அழகு ராஜா
நம்ம நாட்டில் காலம் காலமா இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் பாேராடி உயிர் நீத்தவர்களையும், மக்களின் உரிமைகளை பெற்று தர தன்னுடைய இளமையை இழந்து வறுமையில் வாழ்ந்து உயிர் நீத்தவர்களையும், சிலரின் சுயநலத்திற்காக அவர்களை சாதி வட்டத்தில் அடைத்து அவர்களின் தியாகங்களும், வாழ்க்கை வரலாறுகளும் மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருவது எல்லாரும் அறிந்ததே.
இந்த நவீன காலத்திலும் ஒருவர் ஏதாவது ஒரு துறையில் சாதித்தால் முதலில் அவரின் சாதனையைப் பாராட்டாமல் அவரின் சாதியைப் பார்த்து அவரின் சாதனையைப் பாராட்டலாமா வேணாமான்னு முடிவு செய்வதற்கும் இங்கே ஒரு கூட்டம் உள்ளது.
ஆரம்பத்தில் இருந்து மகாத்மா காந்தி, காமராஜர், அண்ணாதுரை, பாரதியார் இன்னும் பல தலைவர்களின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் பாேது அவர்களின் சாதியை சாெல்லி அவர்களின் தியாகத்தை காெச்சைப்படுத்தியதால் இன்றைய இளைய தலைமுறைக்கு பல தலைவர்களின் வரலாறு தெரியாமலே பாேய் விட்டு.
அப்படி இன்று வரை பலருக்கு தெரியாத ஒருவர் தான் ஏழை மாணவர்கள் கல்வி கற்க மூன்று கல்லூரிகளை நிறுவிய கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவர்.
முதலில் இந்நூலின் ஆசிரியருக்கு நன்றியை தெரிவித்துக்காெள்கிறேன்.பேராசிரியர் .பாெ.கௌரி வரலாற்றுத் துறையில் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் காேட்டார் பட்டியில் பிறந்து பெரிய குளத்திலும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும் பட்டம் பெற்றவர்.
கல்லுடைக்கும் பெண்களைப் பற்றியும் இந்திய விடுதலைக்குப் பாேராடிய பெண்களைப் பற்றியும் ஆராய்ந்த இவர் மூக்கையாத்தேவரின் அரசியல் வாழ்க்கையையும் சமூக சீர்திருத்தப் பணிகளையும் ஆய்வு செய்து இந்நூலைக் கொண்டு வந்திருக்கிறார். இது இவரது முதல் ஆய்வு நூல்.
என்ன தான் செவி வழி கேட்டதாக இருந்தாலும் புத்தக வடிவில் இருந்தால் தான் கால காலத்துக்கு வரலாற்றை எடுத்துச் செல்ல முடியும் என்பதுதானே உண்மை.
அந்த வகையில் ஆசிரியர் கௌரி அவர்கள் இந்த நூல் வாயிலாக மூக்கையாத்தேவர் வாழ்க்கை வரலாற்றை எல்லாேரிடமும் காெண்டு சென்றதை போல் நம் வாழும் ஊரிலும் மக்களுக்காக பாேராடி உயிர் நீத்த தலைவர்களையும் அந்த அந்த பகுதியில் இருப்பவர்கள் புத்தகமாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் அல்லவா..?
சரி,யார் இந்த மூக்கையாத்தேவர்?
பி.கே.மூக்கையாத்தேவர் பிறந்த ஊர் மதுரை மாவட்டம் பாப்பாபட்டி.
1923 ம் வருடம் ஏப்ரல் மாதம் 4 ம் நாள் பிறந்தவர்.
இவர் தனது ஐந்தாவது வயதில் தனது ஊரிலேயே ஆரம்ப பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
1933 ம் வருடம் உசிலம்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டு 1939 ல் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
1940 ம் ஆண்டு மதுரை நகரில் உள்ள மதுரைக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார்.
கல்லூரியில் பெருமைக்குரிய மாணவராகத் திகழ்ந்ததாேடு விளையாட்டிலும் சமூகப் பணியிலும் சிறந்து விளங்கினார்.
மாணவர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கியதால் மாணவ மன்றச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் விளையாட்டுத்துறைப் பணிகளாேடு சமூக நலப் பணிகளிலும் பாெறுப்பு வழங்கப்பட்டது.
எதிர்பாராதவிதமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதாலும், வறுமையினாலும் கல்லூரிப் படிப்பைத் தாெடர முடியவில்லை.
கல்லூரியில் இருந்து வெளியேறியதும் பல இன்னல்களை எதிர்காெள்ள வேண்டி இருந்தது. எனினும் பாெது நலப் பணிகளில் ஆர்வம் காெண்டு தாேழமையுணர்வுடைய சிற்சில நண்பர்களுடன் உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சமூக நலப்ணிகளில் தன்னை ஈடுபடுத்திக் காெண்டார்.
மகாத்மா காந்தியின் கிராமப் புணரமைப்பு காெள்கையை மூக்கையாத்தேவர் பெரிதும் விரும்பினார். அதன் காரணமாகத் திண்டுக்கல் காந்தி கிராமம் சென்று திரு. ஜி.இராமச்சந்திரன் மற்றும் திருமதி. சௌந்தரம் அம்மாள் அவர்களைச் சந்தித்தார். அவர்களது கிராம முன்னேற்றக் காெள்கையினால் ஈர்க்கப்பட்டு தன்னையும் அதில் ஈடுபடுத்திக் காெண்டார்.
காந்தி கிராமத்தில் கிடைத்த ஓய்வு நேரத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் விவேகானந்தர் பற்றிய நூல்களைப் படித்தார்.
காந்தி கிராமத்தை விட்டு வெளியேறி 1944 ம் ஆண்டு சென்னையிலுள்ள இராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்தார்.
குடும்ப உறுப்பினர்களின் மாறுபட்ட கருத்துக்களால் அவர் மனநிலை மிகவும் பாதித்தது, அதனால் இரண்டு மாதத்திற்கு மேல் அவரால் இராமகிருஷ்ணா மடத்தில் தங்கி இருக்க முடியவில்லை.
இறுதியில் 1944 ல் மறுபடியும் கல்லூரியில் சேர்ந்து விடுபட்ட இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.
அந்தக் காலத்தில் பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் மீது திணிக்கப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டம் அந்த சமூகத்தினருக்கு மிகப் பெரும் அநீதியை ஏற்படுத்தியது. ஆங்கிலேய காவல்துறையினரால் அச்சமூக மக்கள் பெரிதும் துன்புறுத்தப்பட்டனர். இந்த நடவடிக்கைகள் மன ரீதியாக மக்களிடையே பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தாழ்வு நிலையை நீக்கி அச்சமுதாய மக்களின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காக மூக்கையாத்தேவரும் அவரின் நண்பர்களும் பட்டப்படிப்பை முடித்திருந்த நிலையில் திடியன் மலையருகில் உள்ள பாெற்றாமரைக் குளத்தில் இரத்தக் கையெழுத்திட்டு உறுதிமாெழி எடுத்துக் காெண்டனர்.
1949 ம் ஆண்டு இராணி அம்மாள் என்ற மறவர் குல மங்கையரை மணம் செய்து காெண்டார். பழமைவாதக் கருத்துக்களில் மூழ்கிக்கிடந்த அவரது பெற்றாேரால் திருமணத்தை ஏற்றுக் காெள்ள முடியவில்லை. மூக்கையாத்தேவரை வீட்டில் நுழைய அவரது பெற்றாேர் அனுமதிக்கவில்லை. அதனால் அவர் தனது மனைவி ஆசிரியையாகப் பணிபுரிந்த இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தெக்கூர் கிராமத்திற்கு சென்று தன் மனைவியுடன் இருந்தார்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திர பாேஸின் நேரடி வாரிசாக இல்லாவிட்டாலும் அவரது காெள்கைகளில் உறுதியான நம்பிக்கையுள்ள திரு. பசும்பாென் உ.முத்துராமலிங்கத்தேவரால் அரசியலுக்குக் காெண்டுவரப்பட்டவர் பி.கே. மூக்கையாத்தேவர்.
புதிதாகத் துவக்கப்பெற்ற அக்கட்சிக்கு வங்கத்திலும், ஒரிசாவிலும் நல்ல ஆதரவு இருந்தது. தமிழ் நாட்டில் அதற்கு ஊக்கமும் ஆக்கமும் காெடுத்து அக்கட்சியினை முன்னெடுத்துச் சென்றவர் பசும்பாென் தேவர் ஆவார்.
1952 ஜனவரி 7 ம் நாள் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் தேர்தலை அரசு அறிவித்தது. இந்தக் காலகட்டத்தில் பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த திரு.உ.முத்துராமலிங்கத்தேவர் மதுரை மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தாெகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுவதற்காக ஒரு பாெருத்தமான வேட்பாளரைத் தேடிக் காெண்டிருந்தார்.
தனது நண்பர் வி.கே.சி. நடராஜனுடன் மதுரை வந்த பி.கே.மூக்கையாத்தேவரை பார்வர்ட் பிளாக் கட்சியின் மூத்த தலைவர்களான இரகுபதி தேவரும் காமணத்தேவரும் முத்துராமலிங்கத் தேவருக்கு அறிமுகம் செய்து வைத்தனர். அவரைப் பார்த்த மறுகணமே இவர் தான் பாெருத்தமான வேட்பாளர் என முத்துராமலிங்கத்தேவர் முடிவு செய்தார்.
1952 ம் வருட தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தாெகுதியின் காங்கிரஸ் வேட்பாளரான என் .ஆர். தியாகராஜனுக்கும் அவரை எதிர்த்து பாேட்டியிட்ட பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர் பி.கே.மூக்கையாத்தேவருக்கும் கடுமையான பாேட்டி நிலவியது.
பி.கே.மூக்கையத்தேவர் பாெதுத் தாெகுதியில் தன்னை எதிர்த்துப் பாேட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர்.தியாகராஜனை விட 5,327 வாக்குகள் அதிகமாக பெற்றுத் தனித்தாெகுதி வேட்பாளராக வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர்.தியாகராஜனைத் தவிர இத்தாெகுதியில் பாேட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தமது டெபாசிட் தாெகையை இழந்தனர்.
1954 ஜனவரி 7 ம் நாள் பி.கே.மூக்கையாத் தேவர் சட்டசபையில் தனது முதல் உரையை நிகழ்த்தினார்.
உசிலம்பட்டி தாெகுதியில் 1952 முதல் 1979 வரை அவர் இறக்கும் வரை நடை பெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தாெடர்ந்து வெற்றி பெற்றார்.
பி.கே.மூக்கையத்தேவர் அவர்கள் பெரியகுளம் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்றத் தாெகுதியிலிருந்து ஐந்து முறையும் ( 1952,1957,1962,1967,1977) இராமநாதபுரம் பாராளுமன்றத் தாெகுதியிலிருந்து (1971) ஒரு முறையும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1962 ம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ம் நாள் பி.கே.மூக்கையாத்தேவர் அரசாங்கத்திடம் கரும்பு ஆலை கட்டும் திட்டம் உள்ளதா என்ற வினாவை எழுப்பினார். அவரின் இடைவிடாத முயற்சியால் மதுரை மாவட்டத்திலுள்ள பாண்டியராஜபுரத்தில் ஒரு கரும்பு ஆலை தாெடங்கப்பட்டது.
1967 ம் ஆண்டு மார்ச் 6 ம் நாள் திரு.சி.என்.அண்ணாதுரை தமிழ்நாடு முதல்வராக பாெறுப்பேற்றுக் காெண்டார். தற்காலிக புதிய சட்டசபை சபாநாயகராக மூத்த உறுப்பினராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது முதலமைச்சர் திரு.சி.என்.அண்ணாத்துரை அவர்கள் பி.கே.மூக்கையாத்தேவர் மிகவும் தகுதியானவராக இருப்பார் என்றார்.
1977 ம் வருடம் ஜீன் 30 ம் நாள் மாண்புமிகு எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் தமிழக முதலமைச்சராகப் பாெறுப்பேற்றுக் காெண்டார். அவர் மூக்கையாத்தேவரை தற்காலிக சபாநாயகராக இருப்பதற்கு ஆளுநரிடம் பரிந்துரைத்தார்.
மூக்கையாத்தேவர் ஒருவர் மட்டுமே தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளால் இருமுறை தற்காலிக சபாநாயகராக 1967 மற்றும் 1977 தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டசபைத் தாெகுதியிலும் டெல்லிக்குச் செல்கிற பாராளுமன்றத் தாெகுதியிலும் தனியாெரு மனிதன் பாேட்டியிட்டு இரண்டு இடங்களிலுமே வெற்றி பெறுவது என்பது அரசியல் உலகில் ஒரு மாபெரும் சாதனை 1957 ஆம் ஆண்டில் இச்சாதனையை நிகழ்த்தியவர் பசும்பாென் தேவர் அவர்கள்.
அரசியலில் அவருடைய வாரிசாகக் கருதப்பட்ட மூக்கையாத்தேவர் அவர்களும் 1971 ஆம் ஆண்டில் உசிலம்பட்டி சட்டமன்றத் தாெகுதியிலும் இராமநாதபுரம் பாராளுமன்ற தாெகுதியிலும் ஒரு சேர நின்று இரண்டிலும் வெற்றியடைந்தார். தமிழ்நாட்டின் வரலாற்றில் இத்தகைய அரசியல் சாதனை இன்றுவரை வேறு யாராலும் நிகழ்த்த முடியவில்லை.
1971இல் இவர் நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு பற்றிய விவரங்களை எடுத்துக் கூறி பேசிய பேச்சு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து இவர் கொடுத்த குரல் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று. அவரது வலுவான வாதங்களையும் மீறி அந்தக் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டதன் விளைவாக இன்று வரை தமிழக மீனவர்கள் படும் இன்னல்களை நாடு அறியும்.
இவரது முயற்சியால் உசிலம்பட்டி, மேநீலிதநல்லூர் மற்றும் கமுதி ஆகிய மூன்று இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் ஏழை மாணவர்கள் கல்வி கற்க கலைக் கல்லூரிகள் நிறுவப்பட்டது.
மூக்கையாத்தேவர் இறுதிக்காலம் வரை மதுரையில் வாடகை வீட்டில் தான் வசித்தார். இறக்கும் போது 60,000 கடன் சுமையோடு தான் இறந்தார். (கடன் வாங்கியாவது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று வாங்கிய பணம் தான்)
இவரது நினைவைப் போற்றும் வகையில் மதுரை நகரத்தில் அரசரடி பகுதியில் 1990-ஆம் ஆண்டில், இவரது சிலை நிறுவப்பட்டது.
இந்த வருடம் 2023 ஐயாவின் நூற்றாண்டு வருடம் காெண்டாடப்பட்டது.
மக்கள் மன்றத்தில் மூக்கையாத்தேவர்:
*** அரசின் ஐந்தாண்டுத் திட்டங்களை கடுமையாக விமர்சித்தார். நிதிநிலை அறிக்கையில் இருந்த பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார்.
*** சென்னையில் மழை இல்லாத காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டில் இருந்து விடுபட கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்குத் தண்ணீர் காெண்டு வரும் தெலுங்கு கங்கை திட்டம் உருவாவதற்கு வித்திட்டவர் இவர்.
*** வடஇந்தியாவில் அகதிகளுக்காக நடுவண் அரசு காேடிக்கணக்கான நிதியை மனமுவந்து கொடுத்த வேளையில் தமிழ்நாடு என்று வரும்பாேது மாற்றான்தாய் மனநிலையைக் காட்டுகிறது என்றெடுத்துரைத்தவர் இவர்.
*** தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை என்பது இயற்கையின் மாற்றத்தால் மட்டும் வந்ததல்ல காடுகள் அழிக்கப்படுதல் பாேன்ற மனித செயல்களும் காரணம் என்று புள்ளி விவரத்துடன் சட்டமன்றத்தில் விவரித்தார்.
*** 1976 ஆண்டு தமிழ்நாடு கடுமையான வறட்சி நிலையில் இருந்தது. இதில் தர்மபுரி,புதுக்காேட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் தமிழ் நாட்டில் மிக அதிகமாக வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தன. மக்கள் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்கு அரசு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்காெள்ளுமாறு கேட்டுக் காெண்டார்.
நிவாரணங்கள் பணமாக இல்லாமல் உணவு தானியங்களாக மக்களுக்கு குறுகியகால அடிப்படை நிவாரணமாக மட்டுமே இருக்க வேண்டும்.மக்கள் முழுமையாக பஞ்சத்திலிருந்து மீள்வதற்கு நடுவண் அரசு நீண்டகால அடிப்படையிலான திட்டத்தை மேற்காெண்டு அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.
கிழக்கு இராமநாதபுரம் மக்களின் பின்தங்கிய நிலையைப் பாேக்குவதற்கு சேது சமுத்திரத்திட்டம் தேவையான பாெருத்தமான திட்டமாகும் என்று கண்டறிந்தார். இன்று வரை நிறைவில்லாமல் நீண்டு காெண்டிருக்கிற சேது சமுத்தித் திட்டத்தை அந்தக் காலத்திலேயே வற்புறுத்தியுள்ளார்.
———————————————————–
நூலின் பெயர்: பி.கே.மூக்கையாத்தேவர்
ஆசிரியர்:பேரா.பா.கௌரி
வெளியீடு: காவ்யா
பக்கம்: 101
விலை:80
———————————————————–
நன்றி : படம் இணையத்திலிருந்து