அத்தியாயம் – 14
கல்பனா சன்னாசி
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க :
அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3
அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6
அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9
அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12
அத்தியாயம்-13
சுப்ரியா கல்லூரியில் இருக்கும் போது அவளுக்கு அந்த தொலைபேசி அழைப்பு வந்தது – அம்மாவிடமிருந்து.
“அம்மா! எப்டிம்மா இருக்கே? சொல்லும்மா?”
“அம்மான்னு நான் ஒருத்தி இருக்கிற ஞாபகம் கூட உனக்கு இருக்கா என்ன?”
“ஏம்மா இப்டியெல்லாம் பேசறே?”
“பின்னே என்னடி? இருக்கேனா செத்தேனான்னு கூட என்னை வந்து பாக்க மாட்டியா நீ?”
“வர்றேன்மா. கொஞ்சம் வேலை. அதான்..”
“வேலையைத் தூக்கி உடைப்பில போடு. என்னை வந்து பாரு. நான் செத்து கித்து போறதுக்கு முன்னாடி…”
“அப்டி எல்லாம் பேசாதேம்மா. இன்னைக்கு சாயங்காலமே உன்னை வந்து பாக்கிறேன் நான்.”
“மறக்காம வந்துடு.”
அம்மா போனை வைத்து விட்டாள்.
உடனேயே அஷோக்கை போனில் அழைத்தாள் சுப்ரியா.
“அஷோக். இன்னைக்கு ஈவ்னிங் நாம என் அம்மாவைப் போய் பாத்துட்டு வரலாமா?”
“நீ மட்டும் போய்ட்டு வாயேன்.”
“நீங்களும் வந்தாதான் நல்லாருக்கும் அஷோக்.”
“சரி வர்றேன். போய் பாத்துட்டு வந்துடலாம்.”
மாலை அஷோக்கும், சுப்ரியாவும் சுப்ரியா வீட்டுக்குப் போன போது அங்கே –
நட்ட நடு ஹாலில் சட்டமாக உட்கார்ந்திருந்தனர் சாவித்ரியின் அண்ணன் பாலாசிங்கமும் அவர் மகன் கேசவனும்.
இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை அஷோக். சுப்ரியாவுக்கு கூட மாமா மற்றும் அவரது மகன் இருவரது வரவு முற்றிலும் எதிர்பாராத ஒன்றுதான்.
சுப்ரியாவைப் பார்த்ததும் கேசவனிடம் ஒரு இளிப்பு. தன் பெரிய முறுக்கு மீசையை முறுக்கி விட்டுக் கொண்டான்.
கழுத்தில் புலி நகம் பளபளத்தது.
கேசவனின் இளிப்பும் முறுக்கும் அஷோக்கின் கவனத்திலிருந்து தப்பவில்லை.
“வாம்மா மருமகளே!” – வாயெல்லாம் பல்லாக வரவேற்றார் பாலசிங்கம்.
“எப்டி இருக்கீங்க மாமா?”
“ஏதோ இருக்கேம்மா மருமகளே. வயசான காலம். எமன் எப்ப வந்து கூப்டுவான்னு காத்துக்கிட்டு இருக்கேம்மா மருமகளே.”
“ஏன் மாமா இப்டி எல்லாம் பேசறீங்க? பெரியவங்க நீங்க இன்னும் நிறைய வருஷம் இருந்து எங்களை ஆசீர்வாதம் பண்ணணும்.”
“மருமகளே, உம் பேச்சைக் கேட்டு எவ்ளோ நாளாச்சு. நீ இப்டி அன்பா பேசுறதைக் கேக்கும் போது சந்தோஷமா இருக்கு மருமகளே.”
வார்த்தைக்கு வார்த்தை மருமகள்… மருமகள் – பல்லைக் கடித்துக்கொண்டான் அஷோக்.
“என்னடா கேசவா, சுப்ரியாவை ஒரு வார்த்தை கூட விசாரிக்காம உம்முன்னு உக்காந்திருக்கே?” – எடுத்துக் கொடுத்தார் பாலசிங்கம்.
கூடவே, “பாவாடை சட்டை போட்ட காலத்திலிருந்து உங்கூட ஒண்ணா ஓடி விளையாடின பொண்ணுடா. உனக்குதான் உறவு ஜாஸ்தி. தைரியமாப் பேசு.”
“நல்லாருக்கியா சுப்ரியா?” கேசவனிடம் மறுபடியும் ஒரு இளிப்பு.
“ம்” தலையசைத்தாள் சுப்ரியா.
“ம்.. எங்க வீட்டுப் பொண்ணு நீ. எம் மகனுக்கு பொண்டாட்டியா ஆகியிருக்க வேண்டியவ. என்னவோ கெட்ட நேரம் எல்லாம் தலைகீழாயிடுச்சி.”
பாலசிங்கம் பெருமூச்சு விட,
கடுப்பானான் அஷோக்.
“கிளம்பலாமா சுப்ரியா?”
“வந்துட்டு உடனே கிளம்பறேங்கிறீங்களே? இருங்க… சாப்ட்டுட்டுப் போகலாம்” என்றாள் சாவித்ரி,
“இருக்கட்டும். பரவாயில்லை. இன்னொரு நாளைக்கு சாப்பிடுறோம்.”
“இன்னொரு நாளைக்கு நாங்க இருக்க மாட்டோமே சார்” குறுக்கிட்ட பாலசிங்கம், “நானும் என் மகன் கேசவனும் எங்க மருமகள் சுப்ரியாவோட சேந்து சேந்து சாப்ட்டு எவ்ளோ நாளாச்சு? இன்னைக்கு நீங்க இருந்து எங்க கூட சாப்டுட்டுதான் போகணும். சொல்லும்மா மருமகளே.”
சுப்ரியாவை மருமகள் என்று அழைக்கிறான்.
என்னையும் மருமகன் அல்லது மாப்பிள்ளை என்று அழைத்தால் என்ன?
சாராம் சார்..
மனம் வெதும்பினான் அஷோக்.
“இருந்து சாப்டுட்டுப் போவோமே?” – சுப்ரியா மனு போட,
வேறு என்ன காரணத்தை சொல்லித் தட்டிக் கழிப்பது என்று எதுவும் தோன்றாததால் அன்று இரவு எல்லோருடனும் உணவருந்த வேண்டியது கட்டாயமாகிப் போனது அஷோக்குக்கு.
ஒரு பக்கம் அஷோக். ஒரு பக்கம் கேசவன். நடுவில் சுப்ரியா.
“நீ சுப்ரியா பக்கத்துல உக்காந்துக்க கேசவா. அவ மேல உனக்குதான் ரொம்ப ஆசை..” இப்போது இளிப்பது பாலசிங்கத்தின் முறையாயிற்று.
ஊட்டி விடாத குறைதான்.
கேசவன் தன் தட்டில் இருந்து சுப்ரியா தட்டில் வைப்பதும், அவள் தட்டில் இருந்து தான் உரிமையோடு எடுத்துக்கொள்வதும்…
ஒவ்வொரு கவளத்தையும் விஷமாக விழுங்கினான் அஷோக்.
அவர்களிடமிருந்து பிய்த்துப் பிடுங்கிக்கொண்டு புறப்பட்டால் போதும் என்றாகிப் போனது.
இரவில்… தனிமையில்…
“நீயும் கேசவனும் சின்ன வயசிலேருந்து ஃப்ரெண்ட்ஸா?”
அஷோக் கேட்க,
“நாங்க ஃப்ரெண்ட்ஸ் இல்ல அஷோக். அதுக்கும் மேல..”
“அதுக்கும் மேலன்னா?”
“ரிலேட்டிவ்ஸ். சொந்தக்காரங்க..”
“அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் போல?”
“பிடிக்கும் அப்டிங்கிறதெல்லாம் குறைச்சலான வார்த்தை. நான்னா அவனுக்கு உயிர். என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஒத்தக் கால்ல நின்னான்.”
“ஏன்? பண்ணிக்கிறதுதானே?”
“பண்ணிருக்கலாம். ஆனா உங்களை லவ் பண்ணிட்டேனே?” கண்ணடித்தாள் சுப்ரியா.
“ஏன்? உனக்கு கேசவனைப் பிடிக்கலையா?”
“அவன் ஒரு தத்தி.”
“பிடிக்குமா? பிடிக்காதா?”
“பிடிக்கும்தான். அதுலயும் அந்த முறுக்கு மீசை… அடடா.. என்ன அழகு என்ன கம்பீரம்..”
கேலியாக சிரித்தாள் சுப்ரியா.
“சரி விடுங்க. இப்ப எதுக்கு கேசவனைப் பத்திப் பேச்சு?” கைகளை அஷோக்கின் மார்பில் குறுக்காகப் போட்டாள் சுப்ரியா.
“ப்ச்.. எனக்கு தூக்கம் வருது” அவள் கைகளை அப்புறப்படுத்தினான்.
“தள்ளிப்படு.”
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
புதன்கிழமை ‘காதல் திருவிழா’ தொடரும்.
One comment on “தொடர்கதை: காதல் திருவிழா”
rajaram
அருமை! அடுத்தடுத்த அத்தியாயங்கள் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.