தொடர்கதை: காதல் திருவிழா

அத்தியாயம் – 19

கல்பனா சன்னாசி

முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க :

அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3
அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6
அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9
அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12
அத்தியாயம்-13 அத்தியாயம்-14 அத்தியாயம்-15
அத்தியாயம்-16 அத்தியாயம்-17 அத்தியாயம்-18

வளாகத்தில் மாணவர்கள் பரிட்சை ஜுரத்துடன் திரிந்து கொண்டிருந்தனர்.

“ஹாய் சுப்ரியா… உன்னை எங்க எல்லாம் தேடுறது?” உற்சாகத்தின் இன்னொரு பெயர் நிஷா.

“என்னை என் அறையில் தேடாமல் வேறு எங்காவது போய் நீ தேடினால் நானா பொறுப்பு?”

“சரி… அதை விடு. கவுன்சிலிங் செஷன் எப்டிப் போச்சு? அதைச் சொல்லு..”

“முதல்ல நீ இதைச் சொல்லு. ஏண்டி சொன்னே?” – நிஷாவை முறைத்தாள் சுப்ரியா.

“எதைச் சொன்னேன்? யார்கிட்ட சொன்னேன்?”

“நான் கர்ப்பமா இருக்கிற விஷயத்தை ஏன் அஷோக் கிட்ட சொன்னே?”

“சொன்னா என்ன?”

“என் சம்பந்தப்பட்ட விஷயத்தை என் அனுமதி இல்லாம நீ எப்படி இன்னொருத்தர்கிட்ட சொல்லலாம்?”

“நல்ல காரியம் பண்ண யாரோட பர்மிஷனும் தேவையில்லை.”

“நீ பண்ண நல்ல காரியத்தால என்ன ஆச்சு தெரியுமா?”

“என்ன ஆச்சு?”

“அஷோக் விவாகரத்து கேஸை வாபஸ் வாங்கிட்டார்.”

“வாவ்.. இது ரொம்ப சந்தோஷமான செய்தியாச்சே?”

“எங்கூட ஒண்ணா சேந்து வாழ்ணும்னு கேஸ் போட்ருக்கார்…”

“சூப்பர்… இது அதைவிட ரொம்ப மகிழ்ச்சியான செய்தி…”

“மண்ணாங்கட்டி”

“ஏன்? என்னாச்சு? நீயும் விவாகரத்தை வாபஸ் வாங்கிட்டே இல்ல? சேந்து வாழ ஒத்துகிட்டேதானே?”

“இல்லை. முடியாதுன்னு சொல்லிட்டேன்.”

“லூஸாடி நீ?”

“எனக்கு விவாகரத்துதான் வேணும்னு அடிச்சி சொல்லிட்டேன்.”

“நிச்சயமா உனக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு.”

“போகட்டும்… நான் பைத்தியமாவே இருந்துட்டுப் போறேன். ஆனால் பிச்சைகாரியா ஆகமாட்டேன்.”

“பிச்சைகாரியா? என்னடி உளர்றே?”

“ஆமாம். நான் கர்ப்பம்னு தெரிஞ்சதும் குழந்தைக்காகன்னு சொல்லி என் மேல பரிதாபம் காட்டுறார் அஷோக். வாழ்க்கையை பிச்சை போடுறான். எனக்கு அது தேவையில்லை.”

“நீ நல்லா யோசிச்சுதான் பேசுறியா?”

“ஆமாம். அஷோக்கோட பரிதாபம்.. கருணை.. இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட தேவையில்லை.”

“பின்னே? வேற என்னதாண்டி வேணும் உனக்கு?”

“நம்பிக்கை”

நிஷா கொஞ்சம் புரியாமல் பார்க்க, தொடர்ந்தாள் சுப்ரியா.

“அவன்… அந்த அஷோக்… என் நடத்தையை சந்தேகப்படுறான்… அது தப்புன்னு அவன் மனசார உணரணும். என்கிட்ட மன்னிப்பு கேக்கலைன்னாலும் பரவாயில்லை. ஆனா தன்னோட தப்பை அஷோக் உணரணும்.”

“ஆம்பளைடி அஷோக். செஞ்ச தப்பை எந்த ஆம்பளையும் ஒத்துக்க மாட்டான்.”

“எம் மேல் இருந்த நம்பிக்கையை நொறுக்கி போட்டுருக்காண்டி அவன்.. அவன் என்னை சரியாப் புரிஞ்சிக்கணும். என் மேல் திரும்ப நம்பிக்கை வரணும் அந்த அஷோக்குக்கு.”

“இதெல்லாம் நடக்குமா?”

“இதெல்லாம் நடக்காம நாங்க சேந்து வாழறதைப் பத்திப் பேசிப் பிரயோஜனம் இல்லை.”

“நீ அனாவசியமா ரொம்ப குழப்பிக்கிறேன்னு தோணுது சுப்ரியா. அவனாவே வந்து விவாகரத்து வேணாம். சேர்ந்து வாழலாம்னு சொல்லும்போது.. உன் குழந்தைக்காகவாவது நீ ஒத்துக்கலாம்னுதான் எனக்குத் தோணுது.”

“அஷோக்… குழந்தைக்காகன்னு இல்லாம … எனக்கே எனக்காகன்னு… பழைய காதலோட திரும்பவும் எங்கிட்ட வரணும்னு ஆசைப்படறேன் நிஷா. அது தப்பா?”

விழிகள் விரிய ஏக்கத்துடன் கேட்கிறவளிடம் என்ன பதில் சொல்வது என நிஷாவுக்குப் புரியவில்லை.

விதி கூட கொஞ்சம் யோசித்தது.

*************

தாம் தூமெனக் குதித்தார் சுந்தரேசன்.

“உன் மனசுல என்னதாண்டா நினைச்சுகிட்டு இருக்கே? இப்படி தடால்னு விவாகரத்து வேணாம்னு சொல்லிட்டு வந்து நிக்கிறே?”

மகனைப் போட்டு உலுக்கி எடுத்தார்.

“அவளே உன்னை வேணாங்கிறா. நீ அவகிட்டப் போய் தொங்குறியே?” உசுப்பேற்றினார்.

அஷோக் அதிகம் பேசவில்லை.

“உங்களுக்குப் புரியாதுப்பா” என்றான் சிக்கனமாக.

“என்னடாப் புரியாது எனக்கு?”

“நீங்க லவ் பண்ணி இருக்கீங்களா அப்பா?”

சுந்தரேசன் குழப்பமாகப் பார்த்தார்.

“அந்த அன்பு ஆசை பாசம் நம்பிக்கை.. அதை அனுபவிக்கிறவங்களுக்குதாம்ப்பா புரியும். அந்த நம்பிக்கை அழியும் போது ஏற்படற வலி… வேதனை…”

“என்னடா பேசறே நீ?”

“ஆமாம்ப்பா… நான் சுப்ரியாவை ரொம்பவே காயப்படுத்திட்டேன். நான் அவ மேல வச்சிருந்த நம்பிக்கையை நொறுக்கிப் போட்டுட்டேன். அவ எம் மேல வச்சிருந்த நம்பிக்கையையும் இழந்துட்டேன். அவளுக்கு ஆதரவா அனுசரணையா இருக்க வேண்டிய சமயத்துல அவளை நான் உதறிட்டேன். நான் பண்ணது ரொம்ப பெரிய தப்புப்பா.”

“அவ மாமன் பேசுனது மறந்துடுச்சா உனக்கு? அதுக்கு அப்புறமும் உனக்கு அந்த சுப்ரியாவோட சேந்து வாழ ஆசையாவா இருக்கு?”

“அப்பா. பேசுறவங்க ஆயிரம் பேசுவாங்க. அதுவும் அவங்கவங்க சுய நலத்துக்காக என்ன பொய் வேணா சொல்வாங்க. அதுக்காக, நாம நம்புறவங்களை… நாமே சந்தேகப்படலாமா?”

சுந்தரேசனிடம் எதுவும் பேசாமல் அழுத்தமாக இருந்தார்.

அஷோக் தொடர்ந்தான்:

“ஆனா.. நான் சலனப்பட்டுட்டேன். என்னையும் சந்தேகம் லேசா சுட்டுடுச்சி. அதுக்காக சுப்ரியாகிட்ட மன்னிப்பு கேட்டேயாகணும். ஆனா அவதான் எனக்கு வாய்ப்பே கொடுக்க மாட்டேங்கிறா…”

“அப்ப பொண்ணெல்லாம் பாத்தியேடா? எதுக்கு?”

“அது ஒரு கெட்ட முடிவுப்பா. சுப்ரியா என்னை விட்டுப் போயிட்டாளே அப்டீங்கிற கோபத்துல நான் செஞ்ச கேவலாமான காரியம்.”

“எப்ப சுப்ரியா கர்ப்பம்னு தெரிஞ்சுதோ அப்பவே என் கோபம் எல்லாம் அடியோடு அழிஞ்சிடுச்சி.”

“சுப்ரியா கர்ப்பமா இருக்காளா?” சுந்தரேசன் குரலில் லேசாக மென்மை எட்டிப் பார்த்ததோ?

“ஆமாம்ப்பா… நான் அப்பாவாகப் போறேன்… நீங்க தாத்தாவாகப் போறீங்க…”

“அப்ப … குழந்தைக்காகத்தான் விவாகரத்து வேணாம்னு சொல்லிட்டியா?”

“இல்லேப்பா. அதுவும் ஒரு காரணம். ஆனா அது மட்டுமே காரணம் இல்லை. அதைவிட முக்கியமன காரணம் ஒண்ணு இருக்கு..”

“என்னடா அது?”
“ஐ லவ் சுப்ரியா.. நான் இன்னும் அவளை காதலிக்கிறேன். உயிருக்கு உயிரா காதலிக்கிறேன். பேசின வார்த்தைகளுக்கும் செஞ்ச அவமரியாதைக்கும் அவகிட்ட மன்னிப்பு கேட்டுட்டு அவ கூட ஆயுசுக்கும் சேந்து வாழ ஆசைப்படறேன்..”

“இதை சுப்ரியாகிட்ட சொல்ல வேண்டியதுதானே?”

“அவ பிடிவாதமா இருக்காப்பா. எனக்கு சந்தர்ப்பமே கொடுக்க மாட்டேங்கிறா. கவலைகளையும் சோகங்களையும்தான் அவ எனக்கு தந்துகிட்டே இருக்கா. என் காதலை அவளுக்குப் புரியவைக்க வழியே தெரியாம தவிச்சுகிட்டு இருக்கேன் நான்..”

கண்ணோரம் கசிய கலங்கி நிற்கும் மகனைப் பார்த்து துடியாய் துடித்தது சுந்தரேசனின் மனசு.

0 Comments

  1. அருமை, சிறப்பு. இது 19வது அத்தியாயமாச்சே…18னு இருக்கு.

    1. Changed.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *