ஜெஸிலா பானு
அலாவுதீனுக்கு அற்புத விளக்குக் கிடைத்தது போல் நமக்குக் கிடைத்தால் முதலில் நீங்கள் விளக்கைத் தேய்த்து என்ன கேட்பீர்கள்?
ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? நம் அனைவரிடமும் விளக்கு இருக்கிறதோ இல்லையோ, கேட்டவுடன் நிறைவேற்றிவிடும் பூதம் உள்ளது. ஆனால் அதை நாம் பெரும்பாலான நேரத்தில் சரியாகப் பயன்படுத்துவதில்லை.
நான் பூதம் என்று சொல்வது உங்களுடைய மனவோட்டத்தை, சிந்தனையை, நேர்மறையான எண்ணத்தின் ஆற்றலைப் பற்றிதான்.
ஒரு குறிப்பிட்ட பொருளை அல்லது ஒருவிதமான காரை நீங்கள் வாங்கவேண்டும் என்று ஆழமாக நினைத்துவிட்டால், நீங்கள் எங்கு சென்றாலும் அதனைப் பார்க்க முடியும். அந்தக் கார் உங்கள் கண்களுக்குத் தனித்துத் தெரியும். அப்படியான அனுபவம் உங்களுக்கு உள்ளதா? நான் பிதற்றுவதுபோல் தெரிந்தால் இது உங்களுக்கான கட்டுரையில்லை. படிப்பதை இங்கேயே நிறுத்திவிடலாம். அல்லது ‘ஆம், எனக்கு இப்படி நடந்துள்ளது நான் நினைத்த விஷயத்தை மறுபடியும் மறுபடியும் என் கண்கள் பார்க்கிறது’ என்று தோன்றினால் மட்டும் வாசிக்கத் தொடருங்கள்.
’எதை நீ தேடிக் கொண்டிருக்கிறாயோ, அது உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறது!’ – மௌலானா ரூமி
நாம் மனதால் ஒரு விஷயத்தை எண்ணிவிட்டால் அதனை நாம் இயல்பாக ஈர்க்கத் தொடங்கிவிடுகிறோம். நம் எண்ணத்திற்கு அவ்வளவு வலிமையுள்ளது. என்ன நம்ப முடியவில்லையா? தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்பவரிடம் கேட்டுப் பாருங்கள். உடற்பயிற்சி செய்யும் போது எதையாவது எண்ணிக் கொண்டு உடற்பயிற்சி செய்யாமல் உடல் வலுவுற வேண்டும் என்னும் எண்ணத்துடன் உடற்பயிற்சி செய்தால் அதிகமான பலன்களை விரைவில் பெறலாமென்று உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால்தான் பெரும்பாலான உடற்பயிற்சிக் கூடங்களில் கண்ணாடிகள் சூழ அமைத்துள்ளனர். உடற்பயிற்சி செய்யும்போது கவனம் சிதறாமல் எண்ணம் முழுக்கத் தன் உடல் மீதே இருக்க வேண்டும் என்பதற்காக.
ஒருவரைப் பற்றி யோசித்து முடிக்கும் முன் அவர் அழைக்கிறார் அல்லது உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறார் உடனே ‘ஆயுசு நூறு’ என்பீர்கள். ஆனால் உண்மையில் உங்கள் எண்ணம்தான் அவரைத் தொடர்பு கொண்டு உங்களை அழைக்கத் தூண்டியது என்று சொன்னால் மறுப்பீர்களா?
என்ன இன்னும் நான் சொல்வது திருப்தியானதாகத் தெரியவில்லையா? நம் எண்ணம் எப்படி மற்ற உடல் அணுக்களைக் கட்டுப்படுத்துகிறது என்பதற்கான மற்றொரு உதாரணத்தைச் சொல்கிறேன்.
ஒரு அறையில் நுழையும்போது இருவர் காரசாரமாகச் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சண்டைக்கும் உங்களுக்கும் சிறிதளவும் தொடர்பில்லை, அது எது பற்றிய சச்சரவு என்றும் உங்களுக்குத் தெரியாதிருந்தும் அந்த வாக்குவாதம் உங்களைப் பாதிக்கும், பதட்டமடையச் செய்யும். தேவையற்ற பயம் பற்றிக் கொள்ளும். அதன் காரணம், அந்த இருவரின் மன அதிர்வு, எண்ணவோட்டம் உங்கள் உடல் அணுக்களைப் பாதிப்பதால் ஏற்படுகின்ற நடுக்கம். அந்த அளவுக்கு நம்முடைய எண்ணமானது வலிமையானது, ஆற்றலுடையது.
எப்படி ஒருவர் நமக்குப் பிடித்ததைச் சாப்பிட்டால், அல்லது படத்தில் பார்த்தாலே, அல்லது சுவையான மாங்காய் ஊறுகாய் என்று வாசித்ததுமே வாயில் உமிழ்நீர் ஊறுகிறதோ அதனை இப்போது நீங்கள் விழுங்குகிறீர்களோ, எப்படி ‘குரங்கை நினைக்காதே’ என்று இதனை வாசித்தவுடன் உங்கள் மனத்திரையில் குரங்கு வந்து போனதோ அதேபோல்தான் நாம் நினைத்ததை உடனே நடத்திவிடும் ஆற்றல் படைத்தது நம் எண்ணம்.
’நான் நாளை கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என்று நினைக்கிறேன், உடனே நடந்துவிடுமா?’ என்று வினவினால் இல்லை என்றுதான் சொல்வேன். காரணம் நம்பிக்கை இல்லாமல் வெறும் வார்த்தைகளாக ஆழ்மன எண்ணமில்லாமல் கேட்பது எப்படி நிறைவேறும்?
நம்பிக்கை. அதுதான் அடிப்படை. தான் உடல் நலம் பெற்று வருவதாக ஒருவன் நம்புவதானால் அவனுடைய குருதிக் குழாய்களில் இரத்தம் வேகமாகவும் தங்கு தடையில்லாமல் ஓடுகிறது. அது அவனுடைய உடலில் எல்லாப் பகுதிகளுக்குப் பாய்கிறது அத்தோடு அதிலிருக்கும் பிராணவாயு ஆக்ஸிஜனையும் கொண்டு சேர்த்து நோயை விரட்டியடித்து நலம் வழங்கி விடுகிறது.
அதுவே ஒருவருக்கு ஏக்கமும் துக்கமும் இருக்கும்போது அவருடைய இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்து, குருதி எல்லா இடங்களிலும் பாயாமல் நரம்புகளைத் தளர்ச்சியடையச் செய்வதால் உடலில் பிணிகள் தோன்றுகின்றன.
நீங்கள் ஒருவரைப் பார்த்து ‘என்னப்பா ஒரு மாதிரியா இருக்க, உடல்நிலை சரியில்லையோ?’ என்று கேட்டுப் பாருங்கள். நல்லா இருப்பவரும் ‘அப்படியா தெரியுது, நல்லாதானே இருக்கேன்’ என்பதைச் சந்தேகத்துடன் சொன்னால் அவர் உங்கள் கேள்விக்குள் சிக்கிக் கொண்டார், அவருக்கே அவருடைய உடல்நலன் மீது சந்தேகம் வந்துவிட்டது என்று பொருள். அதுவே திடமாக நம்பிக்கையுடன் ‘இல்லையே நல்லா இருக்கேனே, எனக்கென்ன’ என்று உறுதியாகச் சொல்லும்போது, உண்மையில் உடல் சரியில்லாமல் இருந்தாலும் சரியாகிவிடும் அதிசயத்தைப் பல ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபித்துள்ளனர்.
கவலை என்பது மனிதர்களின் முக அழகைச் சிதைக்கும் சிற்றுளி மட்டுமன்று அது வாழ்வையே அறுத்தொழிக்கும் கொடுவாள். கவலையினாலேயே மனிதர்களின் உதடுகள், கன்னங்கள் தாடைகள் எல்லாம் தங்களின் கனத்தைத் தாங்க இயலாமல் கீழே இழுக்கப்பட்டுத் தொங்குகின்றன என்று கூறுகின்றார் டார்வின்.
அதேபோல் தேவையற்ற பயத்தையும் நீக்கி நல்லெண்ணத்தை அதிகரிக்கும் எண்ணத்தைத் தானாகக் கொண்டு வர வேண்டும். ‘எல்லா இடத்திலும் கொரோனா உள்ளதே,, நமக்கும் வந்துவிடுமோ?’ ‘நிறுவன நிலைமை சரியில்லையே, எல்லாருக்கும் வேலைப் போகுதே, நமக்குப் போய்விட்டால் என்ன செய்வது?’ இப்படியான தேவையற்ற பயம் ஏற்படும்போதெல்லாம் உடனே தவிர்த்து அதைவிட அதிகமாக நல்ல விஷயத்தைச் சிந்திக்கத் தொடங்க வேண்டும். ‘நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், எனக்கு எதுவுமே எப்போதும் ஆகாது’ என்று ஆழ்மனதில் உறுதியாக நம்புதல். ‘நிறுவனமே இல்லாமல் போனாலும், என் திறமைக்கு என்னை அழைத்து வேலை தருவார்கள்’ என்று தன்னம்பிக்கையை ஆழமாக உறுதியாக வலிந்து உருவாக்கி மனதில் விதைத்து அதையே நம்பினால், எதிர்மறையான எண்ணங்கள் துளிர் விடாது. நல்லதே நடக்கும்.
எப்படி சிற்பி தன்னுடைய சிற்றுளியை வைத்து மெது மெதுவாக அடித்துச் செதுக்கி தன் முன் வைக்கப்பட்டிருக்கும் கல் மீது தன்னுடைய மொத்த கவனத்தையும் செலுத்தி, மனத்திலுள்ள படத்தைத் தன்னுடைய கண்ணையும், கருத்தையும், ஒருங்கே செலுத்தி எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் தன் எண்ணத்தில் உள்ளதை எழிலொழுகும் சிற்பமாக வடிக்கிறாரோ அது போல நாமும் நம்முடைய வாழ்வை நம் எண்ணத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், சிறப்பாகச் சிந்தித்தால், திறம்பட யோசித்தால் தேவையின்படி உருவாக்க முடியும்.
எல்லாம் விதிபோல் தான் நடக்கும் என்று வேதாந்தம் பேசி இறைவன் மீது பழி போடுவதைவிட, நோயற்ற வாழ்வின் ஊற்றுக் கண் உள்ளம்தான். உள்ளத்தைத் தூய்மைப் படுத்தி அதில் மகிழ்ச்சி, அமைதி, உண்மை, உடல்நலம் ஆகியவை பற்றிய எண்ணங்களை நிரப்பும்போது உடலே சுவனப் பூங்காவாய் ஆகிவிடும்.
நலம் வாழ வாழ்த்துகள்.
ஜெஸிலா பானு
துபாய்
0 Comments
அன்புள்ள @Jazeela Banu , உங்கள் கட்டுரைத்தொடரின் முதல் பாகத்தைப் படித்து முடித்துவிட்டேன். உங்கள் எழுத்துநடையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கிறது.
அருமை! தொடரின் ஆரம்பமே எண்ணம் போல் வாழ்வென்பதை அழுத்தமாக பதிவிட்டது சிறப்பு. அருமையான கட்டுரை!
Reading ur words super welcome
தொடும் தூரத்தில் தான் உள்ளது தொட்டுவிலாம் என்ற நம்பிக்கை. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள். நன்றி.
வாழ்த்துக்கள். கட்டுரை வரிகள் ஆரோக்கியம் மணம் திடம் அனைத்தும் உள் அடக்கியதாக உள்ளது. நலம் வாழ வாழ்த்துக்கள்
ஆஹா மிக அருமை ஜஸீலா தோழி! ஆம்என்ற கருத்துக்கு உட்பட்டதால் உள்ள நுழைந்தேன். கட்டுரை மிகவும் அருமை, ஆன்மீகத்திலும் மனோ தத்துவத்திலும் சொல்ல கூடிய ஒரு உயரிய கருத்தை இன்றைய சமகால சூழலின் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகின்ற கவிதை மிக அருமை சிறப்பு.
உள்ளத்தை பற்றிய உள்ளது உள்ளபடியான அருமையான தகவல்கள் மிகவும் அருமை வாழ்த்துகள் சகோ
நமது மனத்தை அப்படியே கண்ணாடி போல காண முடிகிறது இந்த கட்டுரையில். தொடர் சூப்பர்.
Super akka masha allah correct ullamtan thuimai
Nice start up Pls Proceed gradually with denser subjects. Best wishes
செயல்கள் அனைத்தும் எண்ணத்தின்படி நடக்கும் என்ற நபி மொழியை நினைவுப்படுத்துகிறது. முற்றிலும் உண்மை
அழகிய கட்டுரை. வாசிக்க பல சிந்தனைகளை தரக் கூடிய எழுத்துக்கள்
மிகவும் அருமையான கட்டுரை தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பதிவு வாழ்த்துகள்
வாழ்க்கைக்குத் தேவையான நல்லதொரு கட்டுரை! என் வாழ்க்கையிலிருந்த இருண்ட பக்கங்கள் அத்தனையும் இதுபோன்ற கட்டுரைகள் தான் ஒளியுறச்செய்திருக்கிறது! எந்தவொரு பின்புலமும் இல்லாத காலகட்டத்தில் என் எண்ணங்களில் உதித்த சிந்தனைகள் தான் இன்று நடந்திருக்கிறது. நாம் எதுவாக நினைக்கிறமோ அதுதான் வாழ்க்கை. அறிவியலும் ஆன்மீகமும் இதைத்தான் வெவ்வேறான வடிவங்களில் சொல்கிறது. சிறப்பு.. தொடர்ந்து எழுதுங்கள்
மிகவும் சிறப்பு வாய்ந்த கட்டுரை சகோதரி வாழ்த்துகள் தொடருங்கள்.
நம் சிந்தனை எதை நோக்கி பயணிக்கிறது அதுவே நாம் ஆகிறோம் இது நாம் தான் உதாரணம்.எனக்கு கொரன வந்துவிடுமோ என்று வெளியே செல்லாமல் வீட்டில் இருந்த சிலருக்கு கொரன வந்தது நான் அருகில் இருந்து பார்த்து இருக்கிறேன். நீங்கல் மேலும்வெற்றி கனியை சுவைக்க துவா பண்றன.
“நலம் வாழ” தொடர் ஆசிரியருக்கு வாழ்த்துகள், சிறப்பான ஆக்கம் நல்ல தொடக்கம். படிக்கும் போது நாகூர் ரூமியின் சில புத்தகங்களை நினைவூட்டியது. எழுத்தின் பாணி அப்படி அமைந்தது போல் ஓர் உணர்வு. அடுத்தடுத்த கட்டூரையையும் வாசிக்க ஆவல். வாழ்த்துகள்.
நேர்மறை சிந்தனைகளை வளர்க்கும் அருமையான கருத்துக்களுடன் அழகிய கட்டுரை. வாழ்த்துகள் ஜஸீலா
வாழ்த்துகள் ஜெஸீலா! அருமையான எழுத்து நடை.. தொடருங்கள்! வாசிக்க..ஆவலுடன் காத்திருக்கிறோம்!!
Nice…. yes u r right mam…
அருமையான கட்டுரை. கேலக்ஸியில் இந்த கட்டுரைத் தொடர் தாங்கள் எழுதுவதற்கு எங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். நற்சிந்தனையும் புதிய பார்வையும் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும். மகிழ்ச்சி. இது தொடர வேண்டும்.
@Rafeeq Sulaiman மிக்க நன்றி. உங்கள் வாழ்த்து உற்சாகத்தை அளித்தது. @பால்கரசு உண்மையாகவா? மிக்க மகிழ்ச்சி. ஒளியுறச் செய்தேன் என்பதே நிறைவு. @ S Sahubar Siddiq தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறது என்ற வார்த்தை எனக்கும் நம்பிக்கையைத் தருகிறது.
@ஆமினா: மிக்க நன்றி @ Noor Fathima Nasreen: நபி வழியில்தானே எல்லாம். நன்றி @ Sasi S Kumar: Thank you. Sure, I will try to do my best. @ Hidhayath Thunisha ஆம். உள்ளமும் எண்ணமும். நன்றி @ Zafar Rahmani மிக்க நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.
@ Rajasekaran மகிழ்ச்சியளிக்கிறது சகோ. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள். @ Prabhavathy Senthil கட்டுரை கவிதை மாதிரி வந்திருக்குன்னு சொல்றீங்க. நன்றி. @ Bismilla Saibudeen S. 100% உண்மை நானும் சாட்சி. மிக்க நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.
@ Manjulayugesh மிக்க நன்றி. தொடர்ந்து வாசித்து எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். @ Sameem Ali மிக்க நன்றி. @ ஜாகிர் உசேன் மிக்க நன்றி. தொடர்ந்து வாசித்து வாழ்த்துகள். @Shajahan M Thank you.
@Rajaram உங்கள் எண்ணம்போல் தொடர்ந்து வாசியுங்கள் @ Mohaideen Batcha மிக்க நன்றி. மகிழ்ச்சி. தொடர்ந்து வாசியுங்கள். @SURESH BABU எழுத்து நடையில் என்ன மாற்றம் என்று தெரியவில்லை. எனக்குப் பிடித்த தலைப்பில் எழுதுவதால் ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம்.
@Sameera Thank you dear. Keep reading. @ஸ்டார்ஜன் ஷேக் மிக்க நன்றி. நேரான சிந்தனையிலேயே உலாவுவோம். தொடர்ந்து வாசியுங்கள். @பாலாஜி பாஸ்கரன் மகிழ்ச்சி. இது தொடரும். நம்புங்கள்.
Very nice message about positive thoughts. The examples which ever given was really awesome. Each and every person might have faced in there routine life. Yes it’s very true what we think we will become. In my life i too achieved CMIOSH certification
எண்ணமே வாழ்வு . ஆரம்பமே அருமை. விடுபட்டதை தொடர்ந்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன். தொடரட்டும் தங்களது எழுத்தாளுமை !