பகுதி – 4
இத்ரீஸ் யாக்கூப்
(இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்)
முந்தைய அத்தியாயங்களை வாசிக்க…
நான் குமார் டீக்கடையை நெருங்க நெருங்க, கம்பெனியில் எனக்கு ஓனருடைய அறையைக் காட்டிவிட்டுச் சென்ற அந்தப் பையன் நின்று கொண்டிருப்பது போலத் தெரிந்தது. சட்டையைக் கூட மாற்றாமல் அதே உடையிலிருந்தான். குமார் அவனுடன் ஏதோ சுவாரசியமாக ஒன்றிப்போய் பேசிக்கொண்டிருந்தார். அந்தப் பையன் என்னைக் கண்டதும் ‘என்ன தம்பி இந்த ஏரியாவில்தான் தங்கிருக்கீங்களா?’ என்று அதுவரை தெரியாதவன் போல விசாரித்தான். இந்நேரம் குமார் விபரங்களைச் சொல்லாமலா இருந்திருப்பார்?
“வாப்பா சந்துரு, உன்னைப் பத்திதான் பேசிக்கொண்டிருந்தோம். டீ போடட்டுமா?” என்றார் குமார் அண்ணன்.
‘சரி’ என்பதாய் தலையை அசைத்தபடி, அவரின் நெற்றியைக் கவனித்தேன்.
வட்டமான சந்தனப்பொட்டில் நடுவில் குங்குமம், ‘சிங்கார்’ ஸ்டிக்கர் போட்டு போல அழுத்தி வைக்கப்பட்டிருந்தது. ‘என்னெண்ணா பொட்டெல்லாம் வித்தியாசமா வச்சிருக்கீங்க’ என்று கேட்க நினைத்தேன்தான்; அந்நேரம் பார்த்து சட்டென மழை பலமாய் பிடித்துக் கொண்டது!
யாரோ லாரி, லாரியாய் தண்ணீரைக் கடையின் கூரையிலிருந்து கவிழ்த்து விடுவது போல வழிந்த நீர், கண்ணாடித்திரையாய் தரையில் விழுந்து, படர்ந்து உயர, ரோட்டின் மட்டம் ஏறிக்கொண்டே செல்கிறது.
அப்போது விசைப்படகு போல் மழை நீரைக் கிழித்துக் கொண்டு வந்த அந்த ட்ரக்கிலிருந்து வெள்ளை நிற பேண்ட் சட்டையில் பாக்யா இறங்கினார்.
அட! கூடவே ஓனர் மதியும்!
எதிர்பாராமல் அவர்களை அங்கேப் பார்த்ததும் “வாங்க வாங்க” என வரவேற்பது போல் புன்னகைக்கிறேன். ச்சோவென சத்தம்! மழை நிற்பதாகத் தெரியவில்லை.
‘வாசலிலேயே நிற்காமல் உள்ளே வாங்க சார்!’ என்று இரண்டு கதவுகளையும் திறந்தபடி ஹால் பக்கம் கூப்பிடுகிறேன். யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எனக்கு விழிப்பு வந்துவிட்டது. அப்போதுதான் அதுவரை கண்டது எல்லாம் கனவு என்று உரைத்தது.
மணியைப் பார்த்தேன் அதிகாலை மூன்று பத்து! மங்கலான இருட்டில் யார் யார் எங்கே கிடக்கின்றனர் என்றே தெரியவில்லை. ஒரு சின்னச் சத்தத்திற்கும் விழித்துக்கொள்ளும் நான் அதிர்ஷ்டசாலியா அல்லது பிரளயமே வந்தாலும் தூக்கத்தை முறித்துக் கொள்ளாத பனிக்கரடிகளாய் படுத்துறங்கும் நண்பர்கள்தான் உண்மையான பாக்கியசாலிகளா எனத் தெரியவில்லை.
இந்த நேரத்தில் கதவைத் தட்டுவது யார் என்ற கேள்வியும், சந்தேகமும், பயமும் கலந்துப் பிறந்தது.
சிறிய இடைவெளியுடன் மீண்டும் தட்டும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. அதே சமயம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்த ஜீவக்குமாரின் எல்.ஜி. மொபைல், பவுணர்மி வெளிச்சத்திலிருந்து வைப்ரஷனில் வெளிர் இளம்பச்சை நிறமாய் மாறி மாறி, எழுந்து எழுந்து அடங்கிக் கொண்டிருந்ததை காண எனக்குப் புரிந்துவிட்டது வாசலில் நின்று கொண்டிருப்பது கவின்தான் என்று.
நேற்றிரவு அவனைக் காணாததும் நினைவுக்கு வந்தது. நேற்று கம்பெனியிலிருந்து வந்த அசதியில் யாரையும் சரியாக கவனிக்கவில்லை. யாரோடும் சரியாகப் பேசவில்லை. ஜீவா இரவு சாப்பாட்டிற்காக எழுப்பியது மட்டும் நினைவிருக்கிறது. ஆனால் எழவில்லை. நான் இவ்வளவு நன்றி கொன்றவனாக இருக்கக் கூடாது. இங்கே தங்கியிருக்கும் நண்பர்களில் எனக்கு நேரடித் தொடர்பு என்றால் கவின் மட்டும்தான். ஜீவக்குமார் அவனுடைய நண்பன்.
திங்கள் கிழமையைக் கூட விட்டு வைக்காமல் இப்படி நடு ராத்திரி வரை நண்பிகளோடுச் சுற்றிக் கொண்டிருக்கிறானே என்று உறக்க கலக்கத்தோடு அவனை சலித்துக்கொண்டே கதவைத் திறக்க, வாசல் நோக்கிச் சென்ற தூரத்திலேயே அதுவரை கண்டு கொண்டிருந்த கனவு முக்கால்வாசி மறந்து போய்விட்டிருந்தது.
கதவைத் திறந்தேன்.
மழை பெய்திருக்கும் போல. சொட்டச் சொட்ட ‘ஈ’ என்று இளித்தபடி கவின் நின்று கொண்டிருந்தான்.
“ஏண்டா இப்படி பண்றே?” என்று துவங்கியவனைத் தனது அசடு வழியும் சிரிப்பால் தளர்த்தினான்.
“என்னடா தூங்கலையா?”
“மத்தவங்க போல நானும் தூங்கியிருந்தால் விடியும் வரை நீ இங்கேயேதான் நிக்கணும்!” என்றேன்.
மறுபடியும் சிரித்தான்.
“நான் ஏன் இங்கேயே நிக்க போறேன். இன்னைக்கு நித்யா வீட்டில யாரும் இல்ல. அங்கே போயிருப்பேன்!” என்றான் வழிந்தபடி.
“உன்னல்லாம் திருத்தவே முடியாதுடா!”
“நாளைக்கா கும்மிடிப்பூண்டி போற?”
ஆமாம் என தலையாட்டினேன்.
“நாங்கெல்லாம் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவோம்டா” என்றான் மீண்டும் அதே சிரிப்புடன்.
கவின் இப்படித்தான் எதையும் ஈசியாக எடுத்துச் செல்பவன். பி.ஜி. ப்ரொஜெக்ட்டிற்காக சென்னையில் ஒரு கம்பெனியில் சேர்ந்திருந்தபோது, அங்கேதான் இவன் பழக்கமானான். அந்த நட்பு அவனுடைய நண்பர்கள் வரை வளர்ந்து நிற்கிறது.
காலையில் மூட்டை முடிச்சிகளோடு அனைவரிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன். கவினே தனது ஸ்ப்ளெண்டரில் அவ்வளவு தூரம் வரை வந்து டிராப் செய்துவிட்டுச் சென்றான்.
கம்பெனியில் நுழைந்தபோது எனக்காகதான் இன்னும் கிளம்பாமல் வண்டி காத்து கொண்டிருப்பதாக பாக்யா ஒரு ட்ரெக்கைக் காட்டினார்.
எங்களை கவனித்தபடி அதனருகிலேயே என்னை விட ஒரு பத்து வயது மூத்தவர், அதாவது முப்பத்து இரண்டு அல்லது முப்பது மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு திடகாத்திரமான அண்ணன் நின்று கொண்டிருந்தார். அவர்தான் என்னை அங்கே அழைத்துச் செல்லவிருப்பதாக பாக்யா சொல்லவும், அவரைப் பார்த்து ஒரு புன்னகை செய்தேன். பதிலுக்கு அவரும் முறை செய்தார்.
ஓனர் எங்கே என்று பாக்யாவிடம் விசாரிக்க, வேலையாக வெளியில் சென்றுவிட்டதாகக் கூறினார். சரி என்று அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்துக் கிளம்பினேன். பின்னால் காலி கேன்கள் ஏற்றப்பட்டிருந்த வண்டியின் கதவுகளை மூடிப் பூட்டிவிட்டு, தனது இருக்கையில் வந்து அமர்ந்தார் அந்த ட்ரைவர் அண்ணன்.
நான் இன்னொரு சீட்டில்.
வண்டி கிளம்பியது.
“பேரு என்ன தம்பி?”
“சந்துரு, சந்திர சேகர்ண்ணே!” என்னுடைய அந்த ‘ண்ணே’ அவருக்கு வித்தியாசமாகத் தெரிந்திருக்க வேண்டும். அதன் வெளிப்பாடாய் ஒரு ரகசியச் சிரிப்பை அணைக்கட்டி, புன்னகைப் போல வெளிப்படுத்தினார்,
“ஊரு?”
“புதுக்கோட்டை பக்கம்”
“ஓஹ்!”
“உங்க பேருண்ணே?” வண்டி செங்குன்றத்தை நெருங்கி கொண்டிருந்தது.
“கதிர்!” பதில் சொன்னாலும் அவரின் கவனம் முழுக்க சாலை மீதே இருந்தது.
“ரொம்ப அவுட்டராண்ணே?” இப்போது திரும்பிப் பார்த்தார்.
“கம்பெனி இருக்கிற இடம்” என்றேன் தெளிவாக.
“ஆமாம்ப்பா. கும்மிடிபூண்டியிலிருந்து ஒரு ஆறேழு கிலோமீட்டர் உள்ளே போகணும். பஸ் வசதிலாம் இல்ல. மினி பஸ் மட்டும்தான்”
ஓ! என்பது போல் மௌனமானேன்.
அந்த மௌனம் சில நிமிடங்கள் நீடித்தன. ஏதாவது பேச வேண்டும், கேட்க வேண்டும் போலிருந்தது.
“எவ்வளவு நாளாண்ணே இந்த கம்பெனியில வேல பாக்குறீங்க?”
“மூணு வருசம் ஆச்சு”
“கம்பெனிப் பேரே வித்தியாசமா இருக்குல்ல?!” எனது கேள்விக்கு நமுட்டுச் சிரிப்பு வருவது போல பாவனை செய்தார்.
“என்னண்ணே சிரிக்கிறீங்க?”
“இங்கே எல்லாமே வித்தியாசமாதான் இருக்கும். போக போக நீயே புரிஞ்சுச்சுக்குவ”
அவரது பீடிகைகளில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் என்ன என்று அறிந்துக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்திருந்தது.
நேரம் போக ஏதாவது பேசிக்கொண்டு சென்றால்தானே நன்றாகயிருக்கும்.
“அன்று டீ கடை குமாரும் கூட இப்படித்தான்….” எதையோ சொல்ல வந்து, பிறகு ‘நீயே தெரிஞ்சுக்குவ’ எனச் சொல்லி, சொல்ல வந்த செய்தியை பாதியிலேயே நிறுத்தினார்.
கம்பெனி ஆபிசில், ஓனர் அறை முழுக்க சாமிப்படங்கள் இருந்தது நினைவுக்கு வந்து கண்களில் ஒவ்வொன்றும் நிழலாடின. அந்த தறிப் படம் உட்பட!
“ஆமா நீலின்னு ஏன் பேரு வச்சிருக்காங்க? அது அவரோட குலதெய்வப் பேரா? இல்ல அது அவரோட பொண்ணு பேரா?”
“என்னது பொண்ணு பேரா? அது அந்தாளு பேருனுதான் எல்லோரும் சொல்லிக்கிறாங்க” என்றார். ஆனால் அப்படிச் சொல்வதில் தனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை என்பது போல் தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சி செய்தார்.
அதன் தொடர்ச்சியாக, “ஆமா உனக்கு கடவுள் நம்பிக்கைலாம் உண்டா?” என்ற கேள்வி என் முன்னே வந்து விழுந்தது.
இது என்ன கேள்வி என்பது போல் அவரைப் பார்த்தேன்.
“ஆனா எனக்கு இல்ல! எல்லாம் கட்டுக் கதைங்க!” என்று சத்தம் வராமல் சிரித்தார்.
‘எல்லாம் கட்டுக்கதைங்க’ என்ற வார்த்தைகளில் ஏதோ உண்மை ஒளிந்துள்ளது போல் ஒரு ஞானப்பார்வை வீசினார்.
“என்ன… கட்டுக் கதைங்களா?”
“ஆமா. கடவுளைப் பத்தி புதுமைப்பித்தன் என்ன சொல்லிருக்காரு தெரியுமா?”
பொதுவாகக் கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் பெரியாரைப் பற்றித்தானே பேச வருவார்கள். இவர் என்ன கொஞ்சம் சம்பந்தமில்லாமல் புதுமைப்பித்தனைப் பற்றி பேசுகிறாரே என்ற எண்ணம் எழுந்தது என்றாலும் எனக்கு புதுமைப்பித்தனைப் பற்றியெல்லாம் பெரிதாக எதுவும் தெரியாது. ஒரு சினிமா ஆர்வலனாக பார்த்திபன் நடித்த புதுமைப்பித்தன் படம் சட்டென நினைவுக்கு வந்தது.
சப் டைட்டிலாக வரும் ‘சந்திப்பிழைகளைத் திருத்த வந்தவன்’ என்ற வாசகம் படம் வந்த புதிதில் மிகவும் பிரபலம். அதில் வரும் ‘ஒண்ணு ரெண்டு தொண்ணுத்தெட்டில் உன்னைச் சந்தித்தேன்…’ என்ற பாடலும்கூடதான்.
நானும் அந்த வருட ஞாபகங்களில் அப்படியே பயணித்துக் கொண்டிருந்தபோது, என் சஞ்சாரங்களைக் கலைப்பது போல, தோளோடு தோளை முட்டி, என்ன என்பது போல் பார்த்துவிட்டு, “புதுமைப்பித்தனை தெரியுமா?” மறுபடியும் அதே கேள்விக்கு வந்தார்.
அப்போது என் பக்கத்தில் ஏதோ நடிகர் பார்த்திபனே வந்து அமர்ந்துக் கொண்டு குண்டக்க மண்டக்க கேள்விகள் கேட்டு என்னை வம்புக்கிழுப்பது போல் எனக்குத் தோன்ற ஆரம்பித்தது.
நன்றி : படம் இணையத்திலிருந்து
செவ்வாய்கிழமை தொடரும்