தொடர்கதை : காதல் திருவிழா

அத்தியாயம் – 8

கல்பனா சன்னாசி

முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க :

அத்தியாயம்-1
அத்தியாயம்-2
அத்தியாயம்-3
அத்தியாயம்-4
அத்தியாயம்-5
அத்தியாயம்-6
அத்தியாயம்-7

நிஷா வீட்டிற்கு சுப்ரியா சென்றபோது, அவள் கொஞ்சம் சோர்வாகத்தான் தெரிந்தாள்.

“இப்போ உடம்பு எப்படியிருக்கு..?”

“இப்பக் கொஞ்சம் பரவாயில்லடி”

“ம்… இந்தாடி உன் லேப்டாப்… ” என்றபடி சோபாவில் அமர்ந்தாள்.

“தாங்க்ஸ் சுப்ரியா..? உனக்கொண்ணு தெரியுமா? நீ அதிர்ஷ்டசாலி. எனக்குதான் அதிர்ஷ்டமே இல்லை.”

“என்ன உளர்றே..?”

“உளறலைம்மா. உண்மையை சொல்றேன்.”

“என்ன பெரிய உண்மை..?”

“உனக்கு கிடைச்ச சான்ஸ் எனக்கு கிடைக்கலை.”

“சுத்தி வளைக்காம விஷயத்தை சொல்லு”

“அந்த ஹாண்ட்ஸம் சார்மிங் இளைஞன் அஷோக். அவனை மறுபடி சந்திக்கிற யோகம் உனக்கு இருந்திருக்கு. எனக்குதான் இல்லை.”

“ப்ச்ச்… புல்ஷிட்… காய்ச்சல்ல கிடக்கேன்னு பார்த்தா கடுப்புல கிடப்பே போல” – கோபத்துடன் சொன்னாள் சுப்ரியா.

“ஏன்டி? அஷோக் அழகானவன் இல்லையா?”

“அழகா இருந்துட்டா போதுமா?”

“என்? உனக்கு பிடிக்கலையா?”

“ப்ச்ச்..”

“”உனக்கு கண்ணே தெரியலைன்னு நினைக்கிறேன். அவன் என்ன ஸ்மார்ட். ஷார்ப்பான கண்கள். அதே அளவு ஷார்ப்பான நோஸ். அந்த ஸ்மைல்.. அட.. அட..”

“பொல்லாத புடலங்காய் ஸ்மைல்.”

“புடலங்காயா? அடிப்பாவி அது முருங்கக்காய் ஸ்மைல். பாத்தா எந்தப் பெண்ணும் மயக்கம் தான்..”

“அசிங்கமா பேசாதே நிஷா.”

“அசிங்கமா? இது அசிங்கமில்லை தோழி. அவசியம். வயசின் அவசியம். உனக்கெங்கே புரியப் போகுது… அம்மாஞ்சி..”

“இருந்துட்டுப் போறேன். நான் அம்மாஞ்சியாவே இருந்துட்டுப் போறேன். எனக்கு இந்த விவகாரமான விவகாரம் எல்லாம் வேண்டவே வேண்டாம்மா.”

கலகலவென சிரித்தாள் நிஷா.

“காலம் மாறிடுச்சு தோழியே. நீயும் கொஞ்சம் காலத்துக்கு ஏத்த மாதிரி யோசி.”

என்ன இந்த நிஷா இப்படி பேசுகிறாள்.

அஷோக் தன்னிடம் சொன்னதை எப்படி இவளிடம் சொல்வது?

தான் அவனை அறைந்ததை சொன்னால் இந்த நிஷா என்ன சொல்லுவாள்?

கடவுளே..! தோழி இருந்தும் இல்லாத நிலை எனக்கு.

மனதில் உள்ளதைப் பகிர்ந்துகொள்ள வழியில்லாமல் போனது சுப்ரியாவுக்கு.

“ஓகே நிஷா. நான் கிளம்பறேன். டேக் கேர்.”

“ஓகே. சீ யூ டுமாரோ.”

“நாளைக்கு காலேஜுக்கு வர்றியா என்ன?”

“ஆமாம். இப்ப உடம்பு கொஞ்சம் நல்லாயிருச்சுல்ல. இங்க இருந்தா அதே பீலா இருக்கும்… அதனால வந்துருவேன்…”

“ஓகே தென். நாளைக்குப் பாக்கலாம். பை.”

“குட் நைட். பை.”

தாமதமாக வீட்டுக்குள் நுழைந்த சுப்ரியாவை எதிர்கொண்டாள் அம்மா சாவித்ரி.

“ஏண்டி லேட்டு?”

“நிஷாவைப் பாத்துட்டு வரேன்மா.”

“ஓ.. எப்டி இருக்கா நிஷா? இப்ப தேவலையாம்மா?”

“ம்..”

“அது சரி. நீ ஏன் இப்டி டல்லடிக்கிறே? முகமெல்லாம் வெளுத்துப் போயிருக்கு? மத்தியானம் லன்ச் ஒழுங்கா சாப்ட்டியா இல்லியா?”

“சாப்ட்டேன்மா.”

“உன்னைப் பாத்தா அப்டி தெரியலியே? ரொம்ப சோர்வா தெரியறே. என்ன விஷயம்?”

“காலேஜில் வேலை கொஞ்சம் ஜாஸ்திம்மா.”

“சரி. முகம் கழுவிட்டு வா. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.”

நல்ல வேளை. அம்மா அதிகம் துருவவில்லை.

நிஜமாகவே ரொம்ப ஆயாசமாகத்தான் இருந்தது சுப்ரியாவுக்கு.

ஒரு ஆண்மகனை கன்னத்தில் அறைகிற சூழல் அனுதினமுமா நிகழ்கிறது ஒரு பெண்ணுக்கு?

உள்ளுக்குள் படபடப்பு இன்னும் கூட அடங்கவில்லை.

அஷோக்கை அறைந்தது சரியா? தவறா? மனசு பட்டிமன்றம் நடத்தியது.

ஆனாலும் அவன் மட்டும் எப்படி அப்படி பேசலாம்?

‘உன்னைப் பிடிச்சிருக்கு.’

‘காபி சாப்பிட வா.’

‘எனக்கு நீ வேணும்.’

என்னப் பேச்சு இதெல்லாம்?

ஒரு புறம் சிந்தனைகள் இப்படியாகத் தோன்றினாலும், மறுபக்க மனசு அஷோக் தரப்பு நியாங்களை யோசிக்கவே செய்தது.

அப்படி என்ன பேசிவிட்டான் பெரிதாக?

கல்யாணம் என்றுதானே சொன்னான்?

பாவி..! முதலில் அதை சொல்லாமல்..

ஆனாலும் ஒரு பெண்ணிடம் எடுத்த எடுப்பில் எப்படி கல்யாணம் என்று பேசிவிட முடியும்?

ஆனால், ஒரு பெண்ணைப் பிடித்திருந்தால் ‘பிடிச்சிருக்கு’ என்று சொல்லாமல் வேறென்ன சொல்வார்களாம்?

எதுவானாலும் தப்பு என் மேல்தான். அவசரப்பட்டு அறைந்திருக்கக் கூடாது.

அவனும் பதிலுக்கு கோபப்பட்டிருந்தால்??

இந்த அஷோக் நல்லவன்தான் போல. அறையை வாங்கிக்கொண்டு எதுவும் பேசவில்லையே?

விபரீதமாக பதிலுக்கு எதுவும் செய்திடவில்லையே?

யோசிக்க யோசிக்க உடனே அஷோக்கிடம் பேச வேண்டும். அவனிடம் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும் என்று தோன்றியது சுப்ரியாவுக்கு.

அலைபேசியைத் தேடினாள் சுப்ரியா.

***

ஷோக் அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை.

அவனை யாரும் அடித்ததே கிடையாது.

அம்மா இல்லாத பிள்ளை என்பதால் அப்பாவின் செல்லம் அவன்.

அவனை அறைந்துவிட்டாள் சுப்ரியா..!

ஓரு பெண்ணுக்கு என்ன அவ்வளவு திமிர்..?

ஆனால் நானும் அப்படி பேசியிருக்கக் கூடாது.

தப்பானவள் என்று சொன்னால் எந்தப் பெண்ணுக்குதான் கோபம் வராது?

சட்! சரியாகப் பேசத் தெரியாமல் சொதப்பிவிட்டேனே..

உடனே சுப்ரியாவிடம் ஒரு ஸாரி சொல்லிவிட வேண்டும்.

முடிந்தால் சகுனம் பார்க்காமல் இன்றைக்கே ‘ஐ லவ் யூ’ வையும் சொல்லிவிட வேண்டும்…

அஷோக் தன் அலைபேசியை எடுத்தான்.

சுப்ரியாவை அழைத்தான்.

அதே நேரம் சுப்ரியாவின் மொபைல் அஷோக்கை அழைக்க முயற்சி செய்துகொண்டிருந்தது.

“லைன் பிஸியா இருக்கே? மாறுபடி ட்ரை பண்ணுவோம்..” – சுப்ரியா.

“ச்சே.. லைன் பிஸி. சரி. மாறுபடி ட்ரை பண்ணலாம்..” – அஷோக்.

இருவரது மொபைலும் ஒன்றை ஒன்று பரஸ்பரம் அழைக்க ஒரே சமயத்தில் முற்பட-

இரு முனைகளிலும், இருவருக்கும் ‘லைன் பிஸி’ செய்தியை இயந்திரத்தனமாக உச்சரித்தன இரண்டு மொபைல் போன்களும்.

தளர்ந்துபோனாள் சுப்ரியா.

“நாளைக்கு பேசிக்கொள்ளலாம்” மொபைலை உதறிவிட்டு வராத உறக்கத்தை வரவழைக்கும் போராட்டத்தை தொடங்கினாள்.

“இன்னும் ஒரே ஒரு தடவை ட்ரை பண்ணிப் பாத்துடலாம்..” – அஷோக்கின் மொபைல் சுப்ரியாவை அழைக்க நினைத்த அதே நொடி –

இசைத்தது அவன் மொபைல் ரிங்டோன்..!

இந்த சமயத்தில் யாராக இருக்கும்? – அஷோக் மொபைலை எடுக்க… 

நிஷா..!


0 Comments

  1. rajaram

    நன்றாக இருந்தது, சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *