மோகன் ஜி
அஞ்சாங்கிளாஸ் முழுப் பரிட்சை விடுமுறை. அடுத்த மாசம் செயிண்ட் ஜோசப் ஸ்கூலில் ஆறாம் வகுப்பு சேரவேண்டும். இங்கிலீஷ் மீடியம் வேறு. சயின்ஸ், சரித்திர கிளாஸ்லாம் இங்கிலீஷ்ல தானாமே?!…. அந்தக் கவலையை அப்போது பட்டுக் கொள்ளலாம் என்று வெய்யில் வீணாகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன்.
குரங்கு போல் எந்த மரமும் தாவியேறும் வித்தகனாக இருந்ததால் அடுத்த தெரு பிள்ளைகள் கூட மாங்காய் வேட்டைக்கு அழைப்பார்கள். கேட்டாலே மாங்காய் தருவார்கள் தான்… திருட்டு மாங்காய் ருசி வருமோ?
ஒரு காலைப் பொழுதில் அப்பா அவருடைய பால்ய சிநேகிதனைப் பார்க்க ஶ்ரீமுஷ்ணம் போவதாகவும், என்னையும் கூட வருமாறும் அழைத்தார். அந்த நண்பருடன் அடித்த கொட்டங்களையும் அவ்வப்போது சொல்வார்.
‘அப்போ சேஷாத்ரியும் நானும் ஒரே வீட்டில் குடியிருந்தோம்’ என்று ஆரம்பித்தால் சுவாரஸ்யமாக பல சம்பவங்களை அப்பா சொல்வது வழக்கம். சேஷாத்ரி மாமாவும் எப்போதாவது அப்பாவைப் பார்க்கவென வீட்டுக்கு வருவார்.
‘வாடா போடா’ எனப் பேசிக் கொண்டு திருவஹீந்த்ரபுரம், கெடிலம் ஆஞ்சனேயர் கோவில் எனப் போய் வருவார்கள். சுகமாக சாப்பிட்டுவிட்டு வாசல் திண்ணையில் படுத்துக் கொள்வார்கள். நானும் ஒட்டிக் கொள்வேன். பழங்கதைகளைக் கேட்கும் சுவாரஸ்யம்.
‘டேய் மோகனா! பாய்ல பேஞ்சுட மாட்டியே?’ என்று கேட்டு சேஷாத்ரி மாமா பெரிய குரலில் சிரிப்பார்.
“கிளம்பு மோகி! சரியா பதினொரு மணிக்கு பஸ் இருக்கு” என்றார் அப்பா.
பெரிய வெண்கலத் தூக்கு நிறைய சேஷாத்ரி மாமாவுக்குப் பிடித்த ரவா லாடு பண்ணிக் கொடுத்தாள் அம்மா.
“வரும்போது மறக்காம தூக்கைத் திரும்பக் கொண்டு வருவது உன் வேலை!” என்றும் எனக்கு ரகசியமாய் சொல்லியனுப்பினாள்.
“சேட்டை எதுவும் பண்ணாதே!”
“சரிம்மா!”
ஶ்ரீமுஷ்ணம் அடைந்தோம்.
எங்களைக் கண்ட ஆனந்தத்தில் சேஷாத்ரி மாமா குதித்தார்.
“வாடா ராஜம்! வாடா பயலே!”
“அதென்னடா தூக்கிலே?”
“ரவா லாடு மாமா!”
“ பாத்தியாடி? ருக்குமணி எனக்காக ரவாலாடு புடிச்சு அனுப்பியிருக்கா!” என்று சொல்லி நெகிழ்ந்தார். அப்பாவும் அவரும் கூடிப் பேசினர்.
எப்போதுமே சந்தோஷமாக இருக்கும் அப்பாவின் முகமோ அப்போது இன்னும் பிரகாசமாக ஒரு சுட்டிப் பையன் போல இருந்ததாக என் மனப்பதிவு அப்படியே இன்னும் நினைவிலாடுகிறது.
சேஷாத்ரி மாமாவுக்கு இரு பெண்கள். இரண்டு அக்காவுக்கும் ஈடுகொடுத்து கதையடித்துக் கொண்டிருந்தேன்.
விளக்கு வைத்த நேரத்தில் கோவிலுக்குப் போனோம்.
சேஷாத்ரி மாமா அங்கு ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர் என ஞாபகம்.
கோவிலில் சுவாமியருகில் நின்று தரிசனம்.
யாரோ அப்போது பாடி முடித்திருந்தார்கள். நானும்
‘ பச்சைமா மலைபோல் மேனி’ என்று எடுத்து விட்டேன். ரசிக்கப் பட்டேன்!
ராத்திரி அப்பாவும் சேஷாத்ரி மாமாவும் வாசல் திண்ணையில் படுத்துக் கொள்ள, நான் அந்த அக்காவிடம் கூடத்தில் வராஹர் கதை கேட்டபடி தூங்கிவிட்டேன்.
மறுநாள் காலையிலும் அந்த அக்காவோடு கோவிலுக்குப் போனேன்.
வராஹர் பெரும் புதிராகத் தெரிந்தார். வீட்டில் எல்லோரையும் ஒவ்வொருவராக நினைவு கூர்ந்து அவர்களுக்காக வேண்டிக் கொண்டேன். திரும்பும் போது எனக்காக வேண்டிக் கொள்ள மறந்தது ஞாபகம் வர, மீண்டும் ஓடி சேவித்தேன்.
‘இங்கிலீஷில் எப்படி பதினாலாம் வாய்ப்பாடு சொல்வது?’ என்று நேற்று இந்த அக்கா கேட்டு நான் முழித்தது நினைவுக்கு வர, ‘நீர்தான் வராஹரே புத்தி கொடுக்கணும்’னு வேண்டிக் கொண்டேன்.
ஒரு வழியாக அவர்கள் பிரியாவிடை கொடுத்தார்கள். அம்மாவின் தூக்கில் ஏதோ பலகாரம் கொண்டு நிறைத்திருந்தார்கள். எனக்கு டிராயர், சட்டைத் துணி அந்த அக்கா பரிசளித்தாள்.
இதை வாங்கத் தான் நாங்கள் சாப்பிடும்போது குடுகுடுவென அந்த அக்கா ஓடினாளா? பஸ் ஸ்டாண்டு வந்த மாமா பஸ் கிளம்பும் போது கண்கலங்க கையசைத்ததும், கண்டக்டர் டிக்கெட்டுக்காக வரும் வரை அப்பா ஏதும் பேசாமல் நண்பனை பிரிந்து செல்வதால் இறுக்கமாய் இருந்ததும் இப்போது புரிகிறது.
அதன் பிறகு இன்று வரை நான் ஶ்ரீமுஷ்ணம் செல்ல வாய்க்கவில்லை.
என்றாவது அங்கு போக வேண்டும் என நினைத்துக் கொள்கிறேன். ஆனால் இந்தமுறை மணக்கமணக்க ரவா லாடு செய்து கொடுத்தனுப்ப அம்மா இல்லை. நெருங்கிய சிநேகிதர்களான அப்பாவும் சேஷாத்ரி மாமாவும் இல்லை. அந்த அக்காவும் எங்கோ வாழ்க்கைப்பட்டு பிள்ளைகள் பெற்று பேரன்பேத்தி எடுத்து எங்கோ ஒரு ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.
ஶ்ரீமுஷ்ணம் போனால் யாரிருப்பார் என்று மனம் துணுக்குறுகிறது. அந்த வீடு, வீதி, கோயில் பற்றிய மனப்பிம்பங்கள் புகைமூட்டமாய் ஞாபகத்தில்.
“ஶ்ரீமுஷ்ணம் வந்தால் நானிருக்கிறேனே மோகா!” என்று நண்பன் தேவா வரைந்த சித்திரம் இன்று ஆறுதலாகத் தென்படுகிறது.
வராஹ மூர்த்தியே!
அன்று உன் சன்னதியில் நின்ற சிறுவன் இன்று ஏதேதோ தெரிந்து கொண்டு, அனுபவம் எனும் கிரீடம் அணிந்து கொண்டு, ஆசார சீலம் குறையாமல் வாழ்வின் பின்கரையோரம் நிற்கிறேன் .
பாரும் வராஹனே!
நீ வள்ளலல்லவா? வரப்ரசாதி அல்லவா? என் அனுபவம், ஆசாரம், பக்தி என எல்லாவற்றையும் எடுத்துக் கொள். உன்முன் நிர்மலனாக ‘பச்சைமா மலைபோல் மேனி’ என நீட்டி முழக்கிய சிறுவனை மீட்டுத் தா!
இயன்றால் , அன்று அவனுடன் இருந்த மாந்தரையும் சேர்த்துத் தா!
சித்திரம்: தேவா
நன்றி : பகிர்வு மற்றும் சித்திரத்துக்கு
One comment on “நினைவுகள் : மீட்டுத் தா வராஹனே..!”
venkatnagaraj
இனிய நினைவுகள். மறக்க முடியாதவையும் கூட. மோஹன் ஜி அண்ணா அவர்களின் பதிவுகளை இங்கே படிக்க முடிந்ததில் மகிழ்ச்சி.