அத்தியாயம்-18
ஆர்.வி.சரவணன்
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க…
அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3
அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6
அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9
அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12
அத்தியாயம்-13 அத்தியாயம்-14 அத்தியாயம்-15
அத்தியாயம்-16 அத்தியாயம்-17
மதன் தன் பெற்றோரை வரச்சொல்லி போன் செய்து சொன்ன பிறகு மூர்த்தி “தம்பி மனசு தளர்ந்து போயிடுச்சு. நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கறேன்” என்று கிளம்பினார்.
“டாக்டரை வர சொல்லவா”
” வேணாம் தம்பி. தனிமையில உட்கார்ந்து கதறி அழணும் போல இருக்கு” சொல்லி கொண்டே அவர் வெளியில் செல்ல, ” நீங்க ரெண்டு பேரும் அவர் கூட இருந்து சமாதானம் பண்ணுங்க. ” மதன் சொன்னான்.
பிரியாவும் கௌரியும் தலையாட்டியபடியே அவர் பின்னே சென்றனர்.
அவன் அம்மாவிடமிருந்து போன் வந்தது.
“பணம் எப்படி கிடைச்சதுனு அப்பா கேட்க சொன்னார்டா”
“நீங்க கிளம்பி இங்க வாங்க… விளக்கம் சொல்றேன். நீங்க வரலைனா அந்த பணத்தை இது வரைக்கும் திருட்டு பட்டம் சுமந்த மூர்த்திக்கு இழப்பீடாக் கொடுத்திடுவேன்” . பதில் எதிர்பார்க்காமல் செல் போனைக் கட் செய்தான்.
“அப்பா கிட்ட கொஞ்சம் பார்த்து பேசு.” விக்கி சொன்னான்.
“அவர் பாட்டுக்கு இஷ்டமா நடந்துக்குவாரு. இப்ப இவங்கக்கிட்ட தலை குனிஞ்சு நிற்கிறது நான் தானே… மூர்த்தி முகத்தையே என்னாலே நிமிர்ந்து பார்க்க முடியலடா”
அப்போது டிவியில் செய்தி வந்தது.
“நடிகர் பிரதீப் X தளத்தில் மதனை பாராட்டி பதிவிட்டிருக்கிறார். இதன் பெயர் காதல் திரைப்படத்தை படத்தை ரசித்து பார்த்தேன். வாழ்த்துகள் மதன். தங்களின் படத்தில் பணி புரிய ஆர்வமாய் காத்திருக்கிறேன்.என்று தெரிவித்திருக்கிறார்.ஆனாலும் பிரதீப் ரசிகர்கள் இதை ஏற்று கொள்ள மாட்டோம் என்று Pls avoid madhan movie என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.”
மதனை அந்த செய்தி எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. மூர்த்தி பிரச்னைதான் அவனுக்குள் சுழன்றடித்து கொண்டிருந்தது.
அன்று மாலையே மதனின் பெற்றோர் வந்து விட்டனர்.
உள்ளே நுழைந்ததுமே அவன் அப்பா கேட்ட கேள்வி “எப்படி கிடைச்சது. எங்க இருந்தது?”
“உங்க பேங்க் அக்கவுண்ட்ல இருக்கு. மாமா தான் அந்த பணத்தை திருடியிருக்காரு. இந்தாங்க. பேங்க் ரிசிப்ட்”
மதன் நீட்ட அம்மா தான் வாங்கினாள்.
“உனக்கு யாருடா சொன்னா?
“
“மேனேஜர்”
உடனே செல் போனை எடுத்தார்.
“ஏன் நீ சொன்னேனு அவரை திட்ட போறீங்களா..? நான் ஏன் இது வரைக்கும் சொல்லலனு அவரை ஏற்கனவே திட்டிட்டேன்.”
மூர்த்தி வாசல் கதவோரம் வந்து நின்றார். பிரியாவும் அவள் அம்மாவும் அவர் பின்னே நின்றனர்.
“அது இந்த பணம் கிடையாது”
” சரி யார் கொடுத்த பணம்… அதஹ் சொல்லுங்க.”
“அப்பா கிட்ட எதிர்த்து வாயாடாதடா.”
” நீ சும்மா இரும்மா. சொல்லுங்க யார் கொடுத்த பணம்.?”
அவர் சும்மா இருக்கவே,
” மாமா திருட்டினார்ங்கிற விசயம் நீங்க மூர்த்தியை தண்டிச்ச பின்னாடி தான் தெரிய வந்திருக்கு. சத்தம் போடாம பணத்தை கொண்டு போய் உங்க அக்கவுண்ட்ல கட்டிட்டீங்க. சரி மூர்த்திக்கிட்ட இத எப்படி ஒத்துக்கிறதுனு ஈகோ உங்களை தடுத்திருக்கு.. அதனால் சொல்லல. ஆனா அவரை மரியாதையா நடத்தியிருக்கலாம். திருடன்னு சமயம் கிடைக்கிறப்பலாம் சொல்லி காட்டி பயமுறுத்தி கொத்தடிமை மாதிரி வச்சிருந்தது தப்புப்பா”
அப்பா விஜயராகவன் மதனையே கண்கள் இமைக்காமல் பார்த்தார்.
அந்த பார்வையை மதனால் தாங்க முடியாது போகவே அம்மாவின் பக்கம் பார்வையை திருப்பினான்.
” சரி நீங்க சொல்லுங்க. அப்பா தான் இந்த மாதிரி நடந்துகிட்டார். உங்களை நம்பி வந்தவர் தானே மூர்த்தி. நீங்க அப்பா கிட்ட அவருக்காக வாதாடியிருக்கலாம்ல. உங்க மனசாட்சி உறுத்தல”
“உங்கப்பா கிட்ட அதெல்லாம் பேச முடியாதுடா”
“அதனால் நீங்களும் கண்டும் காணாத மாதிரி இருந்திட்டீங்க.”
“நான் மரியாதை குறைவா மூர்த்திய நடத்தவே இல்லடா. அவருக்கும் அவங்க குடும்பத்துக்கும் தேவையானத நான் செஞ்சுகிட்டு தான் இருந்தேன்” அழுதாள்.
“நீங்க சொல்லுங்கப்பா.”
“என்ன பண்ணணும்ங்கிற. ஆமாம் மூர்த்தி திருடன் கிடையாது. இத சொன்னா எங்க நம்மளை விட்டுட்டு போயிடுவானோனு சொல்லல. பயமுறுத்தி வச்சா தான் போக மாட்டான்னு அப்படி நடந்துகிட்டேன்.” சிடுசிடுத்தார்.
நம்ம கிட்ட வேலை பார்க்குற வேலைக்காரங்களை பணத்தாலேயோ அவதூறு சொல்றதுனாலேயோ கட்டி போடத் தேவையில்லே. அன்பு மூலமா கட்டி போடலாம். அவங்க வாழ்க்கையவே நம்ம கிட்ட ஒப்படைக்கிறாங்க. நாம தானே அவங்களை கவனிச்சுக்கணும்” என்றவன் “மூர்த்தி. உள்ள வாங்க ” என்றான்.
அவர் உள்ளே நுழைந்தார்.
அவர் கக்கத்தில் எப்போதும் இருக்கும் துண்டு இப்போது அவரது கைகளில் இருந்தது.
“உட்காருங்க”
“பரவாயில்ல தம்பி”
“இல்ல இப்ப நீங்க உட்காரணும். உட்காருங்க” வற்புறுத்தினான்.
சோபாவின் நுனியில் உட்கார்ந்தார். முதல் முறையாக சோபாவில் அமர்கிறார். மதனோ அவனது பெற்றோர்களோ அங்கே இல்லாத நாட்களில் கூட அந்த சோபாவில் அமர்ந்ததில்லை அவர்.
“நீங்களும் வாங்க” கூப்பிட்டான் மதன்.
பிரியாவும் அவள் அம்மாவும் உள்ளே வந்தனர்.
‘உட்காருங்க’ என்றதும் பிரியா அமர்ந்து விட்டாள்.
கௌரி மட்டும் கொஞ்சம் தயங்கினாள்.
“உட்காருங்கம்மா” என்று மதன் அதட்டவே உட்கார்ந்தாள்.
“அப்பா அம்மா ரெண்டு பேரும் நீங்க நிரபராதினு ஒத்துகிட்டாங்க மூர்த்தி. நீங்க பெருமளவு பாதிக்கப்ட்டிருக்கீங்க. இதற்கு எவ்வளவு தான் இழப்பீடு கொடுத்தாலும் அது முழுமையடையாது. நீங்க தான் இப்ப முடிவு எடுக்கணும். எந்த முடிவு எடுத்தாலும் நாங்க மூணு பேருமே கட்டுப்படறோம்.” மதன் தீர்க்கமாய் சொன்னான்.
அம்மா “மதன் அப்பாவை தலை குனிய வச்சுடாதடா” என்றாள் கண் கலங்கியபடி.
” அம்மா . மூர்த்தி 14 வருசமா தலை குனிஞ்சு நிக்கிறாரும்மா ” என்றான் மதன்.
அம்மா தன் கணவனை பார்த்து கொண்டிருக்க, அவரோ மதனை முறைத்து கொண்டிருக்க , மதன் மூர்த்தியை பார்த்து கொண்டிருந்தான்.
கௌரி கலங்கிய படி புருசனின் கையை பிடித்து கொண்டிருக்க, பிரியா அப்மாவையே பார்த்து கொண்டிருந்தாள்.
விக்கி அடுத்து என்ன நடக்க போகிறது என்ற பதைபதைப்பிலிருந்தான்.
சில விநாடிகள் மௌனமாய் நகர்ந்தது. இது வரை தலை குனிந்திருந்த மூர்த்தி தன் முதலாளியை நிமிர்ந்து பார்த்தார்.
“தம்பி இனிமே என்னாலே தொடர்ந்து வேலையில இருக்க முடியாது. இந்த நிமிடத்திலிருந்து என் வேலைய ராஜினாமா செய்யறேன்.”
மதன் திடுக்கிட்டாலும் “சரி” என்று தலையாட்டினான்.
” எனக்கு இழப்பீடு எதுவும் வேணாம். இது வரைக்கும் நான் வேலை பார்த்ததுக்கு உண்டான பணம் எதுனா இருந்துச்சின்னா அத மட்டும் செட்டில் பண்ண சொல்லுங்க. அது என்னோட உரிமை.”
“சரி”
எழுந்தார்.
மதனின் அம்மாவை பார்த்து சொன்னார்.
” உண்மையில் எனக்கு முதலாளி உங்கப்பா தான்மா. எங்கியோ அனாதையா பிச்சை எடுத்திட்டிருந்தவனை கொண்டாந்து வீட்டில் வச்சு காப்பாத்தினாரு. நீ வேலைக்காரன் இல்லடா. என் பெண்ணை பாதுகாக்க வேண்டிய ஒரு சகோதரன்னு அடிக்கடி சொல்வாரு. அதனால் தான் நீங்க கல்யாணம் பண்ணிகிட்டதுக்கப்புறம் நான் இங்க வந்தேன். என்னால முடிஞ்ச அளவு வேலை பார்த்து கொடுத்திட்டேன். இதற்கு மேல என்னால இங்க இருக்க முடியாது. என்னை மன்னிச்சிடுங்க… இது வரைக்கும் எனக்கு இருக்க இடம் கொடுத்து சம்பளம் கொடுத்து பார்த்துகிட்டதுக்கு நன்றி.”
தன் மனைவி மகளை பார்த்து வாங்க என்று சைகை காட்டினார்.
அவர்களும் எழுந்தனர்.
பிரியா அப்பாவை முறைத்தாள்.
மூர்த்தி சொன்னார்.
“என் பொண்ணு. முதலாளிய நறுக்குனு நாலு கேள்வியாவது கேளுங்க. நீங்க கேட்கலைனா நான் கேட்பேன்னு சொல்லுச்சு. என்னால கேட்க முடியலம்மா. ஆனா வேற ஒண்ணு முடிவு பண்றேன்”என்று நிதானித்தார், தொடர்ந்தார்.
“தம்பி நீங்க என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு கேட்டீங்க. நான் முடியாதுனு அப்ப மறுத்திட்டேன். இப்ப சொல்றேன் தம்பி. என் பெண் பிரியாவை உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சம்மதிக்கிறேன். என் பொண்ணு என் பொண்டாட்டி கிட்ட கேட்காமயே நான் எடுக்குற முடிவு இது. “
மதனின் அப்பா , அம்மா , விக்கி , பிரியா, கௌரி எல்லோரும் இதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
” ஒரு வேலைக்காரனோட பொண்ணை நாங்க மருமகளா ஏத்துக்கணுமா. நீ எனக்கு தண்டனை கொடுக்கறியா” விஜயராகவன் கத்தினார்.
” உங்க மனசாட்சி அப்படி சொல்லுச்சுன்னா அதற்கு நான் என்ன பண்ண முடியும்? ” என்ற மூர்த்தி பதிலை எதிர்பார்க்காமல் கையிலிருந்த துண்டை தோளில் போட்ட படி வெளியே நடந்தார்.
கௌரி தொடர்ந்தாள்.
அவர்களின் பின்னே சென்று கொண்டிருந்த பிரியா குழப்பமாய் மதனை திரும்பி பார்த்தாள்.
மதன் மகிழ்ச்சியடைய கூட வெளிக்காட்ட முடியாமல் சிந்தனை வயப்பட்டு அமர்ந்திருந்தான்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
அடுத்த திங்கள் தொடரும்.