தசரதன்
‘உனக்கு ஏன் மூக்கு பெரியதாக இருக்கிறதென்றாள்’. அவளுக்கு என் மூக்கின் மீது ஒரு மையல்.
‘நீ அழகா இருக்கன்னு சொன்னா பதிலுக்கு என்ன சொல்லுவ?’
‘பொய் சொல்லாதாடான்னு சொல்லுவேன்’.
‘அதே தான். சின்ன வயசில பொய் சொன்னா மூக்கு வளந்திடும்னு சொல்லுவாங்க. எதாச்சும் பொய்யா சொல்லிட்டா மூக்கை தொட்டு தொட்டு பார்த்துப்பேன். அப்படி தொட்டு தொட்டு தான் பெருசா இருக்கு. மத்தப்படி நான் பொய் சொல்லமாட்டேன்’னு சொல்லிட்டு இருந்தேன்.
ஆச்சரியமாக பார்த்திட்டு இருந்தாள். இப்படி தான் நான் எது சொன்னாலும் அவளுக்கு ஆச்சரியம். எது பேசினாலும் ஆச்சரியம் தான்.
‘உன்கிட்ட ஒன்னு கேட்கவா?’ என்பாள். அனுமதி கிடைக்கிறதோ இல்லையோ கேட்கதான் செய்வாள்.
‘ம்ம்’ என்று அனுமதித்தேன்.
‘பொய்யில, கடந்தகால பொய் எது? நிகழ்கால பொய் எது? எதிர்கால பொய் எது?’ என்றாள்.
கிரகதம் பிடிச்சது. மத்தவங்கிட்ட வாய் காது வரைக்கும் நீளும். நம்மக்கிட்ட அடக்கி வாசிக்கிற மாதிரி இருக்கும். ஆனா நேரம் பார்த்து பின் கழுத்து வரைக்கும் அவ வாய் நீளும் என்பதை அறிந்தவன் நான். அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
‘என்ன பார்க்கிற? பதில் தெரியலையா?’ என்றாள்.
‘தெரியாம இல்ல …. உனக்கு இந்த மாதிரியெல்லாம் பேச சொல்லி தரது யாரு’னு கேட்டேன்.
வலதுப்பக்க தோள்பட்டையில் ஜாக்கெட்டை லேசாக தூக்கி தட்டிக் கொண்டாள். அதாவது அவளுடைய அறிவுக்கு அதிகமான கேள்வியை கேட்டு விட்டதாக சிலிர்த்துக் கொண்டாள். அதை விட பதில் தெரியாமல் நான் முழிப்பதாக அவள் நினைத்துக் கொள்வதும் அவளுக்கு அளவில்லாத மகிழ்ச்சியை தந்துக் கொண்டிருந்தது.
‘சொல்றேன். ஆனா இதுல கிளைகேள்வி எல்லாம் கேட்க கூடாது’னு கண்டிசன் போட்டேன்.
‘சொல்லு’ என்றாள்.
‘கடந்த கால பொய்யிங்கிறது நீ. நீ கடந்த காலமே இல்ல… நிகழ்கால பொய்யிங்கிறது நான். நான் நிகழ்காலத்தில இல்ல… எதிர்கால பொய்யிங்கிறது நாம இரண்டு பேரும். இணையாத இரு துருவருங்களா கூட இருந்துடக் கூடும்’.
வெகுநேரம் உற்றுப் பார்த்தவள்.
பதிலேதும் சொல்லாமல் கிளம்பினாள்.
‘என்ன ஒன்னும் சொல்லாம போற? என் பதில் சரிதானே….’
மறுபடியும் என்னை உற்றுப் பார்த்தாள்.
அவள் அழகாக இருந்தாள் அல்லது என் கண்ணுக்குத் தெரிந்தாள்.
நீ அழகாக இருக்கிறாய் என்று சொல்ல தோன்றியது.
திரும்பவும் பொய் சொல்லாதடா என்பாள்.
அதனால் வாய்க்குள் வந்து நின்றதை மென்று தின்றேன்.
நமக்கு எதற்கு ஊர் வம்பு.
நன்றி : படம் இணையத்திலிருந்து
Leave a reply
You must be logged in to post a comment.