வாழ்த்துரைகளும் சிறுகதைப் போட்டி முடிவுகளும்
பரிவை சே.குமார்
முதல் பகுதியை வாசிங்க இங்கே சொடுக்கவும்.
‘இயேசு எனும் ஈஸா நபி காப்பியம்’ மற்றும் ‘உன்மத்தம்’ ஆகிய புத்தக வெளியீடுகள் முடிந்ததும் ‘எனக்கும் கேலக்ஸிக்குமான பந்தம்’ எனப் பலர் வாழ்த்திப் பேசினார்கள். பேச அழைக்கும் முன் கலைஞன் ஒருவருக்கு ஒரு நிமிடம்தான் எனச் சொன்னார். சிலர் பேச ஆரம்பித்த பின் நான் ஒருவருக்கு ஒரு நிமிடம் என்றுதான் சொன்னேன், ஆனா இங்க எல்லாருமே ஒரு நிமிடத்தில் பேசி முடிச்சிருவீங்க போலவே’ எனக் கிண்டலாய் சொன்னபோது அரங்கம் அதை ரசித்துச் சிரித்தது. இடையிடையே ஆம்லெட்ல நுணுக்கிய மிளக்குத்தூளைப் போடுற மாதிரி நுணுக்கமான நகைச்சுவையால் தனது தொகுப்பாளர் பணிக்கு சிறப்புச் சேர்த்துக் கொள்வதில் கலைஞன் கில்லாடிதான்.
முதலில் தேவதர்ஷினி பாலாஜி அவர்கள் வந்து வரவேற்பது போல் பேசி, கதைப்போமா கூட்டத்துக்கு நிறையப் பேர் வாங்க எனச் சொல்லிச் சென்றார். அடுத்து திலீப் அவர்கள் பேசும்போது, ‘பாலாஜி அவர்களின் உழைப்பு எல்லாருக்கும் தெரியும். மென்மேலும் வளரட்டும்’ என்றார். அடுத்துப் பேசிய ரமாமலர் அவர்கள், ‘ஜின்னாஹ் ஐயா மற்றும் அபுதாஹிர் அவர்களை இங்கேதான் முதல் முறை சந்திக்கிறேன். கேலக்ஸிங்கிற பெயருக்கு தமிழில் பெயர் கொடுத்தால் நன்றாக இருக்கும். அதற்குப் பதிலாகத்தான் விண்மீன் எனக் கொடுத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்’ என்றார்.
அடுத்துப் பேசிய அபுல்பைஸ் அவர்கள், ‘சில பேரைக் கொண்டாடத் தோன்றும், அப்படித்தான் பாலாஜி அண்ணன். எல்லாரையும் சொந்தம் கொண்டாடத் தோணாது, ஆனா இவரைக் கொண்டாடத் தோணும். எல்லாருமே அவர் என்னோடுதான் நெருக்கமா இருக்கார்ன்னு நினைப்பாங்க ஆனா அவர் எல்லாருடனும் அப்படித்தான் இருப்பார்’ என்றார். உடனே தொகுப்பாளர், ‘ஆமா சொந்தம் கொண்டாட வேண்டியவர்தான். இன்னைக்கு என் மகன் கூட பாலாஜியைப் பார்க்கப் போகணும்… பாலாஜியைப் பார்க்கப் போகணும் என்றான் எனச் சொல்லிச் சிரிக்க வைத்தார்.

பால்கரசு அவர்கள் பேசும்போது ‘இப்படி ஒரு நிகழ்வில் எனக்கும் பேச வாய்ப்புக் கொடுத்த கேலக்ஸி நிறுவனத்துக்கு நன்றி. கேலக்ஸி என்பது சகல உயிரிகளுக்குமான ஒரு அண்டம். விண்வெளி என்பது அனைத்துக்குமானது. கேலக்ஸியின் உரிமையாளர் பாலாஜி என்றாலும், இது அனைவருக்குமான நிறுவனம்’ என்றார்.
இவருக்குப் பின் சிறுகதைப் போட்டி முடிவுகளின் அறிவுப்புகள் சரியாக துபை நேரம் இரவு 8 மணிக்கு கேலக்ஸி யுடியூப் வழி நேரலை என்பதால் வாழ்த்துரை நிறுத்தப்பட்டு மேடை வெற்றியாளர்களின் அறிவிப்புக்குப் போனது. நாம இங்கே வாழ்த்துரையைத் தொடர்ந்து முடிச்சிட்டு அதன் பிறகு வெற்றியாளர் மேடைக்குப் போவோம்.
‘கேலக்ஸிக்கான விதை போடப்பட்டதை நான் அங்கும் இங்கும் பேசக் கேட்டேன். ஒரு பதிப்பகமாக உருவானாலும் எல்லாரையும் போல் இதுவும் ஒரு நிறுவனம் என நினைத்துக் கொண்டேன். என்னை எழுத்தாளனாய் எனது சொந்த பந்தத்தில் இருக்கும் அறுபது எழுபது பேரில் பத்துப் பேருக்கும், வெளிவட்டாரத்தில் பத்துப் பேருக்குமாய்தான் தெரியும். எழுத்தாளனாய் தமிழகத்தில் நான் இந்தளவில் மட்டுமே தெரிவேன். எனக்கு நாம் ஏன் எழுதணும் என அடிக்கடி தோன்றும். அப்பல்லாம் முகம் தெரியாத ஒருவர் கூப்பிட்டுப் பேசும் போது இன்னும் பத்து வருசம் எழுதணுமிடான்னு தோணும். அதை நீட்டித்து வைப்பது பாலாஜி அண்ணன்தான். எப்படிச் சாப்பிடுறியோ… எப்படி மூச்சு விடுறியோ… அப்படி எழுதிக்கிட்டே இரு. அதற்கான பலன் உனக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று ஒரு பிரபலம் என்னிடம் சொன்னார். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்றார் தெரிசை சிவா.
இராஜாராம் பேசும் போது, ‘எங்க குடும்பத்தை நாங்களே பாராட்டிக்கிற மாதிரித்தான். கேலக்ஸியின் முதல் விழா முப்பெரும் விழாவாக நடந்தது. அதில்தான் எனது முதல் பேச்சு… அந்த மேடை கொடுத்த தைரியத்தில்தான் நான் இப்ப இங்கே நிற்கிறேன். அந்தத் தைரியத்தைக் கொடுத்தது பாலாஜி அண்ணன்தான். இந்தக் கேலக்ஸிக்கான பாலாஜி அண்ணனின் உழைப்பு அசாத்தியமானது. கதைப்போமா நிகழ்வில் எல்லாரையும் பேச வைப்பவர் இவர்தான். சென்ற மாதம் முதல் புத்தகப்பூங்காவை ஆரம்பித்து எல்லாரும் வாசிக்க வேண்டும், வாசித்ததைப் பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்’ என்றார்.

ஒரு வழியாக ஒரு நிமிட வாழ்த்துரை முடிவுக்கு வந்தது. இப்ப நாம நேரலையில் பார்க்கத் தவறிய சிறுகதைப் போட்டி முடிவுகளைப் பார்க்கலாம். முதலில் ஆறு பரிசுகளை மட்டுமே அறிவித்திருந்தோம். கதைகளை வாசித்தபின் ஆறு என்பது பத்துப் பரிசுகளாக மாறியிருந்தது.
போட்டி நடைபெற்ற விதம் குறித்து நான் பேசியபின், ஊக்கப்பரிசுகளை – அரி கார்த்திக், நான்சி கோமகன், பிரவீண் குமார் – திருமதிகள் ஆயிஷா, ஆண்டாள் ரேவதி, இலக்கியா ஆகியோர் அறிவித்தார்கள். சிறப்புப் பரிசுகளை – தசரதன், பிரியதர்ஷினி, ஸ்ரீஜா வெங்கடேஷ், பாபு கனிமகன் – திலீப், பால்கரசு, அபுல் பைஸ், அகமது சையத் ஆகியோர் அறிவித்தார்கள். மூன்றாம் பரிசை – பிரபு பாலா – இராஜாராமும், இரண்டாம் பரிசை – ஞா. கலையரசி – திருமதி. தேவதர்ஷினி பாலாஜியும் அறிவிக்க முதல் பரிசை – அறிவுச்செல்வன் – நான் அறிவித்தேன். உலகளாவிய சிறுகதைப் போட்டியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம் என்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சி.
திருமிகு இலக்கியா ஹரீஷ் தம்பதிகள் பாலாஜி அண்ணனுக்கு அண்ணியின் மூலமாக ஒரு நினைவுப் பரிசை வழங்கினார்கள். இதுவரை கேலக்ஸி யுடியூப் சேனலில் பாலாஜி அண்ணன் தொடர்ந்து பேசிவரும் காணொளிகளின் – சிறுகதைகள், நூல் விமர்சனம், கட்டுரை- 260 முகப்புப் படங்களை வைத்து அவரின் போட்டோவை வடிவமைத்திருந்தார்கள். அதற்கான அவர்களின் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது. அதைப் பார்த்த பாலாஜி அண்ணன் கண் கலங்கிவிட்டார். இதேபோல் திருமதி ரூபா பிரபுகிருஷ்ணன் அவர்களும் நினைவுப்பரிசை வழங்கினார். ரமாமலர் அவர்கள் இனிப்பு வாங்கி வந்திருந்தார்.
படங்களுக்கு நன்றி : பால்கரசு மற்றும் சக்தி.
நிறைவுப் பகுதி நாளை காலையில் பகிரப்படும்.
Add comment
You must be logged in to post a comment.