கல்பனா சன்னாசி
எழுத்தாளர் கல்பனா சன்னாசி – சென்னைக்காரரான இவர் தீவிர வாசிப்பாளர் மற்றும் வாழ்வியலை மையமாக வைத்துச் சிறுகதைகள் எழுதி வருபவர். ‘தங்கச்சி கல்யாணம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளிவந்திருக்கிறது. சென்ற ஆண்டு கேலக்ஸி நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதைகளுடன் புத்தகத்தில் இடம்பெறத் தேர்வாகி, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட ‘தோப்பு’ சிறுகதைத் தொகுப்பில் இவரின் ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ என்னும் சிறுகதையும் ஒன்று. இவரின் முதல் நாவலை கேலக்ஸியில் தொடராய் வெளியிடுவதில் கேலக்ஸி மகிழ்கிறது.
*********
கோர்ட் வளாகம் வழக்கமான பரபரப்போடு கிடந்தது. கறுப்பு கோட் அணிந்த வக்கீல்களின் அலப்பறை அன்றைக்கு கொஞ்சம் அதிகமே.
‘குடும்ப நல நீதிமன்றம்’ என்ற பெயர்ப் பலகையை மாட்டிக் கொண்டிருந்த அந்தக் கட்டிடத்தின் முன்புறம் நின்று கொண்டிருந்தாள் சுப்ரியா.
அருகில் அவளின் அம்மா சாவித்ரி. புடவைத் தலைப்பால் கண்களையும் மூக்கையும் மாறி மாறித் துடைத்தபடி விசும்பிக் கொண்டிருந்தாள்.
அவமானமாக இருந்தது சுப்ரியாவுக்கு.
“அம்மா, அழாதேம்மா” – அடிக்குரலில் அம்மாவிடம் கிசுகிசுத்தாள்.
விசுக்கென நிமிர்ந்தாள் சாவித்ரி.
“எப்டிடீ அழாம இருக்கிறது? என் ஒரே பொண்ணு நீ. உன் வாழ்க்கை இப்டி தாறுமாறா கிழிபட்டு விவாகரத்து வரைக்கும் வந்து நிக்குது. அழாம என்ன பண்ண சொல்றே? நீ இப்டி கலங்கி நிக்கிறதைப் பாக்கவா உன்னைப் பொத்தி பொத்தி வளத்தேன்?”
மூக்கை சற்று அதிகமாகவே உறிஞ்சினாள் சாவித்ரி.
அம்மா கூறியதைக் கேட்டதும் சுப்ரியாவின் பார்வை அனிச்சையாக சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த அஷோக்கின் மேல் படிந்தது.
அம்மாவின் பேச்சு அவன் காதில் கேட்டிருக்குமோ? கேட்டால் என்ன நினைப்பான்?
இந்த விவாகரத்தால் என்னவோ சுப்ரியாவின் வாழ்க்கை ஒரேயடியாக அஸ்தமித்துவிட்டது மாதிரியும், அதற்காக அவள் கலங்கிக் கிடப்பது மாதிரியும் நினைத்துக்கொண்டால்?
கூடாது. அப்படி அவன் நினைக்க இடம் தரக் கூடாது.
“என்னம்மா பேசறே நீ?” சட்டென தன் குரலை வேண்டுமென்றே உயர்த்திப் பேசினாள் சுப்ரியா.
“இனிமேதான் எனக்கு சந்தோஷமே. இதோ ஆச்சு, இந்த விவாகரத்து முடிவாயிடுச்சின்னா என்னைப் பிடிச்ச சனி விட்டுது. அப்புறம் நிம்மதியா இருக்கலாம். எந்த தொல்லையும் இல்லை.”
சுப்ரியாவின் பேச்சு அஷோக்கை பாதித்ததோ இல்லையோ அவனருகில் நின்று கொண்டிருந்த அவன் அப்பா சுந்தரேசனை ரொம்பவே உசுப்பிவிட்டது.
அவரும் பதிலுக்கு ஜாடையாகப் பேசத் தொடங்கினார்.
“நீ ஒண்ணும் கவலைப்படாதே அஷோக். நீ ஆம்பளை. ராஜாடா. இந்த விவாகரத்து உன்னை ஒண்ணும் செஞ்சிடாது. இனிமேதான் நீ நல்லா இருக்கப் போறே பாரு.”
“ஆமாம்ப்பா. இனிமேதான் என் வாழ்க்கை நல்லாருக்கப் போவுது”, என்றான் அஷோக்கும் – குரலில் வன்மம் தெறிக்க.
அஷோக்கின் பேச்சு சுப்ரியாவின் காதுகளையும் உரசவே செய்தது.
அவள் அம்மாவோ, அஷோக் மற்றும் அவன் அப்பாவின் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில் உசுப்பப்பட்டாள்.
ஜாடை – மாடை பேச்சை விடுத்து தடாலென்று நேரடியாகவே களத்தில் குதித்தாள்.
“உங்க பிள்ளை மட்டும்தான் ராஜாவா? என் பொண்ணும்தான் ராணி. மகாராணி. உங்கப் பிள்ளையை தலை முழுகினாலே அவளுக்கு நல்ல காலம்தான். ஆனா, அவ இல்லாம உங்கப் புள்ளை வாழ்க்கைதான் சீரழியப் போவுது.”
உக்கிரமானார் சுந்தரேசன்.
“உன் பொண்ணு மட்டும்தான் பொம்பளையா? உலகத்துல வேற பொண்ணுங்களே இல்லியா? உம் பொண்ணைவிட நல்லப் பொண்ணாப் பாத்து எம் பையனுக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணப் போறேன். நீயும் உம் பொண்ணும் அவன் சந்தோஷத்தைப் பாத்து வயிறு எரியப் போறீங்கப் பாரு.”
“உம் மகனுக்கு மட்டும்தான் பொண்ணு கிடைக்குமா? என் பொண்ணுக்கென்ன குறைச்சல்? நல்லாப் படிச்சிருக்கா. கை நிறைய சம்பாதிக்கிறா. அவளுக்கா மாப்பிள்ளை கிடைக்காது? உன் மகனை விட நல்லவன் ஒருத்தன் என் மகளுக்கு கிடைக்காமலாப் போயிடுவான்?” – சாவித்ரியும் பதிலுக்கு எகிறினாள்.
பேச்சு, பேச்சுக்கு பதில் பேச்சு என நிலவரம் கலவரமாகிவிடும் போல் தெரிந்தது.
அதற்குள், மூடியிருந்த அந்த அறைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த அந்த சிப்பந்தி, “அஷோக் – சுப்ரியா யாரு?”
“நான்தான்“ – அஷோக்
“இதோ” – சுப்ரியா.
‘உள்ளேன் ஐயா’ சொல்லாத குறையாக அஷோக்கும் சுப்ரியாவும் அந்த சிப்பந்தியைப் பார்த்து தலையசைக்க, அவர், “உள்ளே போங்க”, என்று கை காட்டினார்.
இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.
“உக்காருங்க”, கொஞ்சம் கீச்சுக் குரலில் பேசினார் அந்தக் குடும்ப நல நீதி மன்றத்தின் பெண் நீதிபதி.
இருவரையும் பார்த்து –
“நீங்கதான் மிஸ்டர் அஷோக்கா?”
“ஆமாம்.”
“நீங்கதான் சுப்ரியாவா?”
“ம்.”
“ரெண்டு பேரும் விவாகரத்து கேட்ருக்கீங்களா?”
“ஆமாம்”, என்றார்கள் கோரஸாக.
“ஏன்? என்னப் ப்ரச்சனை?” இயந்திரத்தனமாக விசாரித்தார் அந்தப் பெண் நீதிபதி.
ஒரு நாளைக்கு அவர் இது போல் எத்தனை பேரை சந்திக்கிறாரோ?
அவரின் கேள்விக்கு அஷோக், சுப்ரியா இருவருமே மௌனம் காத்தனர்.
“இப்டி பேசாம இருந்தா என்ன அர்த்தம்? நீங்க சொல்லுங்க அஷோக். என்னப் ப்ரச்சனை உங்களுக்குள்ள?”
“இனிமே நாங்க ஒண்ணா வாழுறது அசாத்தியம். விவாகரத்து கொடுத்துடுங்க..” என்றான் அஷோக். உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்த ஆழமான குரலில்.
பாவி! பாவி! ஐ லவ் யூ ஐ லவ் யூ என்று உருகி உருகி காதலித்தவன் எப்படி பேசுகிறான்?
சுப்ரியாவின் மனம் பொருமியது.
“நீ என்னம்மா சொல்றே?”
“அதேதான் மேடம். என்னால் இனிமே இவரோட சேந்து வாழ முடியாது. டைவர்ஸ் கொடுத்துருங்க”, என்றாள் சுப்ரியா.
“அப்டியா? ம்யூச்சுவல் கன்செண்ட்டு…” முணுமுணுத்தார் நீதிபதி.
“ஆமா, உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகுது?”
“ஆறு மாசம்..”
“ஆறே மாசமா? அதுக்குள்ள என்னம்மா சிக்கல்? அடிச்சாரா? புடிச்சாரா? குடி கிடின்னு ஏதாவது?” நீதிபதியின் கேள்வி சுப்ரியாவை நோக்கி வீசப்பட்டது.
“அப்டி எதுவும் இல்லை மேடம்.”
“பின்னே? வேற பொண்ணு ஏதாவது தொடர்பு அது இதுன்னு..”
“அதெல்லாம் இல்லை மேடம்.”
“அப்புறம் ஏன் விவாகரத்து?” சுப்ரியாவை வினவிய நீதிபதி அவள் மௌனம் காக்க, அஷோக்கை ஏறிட்டார்.
“பாக்க நல்லாப் படிச்சவங்க மாதிரி தெரியுறீங்க? உங்க ப்ரச்சனையை நீங்கப் பேசித் தீத்துக்க வேண்டியதுதானே?”
இருவரும் மறுபடி நீண்டதொரு அழுத்தமான மௌனத்திற்கு சென்றார்கள்.
நீதிபதி தொடர்ந்தார்:
““நீங்க கேக்றீங்கங்கிறதுக்காக சட்டுனு எல்லாம் டைவர்ஸ் கொடுத்துட முடியாது. கல்யாணம் ஆகி ஒரு வருஷமாவது ஆகியிருக்கணும். இல்லேன்னாலும் நீங்க மினிமம் நாலஞ்சு கவுன்சிலிங் செஷனாவது அட்டெண்ட் பண்ண வேண்டியிருக்கும். அதெல்லாம் எப்ப என்னன்னு டீடெயில்ஸ் உங்களுக்கு சொல்வாங்க. கேட்டுக்குங்க”, என்ற அந்த நீதிபதி, “நீங்க போலாம்”, பைலை மூடினார். “நெக்ஸ்ட் யாருப்பா?”
வெளியே வந்த அஷோக்கும், சுப்ரியாவும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி இரு வேறு திசைகளில் விலகி நடந்தனர்.
***
வீட்டிற்குள் நுழைந்ததும், சாவித்ரி மகளிடம் –
“விடும்மா. எல்லாம் நல்லதுக்குதான். நீ வேணாப் பாரேன். எப்டி எல்லாம் நீ சந்தோஷமா வாழப்போறேன்னு”, என்றாள் மகளைத் தேற்றும் விதமாக.
ஏதும் பேசாமல். கைப்பையை மேசையில் கடாசிய சுப்ரியா ஆயாசமானாள். சட்டென்று ஒரு மயக்கத்துக்குப் போனாள்.
தடாலென்று சரிந்து தரையில் மடங்கி விழுந்தாள்.
“அய்யோ..! சுப்ரியா..! என்னம்மா ஆச்சு?” என அலறினாள் சாவித்ரி.
நன்றி : படம் இணையத்திலிருந்து
சனிக்கிழமை ‘காதல் திருவிழா’ தொடரும்
2 comments on “காதல் திருவிழா”
rajaram
அடுத்தடுத்த தொடரை வாசிக்க தூண்டும் தொடக்கம் அருமை!
Kalpana Sanyasi
ஆரம்ப வாழ்த்துகளுக்கு ஆயிரம் நன்றிகள் சார்! அன்புடன் - கல்பனா சன்யாசி