(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்)
அத்தியாயம் – 10
நடந்தது:
தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறுகிறார். லதாவிடம் மீண்டும் விசாரிக்கச் செல்லும் பொன்னம்பலம் வைர மோதிரம் குறித்து விசாரிக்கிறார்.
நடப்பது:
பொன்னம்பலம் அந்த மோதிரத்தைப் பார்க்கவும் “சார் இதுவா சார்…?” என்றாள் லதா.
“ஆமா… இதே மோதிரம்தான்… எனக்கு அந்த போட்டோ வேணும்” என்றபடி அதை தனக்கு அனுப்பிக் கொண்டார்.
“ஆனா எங்க தர்ஷிகா அம்மா அன்னைக்கு இங்க வரலியே சார்… யாராச்சும் அவங்க மேல பலி போட மோதிரத்தை களவாண்டு கொண்டாந்து போட்டிருக்கலாம்…”
“இங்க வந்தாங்களா… வரலையா… களவாண்டு போட்டாங்களான்னு நாங்க பாத்துக்கிறோம்… ஆமா உங்க தர்ஷிகா அம்மா இங்க அடிக்கடி வருவாங்களா?”
“ஐயாவோட எப்பவாச்சும் வருவாங்க… பிரண்ட்ஸ்ங்க கூட ஊர் சுத்திப்பாக்க வந்தா இங்க தங்குவாங்க…”
“ஓ… ஆமா… கொலை நடந்தன்னைக்கு கேட்டதுக்கு ஐயா மாசத்துல மூணு நாள்தான் வருவாரு… அப்பத்தான் வேலையின்னு எல்லாரும் சொன்னீங்க… இப்ப அவரு பொண்ணு வரும்ன்னு சொல்றே… எதையோ மறைக்கிறே போல…”
“சத்தியமா இல்லை சார்… எனக்கு ஐயா வரும்போதுதான் வேலை…. தர்ஷிகா அம்மா ஐயாவோட வந்தப்போ நான் பாத்திருக்கேன்… மற்றபடி ஊரு சுத்திப்பாக்க வந்தா அங்க தங்குவாங்க… சாப்பாடெல்லாம் வெளியதான்… ரெத்தினண்ணந்தான் அவங்க வந்திருக்காங்கன்னு சொல்லும்…”
“ம்… சரி நான் வந்து மோதிரம் பற்றி விசாரிச்சதை யாருக்கிட்டயும் சொல்லக்கூடாது… குறிப்பாக உங்க தர்ஷிகா அம்மாக்கிட்ட… சரியா..?”
“பெத்த அப்பாவை அது கொல்லுமா சார்.. பாவம் சார்… யாரோ பழி போட்டிருக்காங்க..”
“பாக்கலாம்… இன்னும் ரெண்டு நாள்ல யாருன்னு தெரிஞ்சிரும்ல்ல…” என்று எழுந்தவர், “இங்கரு… கீச்சு மூச்சின்னு கத்துனேன்னு வச்சிக்க… நீதான் அவளுக்கு உதவுனேன்னு சொல்லி ஸ்டேசன்ல அம்மணமா உக்கார வச்சிருவேன்… ஜாக்கிரதை…” என்று அவளின் கணவனிடம் கர்ஜிக்க, அவன் பேசாமல் அமர்ந்திருந்தான்.
“அய்யே… சார்… அது அப்புராணி… எங்கிட்ட நீங்க வேகமாப் பேசவும் கோவத்துல அப்புடிக் கேட்டுருச்சு… அதை எதுவும் பண்ணிடாதீங்க சார்…” கையெடுத்துக் கும்பிட்டாள் லதா.
சுகுமாரனுக்கு போன் பண்ணி “சார்… அவரு ஏதோ நாட்டு மருந்து ஸ்பெஷலா தயார்ப்பண்ணி சாப்பிடுவாராம்… அது நல்லா தூக்கம் வருமாம்… சோ ஆழ்ந்த தூக்கத்துக்கு அதுகூட காரணமாக இருக்கலாம்.” என்றார்.
“என்னய்யா… வேற ஒண்ணும் தேறலையாக்கும்… அதான் தெரிஞ்சதுதானே…” எதிர்முனையில் சுகுமாரன் சிரித்தார்.
“கிடைச்சிருக்கு சார்… “
“என்ன கிடைச்சிருக்கா… என்னய்யா.. சொல்லுய்யா… சொல்லு… ” சுகுமாரன் பரபரத்தார்.
“இப்பத்தான் சிரிச்சீங்க… அதுக்குள்ள பதர்றீங்க…” என்றவர் “சார்… ஒரு வைர மோதிரம் கிடந்ததுன்னு பிட்டைப் போட்டுப் பார்த்தேன்… நான் லேசா ஆரம்பிக்க அவளே உள்ளே வந்தாள்.. அந்த மோதிரம் தர்ஷிகாவோடதுன்னு சொன்னா, நானும் போட்டோ பார்த்தேன்.”
“அட ஏன்ய்யா… இதுல என்ன சிக்கியிருக்கு…? வைரமோதிரம் நம்மக்கிட்ட சிக்கலை… அப்புறம் பொய் சொல்லி என்னாகப் போகுது…”
‘மோதிரம் எங்கிட்ட இருக்கே’ அப்படின்னு சொல்ல நினைத்து அதை அப்படியே விழுங்கிவிட்டு “சார்… அந்த தர்ஷிகா இங்க வந்தபோது கையில மோதிரம் பாத்தீங்களா?” என்று கேட்டார்.
“அதை எவன்யா பார்த்தான்”
“அதானே…”
“யோவ் நீ வேற… நமக்கு எதுவுமே தெரியாம எப்படி அதைப் பற்றி யோசிக்க முடியும்”
“ம்… சரித்தான்”
“அவ போட்டாந்தாளா இல்லையான்னு தெரியலை… அதுபோக வைர மோதிரம்ன்னா விட்டுட்டுப் போயிருப்பாங்களா… வீட்டையே தொடச்சி தேடியிருக்க மாட்டாங்க… அட ஏய்யா நீ வேற…” என்றதும் ‘அதுசரி அப்ப இது வைரம்தானா…?’ என்ற யோசனை அவருக்குள் எழுந்தது.
“நல்லா யோசிங்க சார்…”
“அட என்னத்தையா யோசிக்க… மோதிரம்…?” என கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தவர், “அட என்னய்யா நீ வேற… மோதிரம் ஞாபகம் வரலைய்யா… என்னென்னமோ ஞாபகத்துல வருது… அவளுந்தான் கையி காலையா பாக்குற மாதிரியா இருந்தா… அவளைப் பார்த்தாலே கண்ணு…..” பேச்சை நிறுத்தினார்.
“உங்க கண்ணு போனதைத்தான் நானும் பார்த்தேனே… என்ன பேச்சு பாதியில நின்னுருச்சி… பக்கத்துல திருமதி.சுகுமாரனா…? அதான்… பொட்டிப் பாம்பாயிட்டீங்க… உங்களுக்கு ஞாபகம் இல்லைதானே…”
“ம்… ஆமா… சரி சொல்லுய்யா…?”
“எனக்கென்னவோ அவ கையில மோதிரம் இருந்த மாதிரித் தெரியலை…”
“உண்மையாவா…?”
“ஷ்யூர்ன்னு சொல்ல முடியாது… ஆனா கையில மோதிரம் இல்லைன்னு மனசு சொல்லுது…”
“மனசு சொல்லுது… ம….” வார்த்தையை முடிக்குமுன் பொன்னம்பலம் “சார்” என்று கத்தினார்.
“அட மத்தவன் சொல்றான்னு சொல்ல வந்தேன்யா…”
“நீங்க என்ன சொல்ல வந்தீங்கன்னு தெரியும்… அதை விடுங்க… நம்ம டார்க்கெட் இப்ப தர்ஷிகா…”
“என்னய்யா நீ வயல்ல மாடு மேஞ்சுச்சுன்னா மாட்டுக்காரனோட சண்டைக்குப் போகலாம்… மாடே மேயாம சண்டைக்குப் போகணுங்கிறே… ரெண்டு நாளைக்கு முன்னாடி மேஞ்சிச்சான்னு யோசிக்கச் சொல்றே… அதையும் வயல்ல போயி பாத்துட்டு வரலாங்கிறே… அட போய்யா….”
“சார்… நீங்க மதுரை போகணுமின்னு சொன்னீங்கதானே…?”
“ஆமா… போயி அங்க ஏதாவது தேறுதான்னு பாப்போம்ன்னு சொன்னேன்…”
“நாளைக்கே அந்த வேலையாப் போறோம்… அப்படியே மோதிர மேட்டர் விசாரிக்கிறோம்…”
“நாளைக்கா….? நாமளா…?”
“ஏன் சார் அலருறீங்க… நாமதான் போறோம்…”
“போவலாம்ய்யா… அனா டிபார்ட்மெண்ட்ல அதுக்கு பேசாம லோக்கல் போலீசுக்கிட்ட சொல்லி விசாரிக்கலாமேண்னு சொல்வாங்க… வீணாவுல ஏதுக்குய்யா சிக்கல்…”
“ஒரு சிக்கலும் இல்லை… அபீசியலா போக வேண்டாம்… அன் அபீசியலா போய் விசாரிச்சுட்டு வருவோம்… அவதான்னு கன்பார்ம் ஆனா அதுக்கு அப்புறம் லோக்கல் போலீசைக் கூப்பிட்டுக்கலாம்….”
“ம்… ஆனா நாளைக்கு வேண்டாம்… சொந்த பந்தமின்னு எல்லாம் இருக்கும்… அழுகையும் ஒப்பாரியுமா இருக்கும்… இந்த வார சனி, ஞாயிறுல போகலாம்ய்யா.”
“ஓகே… அதுவும் சரிதான்… ஆனா கொலையாளி சுதாரிக்கும் முன்னே நாம அங்கிருக்கணும்…”
“இப்ப இங்க யாருய்யா கொலையாளி… சும்மா போறோம்… சரியா… நீயே பில்டப் பண்ணுறே… ஏய்யா… மோதிரம் கீதிரம் எடுத்தியாய்யா…”
“அட போங்க சார்… நீங்க வேற…. சரி சார்… நாளைக்குப் பார்ப்போம்…”
தணிகாசலம் வீட்டில்…
“வாங்க சார்… என்ன திடீர்ன்னு… ஏதாவது விவரம் கிடைச்சதா?” எதிர்கொண்டபடி கேட்டான் வருண்.
“அதான் இங்க வந்திருக்கோம்… சீக்கிரம் பிடிச்சிடலாம்…”
“என்ன சொல்றீங்க…? எனக்குப் புரியலை…” என்று வருண் சொன்னபோது மாடியில் இருந்து இறங்கி வந்தாள் தர்ஷிகா.
அவளைப் பார்த்ததும் பொன்னம்பலம் கண்கள் அவளின் விரலைத் தேடின மோதிரம் பார்க்க…
வலது கையால் முன் விழுந்த முடியை பின்னால் தள்ளினாள்.
அவர் தனது கண்களை லென்ஸ் ஆக்கி மோதிர விரலை மட்டும் பார்த்தார்.
அங்கே….
மோதிரம் இல்லை.
நன்றி : படம் இணையத்திலிருந்து
(வெள்ளிக்கிழமை – விசாரணை தொடரும்)