அத்தியாயம் 33
பாவ்னாவும் ரிச்சர்டும் மாநாட்டு அறையில் என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒன்பது மணி சந்திப்புக்கு எட்டரைக்கே வந்துவிட்டிருந்தாலும் யாரும் அந்த அறைக்கு வரவில்லை. யாரும் வரப்போகும் அறிகுறியும் தெரிந்திராவிட்டாலும் தயார் நிலையில் அமர்ந்திருந்தார்கள். ரிச்சர்ட் அறிக்கையில் எழுத்துப் பிழை பார்த்துக்கொண்டிருந்தார். பாவ்னாவின் வேலையில் அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது என்று தெரிந்திருந்ததுதான். இருந்தாலும் பொழுது போகவில்லை. பிரஜாபதி மட்டும் ஒன்பது ஐந்துக்கு உள்ளே நுழைந்தார்.
“மூன்று நாட்கள் முன்பே தந்திருக்கவேண்டிய அறிக்கை. நேரத்தோடு செய்யாமல் பரபரப்பான நாளில் வருகிறீர்கள்.” கொஞ்சம் கோபமாகவே கேட்டார்.
”சென்னை போகவேண்டியதாகி விட்டது..” பாவ்னா தயக்கமாகச் சொன்னாள்.
”சரி.. உங்கள் திட்டத்தைக் கொடுங்கள், பார்க்கலாம்”
“மன்னிக்கவும் திரு பிரஜாபதி. இந்த வேலையை எங்களுக்குச் சொன்னது ஜனாதிபதி. அவரிடம்தான் தருவோம்” பாவ்னா ஆணித்தரமாகச் சொன்னதை பிரஜாபதி ரசிக்கவில்லை.
“தாருங்கள் பரவாயில்லை. அவர் வேறு நான் வேறு இல்லை.” கதவு திறந்த சத்தமே கேட்கவில்லையே.. ஜனாதிபதி எப்போது உள்ளே வந்தார்?
பிரஜாபதி வேகமாகப் படித்தார். “பதினைந்து நாட்களுக்குள் இது நடக்குமா?”
பிரவீண் குழப்பமாகப் பார்க்க ரிச்சர்ட் விளக்கினார். “அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை புதிய மருத்துவக் கொள்கையை ஏற்க வைக்க ஒரே வழி – பயம் தான்.”
பாவ்னா தொடர்ந்தாள். “ஊடகத்தின் பலம் மிக அதிகம். முதலில் இன்றோ நாளையோ வானத்தில் ஒரு பிரகாசமான வெளிச்சத்தை உண்டு செய்யலாம்.”
பிரஜாபதி சிரித்தார். “இன்றே அது நடக்கும். டெல்லியில் பல பகுதிகளில் உணர்வார்கள்.”
ரிச்சர்டுக்கு அந்த வார்த்தையில் எந்த சந்தேகமும் வரவில்லை. “அந்த வெளிச்சத்தின் காரணம் ஒரு விண்கல் பூமியை நோக்கி வருவதுதான் என்று ஊடகங்களில் பிரபலப்படுத்துவோம். அதற்கான ஒலிப்படங்களைத் தயார் செய்ய ஆட்களுக்குத் தகவல் கொடுத்துவிடலாம், இரவுக்குள் தயாராகிவிடும். அது மக்கள் மனத்தில் ஒரு பெரிய பயத்தை ஏற்படுத்தும்.”
”சரி, பயம் வரும். அதனால்?”
“பயத்துக்கு ஒரு மூளை மருந்து இருக்கிறது, அதைக் கொஞ்சம் வலு மாற்றி, எல்லாரையும் மருத்துவமனைக்குச் செல்ல ஒரு சிறு ஆணையையும் சேர்த்துவிடலாம். நேற்றைய சந்திப்பில் இருந்தார்களே, திருமதி அஸ்வினி. அவர்கள் அதைப் பார்த்துக்கொள்வார்கள்.”
“இதனால் எதுவும் பக்க விளைவு.. “ இழுத்தார் பிரவீண்.
”இருந்தாலும் பாதகமில்லை. அருமையான திட்டம். உங்களுக்கு இதைச் செயல்படுத்த என்ன தேவை?” பிரஜாபதி வேகமாகப் புரிந்துகொண்டுவிட்டார்.
“ஊடகம். நாங்கள் தரும் படத்தை எல்லா ஊடகங்களும் இன்றிரவு ஒளிபரப்பவேண்டும். இந்தப் புது மருந்துக்கான அனுமதி.. கொஞ்சம் அவசரமாக வேண்டும்.” பாவ்னா தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
பிரஜாபதி தலையசைக்க, பிரவீண் பாவ்னாவை நெருங்கி,”சின்னப் பெண் என்றுதான் நினைத்தேன். கடைசி நிமிடத்தில் அருமையான திட்டத்தை முன்வைத்துவிட்டாய்.” கைகுலுக்கினார்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஹூபர்ட்டின் விடுதி அறை பரபரப்பாக இருந்தது. மூன்று நான்கு பிரிவுகளாக ஆட்கள் பல கணினித்திரைகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஜோன்ஸ் ஒரு பிரிவுக்குத் தலைமை தாங்கினார். ஹூபர்ட் ஒரு புறம். அஷோக் சில ஆட்களிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“முப்பது முக்கியமான ஆட்கள் இப்போது நம் வலைப்பின்னலில் இருக்கிறார்கள். எப்படியும் என்ன நடக்கிறது என்று கண்டுபிடித்துவிடலாம்.” ஹூபர்ட் நம்பிக்கையாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.
கௌஷிக் “கவலைப்படாதீர்கள். என்ன வேண்டும் என்று சொல்லுங்கள். எத்தனை திரை வேண்டும், எத்தனை பிரிவு வேண்டும்..” என்று பரபரப்பாக எல்லாருக்கும் உதவிக்கொண்டிருந்தான்.
கட்டிலின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த ஹூபர்ட் கணினித்திரையில் ஏழெட்டு பாகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதில் ஒரு திரையைத் தொட்டுக் கேட்டார். ‘எங்கே இருக்கிறாய் கோபி?’
’பாதுகாப்புக் கட்டுப்பாட்டு அறை. இங்கேதான் எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறார்கள், மேற்பார்வைக்காக எல்லாத் திரைகளும் இருக்கின்றன. உள்ளே போய்ப் பார்த்தால் என்ன நடக்கப் போகிறது என்று புரிந்துவிடும். ஆனால் எனக்கு உள்ளே போக அனுமதி கிடையாது. பல்வீர் வந்துவிட்டால் போய்விடுவேன்.’
‘அனந்தனைக் கைது செய்துவிட்டார்கள், தெரியுமா?’
‘அப்படியா?’கோபி ஒரு நொடி அமைதியானான் . ‘டைசனை வைத்து ஏதாவது முயலலாமா?’
‘அதற்குத்தான் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். டைசன் அகப்படவே இல்லை. அவனுக்கு மூளைச்சலவை செய்துவிட்டார்கள். அவனைக் கண்டுபிடித்துத் தூண்டவேண்டும்.’ கோபியின் பார்வையைத் தொடர்ந்துகொண்டிருந்தார். ’பல்வீர் வந்துவிட்டார் பார்.’
கோபியும் பல்வீரும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைந்ததைப் பார்த்தார். கட்டிலின் இன்னொரு மூலையில் அமர்ந்திருந்த அஷோக்கை அழைத்தார். “இது நீங்கள் பார்க்கவேண்டியது.”
கணினித் திரையில் கோபியின் பார்வையை மட்டும் பெரிதாக்கினார் அஷோக். மைதானம் நீள்வட்டமாக இருந்தது. மொத்த மைதானத்தை ஏழெட்டுப்பாகங்களாகப் பிரித்து வெவ்வேறு வண்ணங்கள் காட்டிய டாப் ஆங்கிள் கோட்டுப்படம். யாரோ விளக்கியது கேட்டது.
“இது மேடை. இங்கே ஜனாதிபதி, அவர் உள்வட்டக் குழு மட்டும்தான் இருக்கும். மெஷின்கன்னுடன் இருபத்தைந்து கருப்புப் பூனைப் படையினர் இங்கே. இது முதல் வட்டம். இங்கே விருது பெரும் விஞ்ஞானிகள் நானூறு பேர் மட்டும் இருப்பார்கள். இது இரண்டாவது வட்டம். விருது பெறுபவர்களின் விருந்தினர்களுக்கானது. ஒருவருக்கு ஒரு விருந்தினர். தவிர இன்னும் அரசு ஆட்கள்..எழுநூறு பேர் வரை இருக்கலாம்.“
“அவர்களில் யாரேனும் தீவிரவாதியாக இருந்து மேடைக்குப் பாய்ந்துவிட்டால்?”
“முதல் வட்டத்தில் வாய்ப்பே இல்லை. எல்லா அறிவியலாளர்களும் டெலிபோர்ட் மூலம்தான் வந்திருக்கிறார்கள். அவர்களை உங்கள் துறைதான் பரிசீலனை செய்திருக்கிறது.”
“இரண்டாவது வட்டத்தில்?”
“அதற்கும் வாய்ப்பில்லை. இரண்டு வட்டங்களுக்கும் இடையில் நூறு மீட்டர் தூரம். இரண்டு ஜோடி கம்பி வேலிகள் போட்டு வைத்திருக்கிறோம். மின்சார வேலி. அங்கிருந்து யாரும் இங்கு வர முடியாது.”
ஹூபர்ட் ”நூறு மீட்டர்.. வெடிமருந்து வேலை செய்யுமா?”
“தூக்கி எறிந்தால் ஒருவேளை செய்யலாம். ஆனால் ஓரிடத்தில் இருந்துகொண்டு.. வாய்ப்பே இல்லை.” என்றார் அஷோக்.
“இந்த முக்கியமான வேலையை அப்படித் தற்செயலாக எல்லாம் நடக்கும்படி பிரஜாபதி திட்டம் போடமாட்டான். மேடையில் இருந்துதான் வெடிமருந்து முதல் வட்டத்துக்கு வரப்போகிறது.”
ஹூபர்ட் சொல்லிக்கொண்டிருக்கும்போதே பாதுகாப்பு அறையில் “நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜனாதிபதி விருது வாங்குபவர்கள் அனைவரையும் சந்தித்துப் பேசுகிறார்.”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஜனாதிபதி மாளிகையில் இருக்கிறோம் என்பது மட்டும் தெரிந்தது டைசனுக்கு. ஜன்னல் வழியாக வெளிப்பக்க மரங்களும் நீண்ட கம்பீரமான சாலையும் தெரிந்தது. தூரத்தில் ஒரு பெரிய மூவர்ணக்கொடி பறந்துகொண்டிருந்து. எனக்கு இது தெரிந்தால் அங்கிருந்து நான் தெரிவேனா? கத்திப்பார்க்கலாமா? ஒருபக்கக் கண்ணாடி என்று புரிந்ததும் அமைதியானான். கத்தியும் என்ன பிரயோஜனம்? யார் வந்து காப்பாற்றப்போகிறார்கள்? பக்கத்தில் பார்த்தான். எத்தனை சின்னச் சின்ன அறைகள். கண்காணாமல் போவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. எப்படியாவது தப்பிக்க முடியுமா? ஏன் தப்பிக்கவேண்டும்? டைசனின் மனத்தில் கேள்விகள் வந்த வேகத்திலேயே அமைதியும் வந்தது. நினைவில் பலவிஷயங்கள் காணாமல் போனது போலிருந்தது.
டைசனுக்கு பின்புறம் இன்னொரு நபர் படுத்திருந்தது போல இருந்தது. கழுத்தைக் கஷ்டப்பட்டு அசைத்துக் கண்ணை உருட்டி ஓரப்பார்வை பார்த்தான். ஜனாதிபதி . பிணம் போல இருக்கிறாரே.
கதவு திறந்தது. பிரஜாபதிதான் வந்தார். கூடவே இன்னொரு ஜனாதிபதியும் நடந்துவந்தார்.
“இது யார்? போலியா” ஜனாதிபதியின் குரலில் ஆச்சரியம் இருந்தது.
“இல்லை. நீங்களேதான். இது உங்கள் பழைய வடிவம். பொதுவாகத் தேவைப்படாத உடல்களை அழித்துத்தான் விடுவோம். ஜனாதிபதி பொது விழாக்களில் கலந்துகொள்ளும் நாட்களில் எதாவது தீவிரவாதத் தாக்குதலால் ஜனாதிபதிக்கு உயிர் ஆபத்து நேர்ந்தால் அவரை உயிர்ப்பிப்பதற்காக மட்டும் பழைய உடலை வைத்துக்கொள்ளும் நெறிமுறை – ப்ரோட்டோகால் இருக்கிறது, உங்களுக்கு மட்டும்தான் இந்தச் சலுகை.”
பிரஜாபதி டைசனின் கட்டை விடுவித்தார்.
“தீவிரவாதத் தாக்குதல் என்றால் ஆயிரம் கேள்வி வரும். ஜனாதிபதியே இறந்துவிட்டால்? கேள்வி திசை மாறும். இறந்துபோன வெளிநாட்டு அறிவியலாளர்கள் பற்றியெல்லாம் கேள்வி வராது.”
பிரவீண் அதிர்ந்தார். “அப்படியானால் இந்த உடல்?” பிரஜாபதி பதில் சொல்வதற்குள் வாசல் கதவு தட்டப்பட்டது.
பிரஜாபதி கதவைத் திறந்து வெளியே பார்த்தார். பாதுகாப்பு அதிகாரி எதோ தகவலைச் சொல்ல உடனே உள்ளே திரும்பி,”அனந்தனைக் கைது செய்து உள்ளே ஒரு தனியறையில் அடைத்திருக்கிறார்கள். விசாரிக்கலாம் வருகிறீர்களா?”
“விழாவுக்கு?”
“விழாவுக்கு இதுதான்”கீழே கிடந்த உடலைச் சுட்டிக்காட்டி”இந்த ஜனாதிபதிதான் போகப்போகிறார். நீங்கள் என்னுடன் வாருங்கள். நீங்கள் மூன்றுநாட்கள் கழித்துத்தான் உயிர்ப்பிக்கப் படவேண்டும்”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ட்ரக் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. யமுனை நதியின் வளைவுகளோடு இணையாக விரைந்தது. டெல்லியின் சுற்றுப்புறத்தில் இருப்பதாகத்தான் வரைபடம் காட்டியது.
அனந்தன் பின்னிருக்கையில் கட்டப்பட்டுக் கிடந்தார். பிரவீண் அவருக்கு அருகே அடுத்த நாற்காலியில் இருந்தார். “தூங்கிவிட்டாரா?” அனந்தனைத் தொட்டு எழுப்பினார்.”வணக்கம். வாழ்க பாரத்.” என்று செயற்கையாகச் சிரித்தார்.
முன்னிருக்கையில் இருந்த பிரஜாபதி,”என்ன அனந்தன், தீவிரவாதிகளையெல்லாம் வரவழைத்து என்ன செய்ய உத்தேசம்? ஜனாதிபதியைக் கொன்றால் பழைய பகை என்று புரிந்துகொள்ளலாம்.. நம் தேசத்தின் உயரிய விருதைப் பெறவிருக்கும் நானூறு பேரையும் சேர்த்து அல்லவா கொல்லப்போகிறீர்கள்? உங்கள் அறிவு என்ன இவ்வளவு பேரை அழிக்கிறது?” சொன்ன வார்த்தைகளின் தீவிரத்துக்கும் அவர் புன்னகைக்கும் சம்பந்தமே இல்லை.
அனந்தன் சத்தமாகச் சிரித்தார். ”அறிவு சிவம் அல்லவா? ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும்”
தொடரும்…