மோகன் ஜி
வடமொழியில் குஞ்சிதம் என்றால் ‘வளைத்து தூக்கிய’ என்று பொருள். தனது இடது திருவடியினை உயர்த்தி நடராஜர் சிதம்பரத்தில் ஆடுகிறார் அல்லவா? அந்தத் திருவடியே குஞ்சித பாதம். அத்திருவடியை அலங்கரிக்கவென பிரத்யேகமாகத் தொடுத்த புஷ்பவளையமே காஞ்சி பரமாச்சாரியார் விரும்பு தன் சென்னியிற் சூடுவார்.
ஆடல்வல்லான் தூக்கிய இடதுபாதம் உமையாளுக்கல்லவா சொந்தமான பாதம்?உமையொருபாகனின் இடப்புறம் அம்பிகையின் பாதி தானே? அதனால் தான் குஞ்சிதபாதம் மேலும் சிறப்பு பெறுகிறது.
சிதம்பரம் நடராஜப் பெருமானின் ஸ்தோத்திர மாலையாக, ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் வடமொழியில் இயற்றப்பட்டது ‘ஸ்ரீ குஞ்சிதாங்ரி ஸ்தவம்’ என்னும் அரிய நூல். இதன் காலம் பதினான்காம் நூற்றாண்டாக இருக்கலாம்.
‘குஞ்சிதாங்ரிம் பஜேஹம்’ என்று முடியும் 313 ஸ்லோகங்களாக விரிந்த நூலாகும் இந்த ஸ்தவம் .
ஸ்ரீ உமாபதி சிவம் தில்லைவாழ் மூவாயிரவர்களின் குலத்தோன்றல்.
ஸ்ரீவித்யா உபாசனையும் , ஆடல்வல்லானின்பால் பெரும் ஈர்ப்பும் கொண்டவர்.
உமாபதியார் தமிழிலும் வடமொழியிலும் பல சைவ சித்தாந்த நூல்களை எழுதியவரும்கூட.
நடராஜருடைய தோற்றத்தின் வர்ணனை,
அவருடைய பராக்கிரமம், அவருடைய திருவிளையாடல்கள், க்ஷேத்திர மகிமை, ஏனைய தெய்வங்கள் சிவன்பால் கொண்ட பக்தி, கனகசபை உணர்த்தும் தத்துவக் குறியீடுகள்,
சிதம்பரம் கோவிலின் பூசனை முறைகள் என ஏராளமான சங்கதிகளைக் குறிக்கும் ஆச்சரியமான சுலோகங்கள் அடங்கியது ஸ்ரீ குஞ்சிதாங்க்ரி ஸ்தவம்.
நடராஜரை வணங்கும் விதம், கூத்தனை ஆராதிப்பதால் உண்டாகும் பலன்கள், தில்லையம்பதி பற்றிய விவரங்கள் எனப் பல அரிய தகவல்களும் அடங்கிய களஞ்சியம் இந்நூல்.
சிவாச்சாரியாரின் ரசனையும், மேதாவிலாஸமும் பல சந்தர்ப்பங்களில் இந்த நூலின் சுலோகங்களில் காணக்கிடைக்கின்றன. உதாரணத்திற்கு சில அழகிய வரிகளைப் பார்க்கலாம்.
ஒரு சுலோகத்தில் சிவனார் கழுத்தில் பாவிய ஆலகாலத்தின் கருநீல நிறத்தை, முருகனுடைய மயிலானது கருமேகம் என நினைத்து மயங்கியது என்று கவிஜாலம் காட்டுகிறார்.
இன்னுமொரு சுலோகத்தில், ” உனக்கு ஏன் ஆறுமுகம் இருக்கிறது?” என கணபதி வினவ, “தந்தையிடமிருந்து ஒரே நேரத்தில் ஆறு சாஸ்திரங்களைக் கற்கும் சந்தர்ப்பம் உண்டானதால் அதற்குத் தேவை ஏற்பட்டது” என முருகன் பதில் சொல்கிறார்.
நடராஜர் அணைப்பிலிருந்த பால கணபதி, அவர் ஜடாமகுடத்தில் உள்ள பிறைச்சந்திரனை தன்னுடைய தந்தமென்று பற்றியிழுப்பதாக ஒரு ஸ்லோகம் நயம் காட்டுகிறது.
தன் பிராணனைப் பறிக்க வந்த காலனிடம் ஒரு சிவபக்தன் கேட்கிறான்,” ஓய்… நீ பழைய யமதர்மராஜாவா? இல்லை , புதிதாகப் புறப்பட்ட யமன் யாரோவா?” யம பயம் அறவே அற்றவர்கள் சிவபக்தர்கள் என்பதைத்தான் நாடகம்போலும் ஒரு சுலோகத்தில் குறிப்பிடுகிறார்.
பிள்ளைகளின் விளையாட்டைக் காணும் தகப்பனின் சந்தோஷம் மனிதர்களுக்கு மட்டும் தானா? சிவனுக்கு இருக்காதா என்ன? இந்த ஸ்லோகம் சொல்லும் நயம் பாருங்கள்.
‘ பாலமுருகன் கணபதியின் துதிக்கையை முழம் போட்டுப் பார்க்கிறானாம். பாலகணபதியோ முருகனுடைய பன்னிரு கண்மலர்களை ஒன்று, இரண்டு.. என எண்ணிக்கை பார்க்கிறானாம். இதைக்கண்டு மகிழ்கிறாராம் பரமன்.
பார்வதி அன்புடன் சிவனை அரவணைக்க, சிவனார் மேனியில் பூசிய திருநீறோ அழிகின்றதாம்…. இப்படிப் போகிறது மற்றுமொரு ஸ்லோகம்.
கடைசி சுலோகமான 315 ல் தான் இந்த ஸ்தவத்தை ஓதி, நடராஜப் பெருமானின் ஆடலை, தான் காணும் பாக்கியத்தை பெற்றதாக முடிக்கின்றார்.
இந்த அரிய பொக்கிஷத்தை பாராயணம் செய்து நடராஜர் அருளை சந்தேகத்திற்கிடமின்றி அடையலாம்.
திருச்சிற்றம்பலம்
நன்றி : படம் இணையத்திலிருந்து.