மோகன் ஜி
மும்பையில் சௌபாத்தி கடற்கரை… பிரதான சாலையின் நடைபாதைக்கு வரப்பு கட்டியதுபோல் ஒன்றரையடி சுற்றுச்சுவர். சாலைக்கு முதுகுகாட்டி சுவரின்மேல் அமர்ந்திருக்கிறேன்.
பலநேரம் இந்தச்சுவரில் முட்டிக் கொண்டுதான் என் கவிதைகள் கண்விழிக்கின்றன. எதிரே நீண்ட மணல்வெளி. அதைத் தாண்டி வெள்ளலை சரிகையிட்ட நீலக்கடல். அதைத் தாண்டியும் விரியும் மனவெளி.
இன்று கவிதை எழுதும் மனநிலை மூட்டம் போட்டிருந்தது. ஒழுகிச் செல்லும் சுகமான பேனா என்னிலிருந்து வரிகளைப் பிரித்து தாளில் ஒற்றியபடி…. அருகே நீலப்பதாகை விரிப்பு போல் பார்வையின் விளிம்பில் அசைய, நிலைக்கு வந்து தலை தூக்கினேன். நீலநிற பள்ளிச்சீருடை அணிந்திருந்த பத்து பதினைந்து மாணவ மாணவிகள் சூழ நெருங்கி வந்தனர்.
‘ஹலோ’ என்றேன்.
அவர்களில் ஒரு மாணவி, ” நாங்கள் இங்கு வந்து மூன்று நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. நாங்கள் இருப்பதையே உணராமல் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் அங்கிள்?” என்று ஹிந்தியில் வினவினாள்.
பள்ளியில் வழிபாட்டு நேரத்தில் பாடுபவளாய் இருக்க வேண்டும்.. இனிமையான குரல். அனைவரையும் பார்த்து மையமாகச் சிரித்து வைத்தேன். ஒரு புது உற்சாகம் சட்டென்று தொற்றிக் கொண்டது.
பிள்ளைகள் சுற்றி அமர, மணலில் உட்கார்ந்தேன். ஒரு மாணவி கைக்குட்டையை மணலில் விரித்து நாசூக்காய் அமர்ந்தாள். அவர்கள் பள்ளியைப்பற்றிக் கேட்டேன். புறநகரில் இருக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி அது. அந்தப் பிள்ளைகள் ஏழாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருப்பவர்கள்.
‘உங்களைத் தொந்தரவு செய்துவிட்டோமா சார்?’
“அப்படியெல்லாம் இல்லை. தொந்தரவு செய்ய எதற்கு என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று சொல்வீர்களா?”
சிரித்தார்கள்.
“அமைதியாய் அமர்ந்திருந்தீர்கள். தொந்தரவு செய்யத் தோதான ஆள் என்று வந்துவிட்டோம்” என்றாள் முதலில் பேசிய பெண். குழந்தைகள் பேசும் ஹிந்தி ஒரு சங்கீதம்.
“என்ன ஜீ எழுதிக்கிட்டிருந்தீங்க?”
“அதுவா… கவிதையொண்ணு எழுதிக்கிட்டிருந்தேன்”
என் நோட்டை வாங்கிப் பரிசீலித்தாள், ஒரு ஆசிரியைப் போல விறைப்பாய்.
“இது என்ன மொழி?”
“தமிழ்”
ஒருவன், ‘ஓ… சென்னை கிங்ஸ்’ என்றான்.
” தமிழ் நல்ல மொழியா ஜீ?”
“கண்டிப்பாக” என்றேன்.
“மராட்டியை விட அழகான மொழியா?” வினவியது ஒரு போன்ஸ்லே.
” எல்லா மொழியுமே அழகு தானடா…. நல்லதைச் சொல்லும் போது எந்த மொழியும் அழகாகி விடும்”
” சார்.. மராட்டிய கவிதைகள் தான் உலகிலேயே சிறந்தவை” மறுபடியும் போன்ஸ்லே.
“ஆமாம் கண்ணா! எங்களூரின் பெரிய கவிஞன் கூட மராட்டிய கவிதைகளுக்கு தந்தம் போன்ற உயர்ந்த பரிசுகள் கொடுக்க வேண்டுமென்றான்”.
“யாரது?”
“மஹாகவி பாரதியார்”
சட்டென்று அவர்கள் என் பாரதியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. என் அலைபேசியிலிருந்த பாரதியின் படத்தைத் தேர்ந்து அவர்களுக்கு காண்பித்தேன்.
” கோபக்காரர் போலல்லவா இருக்கிறார் ?”
” கோபக்காரர்கள் தான் சிறந்த கவிதை எழுதுபவர்களாக இருக்கிறார்கள்”
“ஆனால் நீங்கள் சாந்தமாக அல்லவா இருக்கிறீர்கள்?” என்றாள் ஒரு மாணவி கண்களில் குறும்பு மின்ன…
அடடா ! உள்குத்தைப் புரிந்துகொள்ள சில விநாடிகள் பிடித்தது.
அவளை அடிக்கப் போவதுபோல் பாவனை செய்தேன். அனைவரும் ஆர்ப்பரித்துச் சிரித்தார்கள். ஐந்து நிமிடங்களில் அவர்கள் பெரியவர்களாகவும், நான் சிறுவனாகவும் மாறிப் போனோம். பல கேள்விகள் … சிறுசிறு பதில்கள் … சிரிப்பும் சிரிப்பும்….
அங்கு அவர்களுடைய ஆசிரியைகள் மூவர் வந்து சேர்ந்தனர். “ரெடியாகுங்கள்.. ஐந்து நிமிடங்களில் கிளம்புகிறோம்” என்றாள் மூத்த ஆசிரியை. எழுந்தோம்.
அருகிருந்த மாணவர்கள் தோள்மேல் கைதழுவி மெல்ல நடந்தேன்.
ஒருவன் முன்னே நகர்ந்து என் எதிரில் நின்று,’’எங்களுக்கு ஏதும் அட்வைஸ் செய்வீர்களா?’’ என்றான்.
” பாடபுத்தகங்களைத் தவிரவும் மற்ற நூல்களையும் தேடிப் படியுங்கள்” என்றேன்.
“ம்ம்ம்?”
“மனதில் தோன்றுவதை எழுதிப் பழகுங்கள்”
” அப்புறம்ஜீ?”
“அதிகம் டீவி பார்க்காதீர்கள்”
“வேறு ஏதும்?”
” செல்போன், வீடியோ கேம்ஸ் அதிகம் வேண்டாம்”
” சாப்பிடவாவது செய்யலாமா?” இது அதே குறும்புக்காரி.
“சார்! எங்களுக்கு கவிதை எழுதச் சொல்லித் தருவீர்களா?”
” அதற்கென்ன… செய்வோமே? வேறொரு நாள் சந்திக்கலாம்”
“உங்களுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா?”
அணைந்து நின்று படம் பிடித்துக் கொண்டோம்.
சுவர் தாண்டி அவர்களுடைய வேனுக்குப் போனார்கள்.
என்னை நிற்க வைத்துவிட்டு, மனசு மட்டும் நீல யூனிஃபார்ம் அணிந்து அவர்கள் பின்னாலேயே போனது.
எழும் இளையபாரதம் நம்பிக்கை அளிக்கிறது.
என் கவிதையோ பாதியிலேயே நிற்கிறது.
நன்றி : படம் இணையத்திலிருந்து