ராஜாராம்
மூன்று வருடங்களுக்கு முன் ஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்கு கடைசி தினத்திற்கு முந்தைய தினம் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட பெரும்பாலான புத்தகங்கள் விற்றுப் போய் விட்டன.
மிகப்பெரிய அளவில் நடக்கும் சர்வதேச புத்தக கண்காட்சியில் பெரிய அரண்மனைக்கு ஒற்றைச் சாளரம் போல….தமிழுக்கென ஒரே ஒரு கடை மட்டும். ‘கல் தோன்றா…’ எனப் பெருமைப்படும் மொழிக்கு அதுவாவது கிடைத்ததே எனச் சந்தோசப்பட்டுக் கொண்டேன்.
யாவரும் பதிப்பகத் தோழர் ஜீவகரிகாலன் அவர்கள் “நான்காம் சுவர்” புத்தகத்தை கொடுத்து ‘இதப்படிங்க…’என்றார். அதன்பிறகு பத்து நிமிடங்கள் பேசிக் கொண்டோம்.
இதுவரை பலமுறை படித்து விட்டேன், இன்னமும் படிப்பேன்.
ஒவ்வொரு கட்டுரையைப் படிக்கும்போது விழிகள் கசிகிறது.
ஒவ்வொரு கட்டுரையை வாசிக்கும் போதும் என்னைக் கனமாக்கிய, நெகிழச் செய்த இடங்களில் பின் அட்டையில் உள்ள தோழர் பாக்கியம் சங்கரின் நிழற்படத்தை அவ்வப்போது பார்த்துகொண்டேன்.
இக்கட்டுரைகளில் வரும் மாந்தர்கள் எல்லோரும் ஆளுமைகள். சகோதரர் திருப்பாலில் தொடங்கி…மைலோ என்ற மயில்வாகனன், உலகுக்கு விளையாடுகிற கலையை கற்றுக் கொடுத்த தொம்பரக் கூத்தாடி வகையறா பாபுஜீ, விலைமாதுச் சகோதரி கல்யாணி, ‘ஏடுகுண்டலவாடா…வெங்கட் ரமணா…’ என்று சொல்லிக் சாக்கடைக்குள் இறங்கும் ஐயா மாலகொண்டையா, ஸ்ரீராமுலு, தன் பிள்ளையை நன்றாக படிக்கவைத்து நல்ல வாசனையான வேலைக்கு அனுப்ப நினைக்கும் அண்ணன் மன்னாரு, எங்கெங்கோ நாங்க அள்ளுகிற குப்பையை எங்ககிட்டயே, எங்க தலையிலையே கொட்டி வியாதியையும், நாற்றத்தையும் பரப்பும் சிறைக்காடுகளில் போராடும் மாகாளியான மகாதேவி அக்காவும், தனக்காக வாழ்கிறவர் முகம் இறந்தபின் கருத்துப்போகும், ஆனால் பிரகாசமாய் மின்னிய சாண்டோ ராஜ் வாத்தியாரின் முகங்கண்டு கலங்கி நின்ற மாசாணம், சுதாம்மாவாக மாறிப்போன செந்தில், தாய்க்கே தாயான உச்சம், தன் மனைவி ஜானகியின் கண் பார்வைக்காக மூன்று வருடமாக சேமித்து வைத்த பணத்தை திருடிச் சென்றதை வருத்தமாகவும், திரும்பவும் பாடி சம்பாதித்து சேமித்து விடுவேன்…அதற்குள் என் குரல் போகாமல் இருக்க வேண்டும் நான் பார்க்காவிட்டாலும் என் மனைவி என் முகத்தை பார்க்க வேண்டும் சார் என்றபோதும்…நாங்க பிச்சைக்காரங்க இல்லை சார் பாடகர்கள் என்ற போதும் லோகநாதன் அண்ணன் மனக்கண்ணில் தெரிகிறார்.
ஒரே சுவரொட்டியில் வைரம் அவர்களின் நிலையே மாறிப்போன சோகம்..மனநலம் பாதிக்கப்பட்டு குணமான குணா அண்ணன் வீட்டுக்கு வந்தபோது தான் இறந்து போனவன் என்று மனைவி சொல்லி வைத்திருப்பதும், அதற்கான சூழலை இச்சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் கண்மூடித்தனமான எண்ணங்களையும், தன் மகளை மணக்கோலத்தில் கண்டு கலங்கும் குணா அண்ணன் நம் இதயத்தை கனமாக்குகிறார்.
கடற்கழுகு… எப்போது ஒருநிலம் வாழவே தகுதியில்லாமல் போகுதோ அப்போது கடற்கழுகு இனமும் அழியும்…எதனால் தகுதியை இழந்தது அந்நிலம் அதற்காக போராடும் தேசப்பனும், வள்ளியம்மாளும், இராசிக்கார நாரோயில்(நாகர்கோயில்) கிட்ணா ஊருக்கே இராசியை வழங்குகிறார்.குடியால் மடிந்து விழுந்து பின்னர் அன்பாலும் அரவணைப்பாலும் எழும் கால்பந்தாட்ட வீரர் மெஸி. அதுபோல எந்த சூழலிலும் தன்நிலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாரி வழங்கும் கொடை வள்ளலாக சேகரண்ணன், இரவல் கார் வாங்கி வந்திருப்பதை வாசிக்கும்போது கலங்கித்தான் போனேன்.
நாடோடிகளின் வாழ்க்கையைச் சொல்லும் “காற்றில் மிதக்கும் கூடாரம்” என்ற கட்டுரையில் குறவர்களின் இறப்பு தெரியாமலே போகிறதே, அது போல இந்நாடோடி வாழ்வில் இவர்களை நிலமின்றி பஞ்ச பராரிகளாக நாம் வைத்திருக்கிறோமே இதற்கெல்லாம் நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம் என கேள்விகள் துளைக்கிறது. தொண்டன்(அடிமட்ட) தொண்டனாகவே வாழ்ந்து அவன் குடும்பமும் கடைசிவரை போஸ்டர்கள் ஒட்டுவதற்கும், தொண்டை கிழிய கத்துவதற்குமே வாழ்நாள் முடிந்து விடுகிறதென கடைசிவரை நம் முதுகுதான் இவனுகளுக்கு நாற்காலி இதை எந்த தலைவனும் சிந்திப்பதே இல்லை பூகம்பம் போல், பச்சக்கிளிபோல தொண்டர்கள் இருக்கும்வரை அச்சிந்தையும் வராது.
துக்கத்தை பழகுதலில் கண்ணம்மாவுக்காக தோழர் பாக்கியம் சங்கர் கிட்டத்தட்ட மருத்துவமனையில் கர்ப்பிணியாகவே வலம் வருகிறார். .
டிஸோசா அண்ணனை வாசிக்கும்போது எங்கள் ஊரில் உள்ள நாதன் அண்ணனை நினைத்துக் கொண்டேன் தலைவர் படம் ரிலீஸ் ஆகிறதென்றால் விடிய…விடிய சரக்கும் வரைவதும்தான் அதிசயபிறவி படம் வந்த சமயம் தியேட்டர் வாசலிலேயே வைத்து ஒரு கட் அவுட் வரைந்து கொண்டிருந்தார், அப்போது ஒருவர் யோவ் போதை ஓவராயிருச்சா…(லைட்டான போததான்)
..ம்மால ஒழுங்கா மட்டும் படம் வரல தியேட்டர் வாசல்லயே பொதச்சிருவேன் என்றார்…ஏனென்று பார்த்தால் தலைவர் படத்தை தலைகீழாக பிடித்திருந்தார் நாதன். அங்கு நின்றிருந்தவர்கள் மாப்ள…ஒங்கட் அவுட் வெளங்கினாப்லதான்… எனச் சிரித்தார்கள். யாராரோ ஏதேதோ பேசினாலும் ப்ரெஷ் வெளையாடுது நாதன் கையில… ரெண்டரை மணி இருக்கும் கட் அவுட்ட நேரா நிமித்துனா தலைவர் சும்மா இடுப்புல கைய வச்சுகிட்டு ஜம்முனு நிக்கிறாரு. அவ்வளவு பேரும் அசந்துட்டோம் அவ்வளவு நேர்த்தி அதுதான் தியேட்டர் நுழைவாயிலில் வைக்கப்பட்டது.
“வெட்டுக்காரர்கள்” வாழ்வியல் மண்ணில் பிறக்கும் குழந்தை, முனுசாமியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது சென்செம்மா ஒரு பிரசவம் பார்த்து விடுகிறார், அங்குள்ள யாருமே எந்தவித பதட்டமுமில்லாமல் அவ்வளவு ஏன் பிறக்கிற குழந்தையின் தகப்பன் மீனை ஆய்ந்து கொண்டிருப்பதும் தங்களது வாழ்வை உட்காருகிற இடத்தில் பிறந்து, போகிற ஊர்ல செத்து, பொதச்சுட்டு போயிக்கிட்டே இருப்போமென சாதாரணமாக கடந்து போகின்றனர்.
தண்டவாளங்களில் விழும் பிணங்களை தூக்கும் “பாடிமேன்” தருமன் விபத்தில் கையும் காலும் எங்கே எப்படி விழுகுமென தெரியாமல் பிணத்தின் கையை தேடி அதை ஒரு நாய் கவ்விக்கொண்டு ஓட அதனிடமிருந்து அக்கையை பறித்து அக்கைவிரலில் உள்ள மோதிரத்தை போலீஸ்காரர்களுக்கு தெரியாமல் அப்பிணத்தின் உரிமையாளரிடம் கொடுப்பதென ஒருநாள் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் இப்படித்தான் நகர்த்தி தன் பிள்ளைகளை இன்ஜினியராக படிக்க வைக்கிறார்.
டி எம் எஸ் போலவே பாடும் மாரி… சுனாமியில் தன் குடும்பத்தை பறிகொடுத்த பாம்பு நாகராஜ் சுனாமி தினத்தன்று கடலுக்கு சென்று பூ வாங்கி போடவும், கடலை வணங்கவும் மறப்பதில்லை…வாரிக்கிட்டு போன கடலுக்கு பூ வாங்கி போடனுங்குற என்றவுடன் நம்ம போட்ட குப்பையை நம்மகிட்டையே வந்து கொடுத்துட்டு நம்மள எச்சரிக்கை பண்ணிட்டுப் போச்சுடா என்று தேசம்மாவை வணங்குகிறார்.
இவர்களைத் தொடந்து ஜம்பு, குமாரி, குட்டைக்கையன் ரோகியான பரமேஸ்வரனுக்கு கடிதம் எழுதிக் கொடுக்கும்போது கலங்கித்தான் போனேன். இவர்களைப்போல கருணை பிரகாசம், ஜோகி, கிரிஜா நான்காம் சுவரில் வாழும் சிறை இல்ல வாசிகள் விடுதலைக்குப்பின் அவர்களின் வாழ்க்கை சமூகம் பார்க்கும் பார்வையென பல ஆளுமைகளை கொண்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம்.
இதில் ஆசிரியர் தோழர் பாக்கியம் சங்கர் தன் நிலம், தன் மக்கள் தன்னைச் சுற்றியுள்ள தனக்கான மனிதர்கள் யாரை எழுத வேண்டுமோ அவர்களின் வாழ்வியல், சந்தோசம், கஷ்டம் அழுகை, உறக்கம், உணவு, இருப்பிடம் எனப் பரவலாய் எல்லா விளிம்புநிலை மனிதர்களையும் எழுதியுள்ளார்.
பொற்காலம் படத்தில் ‘எந்தங்கச்சிக்கு ராசா மாதிரி மாப்பிள்ளை பாக்கனும், ராசா மாதிரி பார்க்கனும் சொன்னியே உங்கூடவே திரிஞ்ச எனக்கு குடுக்கனும்னு நினைக்கல பாத்தியா? ஏன்னா உங்கூடவே திரியிறதுனாலே என்னையை ரெம்ப சாதாரணமா நினைச்சு மனுசனாக்கூட நினைக்கல’ என்று சொல்லும் வடிவேலுவின் அந்த வசனம் பல அர்த்தங்களை வெளிப்படுத்தும். அதேபோல நம் அருகில் இல்லாத எங்கோ வாசித்த, யாரோ சொன்னவர்களை மிகப்பெரிய ஆளுமையாக கொண்டாடுகிறோம். துக்கம், துர்நாற்றம், சாக்கடை, பிணம், என்று நம் வாழ்வோடு பிண்ணிப் பிணைந்து இருக்கும் மனிதர்களை கொண்டாட மறக்க கூடாது என்பதைச் சொல்லும் பொட்டிலடிக்கும் கட்டுரைகளின் தொகுப்புத்தான் நான்காம் சுவர்.
வாசிக்க அருமையான படைப்பு.
வாழ்த்தும் பேரன்பும் தோழர் பாக்கியம் சங்கருக்கு.
இப்புத்தகத்தை பரிந்துரைத்த தோழர் ஜீவகரிகாலன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஆனந்த விகடனில் 2018 ஆகஸ்ட் 29 முதல் 2019 மே 8 வரை தொடராக வந்தது.
——————–
நான்காம் சுவர்
பாக்கியம் சங்கர்
யாவரும் பதிப்பகம்
விலை ரூ. 340
புத்தகம் வாங்க: https://galaxybs.com/shop/essay-and-articles/ideology/naangaam-suvar/
நன்றி : படம் இணையத்திலிருந்து