அழகுராஜா
சில மாதங்ளுக்கு முன் மெரினா இணைய வழி புத்தக விற்பனையகத்தின் இணையதளத்தில் சில புத்தகங்களைத் தேடிக் கொண்டு இருக்கிறப்ப கண்ணுல பட்டது இந்த புத்தகம்.
என்ன தலைப்பே கொஞ்சம் சர்ச்சைக்குரியதாக… வித்தியாசமானதாக இருக்கே என்ற யோசனையின் பின் சரி வாங்கலாம்ன்னு முடிவு பண்ணி நிர்வாகத்திடம் கேட்டா இப்போதைக்கு ஸ்டாக் இல்லை சார் வந்ததற்குப் பின்னர் தகவல் சொல்றோம்ன்னு சொன்னாங்க.
சரி வந்ததும் வாங்கிக்கலாம்ன்னு இருந்தேன். மறுமுறை சில புத்தகங்கள் ஆர்டர் பண்ணப்ப சார் நீங்க கேட்ட புத்தகம் வந்திருச்சு. அதையும் சேர்த்து அனுப்பவான்னு கேட்டு அனுப்பி வச்சாங்க.
புத்தகம் வந்து சேர்ந்ததும் அதன் தலைப்புக்காகவே உடனே வாசித்தேன்.
கத்தி மேல் நடக்கிற மாதிரி இந்த தலைப்பும், தலைப்புக்கு சம்பந்தபட்ட கவிதைகளும்… கொஞ்சம் தப்பினாலும் பெரும்பிரச்சனைக்கு வழி வகுத்துவிடும். இதில் சில கவிதைகளில் குழந்தைகளையும் கடவுளையும் சமமாக வைத்தும் எழுதி உள்ளார்.
உண்மையாவே ஆசிரியரை பாராட்டியே ஆக வேண்டும். இப்படி ஒரு தலைப்பில் யார் மனமும் புண்படாமல் அதே நேரம் சொல்ல வேண்டியதை மிகவும் நாசுக்காக, தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அவர் நினைத்து இருந்தா எவன் என்ன சொன்னா நமக்கென்ன நாம் இந்தத் தலைப்பில் சர்ச்சைக்குரிய கவிதைகளை எழுதுவோம் என்று நினைத்து எழுதியும் இருக்கலாம், ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.
சரி கடவுள் கவிதைகள் மட்டும்தான் எழுதியிருக்கிறாரா என்றால் அதுதான் இல்லை, சமூகத்தையும் சாடும் கவிதைகளையும் எழுதியிருக்கிறார்.
ஒரு கவிதையில் இறந்த அம்மாவின் நெற்றில் வைத்த ஒரு ரூபாய் நாணயத்தை மகனின் கையில் கொடுக்கிறப்போ ஒரு ரூபாய்னாலும் உழைச்சு சம்பாரிக்கணும்டான்னு அந்த அம்மாவோட குரல் கேட்பதாய் எழுதியிருப்பார்.
ஒவ்வொரு சாதிக்கும் ஒரு சுடுகாடு இருக்கு மொத்தத் தமிழனுக்கும் ஒரே சுடுகாடு அணு உலை, சுவற்றின் வெடிப்பில் இருக்கும் ஒற்றைச் செடி பிடுங்கி எறிய மனமின்றி நிற்கும் வாடகை வீட்டுக்காரன்னு அடிச்சி ஆடியிருக்கார்.
காதல், சிறு வயது ஞாபகங்கள், குழந்தைகளின் சுட்டி தனங்கள் தன் எழுத்தின் மூலம் என் மனம் கவர்நது விட்டார் ஆசிரியர் மு.முருகேஷ்.
இதில் சில கவிதைகளை வாசிக்கிறப்ப கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ‘வாகை சூடவா’ படத்தில் ‘அய்யனாரு சாமி அழுது தீர்த்து பார்த்தோம். சொரணைக்கெட்ட சாமி சோத்த தானே கேட்டோம்…’ என்று எழுதியிருப்பாரே அது போல பல இடங்களில் சீண்டியிருக்கிறார்.
அவரின் கவிதைகளில் சில பார்வைக்கு…
பார்வை
————
கோவில் பிரகாரத்திற்குள்
சிறுநீர் கழிக்கும்
குழந்தையைப் பார்த்து
முகஞ்சுழித்துப் போகிறார்கள்
பக்தர்கள்
புன்னகைக்கும்
கடவுளை மட்டும்
ஆசீர்வதிக்கின்றனர்
குழந்தைகள்…
மிச்சம்
———–
கோயில் வாசலில்
கூட்டத்தோடு முட்டிமோதி
குழந்தைகள்
வாங்கிச் சாப்பிட்ட
பிரசாதத்திலிருந்து
சிந்திவிழும் பருக்கைகளே
பிரசாதமாகிறது
கடவுளுக்கு…
காட்சி நேரம்
——————-
பள்ளி முடிந்து மாலையில்
வீடு திரும்பும்
குழந்தைகளைப்
பார்ப்பதற்குச் செல்லவே
பிற்பகல் தரிசனத்தை
ரத்து செய்து விடுகிறார்
கடவுள்.
வெயில் காடு
——————–
தகிக்கும் கோடை வெயிலில்
கானல் நீர்
கொட்டாக் கிடக்கும்
நெடுஞ்சாலையோரத்தில்
வியர்வை சொட்டச் சொட்ட
ஒதுங்க மர நிழலற்று
தகரம் வேய்ந்த
பேருந்து நிறுத்தத்தின் கீழ்
ஒண்டி நிற்கையில்
ஏனோ கசகசக்கிறது
கிராமத்துத் தோப்பை
மொத்தமாய் விலைபேசி
மர வியாபாரியிடம்
விற்று விட்ட நாளின் வலி.
தளும்புதல்
—————-
கைக் குழந்தையை
இடுப்பில் சுமந்து
வேறொருவன் மனைவியாய்
நீ நடக்கும் போதும்
தண்ணீர்க் குடம் தூக்கி
நீ நடந்த
நம் காதல் நாட்களின்
அழகிய தளும்பல்களாய்
மனம் நனைகிறேன்
நான்
இன்றும் திருவிழாவிற்குச் சொந்த ஊருக்குப் போறப்ப திருவிழா கூட்டத்தில் யாரோ ஒருவரின் மனதில் இதே நினைவுகள் வந்து செல்லத்தான் செய்கிறது.
இதெல்லாம் சரிப்பா ‘கழிப்பறைக்குச் சென்றிருக்கிறார் கடவுள்’ அப்படிங்கிறதை சொல்றமாதிரி ஏதாவது ஒரு கவிதையாச்சும் இதில் எழுதியிருக்கிறாரா என்று நீங்கள் கேட்டால் என் புரிதலின்படி அவர் சொன்னது கடவுளை இல்ல போலிச் சாமியார்களை.
கழிப்பறைக்குச் சென்றிருக்கிறார் கடவுள்
மு.முருகேஷ்
அகநி பதிப்பகம்
பக்கம்: 104
விலை: 60
நன்றி : படம் இணையத்திலிருந்து
One comment on “புத்தகப் பார்வை : கழிப்பறைக்குச் சென்றிருக்கிறார் கடவுள்”
rajaram
அருமையான கவிதைகள்