தொடர்கதை : காதல் திருவிழா

அத்தியாயம் : 2

கல்பனா சன்னாசி

முதல் அத்தியாயம் வாசிக்க : அத்தியாயம்-1

******************************

ருத்துவமனைக்கே உரிய பிரத்யேகமான ஒரு வினோத வாசனை அந்த அறையையும் விட்டு வைக்கவில்லை. அறைக்குள்ளிருந்த கட்டிலில் அறுந்து விழுந்த கொடியாக துவண்டு கிடந்தாள் சுப்ரியா.

மயக்கம் தெளிந்திருந்தது. ஆனாலும் முகம் முழுக்க சோர்வு.

“சாதாரண மயக்கம்தான். பயப்படறதுக்கு ஒண்ணுமில்லை.”

சுப்ரியாவின் கையைப் பிடித்து, மார்பின் மேல் ஸ்டெத்தை வைத்துப் பரிசோதித்தபடியே கூறினார் லேடி டாக்டர்.

சுப்ரியா வழக்கமாக பார்க்கும் தெரிந்த டாக்டர்தான்.

“அப்புறம்? சுப்ரியா..! மாதாந்திர பீரிய்ட்ஸ் எல்லாம் ஒழுங்கா இருக்கா..?”

“இந்த மாசம் கொஞ்சம் தள்ளிப் போயிருக்கு டாக்டர்.”

“நினைச்சேன். சந்தேகப்பட்டது சரியாதன் இருக்கு. எத்தனை நாளாச்சு?”

“நாப்பது… நாப்பத்தஞ்சு..”

“அதான் விஷயம். நீ கர்ப்பமா இருக்கேன்னு நினைக்கிறேன் சுப்ரியா.”

டாக்டரின் குரல் அருகில் இருந்த சாவித்ரியின் தலையில் இடியாக இறங்கியது.

“என்ன சொல்றீங்க டாக்டர்?”

“ஆமாம்மா. நீங்க பாட்டியாகப் போறீங்க. உங்க மகள் தாயாகப் போறாங்க. எதுக்கும் டெஸ்ட் எல்லாம் எடுத்துறலாம். அதுல கன்ஃபர்மா தெரிஞ்சிடும்.”

“டாக்டர், நிஜமாவே நான் கர்ப்பமா?”

சுப்ரியாவின் கேள்வியில் ஒரு விதமான தயக்கம்.

“அதான் சொன்னேனே சுப்ரியா. அப்படித்தான் நினைக்கிறேன். எதுக்கும் டெஸ்ட் எல்லாம் எடுத்து பாத்துரலாம். டெஸ்ட் ரிப்போர்ட்டோட நாளைக்கு என்னை வந்துப் பாருங்க. இப்ப் நீங்க வீட்டுக்குப் போலாம்”, என்ற லேடி டாக்டர்,

“அப்புறம் சுப்ரியா, உங்க ஹஸ்பெண்ட் எங்கே? நீ இங்க மயக்கமா இருக்கே, அவர் எங்கே ஆளையேக் காணோம்? உனக்கொண்ணுன்னா பதறிடுவாரே மிஸ்டர் அஷோக்? அஷோக்தானே உன் கணவர் பேரு?”

“அது.. அவர் ஊருக்குப் போயிருக்கார்”, என்றாள் சுப்ரியா தீனமாக.

“ஓ.. ஓகே. சரி, இந்த டெஸ்ட்ஸ் எல்லாம் எடுத்திருங்க. நர்ஸ்கிட்ட சொல்றேன். உதவி பண்ணுவாங்க. டெஸ்ட் முடிச்சிட்டு வீட்டுக்குப் போய் ஓய்வெடுங்க. நாளைக்கு டெஸ்ட் ரிப்போர்ட் ரெடியாகிடும். கலெக்ட் பண்ணிகிட்டு என்னை வந்துப் பாரு. டேக் கேர்”, என்றபடி வெளியேறினார் டாக்டர்.

“அய்யோ சுப்ரியா. என்னடி இது சோதனை? அந்த டாக்டரம்மா என்ன இப்டி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டுப் போறா?” அரற்றினாள் சாவித்ரி.

“சும்மா இரும்மா. நீ வேற பீதியைக் கிளப்பாதே. அதான் டெஸ்ட் எடுக்கணும்னு சொன்னாங்க இல்ல? அதுக்குள்ள நீ ஏன் கலவரப்படுத்துறே?”

“இல்லடி சுப்ரியா. அப்டி ஏதாவது ஒண்ணுன்னா…”

சாவித்ரி மேலே பேசத் தொடங்குவதற்குள் ஒரு நர்ஸ் அறைக்குள் நுழைந்தாள்.

“சுப்ரியா நீங்கதானே? எங்கூட வாங்க. சில டெஸ்ட் எல்லாம் எடுக்கணும்.”

சுப்ரியா அந்த நர்ஸின் பின்னால் சென்றாள். அவளின் மனம் நிறைய குழப்பங்கள். அச்சங்கள்.

எல்லா டெஸ்ட்டுகளும் முடிந்து அம்மாவும் மகளும் வீடு திரும்பினார்கள்.

டெஸ்ட் ரிப்போர்ட் அடுத்த நாள் தருவதாக சொல்லிவிட்டார்கள் அந்த கிளினிக்கில்.

ரிசல்ட் என்னவாக இருக்கும் என்று யோசித்து யோசித்து குழம்பத் தொடங்கினாள் சாவித்ரி.

வீடு வந்ததும் களைப்பில் சுப்ரியா அறைக்குள் தஞ்சமடைய, சாவிதிரிக்கோ இறுப்பு கொள்ளவில்லை.

“கடவுளே, எம் மக கர்ப்பமா இருக்கக் கூடாது. விவாகரத்து விஷயம் நடந்துகிட்டு இருக்கப்ப இந்த சிக்கலை அவளுக்குத் தராதே ஆண்டவா”, மகளை நினைத்து இறைவனுக்கு மனு போட்டது சாவித்ரியின் மனது.

என்ன செய்வது ஏது செய்வது என்று பதறினாள்..

உடனே அண்ணன் பாலசிங்கத்திடம் பேச வேண்டும் போலிருந்தது. அலைபேசியை கையில் எடுத்து காதுக்கு கொடுத்தாள்.

“என்னம்மா சாவித்ரி? கோர்ட்லேருந்து வந்தாச்சா? என்ன சொன்னாங்க அங்கே? என்ன சமாச்சாரம்?” பாலசிங்கத்தின் குரலில் அதீத ஆர்வம். பரபரப்பு.

“அது.. அது… அதை விடுண்ணே. நான் வேற ஒரு முக்கியமான விஷயமா உனக்கு போன் பண்றேன்.”

“வேற முக்கியமான விஷயமா? இப்ப நமக்கு சுப்ரியாவோட விவாகரத்துதானே முக்கியமான விஷயம்? அதைவிட பெரிசா வேறென்ன சமாச்சாரம் இருந்துடப் போவுது?”

“இருக்கக் கூடாதுன்னுதான் நானும் நினைக்கிறேன். ஆனா இருக்கும் போலிருக்குண்ணே.”

“புதிர் போடாம புரியற மாதிரி சொல்லு சாவித்ரி.”

“சுப்ரியா கர்ப்பமா இருக்காண்ணே.”

“எ-ன்-ன-து?” பாலசிங்கம் ஒரேயடியாக அதிர்ந்தார்.

அவர் இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவரது கனவுக் கோட்டை சரிவது மாதிரி இருந்தது.

இதற்காகவா இத்தனை பாடு? எவ்வளவு திட்டம் போட்டோம்? எல்லாம் வீணாகி விடுமா?

தன் மகன் கேசவன் – சுப்ரியா கல்யாணம் நான் நினைத்தபடி நடக்காதோ? மனதை கவலை அரித்தது.

“என்ன பண்றதுன்னு புரியலேண்ணே. இடி மேல இடியா விழுது. எப்டி சமாளிக்கிறதுன்னே தெரியல. நாம ஒண்ணு நினைச்சா நடக்கிறது வேற ஒண்ணா இருக்கு. ஏன் தான் என் மகளுக்கு இப்டியெல்லாம் நடக்குதோ?”

எதிர் முனையில் சாவித்ரி புலம்பிக் கொண்டிருக்க, பாலசிங்கம் பரபரவென்று யோசித்தார்.

எப்படி? எப்படி? என்ன செய்யலாம்? நான் போட்ட திட்டங்கள் கை நழுவிப் போக விடமாட்டேன்.

சட்டென்று சொன்னர்.

“கருவைக் கலைச்சிடு சாவித்ரி.”

அண்ணன் சொல்வது சரியென்றே தோன்றியது சாவித்ரிக்கு.

அஷோக்கை மறந்து சுப்ரியா புது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ அவள் வயிற்றில் உருவாகி இருக்கும் கருவை அழித்தேயாக வேண்டும்.

இது பற்றி சுப்ரியாவிடம் உடனே பேசிவிட வேண்டும். தீர்மானித்தாள்.

***

சுப்ரியா, இந்தா, இந்தப் பாலைக் குடிச்சிட்டுப் படு”, கட்டில் மேல் தளர்ந்து கிடந்த மகளை நெருங்கினாள் சாவித்ரி.

“வேண்டாம்மா.”

“கொஞ்சம் குடிம்மா.”

“இல்லைம்மா. வேண்டாம்.”

“நீ இன்னும் டாக்டரம்மா சொன்னதையே நினைச்சிகிட்டு இருக்கியா? கவலைப்படாதே சுப்ரியா. ப்ரச்சனைன்னு ஒண்ணு இருந்தா அதுக்கு தீர்வுன்னு ஒண்ணு இல்லாமலா போயிடும்?”

சுப்ரியா மௌனம் காத்தாள்.

மகளின் தலையை மெதுவாக வருடிய சாவித்ரி, “நீ புத்திசாலி பொண்ணு. உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. ப்ரச்சனையை ஆரம்பத்திலியே நறுக்கிடறதுதான் எல்லாத்துக்கும் நல்லது.”

“என்னம்மா சொல்றே?” திரும்பினாள் சுப்ரியா.

“கருவைக் கலைச்சிடு சுப்ரியா.”

மகளின் தாடையைப் பிடித்தாள் சாவித்ரி.

சுப்ரியா எதுவும் பேசவில்லை.

அவள் மனத்தில் ஓடிய எண்ணங்கள் முகத்தில் கவலை ரேகைகளாக வெளிப்பட்டன.

“முதல்ல ரிசல்ட் வரட்டும்மா”, என்று மட்டும் சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டாள்.

உறக்கம் வரமாட்டேன் என்று அழுத்தமாக அடம் பிடித்தது.

***

ரு வழியாகப் பொழுது விடிந்தது.

“பாத்துப் போ சுப்ரியா. ஆட்டோவில் போ. டாக்டர் என்ன சொன்னாங்கன்னு எனக்கு உடனே போன் பண்ணி சொல்லு. என்ன? சரியா?”

மகளை அனுப்பிவிட்டு அவளிடமிருந்து வரப்போகும் தகவல் சொல்லும் தொலைபேசி அழைப்புக்காக காத்திருக்கத் தொடங்கினாள் சாவித்ரி.

0 Comments

  1. rajaram

    நாமும் காத்திருப்போம், சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது.

  2. Kalpana Sanyasi

    வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றிகள் சார்! அன்புடன் – கல்பனா சன்யாசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *