரமாக “உள்ளே வாருங்கள். கல்லூரி நாட்களுக்குப் பிறகு பார்க்கவே இல்லையே.”
அஷோக் புன்னகைத்தார். “அபினவ் சிந்தாமணி. உங்களுக்கு நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை. எனக்கு மற்ற சுரங்கங்களைத்தான் பார்க்கவேண்டும் – நிலக்கரியில் எனக்கு எந்த வேலையும் இல்லை.”
அறையின் கட்டிலில் சிந்தாமணி அமர்ந்து, “ஏதாவது சாப்பிடுகிறீர்களா?” அவருக்கு இன்னும் அஷோக்கின் வருகைக்கான காரணம் பிடிபடாத குழப்பம் குரலில் தெரிந்தது.
“எனக்கு ஆகஸ்ட் மூன்றாம் தேதி பத்ம விபூஷண் விருது வழங்குகிறார்கள். அதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே வந்துவிட்டேன். உங்களையெல்லாம் பார்க்கலாம் என்று.” அஷோக் அறையை நோட்டம் விட்டார். ஒன்றும் பெரிதாக இல்லை. இருந்தாலும் சிந்தாமணியின் கணினியில்தான் இருக்கும்.
“உங்களுக்கு பாரதரத்னா இல்லையா? நீங்கள் அதற்குத் தகுதியானவர்தானே?” சிந்தாமணிக்கு இன்னும் எதும் புரியவில்லை.
“அதை நாமா முடிவு செய்வது? முடிவெடுப்பவர்களுக்குத் தோன்ற வேண்டாமா?” என்றவர் பேச்சை மாற்றி, “நான் வந்தது ஒரு விஷயம் தெரிந்துகொள்ளத்தான். நீங்கள் குஷ்முண்டாவில் வெடிமருந்து நிபுணராகத்தானே வேலை செய்கிறீர்கள்?”
“ஆமாம் சார். கல்லூரி முடித்ததில் இருந்தே.”
“இப்போது நிலக்கரிச் சுரங்கங்களுக்கு என்ன வெடிமருந்து உபயோகிக்கிறார்கள்? எனக்கு ஒரு வகுப்புக்காக இந்தத் தகவல் தேவைப்படுகிறது.”
“இதற்கா நேரில் வந்தீர்கள்? ஒரு அழைப்பு போதாதா? இல்லையென்றால் நானே சென்னை வந்திருப்பேனே..” சிந்தாமணிக்கு இன்னும் ஆச்சரியம்தான். “அதே CX-7 தான். நைட்ரோ அமைன் கூட்டுப்பொருள். முன்பெல்லாம் டி என் டி வைத்துக்கொண்டிருந்தார்கள். அதைவிட இது கட்டுப்படுத்தச் சுலபம். நீங்கள் எடுத்த பாடம்தான். ஒரு மாற்றமும் இல்லை.”
’அவன் இங்கே ஏன் வந்திருக்கிறான் என்று கேள்’ என்றது உள்ளுக்குள் குரல். கேட்டார்.
“மத்திய அரசாங்கத்தில் இருந்து அழைப்பு. ஐந்து கிராம் வெடிமருந்துடன் வரச்சொல்லி. எதோ பழைய கட்டடத்தை இடிக்கவேண்டும் போல.” சிந்தாமணி கொஞ்சம் கூச்சத்துடன்,”சார், இதை ரகசியம் என்று சொன்னார்கள். காரில் வரச்சொல்லிச் சொன்னார்கள். நீங்கள் இதை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.”
”நிச்சயமாகச் சொல்ல மாட்டேன். கவலைப் படாதீர்கள்”
‘அவன் இன்னும் குழப்பமாகத்தான் இருக்கிறான். வேறு ஒரு காரணம் சொல்லுங்கள், நம் படையில் அவனை இணையுங்கள்.’ அனந்தன் சொன்னது கேட்டது.
அஷோக் ஒருநொடி தயங்கி,”சிந்தாமணி, நான் வந்த முக்கியக் காரணம் வேறு. என் விருதுவிழா அழைப்பிதழில் இன்னொருவரைக் கூட்டிவரலாம் என்றிருக்கிறது. என் மகள் வர முடியவில்லை. என் குழந்தைகள் என்றால் என் மாணவர்கள்தானே. நீங்கள் வரமுடியுமா?”
சிந்தாமணி உடனே மகிழ்ச்சியானார். “இதை நீங்கள் கேட்பதே என் பெருமை சார். நிச்சயம் வருகிறேன்.”
அஷோக் புன்னகையுடன் கைகுலுக்கினார்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
”லாஜிஸ்டிக்ஸ் துறை” என்ற பெயர்ப்பலகை அந்தக் கட்டடத்தின் அளவுக்குச் சம்பந்தமில்லாமல் மிகச் சிறியதாக இருந்தது. அதற்குக்கீழ் இன்னமும் சிறிதாக “அத்துமீறுபவர்கள் உடனடி தண்டனைக்கு ஆளாவார்கள்”
பாதுகாப்பு அறையில் ஆட்கள் யாரும் இல்லை. பிரஜாபதி வந்த ட்ரக் கணினியால் சரிபார்க்கப்பட்டு வேலியைக் கடந்தது. ட்ரக் இன்னொரு நீண்ட உயர்ந்த கட்டடத்தின் வாசலுக்கு வந்து நின்றது. பிரஜாபதி இறங்கினார், சடகோபனும் டைசனும் பின்னிருக்கையில் அமர்ந்து அவரைப் பரிதாபமாகப் பார்த்தார்கள்.
”இறங்கு இறங்கு. நிறைய வேலை இருக்கிறது.” என்றார் டைசனிடம்.
”என்னைக் கொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் நான் அவசரப்பட வேண்டும்?”
“மரண தண்டனை சடகோபனுக்கு மட்டும்தான் தரப்பட்டிருக்கிறது. உனக்கில்லை. நீ வெளிநாட்டுக் குடிமகன். உனக்கு இன்னொரு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.”
சடகோபன் வெற்றுப்பார்வை பார்த்தார். “என்னால ஒண்ணும் பண்ண முடியலடா’ அனந்தன் குரலுக்குப் பதிலாக ‘நீ என்ன செய்வே.. எனக்கு விதி!’ என்று நினைத்துக்கொண்டார்.
பிரஜாபதி பேசிக்கொண்டிருந்தார். “இந்த வேலையைத் தனியாகச் செய்ய முடியாது. உனக்குத் தண்டனை மூளை திருத்தம்தான்.அதை இன்னும் கொஞ்ச நேரத்தில் நிறைவேற்றுவோம்.”
இரண்டு காவலர்கள் வந்தார்கள். அவர்களுக்குச் சடகோபனைக் காட்டிய பிரஜாபதி, ”இவரைச் சுத்தம் செய்து கிணற்றுக்கு அனுப்பிவிடுங்கள்” என்றார்.
பிரஜாபதி வேறு ஒரு நீண்ட உயர்ந்த கட்டடத்தை நோக்கி டைசனைக் கூட்டிக்கொண்டு நடந்தார். ”மறைபொருள் கிடங்கு” என்ற கதவைக் கண்ணைக் காட்டித் திறந்தார்.
உள்ளே இருந்த அறை மிக உயரமான தளத்துடன் எல்லாப்பக்கமும் சுவராக இருந்தது. உயரத்தில் ஒரு க்ரேன் தன்னிஷ்டம்போல அசைந்துகொண்டிருந்தது. இவர்கள் வந்த கதவும் மூடிக்கொண்டு சுவராகவே மாறிவிட்டிருந்தது. பிரஜாபதி கதவு இருந்த இடத்தில் சுவரை ஓரிடத்தில் தட்ட ஒரு சிறு திரை உயிர்பெற்றது.
வேக வேகமாக ஓர் எண்ணை உள்ளிட்டார்.
இயந்திரங்கள் இயங்கும் ஓசை கேட்டது. சுவரின் ஒரு மூலையில் ஒரு கோடு போல ஆரம்பித்து சதுரமாக ஒரு பிளவு ஏற்பட்டது. ஒரு இழுப்பறை போல அந்தச் சதுரம் வெளியே வந்து கண்ணில் படாத கம்பிகளால் இழுக்கப்பட்டு, பிரஜாபதி இருந்த இடத்துக்கு முன் நின்றது.
மூடியிருந்த துணியைத் திறந்தார். ஒரு பெரிய திரவக் குடுவை. அதில் பிரவீண் உடல் மிதந்துகொண்டிருந்தது.
”இந்தப் பழைய ஜனாதிபதிக்கு உயிர் தரலாமா?”பிரஜாபதி சிரித்தார்.
கையில் இருந்த பெட்டியைக் காட்டி,“ இதில் ஐந்து கிராம் CX-7 இருக்கிறது. இந்த உடலுக்குள் புதைக்க வேண்டும். எங்கு புதைத்தால் சுற்றுப்புறத்தில் நூறு மீட்டர் வரை ஒரு உயிர்கூடப் பிழைக்க முடியாமல் வெடிக்கும்?” என்றார் டைசனைப் பார்த்து.
டைசன் அமைதியாக இருந்தான்.
பிரஜாபதி கையில் திரையைக் காட்டினார். “இதை நீ பார்க்கவேண்டும்.” என்றார் புன்னகையுடன்.
திரையில் சடகோபன் ஒரு தெருவில் வேகமாக நடந்துகொண்டிருந்தார். தெருவின் முடிவு முட்டுச்சந்து போலிருந்தாலும் திடீரென ஒரு வழி மட்டும் திறந்தது. அந்தப்பாதையில் தொடர்ந்தார். புகைவீச்சம் அதிகமாக இருந்தது. தூரத்தில் தெரிந்த கிணற்றில் இருந்து புகை மண்டிக்கொண்டு வெளிவந்தது. அவ்வப்பப்போது தீயின் கிரணங்களும் தெரிந்தன.
கிணற்றை நெருங்கியபிறகும் வேகம் குறையவில்லை. நேராக நடந்துகொண்டிருந்தார். புவி ஈர்ப்பு இழுக்க தீக்கிணற்றில் விழுந்தார்.
”இதிலிருந்துதான் நான் உன்னைக் காப்பாற்றியிருக்கிறேன். நீ எனக்குத்தான் நன்றியுடன் இருக்கவேண்டும்.”
டைசனுக்கு என்ன மாதிரிச் சுழலில் மாட்டியிருக்கிறோம் என்று புரிந்தது.
பிரஜாபதியிடம் இருந்த பெட்டியைச் சுட்டிக் காட்டினான். “அதை இப்போதே வைத்துவிடலாமா?”
“நிச்சயம். வெடிக்க வைக்கப் போவதும் நீதான்.” பிரஜாபதி பிரவீண் இருந்த குடுவையைப் பார்த்துக் கேட்டார்.
“நாளை சாகத் தயாரா குடியரசுத்தலைவர் அவர்களே?”
%%%%%%%%%%%%%%%
சடகோபன். தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்தத்தைத் தவிர வேறெந்தத் தவறும் செய்யாதவன்.
அனந்தன் குற்ற உணர்ச்சியில் விளக்குக்கூட போடாமல் அறையில் அமர்ந்திருந்தார். அவர் நினைவில் அறைகளில் ஒரு மூலையில் அஷோக் சிந்தாமணியைச் சந்தித்தார், கோபி பல்வீரைச் சந்தித்தான், ஹூபர்ட்டும் ஜோன்ஸும் பல அறிவியலாளர்களைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இவையெல்லாவற்றையும் மீறி அனந்தன் சடகோபனை நினைத்து வருந்திக்கொண்டிருந்தார்.
அவனைக் கொலைக்களத்துக்கு அனுப்பியது நான். கோபமில்லா வாழ்வில் இருந்தவனைத் தூண்டி ஏறத்தாழ ஒரு தீவிரவாதியாகவே ஆக்கி..
அவன் என் மனைவியைக் காதலித்தான் என்பதனாலா? எண்ணம் தோன்றும் முன்பே தலையாட்டி அழித்தார்.
இல்லை. அவனைத் தவிர வேறு யாரையும் என் நெட்வொர்க்கிங் ஆராய்ச்சி சோதனைக்குச் சரிப்பட்டிருக்கமாட்டார்கள்.
இருந்தாலும் நீ அவனைக் காப்பாற்றியிருக்கவேண்டும்.
முயற்சி செய்தேனே. முடியவில்லை.
போதாது. இன்னும் எதாவது செய்திருக்கவேண்டும்.
ஆனால் ஒரு சடகோபன் – நானூறு அறிவியலாளர்கள் – நாளைய நாடே என்று பார்க்கும்போது..
அவர்களை நீ காப்பாற்றிவிடுவாயா?
அனந்தன் தனக்குள்ளே வாதப்பிரதிவாதங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது வாசல் மணி ஒலித்தது. ஜன்னல் வழியே பார்த்தார். சீருடைக் காவலர்கள்.
“ஹூபர்ட். நினைத்தது நடந்துவிட்டது. இன்னும் பத்து நிமிஷம் கழித்து நீங்கள் நம் திட்டத்தைச் செயல்படுத்தலாம்.”
கதவைத் திறந்தார்.
“அனந்தன். தேசத்துரோகக் குற்றத்துக்காக உங்களைக் கைது செய்கிறோம். டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுகிறீர்கள்.”
தொடரும்…