தொடர்கதை: காதல் திருவிழா

அத்தியாயம் – 15

கல்பனா சன்னாசி

முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க :

அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3
அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6
அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9
அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12
அத்தியாயம்-13 அத்தியாயம்-14

பூமி தன்னைத்தானே சில பல முறை சுற்றிக்கொண்டது.

“அம்மா போன் பண்ணினாங்க…” என்றாள் சுப்ரியா அஷோக்கிடம்.

“ஏன்? என்னவாம்?”

“வர்ற வெள்ளிக்கிழமை வீட்டில் கணபதி ஹோமம் பண்றாங்களாம். நம்மளை வரச்சொன்னாங்க.”

“உன் மாமனும் அவர் மகன், அந்த முறுக்கு மீசையும் அங்கே இருப்பாங்களா?”

“ம்… இருப்பாங்க. ஆனா அவங்க இருந்தா நமக்..” சுப்ரியா ஏதோ பேசப்போக –

“நான் வரலை. என்னால முடியாது” குறுக்கிட்டான் அஷோக்.  நறுக்கு தெறித்தது அவன் குரலில்.

“இப்டி சொன்னா எப்டி? பூஜையில் நாம் தம்பதி சமேதரா உக்காந்தாதானே நல்லது?”

“அதான் சொல்றேன்ல? எனக்கு வேலை இருக்கு. என்னால ஹோமத்துக்கு வர முடியாது. வேணும்னா நீ மட்டும் போய்ட்டு வா.”

“நான் மட்டும் போனா நல்லா இருக்காது அஷோக். நீங்களும் வாங்க.. ப்ளீஸ்..”

“பாக்கலாம்.”

வெள்ளிக்கிழமை…

சுப்ரியாவின் வீடு மங்களகரமாக இருந்தது.

கணபதி ஹோமத்திற்காக களையுடன் இருந்தது.

உள்ளே நுழைந்த சுப்ரியாவை எதிர்கொண்டாள் அம்மா சாவித்ரி.

“என்னடி தனியா வந்திருக்கே? உன் வீட்டுக்காரர் வரலியா?”

“இல்லேம்மா. அவருக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்காம். நீ அவருக்காக வெயிட் பண்ண வேணாம். ஆக வேண்டியதைப் பாரு.”

ஹோம குண்டத்தில் தீ எழும்பிற்று.

மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டன.

பூஜை ஆரம்பமானது.

மனசு கேட்காமல் கொஞ்ச நேரம் கழித்து அஷோக்கிற்கு போன் செய்தாள் சுப்ரியா.

ரிங் போனது. ஆனால் எடுக்கவில்லை.

இரண்டு மூன்று தடவை முயற்சி செய்த பிறகு சலித்துப்போனது சுப்ரியாவுக்கு.

‘வராவிட்டால் போகட்டும்’

அப்போது சாவித்ரி அழைத்தாள். “சுப்ரியா..! நீயும் வந்து பூஜையில் உக்காரு..”

தானும் சென்று ஹோம குண்டத்திற்கு அருகில் அமர்ந்தாள் சுப்ரியா.

“கேசவா. நீயும் போய் உக்கார்றா..” – பாலசிங்கம் சொன்னதுதான் தாமதம். ஓடி வந்து சுப்ரியாவை இடித்துக்கொண்டு உட்கார்ந்தான் கேசவன். கூடவே அவனது ட்ரேட் மார்க் இளிப்பு வேறு..!!

முன்னறிவிப்பு ஏதுமின்றி உள்ளே நுழைந்த அஷோக்கின் கண்களில் விழுந்தனர் இடித்துக்கொண்டு அமர்ந்திருந்த கேசவன் மற்றும் சுப்ரியா.

இருவரது கழுத்திலும் பூஜையின் நிமித்தம் மலர்ச் சரங்கள்…

திரண்டெழுந்த கோபத்தை கை முஷ்டியை இறுக்கிக் கட்டுப்படுத்தியது நாகரீகம்.

“அட்டே. வாங்க சார். வாங்க. நாங்க உங்களை எதிர்பார்க்கலை” அலட்சியப் பேச்சு பாலசிங்கத்திடம்.

“வரமாட்டேன்னு சொன்னீங்க?” – சுப்ரியா.

“ஏன் வந்தேன்னு கேக்கிறியா?”

“அதில்லை அஷோக்.. ஏதோ முக்கியமான வேலைன்னு…”

அஷோக் – சுப்ரியா இடையே உறவு நெருடுவது பாலசிங்கத்திற்கு ஏக சந்தோஷமாக இருந்தது.

கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், “நீங்க வரமாட்டீங்கன்னு சுப்ரியா சொன்னா. அதான் சுப்ரியாவையும் கேசவனையும் பூஜையில் உக்கார சொல்லிட்டேன். என்னதான்னாலும் அவனும் முறை உள்ளவன்தானே?”

எரிகிற கொள்ளியில் எண்ணெய், பெட்ரோல், டீசல் எல்லாம் ஊற்றினார்.

சற்று நேரம் நின்றான்.

சற்று நேரம் அமர்ந்தான்.

பிறகு படக்கென்று எழுந்து, “நான் கிளம்பறேன்” அறிவித்தான் அஷோக்.

“இப்பதான் வந்தீங்க. அதுக்குள்ள…” – சுப்ரியா.

“கடையில் வேலை இருக்கு.”

“பூஜை… பாதியில…”

“அதான் செஞ்சிகிட்டு இருக்கீங்களே? செஞ்சிக்குங்க.”

எவரிடமும் எந்த பதிலோ அனுமதியோ எதிர்பார்க்காமல் சரேலென்று வெளியேறிவிட்டான் அஷோக்.

ஹோமத்தை முடித்துவிட்டு, “கிளம்பறேம்மா..” என்ற சுப்ரியா, “சாப்டுட்டுப் போடி” என்று சாவித்ரி கத்தியதையும் கண்டுகொள்ளாமல் புறப்பட்டாள்.

வீட்டிற்கு வந்தால், அங்கே படுக்கை அறையில் அஷோக்..!

“என்ன அஷோக், இங்க வீட்ல இருக்கீங்க?”

“ஏன்? என் வீட்டுக்கு நான் வராமல்?”

“அதில்லை அஷோக். கடையில் ஏதோ வேலைன்னு சொன்னீங்களே? அதான் கேட்டேன்.”

“தலைவலி. ரெஸ்ட் எடுக்கலாம்னு வீட்டுக்கு வந்தேன். எல்லாத்துக்கும் உனக்கு விளக்கம் சொல்லணுமா?”

“தலைவலியா? ஏன்? என்னாச்சு? ஹோமப் புகை ஒத்துக்கலையா?” அஷோக்கை நெருங்கினாள் சுப்ரியா.

“தைலம் தேச்சி விடட்டுமா?” அவன் நெற்றியை வருடினாள்.

வருடிய கைகளை தட்டிவிட்டான் அஷோக்.

“என்னைக் கொஞ்சம் தனியா விடு..” அகன்றான்.

அடுத்த நாள் காலை.. சற்று அவசரமாகவே விடிந்தது.

வழக்கமான பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தாள் சுப்ரியா.

“காபி தரட்டுமா?” கேட்ட சுப்ரியாவிடம், “வேண்டாம்” சுருக்கமாக மறுத்தான் அஷோக்.

“தோசை ஊத்தட்டுமா? இல்லை ப்ரெட் சாண்ட்விச் பண்ணட்டுமா?” சுப்ரியா கேட்க –

“எதுவும் வேண்டாம். பசியில்லை.” நறுக் – சுருக் பதில். வறண்ட குரலில்.

“சரி. லன்ச் பேக் பண்ணிருக்கேன். மறக்காம எடுத்துட்டுப் போங்க..”

“வேண்டாம்” மறுபடியும் மறுத்துவிட்டு வெளியேறினான் அஷோக்.

என்ன ஆச்சு இவருக்கு? திடீரென ஏன் இவ்வளவு வெறுப்பு? விலகல்?

சுப்ரியாவின் மண்டை காய்ந்தது.

சில நாட்களாகவே அஷோக் தன்னிடமிருந்து விலகுவதை அவள் உணர்ந்தே இருந்தாள்.

‘வேலை அதிகமாக இருந்திருக்கும். அதுதான் களைப்பு போல’ தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டால் சுப்ரியா.

எப்படியாகினும் இன்றைய தினத்தை எப்படி மறந்தான்?

ஒரு வேளை மாலை சர்ப்ரைஸாக ஏதேனும் பரிசு தருவானோ?

அப்படித்தான் இருக்கும்.

அஷோக்காவது, என் பிறந்த நாளை மறப்பதாவது.

ஏதேதோ நினைத்து தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள் சுப்ரியா.

“இந்த பீகாக் நிற சுடிதாரில் நீயே ஒரு மயில் போல அழகா ஜொலிக்கிறே சுப்ரியா..”

அஷோக் மயங்கிய அந்த பீகாக் நிற சுடிதாரை தேடி எடுத்து உடுத்திக்கொண்டாள்.

தன்னைக் கொஞ்சம் கூடுதல் சிரத்தையோடு அலங்கரித்துக் கொண்டாள்.

அந்தி மாலையும் சுப்ரியாவுடன் சேர்ந்து அஷோக்குக்காக காத்திருந்தது.

ஆனால் அஷோக் வரவில்லை.

மாலை முடிந்து இரவு மிஞ்சி நடு நிசியை தொட்ட வேளையில் வீட்டிற்குள் நுழைந்தான் அஷோக்.

சுப்ரியாவோ அவனின் உதாசீனத்தால் கொதித்துக் கொண்டிருந்தாள்.

“ஏன் லேட்டு?”

“என் வீடு. நான் லேட்டா வருவேன். என் இஷ்டம்.”

“இப்டி செய்றது உங்களுக்கே நல்லா இருக்கா?”

“ஏன்? அப்டி என்ன செஞ்சிட்டேன் நான்?”

“இன்னைக்குப் பாத்து இப்டி லேட்டா வர்றீங்களே? உங்களுக்காக நான் எவ்ளோ ஆசையா வெயிட் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா?”

அஷோக்கின் பார்வை அவளின் பீகாக் நிற சுடிதாரையும் கூடுதல் அலங்காரத்தியயும் அளவெடுத்தது.

“ஏன்? அப்டி என்ன விசேஷம் இன்னைக்கு?”

“இன்னைக்கு என் பிறந்த நாள்.”

“ஓ..” என்றான் அஷோக் அசிரத்தையாக.

“என்ன ஓ? வெறும் ஓ மட்டும்தானா? பரிசு எதுவும் கிடையாதா?”

அஷோக் வீட்டுக்குள் நுழையும்போதே அவனிடம் பரிசு ஏதுமில்லை என்பதை கவனித்தே இருந்தாள் சுப்ரியா.

கடையில் வாங்கி வந்தால்தானா பரிசு?

இதமாக அணைத்து, “ஹேப்பி பர்த்டே” எனும் ஒரு சொல் போதுமே…?

இதழில் மெலிதாக ஒரு சிறு முத்தம் தந்தால் ஆகாதா..?

அதைவிடப் பெரிய பரிசு வேறென்ன எனக்கு வேண்டும்?

எதேதோ ஆசைகள் உந்தித்தள்ள வாய்விட்டுப் பரிசைப் பற்றிக் கேட்டேவிட்டாள் சுப்ரியா.

“ஏன்? நான் கொடுத்தாதானா பரிசு உனக்கு? உன் மாமன் மகன்… அதான் அந்த முறுக்கு மீசை கேசவன் எதுவும் பரிசு தரலியா உனக்கு?”

“என்ன உளர்றீங்க?”

“உண்மையை சொன்னா உளர்றேனா? அவனும் நீயும்தான் சின்ன வயசிலேருந்தே ஒண்ணாப் பழகினவங்களாச்சே? பரிசு கொடுக்காமலா இருந்திருப்பான் உனக்கு? கொடுத்துருப்பான். தாராளமா நிறையவே கொடுத்துருப்பான்..”

தான்பாட்டுக்குப் பேசிக்கொண்டே போகிறவனை நிதானமாக ஏறிட்டாள் சுப்ரியா.

பிறகு மெதுவாகக் கேட்டாள்..

“என்னை சந்தேகப்படறீங்களா அஷோக்?”

அஷோக் பதில் ஏதும் பேசவில்லை.

“நான் களைப்பா இருக்கேன். தூங்கணும்.”

கட்டிலில் சரிந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *