தொடர்கதை: காதல் திருவிழா

அத்தியாயம் – 16

கல்பனா சன்னாசி

முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க :

அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3
அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6
அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9
அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12
அத்தியாயம்-13 அத்தியாயம்-14 அத்தியாயம்-15

ந்த வீட்டில் ஒரு இறுக்கமான சூழலை கவிழ்த்துப் போட்டபடியே விடிந்து விட்டிருந்தது அன்றைய காலை.

புயலுக்கு முன்னதான அமைதியைப் போன்ற ஒரு ஆரோக்கியமற்ற நிலை.

அஷோக் கிளம்பிக்கொண்டிருந்தான்.

சுந்தரேசன் செய்தித்தாளில் மூழ்கியிருந்தார்.

சுப்ரியா சமையலறையில்…

அழைப்பு மணி ஒலித்தது.

“இதோ வர்றேன்” விசிலடித்த குக்கரை நிறுத்திவிட்டு வாசலுக்கு விரைந்தாள்.

வாசலில் புயல் நின்றுகொண்டிருந்தது.

மாமா பாலசிங்கம். கூடவே அவர் மகன் கேசவன்!

தலையை துவட்டியபடியே குளியல் அறையிலிருந்து வெளிப்பட்ட அஷோக் இருவரையும் ஏறிட்டான்.

எதுவும் பேசவில்லை.

சுப்ரியாவை நோக்கி ஒரு அனல் பார்வை வீசிவிட்டு சட்டென்று அகன்றான்.

“வாங்க மாமா..” சுப்ரியா சுதாரித்துக்கொண்டாள்.

“பக்கத்துல தெரிஞ்சவர் ஒருத்தர் வீடு. உன் வீட்டுக்கு கிட்டதான். அதான் முன்னாடியே கிளம்பி வந்துட்டேன். உன்னை ஒரு எட்டுப் பாத்துட்டு அப்டியே அவரையும் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன். உன் வீட்டுக்கு வர்றேன்னதும் கேசவனும் சுப்ரியாவைப் பாக்காணும்னு கிளம்பிட்டான்.”

நேற்றிரவு அஷோக் பேசிய பேச்சுக்குப் பிறகு, சுப்ரியாவால் பாலசிங்கத்தின் வார்த்தைகளையும், கேசவனின் இளிப்பையும் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

சங்கடத்துடன் தவித்தாள்.

“நான் காலேஜுக்கு கிளம்பணுமே மாமா?”

“போம்மா. தாரளமாப் போ… உன் கையால் ஒரு கப் காபி மட்டும் கொடுத்துட்டுப் போ..”

“சரி மாமா… இருங்க. இதோ காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்..”

அதே சமயம் சட்டைக் காலரை சரி செய்தபடி அஷோக் வர –

“அஷோக், உங்களுக்கு பிரேக்ஃபாஸ்ட்…”

“வேண்டாம்”

“லன்ச்?”

“எதுவும் வேண்டாம். வந்திருக்கவங்களை கவனி. கேசவன்னாதான் உனக்கு தனிப் பிரியமாச்சே? நல்லா உபசரிச்சி அனுப்பு..” – இதழ்க்கடையில் ஒரு கேலி வளைவோடு வார்த்தைகளை உதறிவிட்டு வெளியேறிவிட்டான்.

அஷோக்கின் ஏளன வார்த்தைகள் அப்படியே தன் மேல் நெருப்பை அள்ளிக் கொட்டியது போல் எரிந்தது சுப்ரியாவுக்கு.

மௌனமாக வந்திருப்பவர்களுகு காபி போட்டு எடுத்து வந்தாள்.

“சாப்டுங்க மாமா.”

“கொடும்மா. இந்தாடா கேசவா… நீயும் எடுத்துக்க” என்றவர் திடீரென்று, “என்னடா கேசவா, உன் உடம்பு இப்டி கொதிக்குது?”

“தெரியலைப்பா… ஜுரம் மாதிரி இருக்கு..”

“ஜுரமா? அப்புறம் ஏண்டா எங்கூட கிளம்பி வந்தே?”

“சுப்ரியாவைப் பாக்கணும்னு…”

“அடப்பாவி. எப்டிடா இந்த ஜுரத்தோட 20 கி.மீ. பஸ்ல வருவே?”

“எதுக்கு மாமா 20 கி.மீ.?” குழப்பத்துடன் ஏறிட்டாள் சுப்ரியா.

“தெரிஞ்சவர் வீடுன்னு சொன்னேனேம்மா?”

“கிட்டன்னு சொன்னீங்க?”

“அ..அது வந்து… கிட்டதான் இருந்தாங்க. அது முதல்ல.. இப்ப மாறிட்டாங்க. அதை விடு. இப்ப இவனுக்கு ஜுரம் அடிக்குதே? எப்டி இவனை எங்கூட கூட்டிக்கிட்டுப் போவேன்?”

சுப்ரியா விக்கித்துப்போனாள்.

சுந்தரேசனை உதவிக்காக ஏறிட்டாள்.

அவரோ, “எனக்கு கோவிலுக்குப் போகணும். பேங்க்ல வேற கொஞ்சம் வேலை இருக்கு. இப்ப கிளம்பினா மத்தியானத்துக்கு மேலதான் வருவேன்…” – செய்தித்தாளை மடித்துக் கடாசிவிட்டு நடையைக் கட்டினார்.

கைகளைப் பிசைந்தாள் சுப்ரியா.

“இப்ப என்ன மாமா பண்றது?”

“லீவு போடும்மா. எங்களுக்காக ஒரு நாள் லீவு கூடப் போட முடியாதா உன்னால?”

“நான் போய் என் ஃப்ரெண்டைப் பாத்துட்டு வந்து கேசவனை கூட்டிக்கிட்டுப் போறேன்..”

மனசே இல்லாமல் அப்படியே செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் நேரிட்டது சுப்ரியாவுக்கு.

பாலசிங்கம் கிளம்பி போய்விட்டார்.

வீட்டில் கேசவனும், சுப்ரியாவும். தனியே.

நினைக்க நினைக்க பாலசிங்கத்துக்கு களிப்பாக இருந்தது.

குணங்கெட்ட கோரோஜனையாக இருக்கும் தன் மகனுக்கு எவன் பொண்ணு தருவான்?

தங்கை சாவித்ரியின் மகள் சுப்ரியாவை எப்படியாவது அமுக்கிப் போட்டுவிட வேண்டியதுதான்.

ஆனால், இந்த சுப்ரியா.. காதல் கத்திரிக்காய் என்று சொல்லி என் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டாளே?

விடக் கூடாது. நடந்து முடிந்துவிட்ட அவள் கல்யாணத்தை எப்படியாவது உடைத்துவிட வேண்டும்.

விவாகரத்து வாங்க வைத்து, சுப்ரியாவை எப்படியாவது தன் மகனுக்கு கட்டி வைத்துவிட வேண்டும்.

என்ன செய்யலாம் என்று யோசித்து திட்டம் போட்டாச்சு.

அதைக் கேசவனிடம் தெளிவாக எடுத்தும் சொல்லியாச்சு.

சொன்னபடி அவன் சரியாக நடந்துகொள்ள வேண்டும்.

நான் நினைப்பது மட்டும் நடந்துவிட்டால்..அப்புறம் சுப்ரியா கேசவனுக்குதான்.

ஆசைக் கோட்டை கட்டியபடி பாலசிங்கம் பஸ்ஸில் பயணித்திருக்க

வீட்டில் –

“சுப்ரியா, பாத்ரூம் எங்க இருக்கு?”

இவன் இந்த இளிப்பை விடவே மாட்டானோ?

“அந்தப் பக்கம் இருக்கு.”

அவன் சென்று சரியாக இரண்டே நிமிடங்கள்..

“அய்யோ… அம்மா… சுப்ரியா.. இங்க வாயேன்…” கேசவன் அலறிய சத்தம் சுப்ரியாவை அறைந்தது.

“என்னாச்சு..?” பதறி ஓடினாள்.

பாத்ரூம் கதவு திறந்து கிடக்க, பப்பரக்கா என கீழே விழுந்து கிடந்தான் கேசவன்.

ஷவர் திறந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.

தெப்பலாக நனைந்திருந்தான்.

“அச்சச்சோ… என்னாச்சு? “

“வழுக்கி விட்ருச்சு சுப்ரியா. கொஞ்சம் கையைக் கொடேன்..”

பரிதாபத்துடன், உதவி செய்யும் முகாந்திரத்துடன் நீண்ட சுப்ரியாவின் கைகளை விசுக்கென இழுத்தான் கேசவன்.

சுப்ரியா நிலை தடுமாற…

அவள் மீதும் ஷவர் பொழிய..

சமளித்து அவள் ஷவரை மூட முயல…

கேசவன் எழுவது போல் அவள் மேலேயே விழ…

வாசலில் அரவம்..!

முழுக்க நனைந்து விட்டிருந்தனர் இருவரும்.

“கால் சுளுக்கிகிச்சு போல. கொஞ்சம் உன் தோளைப் பிடிச்சிக்கிறேன்..”

இருவரும் பாத்ரூமில் இருந்து ஹாலுக்கு வந்து சேர்ந்த சமயம்..

அங்கே அஷோக் நின்று கொண்டிருந்தான்.

முகம் முழுக்க ஆவேசம்..!

விழிகளில் வன்மம்.

“நீங்க எப்ப வந்தீங்க?” என்றாள் சுப்ரியா, வழிந்த நீரை உதறியபடி.

“எப்ப வந்தேன்னு கேக்குறியா? இல்லை ஏன் வந்தேன்னு கேக்குறியா?”

“பாருங்க. தப்பு தப்பா பேசாதீங்க..”

“யாரு? நான் தப்பு தப்பா பேசறேனா? நீ…நீ செய்றதெல்லாம் தப்பு தப்பா செய்றியே..? அந்த நியாயத்தை எங்கப் போய் சொல்றது?”

அதற்குள், அஷோக்கின் வருகையால் என்ன செய்வதென்று புரிபடாத கேசவன், தன் தந்தைக்கு போன் செய்தான்.

அவர், “அப்டியா? நான் உடனே அங்க வர்றேன்..” என்று திரும்பிவிட்டார்”

அஷோக்கின் தடம் புரண்ட பேச்சால் தொய்ந்து போனாள் சுப்ரியா.

“நீங்கதான் தப்பு தப்பா கற்பனை பண்ணிக்கிறீங்க…”

“கண்ணு முன்னாடி ரெண்டு பேரும் கட்டிப் பிடிச்சிக்கிட்டு நிக்கிறீங்க… கற்பனைன்னு சொல்றே?”

“அவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்னுதான்…”

“நீங்க பாத்ரூமில் ரொமான்ஸ் பண்ணீங்களா இல்லை பெட்ரூமில் ரொமான்ஸ் பண்ணீங்களாங்கிற டீடெயில்ஸ் எல்லாம் எனக்குத் தேவையில்லை. நீ முதல்ல இடத்தை காலி பண்ணு. என் வீட்டை விட்டுப் போ. என் வாழ்க்கையை விட்டுப் போ…”

“புரியாமப் பேசாதீங்க அஷோக். நடந்தது என்னன்னு தெரியாம வார்த்தைகளை அள்ளிக் கொட்டாதீங்க..”

“ச்சீ வாயை மூடு. அவன்தான் சொல்றானில்ல? வீட்டை விட்டு வெளியே போடி..”

அப்போதுதான் சுந்தரேசன் உள்ளே வந்து விட்டிருந்ததையே கவனித்தாள் சுப்ரியா.

“மாமா. பெரியவங்க நீங்க. கொஞ்சம் நிதானமாப் பேசுங்க..”

“இன்னும் என்னடி உன் பேச்சைக் கேட்டுக்கிட்டு? அதான் நல்லாப் புரிஞ்சுப் போச்சே உன் வண்டவாளம்? புருஷன் இருக்கும்போதே இன்னொருத்தனோட கூத்தடிக்கிற…?”

“வார்த்தையை அளந்துப் பேசுங்க மாமா. அப்புறம் மரியாதை கெட்ரும்.”

“மரியாதையைப் பத்தி நீ பேசுறியா? நடத்தை கெட்ட நாயி. முதல்ல வீட்டை விட்டுப் போடி.”

“கேக்க யாரும் இல்லேன்னு நினைச்சீங்களா? எங்க வீட்டுப் பொண்ணை நாயின்னு சொல்ல நீ யார்டா?” ஆவேசமாக கேட்டபடியே உள்ளே நுழைந்தார் பாலசிங்கம்.

“யாரைப் பாத்து வாடா போடாங்கிற..? பெத்த மகனுக்கு கூட்டிக் கொடுக்கிற மாமாப் பயலே..”

“ஆமாடா… கூட்டித்தான் கொடுத்தேன். என் மருமகளைத்தானே? என் மகனுக்குன்னே பொறந்தவடா அவ. இடையில வந்து காதல் கத்திரிக்கான்னு கொத்திக்கிட்டுப் போய்ட்டா..? விட்ருவமா..?”

“தட்ஸ் இட். உங்க மருமகளை நீங்களே கூட்டிக்கிட்டுப் போயிடுங்க. எனக்கு அவ வேணாம்.”

“என் புள்ளை தின்ன எச்சிலதானடா நீ சாப்டறே? அப்புறம் என்னடா ரோஷம் பொத்துக்கிட்டு வருது உனக்குப் பெருசா..?”

பாலசிங்கத்தின் அமில வார்த்தைகள் அஷோக்கின் செவிகளில் விழுந்து நெஞ்சத்தை நொறுக்கி இதயத்தைப் பிளந்தது.

காதுகளை மூடிக் கொண்டான்.

அங்கிருந்து அகன்று அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டான்.

“மாமா.. என்னப் பேசறீங்க நீங்க? அஷோக்.. கதவைத் திறங்க..” – இருபுறமும் அல்லாடினாள் சுப்ரியா.

“நிறுத்துடி உன் நாடகத்தை. முதல்ல எல்லாரும் இந்த வீட்டை விட்டு வெளியே போங்க..” சுந்தரேசன் அலற –

“நீ என்னடா சொல்றது? இனி ஒரு நிமிஷம் என் மருமக இந்த வீட்ல இருக்க மாட்டா..” பாலசிங்கம் சுப்ரியாவின் கைகளைப் பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு போனார்.

அவள் கதறக் கதற..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *