புத்தகப் பார்வை : ராம் வசந்த்-ன் ‘வணிகத் தலைமைகொள்’

– வெற்றிக்கான சூட்சுமப் பெட்டகம்

மு. கோபி சரபோஜி

ழுத்தாளர் மு. கோபி சரபோஜி அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்ந்த சமூக அக்கறைப் பதிவுகளை முகநூலில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை புயல் தொடாத புண்ணியத்தலம் இராமேஸ்வரம், இலட்சியத்தைத் தேர்ந்தெடுங்கள், இஸ்லாம் கற்று தரும் வாழ்வியல், மௌன அழுகை, வினை தீர்க்கும் விநாயகர், அந்தமான் செல்லுலார் சிறை ஒரு வரலாறு, வெற்றியைச் சொந்தமாக்குவது எப்படி?, நோபல் சிகரம் தொட்ட இந்தியர்கள், ஆன்மீக சாண்ட்விச்!, வாழ்வை வளமாக்கும் நீதிக்கதைகள், நம்பிக்கை மட்டுமல்ல வாழ்க்கை, சங்கே முழங்கு, வகுப்பறை முதல் தேர்வறை வரை, உள்ளங்கையில் உலக நாடுகள், தமிழகப் பாளையங்களின் வரலாறு, வீரபாண்டிய கட்டப்பொம்மன், காமராஜர் வாழ்வும் அரசியலும் உள்ளிட்ட நிறைய நூல்கள் வெளிவந்திருக்கின்றன. வார, மாத இதழ்களிலும் இணைய இதழ்களிலும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

********

ணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள் தாங்கள் ஜெயித்த கதைகளை எழுதி இருக்கிறார்கள். தொகுப்பாக்கி இருக்கிறார்கள். அவைகள் பெரும்பாலும் தன்னம்பிக்கை நூலின் சாயல் தரித்தே இருக்கும். அதில் இடம் பெற்றிருக்கும் கதைகள், உதாரணங்களில் பெரும்பகுதி மறு வாசிப்புக்குரியதாகவே அமைந்திருக்கும். தவிர, வணிகக் கனவை சுமந்து திரிபவர்களுக்கும், அதன் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும் வணிகம் செய்வதன் பொருட்டு தங்களையும், ஆரம்பிக்க போகும் தொழிலையும் கட்டமைப்பதற்கான வழிகாட்டல்களை, செயல்படுத்தத் தகுந்த ஆலோசனைகளை தெளிந்த நீரோடையாகக் கொண்டிருக்காது. இத்தகைய குறைகள் இல்லாது ஒரு வழிகாட்டிக் கையேடு உங்களுக்கு வேண்டுமெனில் ராம் வசந்த் எழுதி விகடன் வெளியீடாக வந்திருக்கும் “வணிகத் தலைமைகொள்” தொகுப்பை கையில் ஏந்திக் கொள்ளலாம்.

எந்தத் தொழிலை தொடங்குவது? என்பதை அவரவருக்குரியதாக ராம் வசந்த் விட்டு விட்டார். தொழிலைத் தொடங்கிய பின் அதில் முன்னேறிச் செல்வதற்கான அறி(ற)வுரைகளை தன் அனுபவங்கள் ஊடாக  தொகுப்பு முழுக்கச் சொல்லிச் செல்கிறார். நூலை வாசிக்க, வாசிக்க ஒரு நேரடி வகுப்பில் அமர்ந்து கேட்கும் உணர்வு ஏற்படுகிறது என்றால் அது மிகையில்லை. சந்தேகம் இருப்பின் வாங்கி வாசித்து நுகரலாம்.

தொழில் துவங்குவதற்கான வழிமுறைகளை மட்டும் சொல்லி நிறுத்தாமல் ஆரம்பித்த வணிகத்தை தொய்வின்றியும், வெற்றியை நோக்கி கொண்டு செல்வதற்குக் கவனம் செலுத்த வேண்டிய விசயங்கள் குறித்தும் நிறைய தகவல்களை நூலில் தந்திருக்கிறார். பட்டை தீட்டிய வைரங்களாய் அவைகள் விரவிக் கிடக்கின்றன. வாரிக் கொள்பவர்கள் நினைவில் கொண்டால் வணிகத்தில் வாகை சூடுவது நிச்சயம்.

வணிகத்தலைவன் தன் வணிகக் கப்பலை கொண்டு செலுத்த அவசியமான ஸ்தாபன நிதியை கையாளும் முறை, அவைகளை தேவைக்கேற்ப திரட்டும் முறை, செய்யப்பட வேண்டிய முதலீடுகள், அதன் வழியாக தொழிலை விரிவாக்கம் செய்யும் விதம், வரிகள் செலுத்துவதில் கொண்டிருக்க வேண்டிய வெளிப்படைத் தன்மை, நிறுவன நேர்காணல்களில் மனதில் கொள்ள வேண்டியவைகள், மாறுப்பட்ட தகவல்களுக்கும் செவி சாய்க்க வேண்டியதன் அவசியம், அதில் காட்டும் அலட்சியத்தால் ஏற்படும் இழப்புகள், பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதால் உருவாகும் சிக்கல்கள், அப்படி நிகழாமல் இருக்க செய்ய வேண்டியவைகள்  உள்ளிட்ட பலவற்றையும் அழுத்தமாகவே சுட்டிக் காட்டி அதற்கான தீர்வுகளையும் முன் வைக்கிறார். அவைகள் வெறும் வார்த்தைகளில் சொல்லப்பட்ட தீர்வுகள் இல்லை என்பதும், அவைகளைச் செயல்படுத்தி தன்னையும், தன் நிறுவனத்தையும் வளர்த்து வார்த்தெடுத்தவரின் அனுபவத் தீர்வு என்பதும் இத்தொகுப்பை நல்லதொரு வழிகாட்டியாக மாற்றி விடுகிறது.

“சொந்தத் தொழில்” என்ற விருப்பத்தை எத்தனை பேரால் எட்ட முடிந்திருக்கிறது? அப்படியே எட்டினாலும் அவர்கள் எல்லோராலும் அதில் வெற்றி பெற  முடிந்திருக்கிறதா? என்பதற்கான பதில்கள் பலருடைய  ”சொந்தத் தொழில்” என்ற எண்ணத்தை கனவாகவே வைத்திருக்கச் செய்கிறது. நிஜத்தில் அந்தக் கனவை ஆர்வமும், அக்கறையும் கொண்ட எல்லோராலும் எட்ட முடியும். அதற்கான சூட்சுமத்துக்கு உங்களை ஒப்புக் கொடுத்தபடி நகர்ந்தால் முன்னேற்றத்தை மட்டுமல்ல வெற்றியையும் உங்கள் வசப்படுத்திக் கொள்ள முடியும். அதற்கான பெட்டகம் “வணிகத் தலைமை கொள்”!

———————–

வணிகத் தலைமைகொள்
ராம் வசந்த்
விகடன் பதிப்பகம்
விலை ரூ. 150

புத்தகம் வாங்க :
https://galaxybs.com/shop/english-book/motivation/vaniga-thalaimai-kol/

நன்றி : படம் இணையத்திலிருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *