மழையில் நனையாத குடை
மனிதர்களில் அநேகர் தங்களை தவிர்த்து மற்றவர்களிடம் அவ்வளவு வெளிப்படையானவர்களாக இருப்பதில்லை. அவர்கள் தன்னகத்தே புதைத்து வைத்திருக்கும் ஆயிரமாயிரம் கதையடுக்குகளில் சரிபாதி இயல்பு வாழ்க்கையில் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாதவைகளாகவே ஏதோ மூலையில் தவிப்புகளாகவும், சுவாரஸியங்கள் நிறைந்தததாகவும் தேங்கிக் கிடப்பவைதாம். தன்னை மறந்தோ, பிரஞையோடோ அவற்றையெல்லாம் பகிர்ந்தோ, வெளியேற்றியோ மனக்கிடங்கை இலகுவாக்கிக் கொள்ள ஏதோ ஒரு போதை, ஒரு வாதை சூழல்களுக்கு ஏற்றவாறு சங்கதிகளை அசைபோடத் தூண்டுகின்றன. எப்படியிருப்பினும் மனதில் நிலைகொண்டிருக்கும் எந்த வகை அனுபவத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு சின்னஞ்சிறிய பாதிப்பாவது அவசியமல்லவா? அப்படிப்பட்ட தாக்கங்களைக் கொண்டு எழுதப்பட்ட கதைகள்தாம் இவை.

