திப்பு ரஹிம்
கிட்டத்தட்ட இரண்டு தலைமுறை வலிகளைச் சுமந்து வருகிறது ‘ஆடு ஜீவிதம்’. இது அப்படத்திற்கான பார்வை அல்ல, அது பேசியிருக்கும் நிஜ மனிதர்கள் அனுபவிக்கும் வாழ்க்கையைப் பற்றிய பார்வையே.
அரபு நாடுகளில் முந்தைய தலைமுறை அதிகம் தொழில் செய்தது ஆட்டுப் பண்ணை மற்றும் ஒட்டகப் பண்ணைகளில் தான். தற்போது கொஞ்சம் விவசாயம் மற்றும் வேறு வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர்.
அதை பராமரிப்பதற்காக ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து ஆட்கள் வந்தார்கள். காலப்போக்கில் அதற்கும் ஆட்கள் வராமல் போகவே பண்ணை வைத்திருந்தவர்கள் பெரும்பாலும் அதை விட்டு விட்டனர், ஆனால் சிலர் மட்டும் அதைத் தொடர்ந்தனர்.
அரபு நாட்டு அரசாங்கம், ஆடு மேய்க்க ஒட்டகம் மேய்க்க என்று (ராயில் கனம் என்ற விசா) பிரத்யேகமான சட்டங்களை இயற்றி, இதற்கென வெளிநாட்டில் இருந்து ஆட்கள் எடுக்க சரியான ஒப்பந்தங்கள் மூலம் தான் எடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி உள்ளது.
அந்த ஒப்பந்தங்கள் மூலம் வந்தபின் இரண்டு ஆண்டுகள் கண்டிப்பாக வேலை செய்தாக வேண்டும். இதை ஏற்றுக் கொண்டு ஆப்ரிக்கா மற்றும் பங்களாதேஷ் இந்தியாவில் ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து ஆட்கள் வருவதுண்டு. அவர்களுக்கு காடு, மலை, பாலைவம் என மூன்று நிலப்பரப்பிலும் வாழ்ந்த அனுபவம் இருக்கும்.
இதில் அப்பப்போ நம்மவர்களும் மலையாளிகளும் மாட்டுவதுண்டு. பெரும்பாலும் ‘விசா’ ஏஜெண்ட்கள் மூலம் கிடைத்ததாக இருக்கும். அரபு நாட்டு ஏஜெண்ட்கள் நம்மூர் ஏஜெண்ட்களுக்கு அனுப்பி வைப்பர். இரண்டு ஏஜெண்ட்களுக்குமே வேலை எங்கே? எப்படி? என்பதெல்லாம் தெரியாது. காசு தான் முக்கியம்.
பெரும்பாலும் வீட்டு விசா தான். ‘லேபர் விசா’ என்பது உலக அளவில் தொழிலாளர் சட்டத்திற்கு உட்பட்டு இருக்கும். ஆனால் வீட்டு விசா என்பது கிட்டத்தட்ட அடிமை விசா என்றுச் சொல்லலாம். இதெல்லாம் தெரியாமல் எப்படியாவது வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று வந்து மாட்டிக் கொள்வார்கள்.
ஆடு, ஒட்டகம் போன்றவற்றை உலகின் எல்லாப் பகுதிகளிலும் மேய்க்கத் தான் செய்கிறார்கள் என்றாலும் மற்ற நிலப்பரப்புகள் போன்றது இல்லை பாலைவனம். அதிலும் குறிப்பாக அரபு நாட்டுப் பாலைவனம் மிக கொடூரமான கொலைகாரன். சில நேரங்களில் வழிமாறி போன ஒட்டகங்கள், ஆடுகள் மந்தைக்குத் திரும்பி வருவதில்லை. இன்றும் கார்களில் வெகுதூரம் பயணித்தவர்கள் காணாமல் போய் இரண்டு மூன்று நாட்கள் கழித்து கிடைப்பதுண்டு. ஒரு இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வாய்ப்பே இல்லை. வழி மாறி போய் விட்டால் திரும்ப வருவது குதிரை கொம்பு தான். ஊர் பகுதிகளில் இருந்து வெகு தூரத்தில் இந்தப் பட்டிகள் இருக்கும்.
நம் நாட்டில் அரசாங்கம் ஓரளவு வெளிநாட்டு பிரச்சினைகளை பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உள்ளன. ஆனால் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் போன்ற பகுதிகளில் இருந்து வந்தவர்கள் சிலர் முதலாளிகளிடம் இருந்து தப்பி விடுவதுண்டு. முதலாளிகள் அவர்களுடைய பாஸ்போர்ட்டை காவல்துறையிடம் கொடுத்து இவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்று சொல்லி விடுவார்கள். அப்படி காணாமல் போனவர்கள் சிலர் கிடைப்பதுண்டு பெரும்பாலானவர்கள் இன்னும் போனவர்களாகவே இருக்கிறார்கள் பாலைவனங்களில்.
கடும் விஷம் கொண்ட பாம்புகள், கருந்தேள்கள் வசிக்கும் இடங்கள் தான் இவை. வெயில் காலங்களில் தண்ணீர் இல்லை என்றால் எந்த உயிரினமும் தப்பிக்க முடியாது.
ஒரு மரம் கூட இல்லாத இந்த பாலைவனத்தில் கூடாரம் அமைத்து எந்த திசையில் இருக்கிறோம்? எந்த நாட்டிலே இருக்கிறோம்? என்பது கூட தெரியாது வாழ வேண்டும். சூரியன் உதிப்பதும் சூரியன் மறைவதை தவிர வேறு எதையும் பார்க்க முடியாது.
கண்ணுக்கட்டிய தூரம் வரை மணல்மேடு இரவானால் இருட்டு பகலானால் கண் கூசும் வெளிச்சம். மின்சாரம் கிடையாது தண்ணீர் லாரிகளில் மட்டுமே கொண்டு வந்து தருவார்கள். பருப்பு, அரிசி, கோதுமை கொண்டு உணவுகளை சமைத்துக் கொள்ள வேண்டும். ஓரிடம் அவர்களுக்கு நிலை கிடையாது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். சவுதியின் இடமாக இருக்கலாம் குவைத்தின் இடமாக கூட இருக்கலாம் பாலைவனம் எல்லைகளே கிடையாது. பல நாடுகளை இணைக்கும்.
ஒருமுறை பாலைவனத்தில் வந்து விட்டால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தான் ஊர்களையே பார்க்க முடியும். அரபுகளுக்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை என்பதால் கிடைத்த ஆட்களை இரண்டு ஆண்டுகளுக்காவது வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பார்கள். தாங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பவர்களைச் சரியாக நடத்துவார்கள். இல்லை என்றால் அவர்களுக்கு தினம் தினம் நரகமாகவே அமைந்துவிடும்.
அரபு நாட்டு சட்டத்தின் படி பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் முதலாளியிடம் தான் இருக்கும். ஒப்பந்தத்தின்படி இரண்டு ஆண்டுகள் கழித்து தான் விசா கேன்சல் செய்ய முடியும். வேறு வழி இல்லாமல் அவர்களிடம் இரண்டு ஆண்டுகள் ஆடு மேய்த்துத் தான் ஆக வேண்டும்.
அப்படி அரபு நாடுகளில் ஆடு மேய்த்துப் பிறகு மற்ற வேலைகளுக்குப் போவதுண்டு. அப்படித்தான் இதற்கு முந்தைய தலைமுறை அரபு நாடுகளுக்குள் வந்தது.
இன்று அதெல்லாம் மாறிவிட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதும் உண்டு. குவைத், சவுதி போன்ற நாடுகளில் வேலைப் பார்த்து இன்று நாட்டிலே செட்டிலானவர்கள் பல பேர் இப்படி மாட்டித் தப்பிப் பிழைத்தவர்கள் தான்.
‘பாலைவனம்’ குளிர் காலங்களில் அற்புதமாக இருக்கும். ஆனால் வெயில் காலங்கள் அதைவிட கொடூரமான கொலைகாரன் வேறொன்றும் இல்லை. ஈரத்துணிகளைக் கொண்டு உடலில் போட்டால் அடுத்த அரைமணி நேரத்தில் காய்ந்து விடும். தண்ணீர் பஞ்சம் என்பதால் தங்களுக்குக் கொண்டு வந்து கொடுக்கப்படும் தண்ணீர் தீராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் பாம்பு தேள்கள் நடமாட்டம் அதிகமிருக்கும். ஏதாவது உடல்நலம் பாதிக்கப்பட்டால் கை வைத்தியம் தான். அங்கு இரண்டு விதமான மனிதர்கள் இருப்பார்கள்.
பொழுது போக்கிற்காக கொஞ்சம் ஆடு, புறா, கோழி என்று ஓரிடத்தில் வைத்து, தினமும் வந்து போகும் தூரத்தில் இருப்பார்கள். இங்கு மின்சாரம் இருக்காது வெயில். வேறு பிரச்சினைகள் இல்லை.
ஆனால் ஆடு ஒட்டகம் மேய்ப்பதை தொழிலாக வைத்திருப்பவர்கள் தான் மிகவும் கடுமையாக நடப்பவர்கள். அப்படி மாட்டிய ஒரு கேரள மனிதனின் வாழ்க்கை தான் ஆடு ஜீவிதமாய் வருகிறது. எப்படி இருக்கப்போகிறது என்பது நமக்குத் தெரியாது என்றாலும் பாலைவனத்தில் மேய்ப்பர்களாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
குறிப்பாக ‘உனக்கென்னப்பா வெளிநாட்டு வாழ்க்கை’ என்பவர்களுக்காக இக்கட்டுரைதான் இது. வெளிநாட்டு வாழ்க்கை என்பது தினம் தினம் செத்துப் பிழைப்பதுதானே ஒழிய, சொத்தில் திளைப்பது அல்ல.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
2 comments on “ஆடு ஜீவிதக்காரர்கள்”
rajaram
அருமையான கட்டுரை, இந்த நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் உள்ளது. கிடைக்கவில்லை. திரைப்படமாக காணும் முன் நாவலை வாசித்து விட வேண்டுமென்று எண்ணன்ம்.
thippurahim1978
மிகவும் நன்றி கண்டிப்பாக படியுங்கள் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது பலருக்கு