ஆசிரியர் : ஜியாங்க் ரோங் , தமிழில் : ஜி.மோகன்
எழுதியவர் : எழுத்தாளர் பால்கரசு சசிகுமார், அபுதாபி
சீன மொழியில் எழுதப்பட்டு, பிரபலமான ‘wolf totem’ என்ற நாவலை திரு. சி.மோகன் அவர்கள் ‘ஓநாய் குலசின்னம்’ என்னும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.
இந்நாவல் மங்கோலிய மேய்ச்சல் நில மக்களின் பின்னணிக் கதைகள் மற்றும் சீன விளைச்சல் நில மக்களால் சுற்றுப்புற சூழல் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றியும் மிக விரிவாகப் பேசுகிறது.
மங்கோலிய மக்களின் சுற்றுப்புறச் சூழல் பாதிக்காதிருக்க ஓநாய்கள் எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கின்றன என்பதையும், ஓநாய்கள் மீது விளைச்சல் நில மக்கள் திட்டமிட்டு நடத்திய படுகொலைகளால் மேய்ச்சல் நிலங்களும், சுற்றுப்புறச் சூழலும் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதையும் விரிவாக விவரித்திருப்பதுதான் இந்நாவலின் சிறப்பு.
732 பக்கங்களைக் கொண்ட இந்நாவல், நான் பார்க்காத நிலப் பரப்பையும், அறிந்திராத மக்களின் வாழ்வியலையும் வாசித்தபோது என்னை ஈர்த்துக் கொண்டது. இந்நாவலை வாசிக்கும் போது என் மூதாதையர்களின் வாழ்க்கை வரலாற்றை மறுவாசிப்பு செய்வது போலிருந்தது.
ஓநாய்கள் மீது வெறுப்பை உண்டாக்கும் கதைகள்தான் தலைமுறை தலைமுறையாக நமக்குக் கற்றுத் தரப்பட்டிருக்கிறது. சில தந்திரக் கதைகளிலும், வெறுப்புக் கதைகளிலும் கூட ஓநாய்களையே உதாரணமாக எடுத்துக் காட்டியிருப்பதையே வாசித்திருக்கிறோம். முதல்முறையாக இந்நாவலில் மங்கோலியர்கள் ஓநாய்களைத் தெய்வமாகவும், மூதாதையர்களாகவும் பார்க்கிறார்கள் என்றும், அவர்கள் வளர்க்கும் குதிரைகள், ஆடு, மாடுகள் போன்ற வீட்டு விலங்குகளை ஓநாய்கள் வேட்டையாடினாலும் அவற்றின் மீது அவர்களுக்கு எப்போதும் வெறுப்பு ஏற்பட்டதேயில்லை என்றும் சொல்லிச் செல்வதை வாசிக்க முடிந்தது.
ஓநாய்களை நேசிக்கும் மங்கோலியர்கள் தங்களில் யாரேனும் இறந்து போனால் அவர்களின் உடல்களை ஓநாய்கள் தின்ன அனுமதிக்கிறார்கள். இதற்காக ஓநாய்கள் நடமாடும் பகுதிகளில் உடலைப் போட்டுவிடுகிறார்கள், அப்பகுதியை வான் புதைபகுதி என்றும் அழைக்கிறார்கள். இறந்த மனித உடல்களை ஓநாய்கள் தின்பதால் அவ்வுயிர் சொர்க்கத்தைச் சென்றடைவதாக நம்புகிறார்கள்.
மங்கோலியப் பழங்குடி மக்கள் பன்னெடுங்காலமாக திறமையான குதிரை வீரர்களாகவும், போர் வீரர்களாகவும் விளங்கியிருக்கிறார்கள். செங்கிஸ்கான் மங்கோலிய, துருக்கிய இனக் குழுக்களை ஒன்றிணைத்து மங்கோலியப் பேரரசை அமைத்து உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ராணுவத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்ததுடன் குறைந்த ராணுவ வீரர்களைக் கொண்டு பல வெற்றிகளைத் தனதாக்கிக் கொண்டுள்ளார். இதற்கெல்லாம் முக்கியக் காரணம் மங்கோலியக் குதிரைகளும், மங்கோலியப் பழங்குடியின மக்களின் போர்த் தந்திரங்களும் தான் என்பது இந்நாவல் மிகத் தெளிவாக விளக்குகிறது.
செங்கிஸ்கான் என்றால் அகிலப் பேரரசர் என்று பொருள், அகிலப் பேரரசராகத் திகழ மங்கோலிய பழங்குடி மக்கள் ஓநாய்களிடமிருந்து கற்ற தந்திர யுக்திகள் தான் கரணமாகத் திகழ்ந்திருக்கிறது.
மாவோவின் கலாச்சாரப் புரட்சியின் போது கல்வி புகட்டலுக்காக மாணவர்களைக் கிராமப் புறங்களுக்கு அனுப்புவது வழக்கமான நடைமுறையாக இருந்திருக்கிறது. ஹேன் இனத்தைச் சார்ந்த நான்கு சீன மாணவர்கள் மங்கோலிய மக்களின் மேய்ச்சல் நிலப்பரப்பிற்கு அனுப்பப்படுகிறார்கள்.
அந்த பரந்து விரிந்த நிலப்பரப்பின் உயிர்ப்பை உணர்ந்தபடி வாழும் மங்கோலிய நாடோடிக் குழுக்களொன்றின் தலைவர் பில்ஜியும், அவரது குழுவும் கலாச்சாரப் புரட்சியின் போது கல்வி கற்பதற்காக மங்கோலிய நாடோடி மக்கள் வாழும் இடத்திற்கு வந்திருக்கிறார்கள். அப்போது வேட்டை நிலம் பற்றி எதுவுமே அறியாத சீன மாணவர்களுடன் தங்கள் வாழ்வைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
ஜென்சன், பெரியவர் பில்ஜியைத் தன் கேள்விகள் மூலமாக நெருக்கமாகிறான். மங்கோலியனாக எப்படி இருப்பது? என்னும் கேள்வி ஒன்று அவனுக்குள் எழுகிறது. ஒரு மங்கோலியனாக இருக்க வேண்டுமானால் அவன் முதலில் ஒரு ஓநாயாக இருக்கவேண்டும் என்பதை பில்ஜியிடமிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொள்கிறான். பில்ஜியும் ஒரு ஓநாய்தான். ஆண்டாண்டு காலமாக ஓநாய்களிடம் இருந்து அவர் மூதாதையர்களும், அவரும் பெற்ற அறிவே அவரை ஒரு ஓநாயாகவே மாற்றியுள்ளது.
ஓநாய்கள் தன் குழுவை எப்படிக் கட்டமைக்கும், எப்படி வேட்டையாடும், வேட்டையாடிய உணவை எப்படிப் பங்கிட்டுக் கொள்ளும், ஒரு தாக்குதலை எப்படி நடத்தும், ஒரு குழுவின் தலைமை தான் கட்டமைக்கும் ஒரு குழுவைக் எப்படிக் கட்டுக் கோப்போடு வைத்திருக்கும், ஆபத்து நெருங்கிவிட்டால் அது எப்படி தன்னை மாய்த்துக் கொள்ளும் என்பதை பில்ஜி சீன மாணவர்களுக்கு நேரடியாகவும், சில இடங்களில் புனைவுடனும் சொல்கிறார். அவரின் பார்வையில் இந்நாவல் முழுவதிலும் மங்கோலிய நிலப்பரப்பு நம் கண் முன்னே விரிகிறது, வியப்பைத் தருகிறது.
சீன விளைச்சல் நில மக்களால் இந்தச் சமநிலையைப் புரிந்து கொள்ள முடியவில்லை, அவர்கள் ஓநாய்களை எதிரியாகப் பார்க்கத் தொடங்குகிறார்கள். இந்த ஓநாயை ஒழித்துக் கட்டிவிட்டால் மேய்ச்சல் நிலம் முழுவதும் விவசாயத்தையும், கால்நடைகளையும் பெருமளவு வளர்த்து பொருளீட்டலாம் எனச் சிந்திக்கத் தொடங்குகிறார்கள். அவற்றின் தொடக்கமாக ஓநாய்களிடமிருந்து உணவை திருட ஆரம்பித்து, அதன்பின் அதன் குட்டிகளைத் தோலுக்காகத் திருடவும் செய்கிறார்கள். அதற்காக அவற்றை விஷம் வைத்தும், வெடி வைத்தும் கொன்று அச்சமவெளியின் சமநிலையைச் சிதைக்க ஆரம்பிக்கிறார்கள்.
மனிதர்களின் இந்த சதிச் செயளுக்கு, மனிதர்களை மிஞ்சிய அறிவுக் கூர்மையுடன் ஓநாய்கள் பதிலடி கொடுக்கின்றன. அவர்களின் குதிரைகள், மந்தைகளை நிர்மூலமாக்கப்படுகின்றன. இது ஒரு எதிர்வினைச் செயல் என்பதைப் புரிந்துகொள்ளச் சீனர்கள் மறுக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பில்ஜி ஓநாய்களை நேசிக்கத்தொடங்குகிறார். மாணவர்களில் ஒருவனான ஜென்சன் ஓநாய்களின் குணநலன்களைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அவற்றின் சாகசங்களை மட்டுமே கற்றுக் கொள்ள நினைக்கிறான்.
நாய்களையும், ஓநாய்களையும் சமமாகக் கருதும் ஜென்சன், ஓநாய் குட்டியொன்றைத் திருடி நாய்களுடன் வளர்த்து ஓநாயையும், வேட்டை நாயையும், கலவி செய்ய வைத்துவிட்டால், ஓநாய்களுடன் சண்டையிடக்கூடிய வலுவான புதிய நாயொன்றை உருவாக்க முடியுமெனக் கருதுகிறான். அது இயற்கையின் வாழ்க்கைச் சுழற்சிக்குள் இயங்க வேண்டிய ஒன்றை மனிதன் தன் கட்டுக்குள் கொண்டுவர நினைக்கும் மிகச்சிறிய செயலாக இருக்கிறது.
ஜென்சன் ஓநாய் குட்டியொன்றைத் திருடி வேட்டை நாய்களுடன் வளர்க்கிறார். தனக்குத் தேவையான உணவைத் தானே வேட்டையாடிக் கொள்ளும் ஓநாயின் குட்டிக்கு நாய் பால் கொடுப்பதும், கட்டிவைத்து மூன்று வேலையும் தட்டில் வைத்து உணவு கொடுப்பதால் வேட்டையாடித்தான் உணவைப் பெற முடியும் என்ற இயல்பை மறந்து அக்குட்டி சந்தோசமாக வளர்வதையும் வாசிக்கையில் ஒரு இனம் எது சுதந்திரம், எது அடிமையென தெரியாமல் அடிமைப்பட்டுக் கிடக்கிறதை உணர்த்துகிறது.
அரசும் அதிகார வர்க்கமும் ஒரு இனத்தை சுயமாக சிந்திக்கவிடாமல் இலவசம், மது போதையில் அடிமையாக்கி வைத்திருப்பதையே நாய்களுடன் வளரும் ஓநாய் மனக்கண்ணுக்குள் நமக்குக் காட்டுகிறது.
அந்தக் குட்டியால் ஜென்சன் எவ்வாறு சிக்கல்களைச் சந்திக்கிறான் என்பதை வாசிக்கையில் இனக் கலப்பு, மொழிக்கலப்பின் ஆபத்தை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு இனம் தாம் தன் சுயத்தை இழந்து கொண்டிருக்கிறோம் என்பது கூடத் தெரியாமல் சந்தோசமாக வாழ்வது இன்றைய நம் நிலையை சுட்டிக்காட்டுவதாய் எனக்குப்பட்டது.
ஓநாயை வீட்டு விலங்குகளைப் போல் வளர்க்க நினைக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிகிறது. கடைசியில் அந்தக ஓநாய் குட்டியை தன்னிடமும் வைத்துக் கொள்ள முடியாமல், அதன் இனத்திடமும் சேர்க்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் கொன்று விடுகிறான். இயற்கையை வெல்ல முடியாது என்று புரிந்து கொள்ள ஜென்சென்னிற்கு ஒரு ஓநாய் வளர்ப்பு போதுமானதாக இருக்கிறது.
இயற்கையைப் புரிந்துகொண்டு அதைத் தன் போக்கில் மாற்றி அமைக்க முயலும் ஜென்சென்னின் மனப்போராட்டம் நாவலில் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. கம்யூனிசம் தட்டையான ஒற்றைப் பார்வையில் செயலாக்கப்பட்டதை நாவலில் பல இடங்களில் ஜியாங் விமர்சிக்கிறார்.
இயற்கைக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட நகற்ற முடியாது என்பதையும். இயற்கைக்கு எதிராக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் பேரழிவைத் தரும் என்பதையும் இந்நாவல் வாசிக்கும் வாசகனுக்கு உணர்த்துகிறது.
சீன விளைச்சல் நில மக்களின் குதிரைகளைவிட மங்கோலிய வேட்டை நில மக்களின் குதிரைகள் மிகப் பலம் பொருந்தியதாக இருக்கக் காரணம், மங்கோலியப் பெண் குதிரைகள், தன்னுடன் இணைய நினைக்கும் ஆண் குதிரைகளைச் சண்டையிட வைத்து அச்சண்டையில் வெற்றி பெறும் வலுவான குதிரையிடம் மட்டுமே தன்னுடன் இணைத்துக் கொள்கின்றன. வலுவான ஒரு ஆண் குதிரை தன் பக்கத்திலிருந்தால் குட்டிகளை ஓநாய்களிடமிருந்து எளிதில் காப்பாற்றலாம் என்று நினைக்கிறது. இதே நடைமுறையை மனிதனும் பின்பற்றுவதை உணரமுடிகிறது. ராஜா தன் மகளைச் சிறந்த போர் வீரனுக்கு மணமுடித்துக் கொடுப்பது கூட மிருகங்களிடமிருந்து கற்றுக்கொண்டதாகவே அறியமுடிகிறது.
ஓநாய்கள் தாய், தந்தை, என ஒரு வலுவான குடும்பத்தோடு வாழ்வதையும், குடும்பத் தலைமைக்கு கட்டுப்படாத ஓநாய்களை அதன் குழுவிலிருந்து விலக்கி வைப்பதையும் வாசிக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.
மொத்தத்தில் வாசித்து முடித்தபின் இந்நாவல் பல கோணங்களில் நம்மைச் சிந்திக்க வைக்கிறது.
மங்கோலிய நாடோடிகளுக்கும், சீன விவசாய மக்களுக்குமான முரண்பாட்டால் இயற்கை எவ்வாறு சீர்குலைந்தது என்பதை மிக விரிவாகப் பேசுகிறது இந்நாவல்.
நாவல் முழுவதிலும் ஓநாய்களின் புகழ்பாடுவது வாசிப்பதற்கு அயர்ச்சியாக இருந்தாலும், கதையின் போக்கு எங்கும் தொய்வில்லாமல் விறுவிறுப்பாக நகர்ந்து செல்வதால் நம்மை அயற்சியைத் தாண்டி ஈர்த்துக் கொள்கிறது.
ஒரு திரிலான திரைப்படமொன்றைப் பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது இந்த ‘ஓநாய் குலச்சின்னம்’.
இந்நாவல் எல்லோரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நாவல்.
———————————
ஓநாய் குலச்சின்னம்
ஜியாங் ரோங்
தமிழில் : சி.மோகம்
விலை ரூ.500
புத்தகம் வாங்க : https://galaxybs.com/shop/essay-and-articles/transaltion/wolf-totem/