தொடர்கதை: காதல் திருவிழா

அத்தியாயம் – 13

கல்பனா சன்னாசி

முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க :

அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3
அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6
அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9
அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12

சுப்ரியாவின் வீடு.

காலை இன்னும் முழுவதுமாக விடிந்திருக்கவில்லை.

“இன்னும் என்ன தூக்கம்? எழுந்திரு சுப்ரியா.”

“இன்னும் கொஞ்ச நேரம்மா…”

“இப்டி தூங்கினா எப்டி..? இன்னுமா நீ கிளம்பலை..?”

“அம்மா, இன்னைக்கு சண்டே.”

“அதனாலென்ன?”

“சண்டே காலேஜ் லீவும்மா. என்னை இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடும்மா..”

“இன்னும் என்ன சின்னக் குழந்தை மாதிரி? நீ இப்டி வெள்ளந்தியா இருக்கிறதாலதான் அப்பனும் புள்ளையும் உன் தலையில மிளகா அரைச்சிட்டாங்க…”

“காலங்காத்தால ஏம்மா அவங்களை ஞாபகப் படுத்துறே..?”

“என்ன பண்றது..? நம்ம விதி அப்டி. சரி, சரி. நீ முதல்ல கிளம்பு.”

“எங்கேம்மா..?”

“எங்கியா? என்ன மறந்துட்டியா? இன்னைக்கு நீ எங்க போகணும்..?

“எங்க போகணும்?”

“அபார்ஷனுக்கு தேதி குறிச்சிட்டு இப்டி மறந்துட்டியேடி..?”

சட்டென்று அமைதியானாள் சுப்ரியா.

உதட்டைக் கடித்துக்கொண்டாள்.

“என்னடி? நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீ கம்முன்னு இருந்தா என்ன அர்த்தம்? எந்திரிச்சி கிளம்பு.”

“இல்லேம்மா நான் போகலை.”

“போகலையா? என்னடி சொல்ற?”

“நான் அபார்ஷன் பண்ணிக்கப் போறதில்லை.”

திக்கென்றது சாவித்ரிக்கு. நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள்.

“ஏண்டி? ஏண்டி இப்டி பண்றே? இது உனக்கே நல்லாருக்கா? உனக்கு புத்திகித்தி ஏதும் பிசகிடுச்சா என்ன?”

“என் குழந்தை. நான் பெத்துகிறேன். நீ ஏன் கவலைப்படறே?”

“உனக்குப் பைத்தியம்தான் பிடிச்சிருக்கு. அந்தாளுங்க என்டான்னா விவாகரத்துன்னு நிக்கிறாங்க. நீ என்னடான்னா குழந்தையைப் பெத்துக்கப் போறேங்கிற.  இது எதுல போய் முடியப் போவுதோ?”

“எல்லாம் நல்லாதான் முடியும்.  என்னை இப்ப தூங்கவிடு. நீ இடத்தை காலி பண்ணு.”

போர்வையை எடுத்து தலை வரை இழுத்து மூடிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள் சுப்ரியா.

மூடிய கண்களுக்குள் அஷோக் வந்தான்.

அவளைப் பார்த்து ஆவேசமாக கூச்சலிட்டான்.

ஆனாலும் அன்று என்னவெல்லாம் பேசிவிட்டான் அவன்?

அவன் அப்பா ஊதிய மகுடிக்கு எப்படி எல்லாம் ஆட்டம் போட்டான்.

அந்த பழைய நினைவுகளை மறுபடி எடுத்துப் புரட்டிப் போட்டது சுப்ரியாவின் ஞாபகங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *