பரிவை சே.குமார்
இட்லியை நன்றாக உடைத்து விட்டு அதன் மீது பெருங்காயம் மணக்கும் சாம்பாரை ஊற்றி பிசைந்து சாப்பிடுவதில்தான் அதன் சுவையே இருக்கிறது என்பது செந்திலின் எண்ணம்.
அவன் பிறந்த மண்ணும் அப்படித்தான் அவனுக்கு சாப்பிடக் கற்றுக் கொடுத்திருந்தது. அவன் அம்மா ஆட்டுக்கல்லில் ஆட்டும் மாவு இட்லியாகும் போது அவ்வளவு மென்மையாக இருக்கும். இட்லிக்கு சட்னி என்பதைவிட அவனுக்கு முருங்கைக் காயும் கத்திரிக்காயும் உருளைக்கிழங்கும் போட்டு வைக்கும் இட்லி சாம்பாரின் மீதே அதீத விருப்பம். சாம்பார் என்றால் இரண்டு மூன்று இட்லிகள் சேர்ந்தே போகும்.
திருமணம், திருவிழாக்களுக்குச் சென்றால் இட்லி வைத்தவுடன் சாம்பார் வாளியுடன் வருபவர் நல்லா உடச்சு விடுங்க தம்பி அப்படின்னு சொல்லித்தான் சாம்பாரே ஊற்றுவார். அவனும் உடைத்து விட்டு சாம்பார் ஓடாமல் பாத்தி கட்டி பக்காவாக சாப்பிட்டு வருவான்.
நண்பர்கள் எல்லாம் ‘அய்யே இட்லியா அதுல அப்படி என்னடா இருக்கு’ன்னு கேலி பண்ணினாலும் அவனுக்கு இட்லிதான் குலதெய்வம். ஒரு தடவ பொன்னையா சார் வீட்டுல சாப்பிடும் போது ‘இட்லிக்கி தயிர் வச்சி சாப்பிட்டிருக்கீங்களா தம்பி.?’ அப்படின்னு கேட்டுட்டு ‘சாப்பிட்டுப் பாருங்க… அப்புறம் அப்படிச் சாப்பிடத்தான் பிடிக்கும்’ எனச் சொல்லி கெட்டித் தயிரை கொஞ்சம் எடுத்து வைத்தார். ஒரு வில்லை எடுத்து தயிரில் வைத்துச் சாப்பிட்டான்… ஆஹா என்ன சுவை… அதன் பின் வீட்டில் அம்மா சாம்பார் வைக்கவில்லை என்றாலும் எருமைத் தயிர் அவனுக்கு சுவை கூட்டியது.
சிலம்பணி வளைவுக்குள் இருக்கும் சிறிய கடையான வேல் முருகனில்தான் இட்லி சாம்பார் நல்லாயிருக்கும் என்பதால் அடிக்கடி அங்கு சென்று விடுவான். அதன் காரணமாக கடை ஓனரும் அவனுடன் நெருக்கமாகி விட்டார். ‘இருங்க தம்பி சூடா இட்லி எடுத்துத் தாரேன்’னு சொல்லி சுடச்சுட தட்டில் வைத்து பெருங்காயம் மணக்கும் சாம்பாரை ஊற்றிக் கொடுப்பார். சாம்பார் வாளியையும் அருகில் வைத்து ‘வேணுங்கிறத ஊத்திக்கங்க’ என்றும் சொல்வார்.
பெரிய ஹோட்டல்களுக்கு செல்வதில் அவனுக்கு எப்பவும் விருப்பம் இருப்பதில்லை… ரெண்டு இட்லியை வைத்து அரை இட்லிக்குக் கூட பத்தாத சாம்பாரை ஒரு சிறிய கிண்ணத்தில் கொண்டு வந்து வைப்பார்கள் என்பதால் அவன் விருப்பமெல்லாம் வேல் முருகன் போல சின்னக் கடைகள்தான்.
சமையல்காரரான அவனின் தாத்தா, இ’ட்லிய நல்லா ஒடச்சி விட்டு அதுல சாம்பாரை ஊத்தி பெசஞ்சு சாப்புடுறதுலதாண்டா சொகம்… தோசயின்னாலும் மேல சாம்பார ஊத்தி ஊறவச்சி சாப்புட்டா ரெண்டு தோச கூடப் போவும் தெரியுமா’ன்னு சொல்வாரு.
இப்பல்லாம் கல்யாணம் திருவிழாவுல கூட இட்லிக்கு சிக்கன் குருமா, மட்டன் குருமான்னு போட ஆரம்பிச்சிட்டாங்க… அதென்னவோ இட்லியோ சுவையை கெடுக்குற மாதிரி அவனுக்குத் தோணும்… இட்லிக்கு சாம்பார் இல்லைன்னா இட்லி வேண்டான்னு சொல்லிட்டு வைக்கிற ரெண்டு புரோட்டாவ பிச்சிப் போட்டுட்டு கிளம்பி வந்திருவான். வயிறு நெறைஞ்ச மாதிரியே இருக்காது. அப்புறம் எதாவது ஒரு ஓட்டலுக்குள்ள நுழைஞ்சி ரெண்டு இட்லி தின்னாத்தான் அவனுக்கு திருப்தியாகும்.
திருமணத்துக்கு அப்புறம் மனைவியுடன் தனிக்குடித்தன வாசம்… சும்மா சொல்லக்கூடாது… அவளும் சூப்பராச் சமைப்பா. அம்மா கைப் பக்குவம் மனைவியிடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும் மனைவி கைப்பக்கும் அம்மாவிடம் இல்லை என்பதையும் மனசுக்குள் சொல்லிக் கொள்வான்.
மனைவி கிரைண்டரில் மாவாட்டினாலும் அதுவும் மென்மையாக தும்பைப்பூப் போல இருக்கும். இட்லிக்கு காரச்சட்னியோ மல்லிச் சட்னியோ வைத்துக் கொடுப்பாள். அதுவும் நல்லாத்தான் இருக்கும் என்றாலும் சாம்பார்தான் அவனின் பிரதானம். அவனுக்காகவே சாம்பார் வைத்து அதை ப்ரிட்ஜில் வைத்து மூணு நாளைக்கு ஊற்றுவாள். அதில் அவ்வளவு சுவை இருப்பதில்லை என்றாலும் அம்மாவிடம் பண்ணிய அதிகாரத்தை அம்மணியிடம் பண்ண முடியாமல் சத்தமில்லாமல் உள்ளே தள்ளி விடுவான்.
வாழ்க்கைப் போராட்டம் அவனையும் வெளிநாட்டு வேலைக்குத் தள்ளியது. அதுவும் துபாய்க்கு அவன் வந்து ரெண்டு வருசமாச்சு… காலையில பெரும்பாலும் சாப்பிட நினைப்பதில்லை. அதுக்கு காரணம் பெரும்பாலும் மலையாளி ஹோட்டல்கள்… செட்டிநாட்டுக்காரனுக்கு அவனுக சாம்பார், சட்னியெல்லாம் மொரப்பாட்டுக்காரன் மாதிரி தள்ளியே நிற்க வைத்தது.
அதற்கும் காரணம் இருந்தது.
வந்த புதிதில் ஒருநாள் சாப்பிடலாம்ன்னு ஒரு மலையாளி ஹோட்டலுக்குள்ள போய் இட்லி ஆர்டர் பண்ணிட்டு உக்காந்திருந்தான். ஒரு தட்டில் மூணு இட்லி, சாம்பார், காரச் சட்னி, தேங்காய் சட்னி வைத்துக் கொண்டு வந்து வைத்தவன் வடை வேணுமா சேட்டான்னு கேட்க, வேண்டாம் என்று சொல்லி இட்லியை பிய்ப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது.
அப்பா… என்ன கனம்… கோபத்துல ஒருத்தன் நெத்திப் பொட்டுல எறிஞ்சா ஆள் அவுட்டாயிருவான்னு நெனச்சிக்கிட்டு கொஞ்சமா உடைத்து எடுத்து சாம்பாரில் போட்டு எடுத்து சாப்பிட்டவனுக்கு அந்த சுவையும் வாசனையும் இட்லி சாம்பார் மீது இருந்த காதலை கசக்க வைத்துவிட்டது.
மிளகாய்ப்பொடி வாசத்துடன் ஏதோ ஒரு வாசனை கலக்க, துவரம் பருப்பு போட்டதா போடாததா என்ற சந்தேகம் எழ, சாம்பார் ஆசை போய்விட, காரச்சட்னி கொஞ்சம் காப்பாற்றியது. இரண்டு இட்லியை மெல்ல உள்ளே தள்ளிவிட்டான். இந்தச் சாம்பார் அவனுக்கு பழனிக்கு நடந்து போகும்போது சிங்கப்புணரி தாண்டி திடீரென முளைத்திருக்கும் ஹோட்டல்களில் சாம்பாரின் கொழகொழப்புக்காக பரங்கிப்பழம் சேர்த்து வைத்த சாம்பாரை வேண்டா வெறுப்பாக சாப்பிட்ட ஞாபகத்தை கிளறி விட்டது.
தேங்காய் சட்னி அவனுக்கு எப்பவுமே எட்டிக்காய் என்பதால் அதன் பக்கமே திரும்பவில்லை. நல்லவேளை அதன் சுவை பார்க்காதது என்பதை அறை நண்பர்கள் இங்கு வைக்கும் தேங்காய் சட்னி சாப்பிட்டால் ஊரில் தேங்காய் சட்னி பக்கமே தலை வைத்துப் படுக்க முடியாது என்று பேசுவதை வைத்து அறிந்து கொண்டான்.
எறி கல்லான இட்லியும் சாம்பார் என்ற பெயர் கொண்ட வஸ்துவும் அவனை காலையில் சாத்தரையும் பிஸ்கட்டையும் உணவாக்கிவிட, ஊருக்குப் போனால்தான் இட்லியில் சாம்பாரை ஊற்றிப் பிசைந்ததடிக்க முடிந்தது.
சென்ற முறை ஊரில் இருந்து வரும் போது இட்லி சட்டி வாங்கி வந்தான். கூடவே மனைவியிடம் எப்படி சாம்பார் வைப்பது என்பதையும் படித்துக் கொண்டு வந்து விட்டான்.
ஒரு சுபயோக சுபதினத்தில் இட்லி மாவு பாக்கெட் வாங்கி இட்லி ஊற்றினார்கள்… சாம்பார் இவன் கைவண்ணமே… மலையாளி கடை இட்லி போல் அவ்வளவு கல்லாக இல்லை… அப்புறம் மாவு மாற்றி மாற்றி வாங்கி கடைசியில் கொஞ்சம் மென்மையாக இட்லி வரும் மாவை கண்டு கொண்டான். வாரத்தில் இரண்டு நாள் அதுவே அவன் அறையில் இட்லியாக… அவனின் சாம்பாருக்கும் நண்பர்கள் ரசிகர்களாகிவிட அம்மா, மனைவி கைப்பக்குவம் வரவில்லை என்றாலும் அவனும் பக்குவமாக சமைப்பதாகவே தோன்றியது.
ஷார்ஜாவில் இருக்கும் நண்பனைக் காண வார விடுமுறையில் சென்ற போது அங்கிருக்கும் தமிழ்க் கடைக்கு சாப்பிடக் கூட்டிப் போனான். ‘டேய் அங்க இட்லி நல்லாயிருக்குமா… இல்ல மலையாளி கடை மாதிரித்தான் இருக்குமா..?’ என்று அவனிடம் திரும்பத் திரும்பக் கேட்டதும் ‘டேய் இட்லி பைத்தியம்… சும்மா வாடா… வேற எதுவுமே சாப்பிட இருக்காத மாதிரி இட்லி நல்லாயிருக்குமான்னு… என்னென்னமோ வெரைட்டி இருக்குடா… நீ இன்னும் இட்லியிலயே நிக்கிறே…’ என்று கேலி செய்தான்.
கடையில் சரியான கூட்டம்… இடம் பிடித்து அமர்ந்ததும் எனக்கு இட்லி என்றான்.
இட்லி வந்தது…. ஆஹா… தும்பைப்பூ இட்லி…. பெருங்காயம் மணக்கும் சாம்பார்… அவனுக்குச் சந்தோஷம்.
ஆனியன் தோசை வாங்கிய நண்பன், கிண்ணத்தில் இருந்த சாம்பாரை பெருமாள் கோவில் ஐயர் கரண்டியில் தீர்த்தம் எடுத்து கையில் ஊற்றுவது போல் தோசை மேல் ஊற்றி முள் கரண்டியால் அதை மெல்லப் பிய்த்து மற்றொரு கரண்டியில் எடுத்து வாயில் வைத்தான். என்னடா இவன் தோசையை கையில பிச்சித் தின்னா என்ன… இதென்ன பந்தா என மெல்ல அடுத்த டேபிளைப் பார்த்தான்.
அதில் ஒருவன் இட்லியை கரண்டியால் வெட்டி எடுத்து முள் கரண்டியில் குத்தி சாம்பாரின் நனைத்து வாயில் வைத்துக் கொண்டான். ஒவ்வொருவராய் பார்க்க எல்லாருமே கரண்டியில் கவி பாடிக் கொண்டிருந்தார்கள். என்ன மனிதர்கள். இதிலென்ன ருசி கிடைத்து விடும் என்ற சிந்தனையோடு தன் தட்டில் இருந்த இட்லியையும் அதனருகில் இருந்த கரண்டிகளையும் சிறிய கிண்ணத்தில் இருந்த சாம்பாரையும் சட்னியையும் பார்த்தான்.
‘என்னடா… சாப்பிடுடா… வேறென்ன வேணும்… இப்பவே சொன்னாத்தான்…’ என்றான் நண்பன்.
‘ஏன்டா… நீ இங்கே பொறந்தா வளந்தே… நம்மூருல தோசைய கரண்டியில கட் பண்ணியா சாப்பிட்டே… இதென்ன… புதுசா… இதுல ருசியிருக்குமா…?’ என்றான் மெல்ல.
‘இங்கல்லாம் இப்படித்தான் சாப்பிடணும்… பாரு யாராச்சும் கை வச்சி சாப்பிடுறாங்களா…? டீசென்ஸி மெயிண்டைன் பண்ணனும்…’ என்றான்.
‘நீ டீசன்ஸி மெயிண்டைன் பண்ணிக்க… எனக்கு இட்லியில சாம்பார ஊத்தி பெசஞ்சி சாப்பிட்டாத்தான் ருசிக்கும்’ என்றபடி இட்லியை நல்லா உடைச்சி விட்டு சாம்பாரை அதன் மீது ஊற்றி, சர்வரிடம் மீண்டும் சாம்பார் வாங்கி அதையும் ஊற்றி நல்லாப் பிசைஞ்சி எடுத்து வாயில் வைத்தான்.
‘டேய்… என்னடா…’ என்ற நண்பனை ‘நான் இன்னமும் பூங்குளத்துக்காரன்தான்… எனக்கு இப்படிச் சாப்பிட்டுத்தான் பழக்கம்… ரொம்ப நாளக்கி அப்புறம் எனக்கு வீட்டுச் சாப்பாட்டை ஞாபகப்படுத்துற இட்லியும் சாம்பாரும் கிடைச்சிருக்கு… இதை அனுபவிச்சி சாப்பிடாம… எவனுக்காகவோ எதுக்காகவோ நம்ம இட்லியை தொடாம என்னால சாப்பிட முடியாது…’
‘பட்டிக்காட்டான்னு நினைப்பானுங்கடா…’
‘நினைக்கட்டும்… அடுத்தவன் நினைப்பாங்கிறதுக்காக என்னோட சாப்பாட்டை நான் மாத்திக்க முடியாது… பாத்ரூம்ல அவனுக தொடச்சிப் போட்டுட்டு வர்ற மாதிரி நீயும் பண்ண வேண்டியதுதானே… அங்க மட்டும் ஏன் தண்ணி யூஸ் பண்ணுறே… நீ பாரின் காரனா சாப்பிடு… நான் பட்டிக்காட்டானாவே சாப்பிடுறேன்…’ என்று சிரித்தபடி ‘அண்ணே… இன்னம் ரெண்டு இட்லியும் கூடுதலாச் சாம்பாரும்’ எனச் சத்தமாகச் சொன்னான்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
(2018- கொலுசு மின்னிதழில் வெளியான கதை)
One comment on “சிறுகதை : இட்லி”
rajaram
காலையிலேயே சுடச்சுட இட்லி சாப்பிட்ட மனநிலை, தயிர் வச்சு சாப்பிட்ட அனுபவம் இல்லை. ஒருநாள் அதையும் முயற்சி பண்ணிப் பார்க்கனும்.