தொடர்கதை: காதல் திருவிழா

அத்தியாயம் – 17

கல்பனா சன்னாசி

முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க :

அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3
அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6
அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9
அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12
அத்தியாயம்-13 அத்தியாயம்-14 அத்தியாயம்-15
அத்தியாயம்-16

லியோடு நகர்ந்தன நாட்கள்.

தனிமை இரவுகள் கண்ணீரில் செலவழிந்தன.

இயந்திரத்தனமாக கல்லூரிக்குச் செல்வதும் வீட்டுக்கு மீள்வதுமாக இருந்தாள் சுப்ரியா.

உயிர்ப்பை இழந்து நடைபிணமாகத் திரிந்தாள்.

“ஏண்டி நடந்ததையே நினைச்சு இப்டி எப்பப்பாரு அழுதுகிட்டே இருக்கே..? ஆக வேண்டியதைப் பாரு.”

இனிமேல் ஆக வேண்டியது என்ன இருக்கிறது?

எல்லாம்தான் முடிந்துவிட்டதே?

வாழ்க்கை முழுவதுமாக அஸ்தமித்துவிட்டது போல அயர்ந்தாள் சுப்ரியா.

அஷோக்கா இப்படி பேசிவிட்டான்..?

முற்றிலுமாக தளர்ந்து போனாள்.

ஆனால் பாலசிங்கம் மாமா..? வார்த்தைகளில் விஷத்தை கக்கிவிட்டாரே..?

அவர்தான் அப்படி பேசுகிறார் என்றால் அஷோக்கிற்கு எங்கே போச்சு புத்தி..?

பேசுகிறவர்கள் ஆயிரம் பேசுவார்கள்.

நாம்தானே நல்லதையும் கெட்டதையும் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும்..?

அஷோக் எதையுமே சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

புரியவைக்க எனக்கு சந்தர்ப்பமும் தரவில்லை.

அவனிடம் ஒரு தடவை பேசினால் எல்லாம் சரியாகிவிடும்.

நம்பிக்கையுடன் அஷோக்கை தொலைபேசியில் அழைத்தாள் சுப்ரியா.

ரிங் போய்க்கொண்டே இருந்தது.

அஷோக் போனை எடுக்கவில்லை.

அழுகை பொத்துக்கொண்டு வந்தது சுப்ரியாவுக்கு.

முற்றிலுமாக உடைந்து போனாள்.

மடங்கி சரிந்து அழுதாள்.

சுப்ரியாவிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பை அஷோக் கவனிக்கவே செய்தான்.

ஆனால் கோபம் எழுப்பியிருந்த சுவர்களை உடைத்து அந்த தொலைபேசி அழைப்பை ஏற்க அவன் மனம் ஒப்பவில்லை.

மனதில் ஏற்பட்ட காயம் சற்றும் குறையாமல் அப்படியே இருந்தது.

வலித்தது.

காட்சிகளும் வார்த்தைகளுமாக எல்லாம் ஒன்றாக சேர்ந்து தன் இதயத்தைக் கிழித்துப் போட்டதை மறக்க முடியாமல் தவித்தான்.

ஆனாலும் இவள் ஏன் எனக்கு போன் செய்ய வேண்டும்?

எல்லாம்தான் முடிந்து விட்டதே?

“பிரியமாட்டேன்” என்று சொன்ன சுப்ரியா ஒரேயடியாகப் பிரிந்துவிட்டாள்..

என் வாழ்க்கையை நாசப்படுத்திவிட்டு தொலைந்துவிட்டாள்.

இனி அவளுக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது.

எல்லாம் முறிந்து போனது போனதுதான்.

தொலைபேசி மறுமடி அழைத்தது.

சுப்ரியாதான்.

அவளே இவ்வளவு நடந்த பிறகு தைரியமாக எனக்கு போன் செய்யும்போது நான் மட்டும் ஏன் அவளிடம் பேச யோசிக்க வேண்டும்?

அப்படி என்னதான் பெரிசாப் பேசப் போகிறாள்?

கோபத்துடன் போனை எடுத்தான் அஷோக்.

“என்ன?”

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”

“இனிமே பேசறதுக்கு என்ன இருக்கு? ஒண்ணுமில்லை. எல்லாம் முடிஞ்சுப் போச்சு. முறிஞ்சிப் போச்சு.”

“அதை சரி செய்யதான் இப்ப நான் உங்ககிட்டப் பேசிகிட்டு இருக்கேன்.”

“உடைஞ்சதை ஒட்ட வைக்க முடியாது. போனை வை.”

“இதான் உங்க முடிவா?”

“ஆமாம்.”

“அப்ப நீங்க என்னைத் தப்பா பேசினதுக்கு கொஞ்சம் கூட வருத்தப்படலையா?”

“நான் ஏன் வருத்தப்படணும்? நீ பண்ண காரியத்துக்கு நீதான் வருத்தப்படணும். வெக்கப்படணும்.”

“சும்மா எதையாவது தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டு தப்பு தப்பா பேசாதீங்க அஷோக்.”

“நான் பேசாட்டி நடந்தது உண்மை இல்லேன்னு ஆயிடுமா? அதான் உங்க மாமாவே சொல்லிட்டாரே? எச்சில் இலைன்னு…”

“அவர் பேச்செல்லாம் ஒரு பேச்சா? அப்படி பாத்தா உங்கப்பா கூடத்தான் என்னென்னெவோ வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசினாரு.”

“இல்லாததையாப் பேசினாரு எங்கப்பா? இருக்கிறதைதானே பேசினாரு?”

“அப்ப? உங்கப்பா பேசினது சரி. எங்க மாமா பேசினதுதான் தப்பு. அப்படித்தானே?”

“இப்ப எதுக்கு இந்த தேவையில்லாதப் பேச்சு? அதான் சொல்லிட்டேனே.. உனக்கும் எனக்கும் எல்லாம் முடிஞ்சுப் போச்சின்னு. இட்ஸ் ஓவர்.”

“அப்ப என்னை விவாகரத்துப் பண்ணிடுங்க.”

“எதுக்கு? ஓ.. அப்பதானே நீ அந்த கேசவனை கல்யாணம் பண்ணிக்க முடியும்?”

“உங்களுக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு.”

“ஓகே. விவாகரத்து பண்ணிடுறேன்.”

“நீங்க என்ன என்னை விவாகரத்து பண்றது? நான் பண்றேன் உங்களை விவாகரத்து.”

இரு முனைகளிலும் தொலைபேசி அதீத கோபத்துடன் அணைக்கப்பட்டது.

ச்சே… சமாதானம் பேசப் போனால் இப்படி விவாகரத்து வரை வந்து நிற்கிறது…

அழுகையும் ஆத்திரமுமாக வந்தது சுப்ரியாவுக்கு.

“அந்த அஷோக்கையே நினைச்சிக்கிட்டு இருக்காத.. அவனை மறந்துடு..”

எப்படி அவனை மறக்க?

“மாமாகிட்டப் பேசினேன். தெரிஞ்ச வக்கீல் கிட்டப் பேசியிருக்காராம். நீயும் பேசிடு. சீக்கிரமே அந்த அஷோக்குக்கு டைவர்ஸ் பேப்பரை அனுப்பு.”

“என்னம்மா பேசறே நீ? விவாகரத்தா?”

“ஆமாண்டி. ஏன் திகைச்சுப் போறே? உன்னை நடத்தை கெட்டவன்னு சொல்றவனோட ஆயுசுக்கும் குப்பை கொட்டப் போறியா? சாத்தியமா அது? உன் நல்லதுக்குதான் சொல்றேன். தலையை முழுகிட்டு மேலே ஆக வேண்டியதைப் பாரு..”

கையெழுத்துப் போட்டு ஒரு நாள் விவாகரத்துப் பேப்பர்களை அஷோக்கிற்கு அனுப்பிவைத்தாள் சுப்ரியா.

அனுப்பிய பேப்பர்கள் போன வேகத்திலேயே திரும்ப வந்து சேர்ந்தன சுப்ரியாவிடம் – அஷோக்கின் கையெழுத்துடன்!

காதல் நெஞ்சம் கலங்கும் போதெல்லாம் உலகம் சற்று இருண்டு விடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *