தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முனைவர் ந. அரவிந்த். தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி படிப்பினை முடித்த பின்னர், திருநெல்வேலியில் உள்ள சங்கர் தொழில் நுட்ப கல்லூரியில் பட்டயப் படிப்பினையும், சென்னையில் உள்ள பாரத் பொறியியல் கல்லூரியில் அமைப்பியல் துறையில் பொறியாளர் படிப்பினையும் முடித்தார். அதன் பின்னர், கோயமுத்தூர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் முதுநிலை பொறியியல் படிப்பினையும், மேற்கு வங்காளத்தின் துர்காபூரில் அமைந்துள்ள இந்தியாவின் தலைசிறந்த மத்திய அரசு கல்வி நிலையங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் கட்டமைப்பு சார்ந்த துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். ஒமான் தேசத்தில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில், அமைப்பியல் பொறியியல் துறையில் இணை பேராசிரியராகவும், பாடத்திட்டம் வடிவமைக்கும் குழுதலைவராகவும் (Program Leader Civil Engineering) கல்லூரி பயணித்துக்கொண்டிருக்கிறார். பொறியியல் மாணவர்களுக்காக ஆங்கிலத்தில் இரு நூல்களையும் எழுதி இருக்கிறார். வீடு கட்டுவது என்பது கடினமான ஒரு செயல் என்பதே பொதுவான கருத்து. ஆனால், வடிவமைப்பு, திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் வீடு கட்டுதல் இலகுவான செயல் என்பதே இப்புத்தகத்தின் கரு. இக்கருவினை மையமாக வைத்து, உடலுக்கும், குறளுக்கும் உள்ள உறவுகளை கோர்த்து இந்நூலினை வடிவமைத்துள்ளார்.