அத்தியாயம் – 5
கல்பனா சன்னாசி
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க :
அத்தியாயம்-1
அத்தியாயம்-2
அத்தியாயம்-3
அத்தியாயம்-4
உள்ளே நுழைந்தான் அஷோக்.
அவனின் கம்ப்யூட்டர் சர்வீஸ் ஷாப் காலை நேர பரபரப்புடன் இருந்தது.
“சார் இப்ப வந்துடுவாருங்க” – யாரிடமோ சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருந்தான் கடைப் பையன்.
வீட்டிற்கு வந்திருந்த மீனாட்சி அத்தையின் பேச்சால் உள்ளுக்குள் கிளர்ந்தெழுந்த எண்ணங்ககளை வலுக்கட்டாயமாக ஓரங்கட்டினான் அஷோக்.
இயந்திரத்தனமாக இயங்கினான்.
“பவர் கார்டு மாத்தணும் சார்… ஆயிரம் ரூபாய் ஆகும்.”
வேறு எதையும் சிந்திக்க இடைவேளை இன்றி அடுத்தடுத்து வேலைகள்.
காலையில் தொடங்கிய வேலை ஓய்வில்லாமல் இழுத்துக் கொண்டே போனது.
அத்தனையும் முடித்து நிமிர்ந்தபோது மணி இரவு ஒன்பது.
“நீ கிளம்பு. நான் லாக் பண்ணிக்கிறேன்.”
கடைப் பையனை அனுப்பிவிட்ட பிறகு அஷோக் தனியனானான்.
ஓரங்கட்டி வைத்திருந்த எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டிக்கொண்டு வந்து எதிரே நின்றன.
அத்தனை நினைவுகளிலும் சுப்ரியா… சுப்ரியா.. சுப்ரியா…
ஏண்டி என் வாழ்க்கையில் வந்தாய்?
அரற்றிய அஷோக்கின் நினைவடுக்களின் ஆழத்தில் கிடந்த அந்த தினம், அவன் சுப்ரியாவை முதன் முதலாக சந்தித்த தினம்,
மேலெழும்பி அவனை அழுத்தியது.
மூச்சுத் திணறியது அஷோக்கிற்கு.
நாற்காலியில் சரிந்தான்.
தலையைப் பிடித்துக் கொண்டான்.
மனம் அசுர வேகத்தில் பின்னோக்கிப் பயணித்தது.
***
வேலை செய்யாத தன் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு அந்த ரிப்பேர் கடைக்குள் நுழைந்த சுப்ரியா, அப்போதிலிருந்து அவள் வாழ்க்கை அடியோடு மாறப் போகிறது என்பதை அறிந்திருக்கவில்லை.
கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தவளை எதிர்கொண்டது அந்த இளைஞனின் புன்னகை.
நிச்சயமாக சுப்ரியா அதை எதிர்பார்த்திருக்கவில்லை.
அன்றுதான் அவள் முதல் முதலாக அந்தக் கடைக்கு வருகிறாள். பின் எப்படி அந்த இளைஞனிடம் இப்படி ஒரு பழகியவன் போல் ஒரு இதமான வரவேற்பு புன்னகை?
யோசித்தவளை மேலும் யோசிக்க விடாமல், அவன் பேசினான்.
“வாங்க மேடம். உக்காருங்க. இதோ… சாருக்கு வேலையை முடிச்சிட்டு உங்க லேப்டாப்பை பார்க்கிறேன்.”
புரிந்து கொண்டாள் சுப்ரியா.
கடைக்கு வருகிறவர்களை உடனே வரவேற்று அக்கறை வார்த்தைகளை உச்சரிக்கும் அவனின் பண்பு அவளை நிஜமாகவே ஈர்த்தது.
வியாபார நிமித்தம் என்றால் கூட எத்தனை பேரிடம் இருக்கிறது இந்தப் பளீர் புன்னகை ப்ளஸ் பரிவான பேச்சு?
லேப்டாப்பை மடியில் இருத்தி அங்கிருந்த சோபாவில் அமர்ந்த சுப்ரியாவின் கவனத்தை முழுமையாக வசீகரித்தான் அந்த இளைஞன்.
“கொடுத்துட்டுப் போங்க சார். நான் பாத்து வைக்கிறேன். நாளைக்கு வந்து வாங்கிக்கலாம்.”
“டிலே ஆகாதே?”
“நிச்சயமா ஆகாது. நான் கியாரண்ட்டி. நாளைக்கே உங்க லேப்டாப் ரெடியாகிடும்.”
ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஏற்றபடி அவன் நிஜமான கரிசனத்தோடு பேசுவது சுப்ரியாவை வெகுவாக கவர்ந்தது.
ஆளும் பார்க்க ஸ்மார்ட். குணமும் தங்கம். என்ன ஒரு பரிவு? என்ன ஒரு அக்கறை?
இவனை கட்டிக்கிறவ உண்மையிலேயே கொடுத்துவச்சவதான்…
எண்ணமிட்ட சுப்ரியாவின் அலைபாயும் விழிகள் அவன் மீதே தொடர்ந்து படிந்தன.
அஷோக்கும் அவள் பார்வை தன் மீது படர்வதை உணர்ந்தான்.
உள்ளுக்குள் சிறகுகள் முளைத்தன.
அழகி ஒருத்தியின் காந்தப் பார்வை தன்னை கவனித்தால் எந்த ஒரு இளைஞனையும் தொற்றிக்கொள்ளும் உற்சாக பரபரப்பு அஷோக்கையும் விடவில்லை.
அவன் புன்ன்னகையின் நீளம் வழக்கத்தை விட சற்று அதிகரித்தது.
“மேடம் உங்க லேப்டாப்பை கொடுங்க பாக்கலாம்.”
கொடுத்தாள் சுப்ரியா.
பரிசோதித்தான்.
பின் நிமிர்ந்தவன், “பேட்டரி மாத்தணும் மேடம். 5000 ஆகும்.”
“மாத்திடுங்க. கார்டு அக்செப்ட் பண்ணுவீங்கல்ல?”
“பண்ணுவோம் மேடம்” என்று சுப்ரியாவிடம் சிரித்தபடி சொன்னான்.
அப்போது இன்னொருவர் கதவைத் திறந்து உள்ளே வர, “வாங்க சார். உக்காருங்க. மேடத்தோட சிஸ்டத்தை முடிச்சிட்டு உங்க லேப்டாப்பை பாக்கிறேன்” என்றபடி புன்னைத்தான்.
அந்தப் புன்னகையில் ஒரு வசீகரம் இருந்தது. அது கடைக்கு வருவோரை எளிதில் வசீகரித்தது.
சுப்ரியா தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
“மேடத்துக்கு பில்தானே? நான் போடுறேன். நீங்க சாரை கவனிங்க சார்.” உதவியாளன் குறுக்கே வந்தான்.
அந்த உதவியாளனை இரு இளைய நெஞ்சங்கள் உள்ளுக்குள் சபிப்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
பணத்தை கொடுத்துவிட்டு, பில்லை வாங்கிக்கொண்டு சுப்ரியா தன் லேப்டாப்புடன் கடையை விட்டு வெளியேறிய போது-
படக் என்று விளக்குகள் அணைந்து இருள் கவ்வுவது போலிருந்தது அஷோக்கிற்கு.
பெரிய கண்கள்…
செழிப்பான கன்னங்கள்…
சிப்பி உதடுகள்…
அரிசிப் பல்வரிசை…
சரியான உயரம்…
அதிக சிவப்பில்லை என்றாலும் பளிச்சென்று மினுமினுத்த தேகம்…
இந்த அழகியை கட்டிக்கிறவன் நிச்சயம் கொடுத்துவச்சவன்.
கண்களில் இன்னமும் மிதந்துகொண்டிருந்த சுப்ரியாவின் அழகு குறித்த ரசனையில் அஷோக் லயித்திருந்த அதே நேரம் –
அந்தப் புன்னகை இளவரசன் பெயர் என்னவாக இருக்கும்?
இளமைக்கே உரிய ஆர்வத்தோடு யோசித்தது சுப்ரியாவின் வயசு.
யோசனை முழுவதும் அவனே நிறைந்திருந்தான்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
சனிக்கிழமை ‘காதல் திருவிழா’ தொடரும்.
2 comments on “தொடர்கதை : காதல் திருவிழா”
rajaram
ஆஹா! ப்ளாஷ் பேக் அத்தியாயம் சிறப்பு
Kalpana Sanyasi
தங்களின் பாராட்டு எனக்குப் பெருமகிழ்ச்சி சார். மனம் நிறைந்த நன்றிகள்! அன்புடன் - கல்பனா சன்யாசி