அத்தியாயம் 1
ஆர்.வி.சரவணன்
எழுத்தாளர் ஆர்.வி .சரவணன் அவர்களின் சொந்த ஊர் கும்பகோணம். பணி நிமித்தம் சென்னையில் இருக்கிறார். தற்போது முகநூலில் தொடர்ந்து எழுதி வரும் இவர் இளமை எழுதும் கவிதை நீ…., திருமண ஒத்திகை என்ற இரு நாவல்களை வெளியிட்டுள்ளார். (திருமண ஒத்திகை நாவல் பாக்யா வார இதழில் தொடர்கதையாக வெளி வந்து சிறப்பான வரவேற்பைப் பெற்றது.) கல்கி, குமுதம், குங்குமம், தினமணிக்கதிர் என வார, மாத இதழ்களில் இவரது சிறுகதைகள் இதுவரை 9 சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது. சினிமா என்பது இவருக்கு பொழுதுபோக்கு மட்டுமல்ல. அதில் ஒரு கதாசிரியராக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். கே.பாக்யராஜ் திரைப்படங்களைப் பற்றி ‘இது நம்ம பாக்யராஜ்’ என்ற தலைப்பில் முகநூலில் 35 அத்தியாயங்கள் வரை சினிமா கட்டுரை எழுதி இருக்கிறார். அரியாசனம் என்ற நாவலை தற்போது எழுதி வருகிறார். முகநூலுக்கு முன் குடந்தையூர் என்னும் வலைப்பூவில் கதை, கட்டுரைகள் எழுதி வந்தார். இவர் கேலக்ஸியில் ‘தொடத்தொட தொடர்கதை நீ’ என்ற தொடர்கதையை எழுதியுள்ளார். கேலக்ஸியின் முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டியில் நடுவர்களில் ஒருவராய் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். இந்தத் தொடரை கேல்க்ஸிகென்றே எழுதியிருக்கிறார். வாசித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
********
இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் சம்பவங்கள் கற்பனையே. யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல.
********
“நீங்க காதலிச்சிருக்கீங்களா?”
“இல்லீங்க.”
“இல்லியா ” இண்டர்வியூ செய்த பெண் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக அவனை பார்த்தாள்.
“எஸ்”
“ஏன்?”
” எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல”
” நீங்க டைரக்ட் பண்ண முதல் படத்தோட பெயர் “இதன் பெயர் காதல்”. படம் ரிலீசாகி பட்டைய கிளப்பி வசூல் வேட்டையாடிட்டிருக்கு. படம் முழுக்கவே காதலை கசக்கி பிழிஞ்சு காயப் போட்டிருக்கீங்க. காதலிக்கிறவங்களும் சரி காதலை வெறுக்கிறவங்களும் சரி உங்க படத்தை கொண்டாடிட்டு இருக்காங்க. காதல்ல இன்ட்ரெஸ்ட் இல்லாம இப்படி ஒரு படத்தை எப்படி உங்களால கொடுக்க முடிஞ்சுது?”
இந்த கேள்வி அபத்தம் என்று தோன்றியது . ஆகவே சற்று நிதானித்த இயக்குனர் மதன் தான் அமர்ந்திருந்த சோபாவில் இன்னும் சௌகரியமாக உட்கார்ந்து கொண்ட படி பதில் சொன்னான்.
” அடுத்து நான் எடுக்க போறது ஒரு ஆக்சன் படம். இந்த படத்துல நாயகன் மூன்று கொலை வரைக்கும் பண்றாரு. அதை டீடெய்லாவே படத்தில் தரப்போறேன். இதுக்கு முன் அனுபவம் தேவையிருக்கும்னு நினைக்கறீங்களா”
“ஓ . சரி சரி.” என்று சிரித்த படி ஜகா வாங்கிய அந்த பெண் , ” முதல் படம் சக்ஸஸ்புல்லா கொடுத்திட்டீங்க. உங்க மேல எதிர்பார்ப்பு ஜாஸ்தியாகிடுச்சு. ரெண்டாவது படமும் இது போல சக்சஸ் பண்ணிடுவீங்களா..?”
” வாழ்க்கைல வர்ற எல்லா தருணங்களும் முன்னாடியே தெரிய வர்றதில்ல. உழைப்பை கொடுப்போம். அந்தந்த நேரம் வர்றப்ப அது தெரிய வரும்”.
” இதை உங்களுக்கு கான்பிடன்ஸ் இல்லேங்கிற மாதிரி எடுத்துக்கலாமா..?”
மதனின் மூச்சுக்காற்று உஷ்ணமானது.
” உங்க சேனல்ல சில வருசங்களுக்கு முன்னே வெப் சீரிஸ் இயக்க வாய்ப்பு கேட்டு வந்திருந்தேன். அன்பிட்னு சொல்லி அனுப்பிட்டாங்க. இப்ப திரைப்படம் மூலம் என் திறமைய உலகத்துக்கு தெரியப்படுத்திட்டேன். இப்ப உங்க சேனலுக்கு ஒரு மனிதனின் திறமைய எடை போடற அளவு கான்பிடன்ஸ் இல்லேனு எடுத்துக்கலாமா.”
அந்த பெண் இதற்கு தடுமாறினாள். பட்டென்று டாபிக் மாற்றினாள்.
“சரி . உங்க கல்யாணம் லவ் மேரேஜா… அரேஞ்சுடு மேரேஜா… தெரியலியேனு மட்டும் சொல்லிடாதீங்க.” போலியாய் சிரித்தாள்.
“அரேஞ்சுடு மேரேஜ்”
செல் போனில் சேனல் இன்டர்வியூவை பார்த்து கொண்டிருந்த நண்பன் விக்கி விரல் தொட்டு நிறுத்திய படி சொன்னான்.
“நல்ல வேளை. எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லேனு நீ சொல்லல.”
“சொல்லிருந்தா..?”
” திருமணம் வேண்டாங்கிறாரே காதல் தோல்வியா அல்லது ஆண்மையற்றவராங்கிற மாதிரி டைட்டில் வச்சு யூடியூபில உன்னை ஓட்டியிருப்பாங்க.”
“ஹா….ஹா” கார் ஓட்டி கொண்டிருந்த மதன் சிரித்த படி தலையாட்டினான்.
டோல்கேட் நெருங்கிய போது அறிவிப்பு பலகை பொள்ளாச்சி 100 கிலோ மீட்டர் என்று காட்டியது.
“எப்படியும் மூணு மணி நேரமாவது ஆகிரும்”
“சாப்பாட்டுக்கு நிறுத்தற டயத்தையும் சேர்த்து தானே சொல்றே..?”
தலையாட்டிய விக்கி,
” சொல்ல மறந்துட்டேனே. காலையில நாம கிளம்பறப்ப உங்கம்மா எனக்கு கொடுத்த அசைன்மெண்ட் என்ன தெரியுமா? அடுத்த படத்துக்கு கதை எழுதறோம்னு பொள்ளாச்சி பங்களாவுக்கு போறீங்க. கதை எழுதிட்டு வர்றீங்களோ இல்லியோ எனக்கு கவலையில்லே. என் பையன் கல்யாணத்துக்கு ஓகே சொல்லணும். சொல்லல. உன்னை தான் வெளுத்தெடுப்பேன்னு சொன்னாங்க”
” அவங்களுக்கு வேற வேலை இல்லே”
“அவங்க கடமைய முடிக்கணும்னு ஆசைப்படறாங்க. அவங்களுக்காகவாவது பண்ணிக்கயேன்.”
“கல்யாணம் பண்ணிட்டா மனைவி குழந்தைகளை பார்க்கணும். இப்ப 24 மணி நேரமும் சினிமா சினிமானு இருக்கிற என்னோட டயம் அதுல பாதியா குறைஞ்சிடும்.”
காரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.
“80 க்கு மேலே போகாதடா”
“இதை எங்கப்பா சொன்னாரா..?”
” அவரா. வேற ஒண்ணு சொன்னாரு . முதல் படம் சக்ஸ்புல்லா கொடுத்தாச்சேனு அசட்டையா இருக்காம கூத்தடிக்காம ஒழுங்கா கதை எழுதிட்டு வர்ற வேலைய மட்டும் பாருங்கனு சொன்னாரு.”
திரும்பி நண்பனை பார்த்த மதன் கிண்டலாக கேட்டான்.
“இதே அப்பா முதல் படம் நான் பண்ண போறப்போ என்ன சொன்னாரு.”
“சினிமாலாம் சாதாரண விசயமில்லை 15 வருசமா பீல்டுல தயாரிப்பாளரா இருக்கிற என்னாலயே தாக்கு பிடிக்க முடியல. உன்னாலே இதெல்லாம் முடியாதுனு சொன்னாரு.” மதனின் அப்பா சொல்வது போலவே விக்கி சொன்னான்.
“இப்ப சேனல் சேனலா உட்கார்ந்து பெருமையா பேட்டி கொடுக்கிறாரு”
மதன் சொல்லி கொண்டே வேகம் குறைத்து சாலையோரம் இருந்த அந்த ஹை கிளாஸ் உணவகமொன்றில் நிறுத்தினான். இறங்கி இருவரும் உள் நுழைய ஏசி முகத்தில் அறைந்து அவர்களை வரவேற்றது.
கூட்டமாய் இருந்த டேபிள்களை விட்டு காலியான டேபிள் பார்த்து அமர்ந்தார்கள். டம்ளர்கள் எடுத்து வைத்து ஜக்கிலிருந்த தண்ணீர் ஊற்றி சர்வர் ” என்ன சாப்பிடறீங்க” என்று கேட்டு அவர்கள் மெனு சொல்லவும் விலகினான்.
அப்போது தான் விக்கி கவனித்தான். எதிரே இரண்டு டேபிள் தள்ளி சாப்பிட்டு கொண்டிருந்த இளைஞர்கள் குழு ஒன்று இவர்களையே பார்த்து கொண்டிருந்தது.
“டேய். எல்லாரும் உன்னையே பார்க்கிறாங்க. செல்பி எடுத்துக்க வருவாங்கனு நினைக்கிறேன்.”
செல்போனிலிருந்து நிமிர்ந்த மதன் அவர்களை பார்த்து விட்டு சொன்னான்.
” செல்பி எடுக்கிறதுக்கு ஆர்வமா இருக்கிற மாதிரி எனக்கு தெரியல”
அதற்குள் பிரியாணி டேபிளில் வந்திறங்கியது. இருவரும் செல் போன் பார்த்த படி சாப்பிட ஆரம்பித்தார்கள். டேபிள் அருகே நிழலாட மதன் நிமிர்ந்தான்.
அந்த இளைஞர்களில் ஒருவன் நின்றிருந்தான். அவன் தன் வலது கையில் பிரபல நடிகர் பிரதீப்பின் முகத்தை டாட்டூவாக வரைந்திருந்தான்.
அதை பார்த்த இருவரும் உஷாரானார்கள்.
“என்னப்பா?
“நீங்க தானே டைரக்டர் மதன்”
“எஸ்”
உங்களோட ‘இதன் பெயர் காதல்’ படத்துல எங்க பிரதீப்பை கிண்டலடிச்சு டயலாக் வச்சிருக்கீங்க. இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்லே”
.
“நீ. ஏப்பா அந்த டயலாக்ஸை உங்க நடிகருக்குனு எடுத்துக்கறே”
” இப்படிலாம் ஜகா வாங்காதீங்க. உண்மைய ஒத்துக்குங்க.”
இன்னொரு இளைஞன் இங்கு நடப்பதை தன் செல் போனில் படம் பிடித்து கொண்டிருந்தான்.
“நீ யாரு எங்களை சொல்றதுக்கு” என்ற படி எழுந்த விக்கியை கையமர்த்திய மதன் தன் மீசையை நீவி விட்டவாறே சொன்னான்.
“ஆமாம். உங்க நடிகர் பிரதீப்பை தான் சொன்னேன். என்ன பண்ண போறே..?”
இதற்குள் கேசியர் டேபிளிலிலிருந்து எழுந்து வந்த வெள்ளை வேட்டி சட்டை மனிதர் சொன்னார்.
“என்னப்பா சாப்பிட வந்தவங்க கிட்டே பிரச்னை பண்றீங்க.”
இப்போது ஹோட்டலுக்குள் இருந்த சர்வர்களும் அங்கு ஒன்று சேரவே அந்த இளஞனின் நண்பர்கள் குழு அருகே வந்து டாட்டூ இளைஞனை தோளோடு கை போட்டு இழுத்து சென்றது.
” நீ தமிழ்நாட்ல எங்க போனாலும் உன்னை விட மாட்டோம். மன்னிப்பு கேட்க வச்சிருவோம்.”
சர்வர் அப்போது தான் மதனை கவனித்து ஆச்சரியமாக கூவினான்.
“இதன் பெயர் காதல் டைரக்டர்டா “
மற்ற சர்வர்கள் அட ஆமாம் என்பது போல் பார்த்தார்கள்.
இந்த வெள்ளை வேட்டி சட்டை மனிதர் ஆச்சரியமாகி “சார் நேத்து தான் உங்க படத்தை பார்த்தேன். சூப்பரா இருந்துச்சு. இன்னிக்கும் பார்க்கிறதுக்கு ரிசர்வ் பண்ணியிருக்கேன்” என்றார்.
சாப்பிட்டு முடித்து அவர்கள் எழுவதற்காக காத்திருந்த சர்வர்கள் செல்பி என்று மதனை மொய்க்க ஆரம்பித்தனர். கேசியர் அதட்டல் போட ” பரவாயில்லே சார்” என்ற படி எல்லோருக்கும் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தான். அவர்கள் இருவரும் காரில் வந்து ஏறும் வரை வாசலுக்கு வந்து நின்று மரியாதையோடு பார்த்தார்கள்.
” நான் அந்த டயலாக் வைக்காதனு சொன்னேன். கேட்டியா நீ. எதிர்வினைய பாரு. பிரதீப்புக்கு இருக்கிற ரசிகர்கள்லாம் வெறி பிடிச்சவங்க.”
“டேய். எழுதினா அவன் கோவிச்சுக்குவான். இவன் வருத்தப்படுவான்னு எல்லாம் எழுதாம இருக்க முடியாது. அந்த கதைக்கு அந்த காட்சிக்கு அந்த வசனம் தேவைப்படுச்சு. எழுதுனேன். “
விக்கி சொன்னான். “ஆனாலும் இந்த ஹோட்டல்ல நமக்கு கிடைச்சது டபுள்ட்ரீட்”
” தட் ஈஸ் லைஃப்” மதன் சிரித்த படி சொன்னான்.
பொள்ளாச்சி ஐந்து கிலோ மீட்டர் என்றது எதிரே வந்த போர்டு.
“சரி இங்க நாம எத்தனை நாள் தங்க போறோம்”
” பதினஞ்சு நாள்”
” சாப்பாடுக்கு பிரச்னை இருக்காதுல்ல…”
” அந்த எஸ்டேட்டை பார்த்துக்கிற வேலையாளும் அவர மனைவியும் மனசுல மட்டுமல்ல கை பக்குவத்துலயும் பிஎச்டி வாங்குனவங்க”
” அப்பாடி. ஒரு பிரச்னை சால்வ் ஆகிடுச்சு”
” ஆனா திரைக்கதைய சரியா எழுதி முடிக்கணுமே”
” அதலாம் நீ பண்ணிடுவே”
” அடுத்து இந்த படத்துல ஹீரோவா பெரிய ஆள் நடிச்சா நல்லாருக்கும். ஆனா புதுசா ஒரு பொண்ணை ஹீரோயினா செலக்ட் பண்ணா பெட்டர்னு தோணுது.”
“எப்படி வேணும்னு சொல்லு. தேடுவோம்.”
“அதலாம் வார்த்தைகள்ல சொல்ல முடியாது. மனசுல அது ஒரு ஆர்ட் மாதிரி இருக்கு. அது அப்படியே நேரில் வந்தா நல்லாருக்கும்.”
” கடவுள் தான் கொண்டு வந்து நிறுத்தணும்”
விக்கி சொல்லி முடித்த அந்த தருணத்தில் ஒரு திருப்பம் வர, காரை மதன் திருப்பும் போது தான் எதிரில் ஒரு கார் வேகமாக வந்தது . அதில் மோதாமல் இருக்க வலது பக்கம் காரை திருப்பினான். திருப்பிய வேகத்தில் அங்கே கடை வாசலில் நின்றிருந்த டூ வீலரில் மோதி அதை கீழே தள்ளி விட்டு பிரேக்கிட்டு நின்றது கார்.
இருவரும் அதிர்ச்சியாகி கார் கதவை திறந்து உடனே இறங்கினார்கள்.
” பிரியா இங்க பாரு” ஒரு குரல் கேட்க ஒரு பெண் கடையிலிருந்து வெளியே ஓடி வந்தாள்.
கீழே விழுந்திருந்த டூ வீலரை பார்த்ததும் அவள் கோபமாக அவர்களை நோக்கி ஓடி வர அவளை பார்த்த நொடியில் விக்கியின் மைண்ட் வாய்ஸ் பின்வருமாறு சொன்னது. “கல்யாணம்னு பண்ணா இப்படி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணனும்”
மதனின் மைணட் வாய்ஸ் சொன்னது. ” இந்த பெண் நம்ம புதுபடத்துல வர்ற ஹீரோயின் கேரக்டருக்கு கச்சிதமா இருக்கா”
ஆனால் காலத்தின் மைண்ட் வாய்ஸ் வேறு விதமாக இருந்தது.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
அடுத்த திங்கள் தொடரும்.
2 comments on “தொடர்கதை : பூங்கதவே தாழ் திறவாய்”
rajaram
சிறப்பான தொடக்கம், அருமையாக உள்ளது. அடுத்த படத்திற்கான கதாநாயகியா? அல்லது வருங்கால மனைவியா என்று அடுத்த வாரம் வரை காத்திருக்கனுமா? காத்திருப்போம்!
thileep
அருமை.... காத்திருக்கிறோம்... 👍🏻