வரவேற்பும் புத்தக வெளியீடுகளும்
பரிவை சே.குமார்
கடந்த சனிக்கிழமை (21/06/2025) மாலை ஜெசிலா மேடத்தின் ‘Proactive Excel Safety Consultancy’ நிறுவனத்தில் கேலக்ஸியின் நான்காமாண்டு துவக்க விழா – மூன்றாமாண்டு நிறைவு விழா – மிகச் சிறப்பாக, மகிழ்வாக, மன நிறைவோடு நடந்து முடிந்தது.
மாதாமாதம் நடத்தப்படும் ‘கதைப்போமா’ நிகழ்வுதான் இந்த முறை கேலக்ஸியின் ஆண்டு விழாவாக மலர்ந்திருக்கிறது. மிகப் பெரிய விழாவாக நடத்தாமல் மாதக் கூட்டம் போல்தான் நடத்தப்பட்டது என்றாலும் நிறைய மகிழ்வான நிகழ்வுகளை மனநிறைவோடு செய்து முடித்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி.
விழா எப்பவும் போல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. நிகழ்வை வழக்கம்போல சகோதரர் கலைஞன் நாஷ் அவர்கள் தொகுத்து வழங்கினார். அவ்வப்போது அவரிடமிருந்து பாலாஜி அண்ணன் பறித்துக் கொண்டாலும், அதையும் மீறி எப்பவும் போல் நகைச்சுவையாக நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். நிகழ்வு முடிந்த போது ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் ஐயா அவர்கள், ‘என்னோட புத்தக வெளியீடுதான் உங்களுக்கு தொகுப்பாளராய் முதல் நிகழ்வுன்னு நினைக்கிறேன். இப்போ நீங்க சிறப்பாத் தொகுக்கிறீங்க ஆனா ரொம்ப லொள்ளு’ அப்படின்னு சொன்னார். இதுவே கலைஞனுக்கு மிகப்பெரிய வாழ்த்துத்தான். இதற்கு மேல் இவரை யாரும் வாழ்த்த முடியாது. உண்மையிலேயே நிகழ்வை ரசிக்கும்படி தொகுப்பது ஒரு கலைதான், அதை நாஷ் மிகச் சிறப்பாகச் செய்கிறார்.

வரவேற்புரையை வழங்க வந்த திருமதி. ஆண்டாள் ரேவதி அவர்கள், கேலக்ஸி குறித்தும் ஐயா ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் அவர்கள் பற்றியும், கேலக்ஸியின் வெளியீடுகள் பற்றிப் பேசி, முக்கியமாக ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட பாரதியார் கவிதைகள் – அரபு மொழியில் – குறித்தும் சிலாகித்துப் பேசினார். கேலக்ஸி உதயமானபோது ஜின்னாஹ் ஐயா அவர்களின் ‘மைவண்ணன் ராமகாவியம்’ என்னும் புத்தக வெளியீட்டோடு உதயமாகி, இந்த மூன்றாண்டுகளில் அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிட்டிருப்பது குறித்துப் பேசி, வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
அடுத்ததாய் ஐயா ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் அவர்களின் ‘இயேசு எனும் ஈஸா நபி காப்பியம்’ என்னும் நூல் வெளியிடப்பட்டது. புத்தகத்தை பாலாஜி பாஸ்கரன் அவர்கள் வெளியிட தொழில் அதிபர் அபுதாஹிர் அவர்களும், அபுல் பைஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். புத்தக வெளியீட்டுக்கு அழைக்கும் போது கலைஞன் சற்றே குழம்பி, அந்தக் குழப்பத்துக்கு காரணம் பாலாஜி அண்ணன்தான் என்பதையும் சொல்லிவிட்டார்.
புத்தக வெளியீட்டுக்குப் பின் வாழ்த்துரை வழங்கிய திரு. அபுதாஹிர் அவர்கள், காப்பியக்கோ அவர்கள் எனக்கு பல நேரங்களில் தகப்பனார், பல நேரங்களில் அம்மா, பல நேரங்களில் ஆசான் எனச் சொல்லித் தன் உரையை ஆரம்பித்தார். பெண்களைப் பற்றி மிகவும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். வரலாறு முழுவதும் பெண்களுக்கென்று அதிகமான ஆளுமையும், பொறுமையும் பெண்களுக்குத்தான் இருக்கிறது. நபிகளின் மனைவி கதீஜா மிகப்பெரிய ஆளுமை, துணிவு அதேபோல் இந்தக் காவியத்தில் அன்னை மரியம் என்று சொல்லி இந்த ஒரு நூலை மட்டும் நீங்கள் படித்தால் குரானில் இருக்கும் மரியம் அத்தியாயம் முழுவதும் உங்களுக்கு விளங்கிவிடும். மேலும் பைபிளின் மொத்தத்தையும் பிழிந்து சாறாக எடுத்து நமக்குக் கொடுத்திருக்கிறார் என ஏசு காவியத்தில் இருந்து இன்னும் விரிவாகப் பேசினார்.

ஏற்புரை வழங்க அழைக்கப்பட்ட ஐயா ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் அவர்கள், எவ்வளவு நேரம் பேசணும் எனக் கேட்டு, பதினைந்து நிமிடம் வரையும் பேசலாம் எனச் சொன்னதற்கு எனக்கு அவ்வளவு நேரமெல்லாம் தேவையில்லை எட்டு நிமிடங்கள் போதுமானது எனச் சொல்லி, பாலாஜி அண்ணனை ‘மகனே’ என்று அழைத்து தனது உரையை ஆரம்பித்தார். கேலக்ஸி கொடுத்த, மகிழ்வான, மனநிறைவானவற்றில் இதுவும் ஒன்று. நான் இதுவரையில் 35 நூல்கள் எழுதியிருக்கிறேன், அதில் 30 நூலாக்கம் பெற்றுவிட்டன. இப்போது இன்னும் இரண்டு நூலாக்கம் பெற இருக்கிறது, அவை என்னுடைய 500 குறள்கள் மற்றும் துபையைப் பற்றி நான் எழுதிய ஒரு காவியம் என்றார்.
மேலும் கேலக்ஸியில் எனது 3 நூல்கள் வெளியாகியிருக்கின்றன. கேலக்ஸியில் எனது முதல் நூல் – கேலக்ஸியின் முதல் வெளியீடும் கூட – ‘மைவண்ணன் ராமகாவியம்’ பற்றி இங்கே ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். எனது நூல்கள் பல விருதுகளைப் பெற்றிருக்கின்றன. சில நூல்களுக்கு இரண்டு மூன்று விருதுகள் கூட கிடைத்திருக்கின்றன. எனது ‘பண்டார வன்னியன்’ காவியத்துக்கு இலங்கையில் மூன்று விருதுகள் – இலங்கையின் சாகித்ய மண்டலம், கொழும்பு தமிழ்ச்சங்கம், வடகிழக்கு மாகானத்தின் பரிசு – கிடைத்தது. ஆனால் எனது மைவண்ணன காவியம்தான் வெளிநாடுகளிலும் பரிசு பெற்றது. ஆஸ்திரேலியா கலையிலக்கிய சங்கத்தால் அந்த ஆண்டின் சிறந்த காப்பியமாகத் தேர்வு செய்யப்பட்டு, மிகப்பெரும் தொகையை அனுப்பித் தந்தார்கள். இலங்கையில் ஞானம் என்னும் பத்திரிக்கை நடத்திய போட்டியிலும் எனக்குப் பரிசு கிடைத்தது.

ஒரு பதிப்பகம் ஆரம்பித்த மூன்று வருடங்களுக்குள் அறுபது நூல்களை வெளியிடுவது என்பது மிகப்பெரிய விஷயம். எனது புதிய இரண்டு நூல்களை யாராவது வெளியிட முன்வந்தால், பாலாஜி விரும்புவதுபோல் கேலக்ஸியில் செய்யலாம்.அதற்கு கோட்டோவியங்கள் எல்லாம் செய்ய வேண்டும், கொஞ்சம் கூடுதலாகச் செலவிட வேண்டி வரும் என்பதால்தான் யாராவது வெளியிட முன்வருவார்களா என எதிர்பார்க்கிறேன் என்று சொன்னதுடன், இன்னும் நிறைய விசயங்களைப் பற்றி மிகவும் மகிழ்வாகப் பேசினார்.
அடுத்த நிகழ்வாக எனது ‘உன்மத்தம்’ வெளியீடு நிகழ்த்தப்பட்டது. நூலை திரு. அபுதாஹிர் அவர்கள் வெளியிட ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் ஐயா அவர்கள் வெளியிட, அதனை இலக்கியா ஹரீஸ் தம்பதிகளும், ஜெசிலா மேடமும் பெற்றுக் கொண்டார்கள்.
‘உன்மத்தம்’ எனது கலையின் மீது பித்துப் பிடித்துத் திரிவதுதான் என்று சொன்ன கலைஞன் ‘எப்பவுமே உண்மையைப் பேசணும், இப்பத்தான் இவர்கிட்டக் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன்’ என்று சொல்லி, அனைவரையும் சிரிக்க வைத்து பாலாஜி அண்ணனை புத்தகத்தைப் பற்றி பேச அழைத்தார்.

‘கேலக்ஸியில் நாங்கள் நிறைய புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம். குமாரின் நூல்களையும் – கேலக்ஸியில் ஐந்தாவது நூல் – வெளியிட்டிருக்கிறோம், தொடர்ந்து வெளியிடுவோம். எனக்கு இந்த எழுத்து ஏன் புடிக்கும் என்றால் அது என்னோட வாழ்க்கை, என்னோட எழுத்து. இந்த உன்மத்தம் ஒரு வயதான நாடகக் கலைஞனின் வாழ்வியலை, அவனை அவனது உறவுகள் பார்க்கும் விதத்தைப் பற்றி பேசுகிறது’ என்று சொல்லி, இந்த நூலை நம் நண்பர்கள் வாசித்து ஒரு விமர்சனக் கூட்டம் நடத்தவும் தயாராக இருக்க வேண்டும் எனச் சொன்னார்.
அதன்பிறகு எனது ஏற்புரை, இந்த நூல் எப்படி உருவானது என்பதை மட்டுமே சொன்னேன். இன்னும் விரிவாக, கேலக்ஸி குறித்தும் பேசியிருக்கலாமோ என பின்னர் யோசித்தேன். எப்போதும் நான் அதிகம் பேசுவதில்லை. உன்மத்தம் பேசட்டும், பேசப்படட்டும் அதுதானே வெற்றி.
பகுதி – 2 இன்று மாலை பகிரப்படும்
Add comment
You must be logged in to post a comment.