மயக்கம் என்ன-
மலையாள எழுத்தாளர் கீதா மோகன் எழுதிய ‘மத்து’ என்னும் சிறுகதைத் தொகுப்பை எழுத்தாளர் ஜெஸிலா பானு அவர்கள் ‘மயக்கம் என்ன’ என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்த நூலை கேலக்ஸி பதிப்பகம் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டது.
இதில் இருக்கும் கதைகள் அனைத்தும் பெண்ணின் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கதைகளையே கதாபாத்திரம் சொல்வதாய் எழுதியிருக்கிறார். மொழிமாற்றம் என்பது உறுத்தாத மொழியில் இருப்பது, குறிப்பாக அப்படியே மாற்றாமல் கதையை உள்வாங்கி எழுதியிருப்பது மிகச் சிறப்பு.
மலையாளத்தில் இக்கதைகளை எழுதிய எழுத்தாளர் கீதா மோகன் அவர்கள், முப்பது வருடங்களுக்கு மேலாக ஷார்ஜாவில் இருந்தாலும் இத்தொகுப்பில் இருக்கும் கடைசிக் கதை தவிர்த்து – அது கூட அவர் வாழ்வில் நிகழ்ந்ததுதான் – மற்றவை எல்லாமே கேரளத்துக்குள்தான் சுற்றி வருகிறது.
தனது எண்ணங்களாய் கீதா மோகன், ‘மத்து என்ற எனது மலையாள சிறுகதைத் தொகுப்பை, அதிலுள்ள கதைகள் கதை வடிவில் இல்லாவிட்டாலும், சிறியதாக இருந்தாலும், பல மலையாள மக்கள் அதனை ரசித்தனர், விரும்பினர்’ என்று சொல்லியிருக்கிறார். ஆம்… எல்லாமே சிறிய சிறிய கதைகள்தான்… அது போக கதைகள் எதுவுமே சிறுகதை வடிவத்துக்கு வரவில்லை என்றாலும் ‘சிறு’ கதைகளாக இருந்தாலும் பெண்களின் பார்வையில் ஒவ்வொரு கதையும் நகரும் விதத்தில் வாசிப்பவரை ஈர்த்துக் கொள்ளும்.
‘காதல், நட்பு, இழப்பு மற்றும் மீட்பு ஆகிய கருப்பொருட்கள் மூலம், ஒவ்வொரு கதைக் களத்தையும் தனித்துவமான கதாபாத்திரங்களைக் கொண்டு உயிர்ப்பித்திருக்கிறார்.’ என்றும் ‘ஒரு இளம்பெண் தன் பள்ளிக் காதல் உணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தாலும் சரி, ஒரு வயதான ஜோடி தங்கள் இளம் வயது காதலைப் பற்றி நினைவு கூர்வதாய் இருந்தாலும் சரி, அல்லது ஒரு பெண் தன் நாயின் விசுவாசத்தில் ஆறுதல் காண்பதாக இருந்தாலும் சரி, எல்லாமே உணர்வு ரீதியான கதைக் களங்கள். வாழ்க்கையின் சவால்கள் நம்மை எப்படிச் செதுக்குகின்றன, நெறிப்படுத்துகின்றன என்பதற்கான நினைவூட்டல்களாக ஒவ்வொரு சம்பவங்களும் விரிகின்றன’ என்றும் மொழிமாற்றம் செய்த எழுத்தாளர் ஜெஸிலா பானு அவர்கள் ‘மனதிலிருந்து’ என்ற தனது எண்ண உரையில் சொல்லியிருப்பதுதான் கதைகள் பேசும் களமாக இருக்கின்றன.
முதல் கதையான காக்க காக்க கடவுள் காக்க, திருமணமாகிப் பல வருடங்களுக்குப் பின் கல்லூரி நண்பனுடன் போனில் பேச, அரட்டை அடிக்க ஆரம்பித்திருக்கும் பெண் தான் அதிகம் நேசிக்கும் கணவனின் திடீர் வருகையால் எங்கே அவர் தன் போனில் இருக்கும் வாட்சப் செய்திகள், போன் வந்த நம்பர்களைப் பார்த்திருவாரோ எனப் பயப்படுவதாய் நகர்கிறது. ‘அன்புள்ள அப்பா’ என்னும் கதையில் கதை அப்பா, மகள் உறவு பற்றியும், ‘மயக்கம் என்ன’ என்னும் கதை கல்லூரிப் பெண் விரும்பும் பைத்தியக்காரனைப் பற்றியும், ‘தெய்வம்’ என்னும் கதை சாமி வேசம் கட்டுபவர்களுக்கு அப்போது இருக்கும் மரியாதை, வேசத்தைக் களைத்தபின் இருக்கும் மரியாதை பற்றியும் பேசுகிறது.
இதேபோல் ‘கிளிக்கூண்டு கம்மல்’ தற்கொலை செய்து கொண்ட தோழி பற்றியும், ‘உடல் மாற்றம்’ ஒரு பெண்ணின் பருவ மாற்றத்தையும் அதன் காரணமாக ஒருவன் மீது ஏற்படும் விருப்பத்தையும் பற்றிப் பேசுகிறது. மேலும் ‘காதலாகி’, ‘நன்றியுள்ள நாய்’, ‘இரண்டு பெண்கள்’, ‘கள்ள நாணயம்’, ‘பெண்ணின் மனம்’, ‘காலத்தால் மாறிய கோலம்’, ‘உற்சாகம்’, ‘காதல் பிச்சை’, ‘பார்வை ஒன்றே போதுமே’, ‘அவன்தான் அவர்’, ‘உன்னியின் பிறந்தநாள்’, ‘அவள் அப்படித்தான்’, ‘அம்மு அக்கா’ என எல்லாக் கதைகளுமே ஏதோ ஒரு சிறு விசயத்தை எடுத்துக் கொண்டு பேசியிருக்கின்றன. பெரும்பாலான கதைகளில் காதலும், விருப்பமுமே பிரதானமாய் சொல்லப்பட்டிருக்கிறது.
இருபதாவது கதை எழுத்தாளரின் அனுபவப் பகிர்வு தான் பார்த்திராத தனது தோழியின் கண் தெரியாத அப்பா, தன் மீது கொண்டிருக்கும் பாசத்தையும், அவரின் இறப்புக்கு முன் தன்னைப் பற்றிக் கேட்ட விபரத்தையும், ஷார்ஜாவில் ஒரு மழை இரவில் அவர் வந்து அழைப்பது போன்ற நினைவுகளின் ஊடே, தன் கணவர் அவர் குறித்து எழுதி வைத்த குறிப்புக்களும் தன் நினைவுகளுக்குமான தொடர்பைப் பற்றிப் பேசியிருக்கிறது. இந்தத் தொகுப்பில் இருக்கும் மொத்தக் கதைகளில் நம்மை ஈர்த்துக் கொள்ளும் கதையாக, மனதுக்கு நெருக்கமான கதையாக, அதுவும் இந்தக் கட்டுரையை எழுதிய போன வாரத்தில் இருந்த எனது மனநிலைக்குப் பொருந்திப் போகும் கதையாக இருந்தது.
சின்னச் சின்ன கதைகள் என்றாலும் நறுக்கெனச் சொல்லாமல் நளினமாய்ச் சொல்லியிருப்பதால் கீதா மோகன் சொன்னது போல் சிறுகதை வடிவத்துக்குள் வரவில்லை. நன்றியுள்ள் நாய், உன்னியின் பிறந்த நாள் போன்ற கதைகள் ரொம்பச் சாதாரணமாகத்தான் நகர்கின்றன.
கூகிள் மொழி மாற்றி பயன்படுத்தி அப்படியே தமிழ் படுத்தி நம்மைப் படுத்தாமல் மலையாள எழுத்தாளரிடம் ஒவ்வொரு பாராவையும் பற்றி விபரமாய் கேட்டு, தன் எண்ணத்தில் தோன்றியதை, மலையாளக் கதைக் களத்தை விட்டு விலகாமல், தமிழ் மொழியின் சிறப்போடு மிக நேர்த்தியாக, எழுதியிருக்கும் எழுத்தாளர் ஜெஸிலா பானு அவர்களுக்கு வாழ்த்துகள்.
ஒவ்வொரு கதைக்கும் பொருத்தமாய் அழகான ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது சிறப்பு. ஓவியம் வரைந்த ஜோஷி மாங்காட்டு கதைகளுக்கு தன் தூரிகையால் அழகு சேர்த்திருக்கிறார்.
‘மயக்கம் என்ன’ என்னும் இந்நூல் வாசிப்பதற்கு சுவராஸ்யமான கதைகள் கொண்ட நூல்.
——————————————-
மயக்க என்ன
மலையாளத்தில் : கீதா மோகன்
தமிழில் : ஜெஸிலா பானு
கேலக்ஸி பதிப்பகம்
பக்கம் : 100
விலை : ரூ. 140
——————————————-
-பரிவை சே.குமார்.