அத்தியாயம்-3
ஆர்.வி.சரவணன்
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க…
மதன் பதட்டமாய் காரின் பின் பக்கத்தில் வந்து நோட்டமிட்டான். விக்கி யார் செய்திருப்பார்கள் என்று சுற்றும் முற்றும் பார்த்தான். தென்னை மரங்களுக்கு இடையே அழுக்கு வேட்டியும் தாடியுமாய் ஒருவன் ஓடிக் கொண்டிருந்ததைக் கவனித்து ‘ஏய்…’ என்று அவன் குரல் எழுப்பும் போது தான் மூர்த்தியும் கவனித்து குரல் எழுப்பி கொண்டே ஓடவும் செய்தார்.
“ஓடறான் பாரு பிடி”
செக்யூரிட்டி விக்கி கை காட்டிய திக்கில், ஓடிக் கொண்டிருந்தவனை குறி வைத்து ஓடலானான். எஸ்டேட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஆள்களும் ஓடினார்கள்.
“ஆக்சிடெண்ட்லேருந்து தப்பிச்ச காரு போர்டிகோவில் பாதுகாப்பா நிக்கிறப்ப உடையுது பாரு” விரக்தியாய் சிரித்தான் விக்கி.
“ராஸ்கல் ” மதன் வாய் விட்டு திட்டி காலால் தரையை உதைத்தான்.
ஓடி கொண்டிருந்த மனிதன் இதற்குள் காம்பவுண்டு சுவரை ஒட்டியிருந்த தென்னை மரத்தில் தாவி ஏறி காம்பவுண்டு சுவரில் கால் வைத்து வெளியே குதித்து விட்டான்.
செக்யூரிட்டியும், வேலையாட்களும் ஏமாற்றமாகித் தளர்ந்து போய் திரும்பி வந்தனர். மூர்த்தி ” ம்… இத உடனே சுத்தம் பண்ணச் சொல்லு ” என்று மனைவியை விரட்டினார்.
“சிசிடிவி கேமரா ஏதும் இல்லியா..?”
“இல்லீங்க தம்பி”
” அப்பாவுக்கு இந்த ஊருல எதுனா முன்விரோதம் இருக்கோ..?”
” அதெல்லாமில்ல. பெரிய அய்யாவுக்கு இங்க ஏகப்பட்ட மரியாதை இருக்கு” அவசரமாய் மறுத்தார்.
காரையே பார்த்து கொண்டிருந்தவன் வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான்.
“சரி . உடனே ஆளை கூப்பிட்டு சிசிடிவி ஃபிட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க. காரை சர்வீசுக்கு அனுப்பிச்சு கண்ணாடி மாத்திட்டு வர சொல்லுங்க.”
“பண்ணிடலாம் தம்பி. போலீசுக்கு சொல்லிடலாமா..? “
“அது சேனல்ல பிரேக்கிங் நியூஸ் ஆகறதுக்கு தான் வழி வகை செய்யும் .”
” அதப் பார்த்து முடியுமா. சொல்லிடலாம்,”
தலையாட்டினான்.
“என்னோட ரூம் எங்க இருக்கு?”
“ரெண்டாவது மாடி. லிப்ட் இருக்கு. அதுலயே போங்க.”
உள்ளே இருந்த பெரிய ஹாலின் வலது பக்கம் இருந்த லிப்ட் நோக்கி செல்கையில் கவனித்தான். பிரியா செல்பில் அலங்கார பொருட்களை ஒழுங்கு படுத்தி கொண்டிருந்தாள். அவன் வருவதை பற்றி அவள் பெரிதாக அலட்டி கொண்டதாக. தெரியவில்லை. அவளது பெற்றோர்களிடம் இருந்த பவ்யம் இவளிடம் இது வரை பார்க்கவில்லை. படிப்பு தந்த தன்னம்பிக்கையாக இருக்கலாம். ஆனாலும் அவளது அந்த கெத்து அவனை கவர்ந்தது. லிப்ட் உள்ளே வந்து 2 என்ற பொத்தானை விரலால் அழுத்திய மதன்,
” பொண்ணு ஓகே. அது வாய்ஸ் எப்படின்னு பார்க்கிறதுக்கு இன்னும் 12 மணி நேரம் வெயிட் பண்ணியாகணும்.”
” டேய். அவங்க தான் நடிக்க வைக்க இஷ்டமில்லேனு சொல்லிட்டாங்களே”
” தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் நானு”
கண்ணடித்தான்.
லிப்டிலிருந்து இறங்கி அந்த ஹாலில் நடந்தார்கள். படிக்கட்டிலிருந்து ஏறி வந்திருந்தார் மூர்த்தி.
“நீங்க ஏன் வந்தீங்க..?”
” ரூமை கை காட்டி விட்டுட்டு அப்படியே இருந்துட முடியுமா” மூச்சிரைத்த படி சொன்னார்.
” சரி. வந்தீங்க. எங்க கூடவே லிப்ட்ல வர வேண்டியது தானே”
பதில் சொல்லாமல் சிரித்தபடி அறைக்கதவை திறந்து விட்டார். உள்ளே. வந்தார்கள்.
ஜில்லென்று ஏசி காற்று அவர்களை ஆரத்தழுவி வரவேற்றது. சோபாவில் விழுந்தார்கள்.
” எனக்கு வேற ரூம் இருந்தா சொல்லுங்க. அங்க தங்கிக்கிறேன்” விக்கி சொன்னான்.
“பக்கத்து ரூம் ரெடியா இருக்கு தம்பி”
“ச்சீ . ஒண்ணும் வேண்டாம். இங்கயே தங்கிக்க”
விக்கிக்கு மதன் அப்பாவின் ஞாபகம் வந்தது.
“உனக்கு தனிமை அவசியம்டா”
” இன்னிலேருந்து ரெண்டாவது மாடிக்கு யாரையும் அனுப்பிச்சு தொந்தரவு பண்ணாதீங்க. நாங்க கூப்பிட்டா மட்டும் ஆள் வந்தா போதும். நீங்க வரத் தேவையில்ல” உத்தரவிடுவது போல் சொன்னான் மதன்.
“சரி தம்பி” என்ற படி கிளம்பினார் மூர்த்தி.
“கண்ணாடி உடைஞ்ச விசயத்துல ரெண்டு பேர் மேல சந்தேகம் வருதுடா. ஒண்ணு ஓவரா சவுண்டு விட்ட காய்கறி விக்கிற பெண்மணி, ரெண்டு நடிகர் பிரதீப்போட ரசிகர்கள் குழு.”
“பிரியாவே வேணாம் விட்டுடுனு சொல்லிட்டா. ஆள் விட்டு கல்லெறியறதால அந்த பொண்ணுக்கு என்ன நன்மை இருக்க போவுது”
இரண்டு நாள் சவரம் செய்யாத தன் கன்னத்தை தடவிக் கொண்டே மதன் சொன்னான்.
“பாயிண்ட். அப்ப பிரதீப் ஆளுங்க பண்ணிருக்க வாய்ப்பு இருக்கோ..?”
” இவ்வளவு தூரம் தொடர்ந்து வந்து இத செய்ய வாய்ப்பில்லே,”
” அப்ப யாரு இத பண்ணுது..?”
அவன் கேட்ட அதே நேரத்தில்…
மரத்தில் இருந்து தாவி வெளியில் குதித்த அந்த அழுக்கு வேட்டி தாடி மனிதன் தொடர்ந்து ஓடினான். யாராவது வருகிறார்களா என்று திரும்பி திரும்பி பார்த்து கொண்டே மெயின் ரோட்டில் கால் வைத்தான். பைக் ஒன்று ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருக்க, அங்கே வந்து சேர்ந்தான். மூச்சிரைத்தது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொண்டவன் சுற்று முற்றும் பார்த்து விட்டு, தான் அணிந்திருந்த அழுக்கு வேட்டி சட்டையை கழட்டி புதரில் எறிந்தான். ஒட்டப்பட்டிருந்த தாடியை பிய்த்து எறிந்தான். பைக்கில் இருந்த பையை எடுத்து பேண்ட் சட்டை அணிந்து கொண்டான்.கண்ணாடி பார்த்து தலைமுடியை விரல்களால் கோதினான். மீசையை நீவி விட்டு கொண்டான். பைக்கில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்து கொண்டே விஜயராகவனின் எஸ்டேட்டை ஒரு முறை பார்த்தான். அவன் முகத்தில் குரூர புன்னகை தோன்றியது. அங்கிருந்து விருட்டென்று கிளம்பி மறைந்து போனான்.
***
” டேய் மணி ஏழு ஆயிருச்சு… எழுந்திரு… ” மதன் அதட்டியதும் சோம்பல் முறித்தபடி எழுந்தான் விக்கி.
இரவு இருவரும் கதை டிஸ்கசனில் 3 மணி வரை முழித்திருந்து விட்டு அப்படியே ஆளுக்கொரு திசையில் தூங்கியிருந்தார்கள். மெத்தையின் நடுவே லேப்டாப் மூடப்படாமல கிடக்க, டீப்பாயில் விஸ்கி பாட்டில் , காலி கண்ணாடி டம்ளர்கள், சைடிஷ் , சிகரெட் பாக்கெட் ஆக்ரமித்திருந்தது.
“இண்டர்காம்ல கூப்பிட்டு ரூமை க்ளீன் பண்ண ஆள வர சொல்லு.”
வேலையாள் வந்தான். அவனது வணக்கத்தை கண்டும் காணாதது போல் அறையை விட்டு வெளியேறி பால்கனிக்கு வந்த மதன், கைகளை கட்டி கொண்டு இயற்கை அழகை ரசிக்க ஆரம்பித்தான்.
அடுத்த படத்தை பற்றிய சிந்தனை மனதிற்குள் ஓடியது.
“உனக்கே வெற்றி கிடைக்கட்டும்” என்ற பெண் குரல் திடீரென்று கேட்க, அதிர்ச்சியாகி குரல் வந்த திக்கில் பார்த்தான்.
பிரியா பூச்செடிகளுக்கு தண்ணீர் விட்டு கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் நின்றிருந்த பள்ளிச்சிறுமியிடம் தான் இதை சொல்லி கொண்டிருந்தாள். மதன் ஆச்சரியமாகி பிரியாவையே கவனித்தான்.
அவள் குரலை கேட்கணும்னு நினைச்சதற்கு முதல் வார்த்தையே அவளிடமிருந்து நல்ல வார்த்தைகளாக வருவது கேட்க சந்தோசமாக இருந்தது. செண்டிமென்ட்டை ஒரு பொருட்டாக மதிக்காதவன் தான் அதை மதிக்கும் மன நிலைக்கு வந்திருந்தான்.
“அங்க சேர் இருக்கு பாரு. உட்கார்ந்துக்க. இதோ வந்துடறேன். சேர்ந்தே ஸ்கூல் போலாம்” மீண்டும் பிரியா தான் பேசினாள். அந்த சிறுமி சரி என்று தலையாட்டி போர்ட்டிகோ பக்கம் நகர, அந்த சிறுமி முகத்தில் இருந்த உற்சாகம் ஏனோ தனக்கும் தொற்றி கொண்டதாய் உணர்ந்தான்.
பிரியாவையே பார்த்து கொண்டிருந்தவன் அவள் கழுத்தில் இருந்த ஸ்கூல் ஐடென்டிடி கார்டை பார்த்ததும் அதில் எழுதப்பட்டிருந்த பள்ளியின் பெயரை படிக்க முனைந்தான். உள்ளுணர்வு உறுத்தியதோ என்னவோ திடீரென்று பிரியா சுற்று முற்றும் பார்த்தாள். மேலே பார்த்தாள்.
அவள் பார்ப்பது தெரிந்தவுடன் தப்பாக நினைக்க போகிறாளே என்று உடனடியாக பார்வையை திருப்பினான். இருந்தும் ஓரக் கண்களால் அவளை கவனிக்க தவறவில்லை.பிரியா ஒரு சில விநாடிகள் தான் அவனை பார்த்தாள். தன் புடவை தலைப்பை சரி செய்து கொண்டாள். பின் தண்ணீர் ஊற்றி கொண்டிருந்த டியூபை சுவரில் இருந்த கொக்கியில் மாட்டி விட்டு காம்பவுண்ட்டுக்குள்ளேயே இருந்த அவர்களது வீட்டிற்குள் நுழைந்தாள்.
“என்னப்பா சைட் சீயிங்கா ?”
விக்கி குரல் கேட்டு திரும்பியவன் ” எஸ் எவ்வளவு நல்லாருக்கு பாரு”
“எஸ் . வாட்ச்மேனோட பொண்ணு ஒரு தேவதை மாதிரி இருக்குல்ல.”
” நான் அந்த பொண்ணை தான் பார்த்துகிட்டிருந்தேன்னு நீயா ஏதும் கற்பனை பண்ணிக்காதே”
“எனக்கு சின்ன வயசுலயே காது குத்திட்டாங்க.””
” ஓ அப்படியா அது எனக்கு தெரியாது” சீரியசாக சொல்லியபடி உள்ளே செல்ல திரும்பினான்.
விக்கி கையிலிருந்த செல்போன் அடிக்கவும் ” டேய் உங்க அம்மாடா”
தீயை தொட்டது போல் செல்போனை மதனிடம் கொடுத்தான்.
மதன் சலிப்பாய் வாங்கி “சொல்லும்மா ” என்றான்.
” டேய் அவன் போனுக்கு வந்தா நீ எடுக்கிற”
“நீங்க இப்ப யாருட்ட பேசணும்.”
“உன் கிட்ட தான்.”
” அதுக்கு என் போனுக்கு இல்ல நீங்க வந்திருக்கணும்”
” நீ தான் சைலண்ட. மோட்லயே வச்சிருக்கியே”
சரி சொல்லுங்க”
“அங்க வசதியெல்லாம் எப்படி இருக்கு..?”
” இத கேட்க தான் போன் பண்ணீங்களா..?”
” டேய். சூப்பர் ஜாதகம் ஒண்ணு வந்திருக்கு. பொண்ணோட அப்பா பெரிய பிசினஸ்மேன். யாரு தெரியுமா..? அவரே வீடு தேடி வந்து உங்க பையனுக்கு பொண்ணு தர சம்மதம்னு சொல்றாரு. பொண்ணும் அப்பா கூட பிசினஸ் பார்த்துகிட்டிருக்கு”
சந்தோசம் வார்த்தைகளில் தெறித்தது.
“எனக்கு கல்யாணம் இப்ப வேணாம்,” குரல் உயர்த்தினான்.
” நீதானேடா முதல்படம் முடிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னே”
” மனசுக்கு பிடிச்ச மாதிரி படம் எடுத்திட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்.”
“படம் தான் எல்லாருக்கும் பிடிச்சிருக்கே”
“என் மனசுக்கு பிடிக்கலியே”
“அடுத்த படம் உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி தானே எடுக்கிறே..?” மதன் அம்மா சலித்த படி சொல்லவும். “இல்ல. ஆக்சன் படம் எடுக்கிறேன்” சொல்லி போனை கட் செய்தான்.
சலிப்புடன் போனை ஆஃப் செய்ய போகும் போது தான் கவனித்தான். அதில் கேலரி ஓப்பன் ஆகியிருக்க, பிரியா பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருக்கும் படம் அதில் இருந்தது.
படம் அவசரத்தில் எடுக்கப்பட்டிருந்தது. நேர்த்தியாக இல்லை. ஆனாலும் பிரியா நேர்த்தியாக ஒரு ஓவியமாக அதில் தெரிந்தாள்.
‘ஆமா இவன் ஏன் அவளை செல்போன்ல போட்டோ பிடிச்சு வச்சிருக்கான்…’ மதன் குழப்பத்தில் ஆழ்ந்தான்.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
அடுத்த திங்கள் தொடரும்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
One comment on “தொடர்கதை : பூங்கதவே தாழ் திறவாய்”
rajaram
அருமை, கார் கண்ணாடிய உடைச்ச நபர் சஸ்பென்சா இருக்கே...!