உன்மத்தம்

இந்த நாவல் ஒரு நாடக நடிகர் ராஜவேலுவின் வாழ்வை, அவரின் நினைவுகளை, அவரின் எண்ணத்தைப் பற்றிப் பேசும். ஒரு மனிதன் தான் நேசித்துச் செய்த ஒரு வேலையை சாகும் வரை மறக்க முடியாது. சில நேரங்க‌ளில் சிறுபிள்ளை போல் அதைச் செய்து பார்க்கலாமே என்ற எண்ணம்கூட எழும். அப்படியான உன்மத்த மனநிலையில் நாயகன் என்ன செய்கிறார் என்பதே இந்த நாவல்.

கதையின் நாயகன் ராஜவேலு என்கிற கலைஞன், தன் கலை மீது வைத்திருந்த பக்தியையும், கலைக்கு கடைசி வரை நேர்மையாக இருந்தததையும், ஆனால் அதுவே ஊராரின் பார்வையில் எங்ஙனம் பதிவானது என்பதையும் இந்நூலில் வாசித்து முடிக்கும்போது மனம் கனத்துதான் போகிறது. கதையின் நாயகன் தன்னுடைய ஆதங்கமாக பதிவு செய்திருக்கும் சில தகவல்கள், அந்த வயதிற்க்கே உரிய கிராமத்து மனிதர்களின் ஆதங்கமாகவும் இந்த எழுத்தின் வழியாக நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

விதவிதமான கதைக்களங்களை எழுத்தாளர்கள் தேர்ந்தெடுத்து பயணிக்கையில், கிராமியக் கலைகளில் மிக முக்கியமான அதே வேளையில் அருகி வரும் கலையான நாடகக்கலையைப் பற்றிய இந்த ‘உன்மத்தம்’ நாவல் நிச்சயமாக வாசகர்களை ஈர்க்கும். மேலும் இந்த நூலை வாசித்து முடிக்கையில், கலைத்தாகம் கொண்ட மனிதன் கடைசி வரை அதிலேயே வாழ்ந்து மறைவான் என்கிற உண்மையும் உறுதி செய்யப்படும்.