பாண்டியன் பொற்கிழியும் குறும்படம் திரையிடலும்
பரிவை சே.குமார்
முதல் இரண்டு பகுதிகளையும் வாசிக்க…
வாழ்த்துரையும் சிறுகதைப் போட்டியின் முடிவுகளும் நிறைவுற்ற நிலையில் முக்கிய நிகழ்வாக கேலக்ஸியின் மண்ணின் எழுத்தாளருக்கான பாண்டியன் பொற்கிழி விருது இந்த வருடம் எழுத்தாளர் தெரிசை சிவாவுக்கு வழங்கப்பட்டது.
விருதினை அபுதாஹிர் அவர்கள் கொடுக்க, சிவா பெற்றுக் கொண்டார். ஜின்னாஹ் ஐயா மற்றும் ஜெசிலா மேடம் ஆகியோர் விழா மேடையில் இணைந்து கொண்டனர். ‘குடும்பம் வேற ஊருக்குப் போயிருச்சு, பண முடிப்பும் வாங்கியிருக்கீங்க, ராத்திரிக்கு நாம வெளியில – ஹோட்டலுக்குத்தான் – போயிடலாம்’ என நகைச்சுவையாய் சொன்னார் கலைஞன் நாஷ்.
ஏற்புரையில் ‘முதல்ல போட்ட கேசட்டையே திரும்பப் போடணும். ரொம்ப வெட்கமா இருக்கிறது. என்னோட தகர் நாவலைப் படித்துவிட்டு அண்ணன் இருபது நிமிடம் பேசினார். நாவல் குறித்து அவர் விரிவாப் பேசினாலும் நான் அப்போது இருந்த சூழல்ல ஆமா, இல்லை, ம்ம்கும்… என்று மட்டுமே சொன்னேன் என்றாலும் அதன் பின் எனக்குப் புல் சார்ஜ் ஆயிருச்சு. ஒரு எழுத்தாளனுக்கு என்ன கிடைக்கும்..? என்று வாழ்த்துரையில் பேசினேன் அல்லவா இதுதான் கிடைக்கும் எனக் கேடயத்தைக் காட்டினார். தமிழிலக்கியத்துக்கு பலர் தொண்டு செய்ததைப் பற்றி நாம் படித்திருப்போம், அந்த மாதிரி தொண்டுதான் இதுவும். ஜெயமோகன் ஒருமுறை என்னோட சடையப்ப வள்ளல் சினிமாதான் எனச் சொன்னார். அதுதான் உண்மை’ என்று சிரிக்கச் சிரிக்கப் பேசினார் தெரிசை சிவா.

ஜெசிலா மேடம் கேலக்ஸியின் ‘விண்மீன்’ என்னும் புதிய மின்னிதழை அறிமுகம் செய்து வைத்தார். இந்த மின்னிதழை ஒரு வாரத்துக்குள் தயாரிக்க வேண்டியிருந்ததால் படைப்புகள் நட்பு வட்டத்திலேயே பெறப்பட்டன. அடுத்த இதழ் முதல் உலகெங்கிலும் இருந்து படைப்புகள் அனுப்பலாம். விண்மீன் மிகச் சிறப்பாக பயணிக்கும் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருப்பது மகிழ்ச்சி. பிலால் அவர்கள் விண்மீனின் அட்டைப் படத்தை ப்ரிண்ட் போட்டுக் கொடுத்து விட்டிருந்தார். இந்தப் புத்தகத்தை தனது மருத்துவப் பணிகளுக்கு இடையே மிகச் சிறப்பாக வடிவமைத்த சென்பாலன் அவர்கள் இந்தப் புத்தகம் குறித்து வாட்சப்பில் பேசி அனுப்பியிருந்தார். அது நிகழ்வில் பகிரப்பட்டது.
விரைவில் கேலக்ஸி வெளியீடாக வர இருக்கும் தெரிசை சிவாவின் ‘அயலோன்’ நாவலின் அட்டைப்படம் பாலாஜி அண்ணனால் வெளியிடப்பட்டது. இறுதியாக பாலாஜி அண்ணன் நன்றி உரை நிகழ்த்தினார். அதில் ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் ஐயா எனது அப்பா, அவரின் மனைவி எனக்கு அம்மா. இவர்கள் இருவரும் வந்திருந்து சிறப்பிப்பது எனது அப்பா, அம்மாவே வந்திருந்து வாழ்த்துவதற்கு இணையானது என்றும் இந்த நிகழ்வு சிறப்பாக நடந்ததற்கு நீங்கள் அனைவரும்தான் காரணம். இந்த நிறுவனம் பொருளீட்டும் பொருட்டு இந்த நிறுவனத்தை நான் ஆரம்பிக்கவில்லை, என்னுடைய மனநிறைவு மற்றும் என்னோட சேர்ந்து நான் பலருடன் பயணிக்க வேண்டும் என்ற பேரார்வமும்தான் காரணம். அது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது நீங்களும் தொடர்ந்து பயணிப்போம் என்று பேசியிருக்கிறீர்கள் என்பதும் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்று சொன்னார்.
விழாவில் ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் ஐயா, திரு. அபுதாஹிர், திரு. பாலாஜி பாஸ்கரன், திரு. தெரிசை சிவா மற்றும் எனக்கு நிகழ்வின் இடையே பொன்னாடை போர்த்தப்பட்டது.

இதன் பிறகு ‘உயிர்மெய்’ தயாரிப்பு நிறுவனத்தின் திருமிகு. இலக்கியா ஹரீஷின் இயக்கத்தில் வெளிவந்த ‘லக்கி’ குறும்படம் கேலக்ஸி கலையிலக்கிய குழும நட்புக்களுக்கென சிறப்பாகத் திரையிடப்பட்டது. இந்தக் குறும்படம் உலகளாவிய பல போட்டிகளுக்குச் செல்ல இருப்பதாலும், பல பரிசுகளை வெல்ல இருப்பதாலும் அதன் கதை குறித்து விரிவாக இங்கு எழுதுதல் முறையல்ல என்றாலும், முப்பத்தி இரண்டு நிமிடங்கள் அனைவரையும் கட்டிப் போட்டு, இறுதியில் கண்கலங்க, அதுவும் பலரைத் தேம்பி அழ வைத்து விட்டது. சிறப்பு.
இந்தப் படத்திற்காக கதை வசனம் எழுதிய இலக்கியாவை பாராட்ட வார்த்தைகள் இல்லை. எவ்வளவு அருமையான, கூர்மையான வசனங்கள். பார்க்கும் நம்மை அந்தக் கதையின் நாயகி பேசிய வார்த்தைகள் முள்ளாய் குத்தியதால்தான் அத்தனை பேரின் கண்களிலும் கண்ணீர் என்று நினைக்கிறேன். சிறப்பான படம், சிறப்பாக எடுக்கப்பட்ட, எடிட்டிங் செய்யப்பட்ட, இசை சேர்க்கப்பட்ட குறும்படங்கள் வருவது அரிது. இப்படி எல்லாமே சிறப்பாக வந்த இந்தப் படமும் இதில் சொல்லப்பட்ட விஷயமும் கூட அரிதுதான்.
கெட்டவனைக் காட்டு… பாதிக்கப்பட்டவரைக் காட்டாதே என்பதுதான் நாம் சினிமா, குறும்படங்களின எழுதப்படாத விதி. இங்கே அதை நேர் எதிராய் செய்திருக்கிறார்கள், அதுக்கு நாம் சத்தமாகச் சபாஷ் சொல்லலாம். படம் முடிந்ததும் கைதட்டல் அடங்க நேரமானது என்றால் பலரின் கண்ணீர் மறைய அதைவிட நேரமானது. அந்த இடம், அந்த நேரம் அத்தனை உணர்ச்சிகரமாக இருந்தது. ராஜாராம், பால்கரசு எல்லாம் பாலாஜி அண்ணனைக் கட்டிப் பிடித்து அழுது, முத்தமிட்டார்கள். ஜின்னாஹ் ஐயாவோ ஒருபடி மேலே போய் ‘நான் உங்களை அப்பான்னு கூப்பிடலாமா பாலாஜி’ என்றார். இதைவிட வேறென்ன வேண்டும்..?

ஒரு வயதான அப்பாவாக, இந்தச் சமூகத்தோட ஒத்துப் போக முடியாமல் தனது தலைமுறை அழுத்தங்களைச் சுமக்கும் அப்பாவாக, மகளுக்காக இசைந்து போகும் அப்பாவாக பாலாஜி அண்ணன் கலக்கியிருந்தார். காவல் நிலைய இறுதிக் காட்சியில் அவரின் மகளாக நடித்தவர் அடித்து ஆடியிருந்தார். சிறப்பான நடிப்பு. ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தனர். சிறப்பான படம். வாழ்த்துகள் இலக்கியா ஹரீஷ்.
இந்த 32 நிமிடப் படத்தை இன்னும் கொஞ்சம் நீட்டித்து ஒரு ஒரு மணி நேரப் படமாக ஆக்கியிருந்தால் குறும்படம் என்பது மிகச் சிறந்த திரைப்படமாக மாறியிருக்கும்.
எப்பவும் போல் இரவு உணவுக்குப் பின் அனைவரும் மகிழ்வோடு கலைந்து சென்றோம். நாங்கள் வரும் போது அரசியல், சினிமா எனப் பேசியபடியே நள்ளிரவில் அபுதாபி வந்து சேர்ந்தோம்.
நிகழ்வுகள் அனைத்தையும் Galaxy Books Youtube Channel -ல் பார்க்கலாம்.
படங்களுக்கு நன்றி – பால்கரசு மற்றும் சக்தி
Add comment
You must be logged in to post a comment.