ஆசிரியர் பேராசியர் முனைவர் மு.பழனி இராகுலதாசன்
லெனின் நினைவு நூற்றாண்டு வெளியீடாக காலம் பதிப்பகத்தில் வந்திருக்கும் எனது பேராசான் மு.பழனி இராகுலதாசன் அவர்களின் மிகச் சிறிய புத்தகம் இது.
இச்சிறுநூல் லெனின் என்னும் சாதாரண மனிதரை நமக்கு மிக அழகாக, அருமையாக அறிமுகம் செய்கிறது.
குராயூர் எரியீட்டி என்னும் அழகன் வாத்தியார் அவர்கள் தனது நூன்முகத்தில் ‘பாடகர் தபோய் என்பவர், எவரது சிந்தனைகள் எப்போதும் மக்களுடனே இருக்கின்றனவோ, அவர் தான் மனிதன் என்ற கௌரவமிக்க பெயருக்குத் தகுதியானவர் புகழாரம் சூட்டுகிறார். தோழர் லெனினுடன் நெருங்கிப் பழகிய தோழர் கிளாரா ஸெத்கின் என் நினைவுகளில் லெனின் என்ற தமது நூலில், மகத்தான தலைவர் என்பதன் மாண்பும் இசைவுடன் இணைந்து பொருந்தியதன் முத்திரை லெனினுடைய குணத்தில் பதிந்துள்ளது என்கிறார்.
மேலும் அப்படிப்பட்ட மனிதன் உண்டா? உண்டென அறிமுகப்படுத்துகிறார் அன்பு நண்பர் முனைவர் மு.பழனி இராகுலதான் என்று சொல்லியிருக்கிறார்.
36 பக்கங்களைக் கொண்ட இச்சிறுநூலில் சின்னச் சின்ன செய்திகளாக எட்டுக் குறிப்புகள் இருக்கின்றன.
முதல் குறிப்பில் இருக்கும் ரால்ப் ஃபாக்ஸ் எழுதிய லெனின் வரலாற்று நூலில் உள்ள ‘லெனின் ஒரு மனிதரைப் போன்ற மனிதர்; அவரது அனைத்துப் பண்புகளையும் குணாம்சங்களையும் அறிந்து கொள்ள அதுவே போதும், அதுவே சாலும்’ என்ற வரிகள் லெனின் என்ற மனிதர் யார் என்பதைச் சொல்லி விடுகிறது.
நாட்டு மக்களுக்கு என்ன உணவு கிடைத்ததோ அதைத்தான் தானும் தன் குடும்பமும் சாப்பிட வேண்டும். மக்களுக்கு எந்த அளவு ரேசன் அனுமதிக்கப்படுகிறதோ அதே அளவுதான் தன் குடும்பத்துக்கும் அனுமதிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்திருக்கிறார்.
தன்னைச் சுற்றி இருப்பவர்கள் உரையாடும் போது அவர்கள் எப்படிப் பேசுவார்கள், எதை நோக்கிப் பேசுவார்கள் என்பதை லெனின் மிக விரைவாக எளிதாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவராக இருந்திருக்கிறார்.
கடித எழுதுதல் என்பதை லெனின் ஒரு கடைமையாகவே மேற்கொண்டிருக்கிறார்.
தன்னைப் பற்றி யாராவது புகழ்ந்து பேச ஆரம்பித்தால் அதைச் சகித்துக் கொள்ளமாட்டார்.
தன்னைச் சந்திக்க வருபவர்கள் தன்னிடம் நேரம் தெரிவித்து, உறுதிப்படுத்திக் கொண்டு வரவேண்டும் என்பதில் எத்தனை கறாராக இருப்பாரோ அதேபோல் அவர்களுக்கு சொன்ன நேரத்தில் அதற்கு முன் வந்தவருடனான உரையாயல் முடியாதபட்சத்தில் தனது செயலாளர் மூலம் தங்களைக் காத்திருக்க வைத்ததற்கு மன்னியுங்கள் எனக் கேட்டுக் கொள்வார்.
இது போன்ற நாம் அறியாத செய்திகள் சின்னச் சின்ன நிகழ்வுகளுடன், அழகிய படங்களுடன் மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
பேராசான் மு.பழனி இராகுலதாசனின் தேடலே இது போன்ற புத்தகங்களைக் கொண்டு வர முக்கியக் காரணமாகும்.
இந்நூலை அவர் திரு. இரா. நல்லகண்ணு அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார்.
மிகச் சிறப்பான புத்தகம்.
———————————
அவர் தான் மனிதர்
மு.பழனி இராகுலதான்
காலம் வெளியீடு
பக்கம் – 36, விலை : 40
———————————
-பரிவை சே.குமார்.