அத்தியாயம்-5
ஆர்.வி.சரவணன்
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க…
அத்தியாயம்-1
அத்தியாயம்-2
அத்தியாயம்-3
அத்தியாயம்-4
“இதுக்கெல்லாம் பயப்படாதே ப்ரியா அப்பா நான் இருக்கேன்ல. என்கிட்டே அந்த பய வரட்டும். நான் பார்த்துக்கிறேன்” தன் மகள் சொன்ன தகவல்களை கேட்ட மூர்த்தி உள்ளூரக் கவலைப்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளுக்குத் தைரியமூட்டினார்.
“என்னிக்கு முதல் முறையா உன்கிட்டே வம்பு பண்ணினானோ அன்னிக்கே நீ அப்பாக்கிட்ட சொல்லியிருக்கணும்மா ” அம்மா கௌரி சொன்னாள்.
“அப்பா தான் முதலாளி பையன் வர்றார்னு பிசியா இருந்தாரே” பிரியா சலிப்பாய் பதில் சொன்னாள்.
“நீ தைரியசாலி. ஒரு சின்ன பிரச்னைக்குப் போய் ஏம்மா அலட்டிக்கிறே..?”
“இதை அப்படிக் கடந்து போக முடியாதுப்பா… அவன் பிடிவாதக்காரனா இருக்கான். நேர்ல பார்க்கிறப்ப நீங்களே ஒத்துப்பீங்க” பிரியா கடுப்பாய் சொன்னதும் மூர்த்தி அவளையே பார்த்தார். மகள் அவனிடம் அல்லல்பட்டிருக்கிறாள் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.
“சரி வா… நாம போய் இதை மதன் தம்பி கிட்ட சொல்லுவோம். உடைஞ்சது அவரோட காராச்சே. நாம கேள்விப்பட்டதைச் சொல்லாம இருக்கக் கூடாது”
“நானும் வரணுமா..?” தயங்கினாள்.
“நீதானேம்மா அவனைப் பார்த்திருக்கே. அப்புறம் ஏன் தயங்கறே..?”
“அவர் வானத்துக்கும் பூமிக்குமாக் குதிக்க போறாரு. உங்க பிரச்னைக்கு என் கார் தான் கிடைச்சுதானு சொன்னார்னா என்னப்பா பண்றது ?”
“எல்லாம் நம்ம தலையெழுத்துனு நினைச்சுக்க வேண்டியது தான்” கௌரி சலிப்பாய் தன் கையில் இருந்த கரண்டியைத் துலக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் பக்கம் வீசினாள்.
“சரி வாங்க” பிரியா அப்பாவுடன் கிளம்பினாள்.
சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டபடி டிவியில் நீயூஸ் மேய்ந்து கொண்டிருந்த மதன், மூர்த்தியை பார்த்ததும் உடனே காலை எடுத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தான். பின்னால் பிரியாவும் வரவே ஆச்சரியமானான்.
பிரியாவுக்குப் பார்வையை எங்கே வைத்து கொள்வது என்று தெரியவில்லை. ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள். தன்னைப் பார்க்கத் தைரியமில்லையா அல்லது விரும்பவில்லையா என்பதை மதனால் அனுமானிக்க முடியவில்லை.
“சொல்லுங்க மூர்த்தி. என்ன விசயம்?”
மூர்த்தி விசயத்தைச் சொல்லச் சொல்ல துள்ளிக் குதித்து எழுந்த்தென்னவோ விக்கி தான்.
“எவன் அவன். என்கிட்ட காட்டுங்க. அடி வெளுத்திடறேன்.”
“பொறுமையா இருடா” என்று அதட்டிய மதன் “எங்கிருக்கான் அவன்..?” என்றான்.
“தெரியாதுங்க. கடைத்தெருல ஒரு டீக்கடை இருக்கு. அங்க தான் ரெண்டு நாளும் அவனை பார்த்தேன்.” தரையின் மார்பிள் டிசைனை பார்த்தவாறே பேசினாள் பிரியா. பின் மீண்டும் ஜன்னல் பக்கம் பார்க்க ஆரம்பித்தாள்.
” சரி உங்களைப் பார்க்க வரப்போறேன்னு சொல்லியிருக்கான்ல. எப்படியும் வருவான். பிடிச்சிடலாம்.”
“பொண்ணுதான் கவலைப்படுது.” கௌரி சமையலறையிலிருந்து வெளி வந்தபடி சொன்னாள்.
“என்னம்மா நீ. சில ஆம்பளைங்க அப்படி தான். பெண்களை இம்சை பண்ணிக்கிட்டுத்தான் இருப்பாங்க. அதுக்கெல்லாமா கவலைப்படறது”
“ஏழைங்க கண்ணாடி மாதிரி. எத்தனை கல்லு எங்கிருந்து எதுக்காக வரும்னு பயத்தோடவே வாழ வேண்டியதா இருக்கே” கௌரி சொன்னாள்.
“ஹா ஹா. பணக்காரங்க நாங்க இரும்பு மாதிரினு நினைச்சுக்குங்க. இரும்பைத் தாண்டி கல்லு வர வாய்ப்பில்லே.” விக்கி தான் இதைச் சொன்னான்.
“டயலாக் எழுதற நேரமா இது” – மதன் அவனை பார்த்து கடிந்து கொண்டான்.
“இனிமே இது என் பிரச்னை. அவன் கிட்டேருந்து உன்னைப் பாதுகாக்க நான் இருக்கேன். கவலைப்படாம நீ ஸ்கூலுக்கு கிளம்பு”
“நன்றி தம்பி”
“சரி. நானும் பார்த்திட்டே இருக்கேன். உங்க பொண்ணு ஏன் என்னையப் பார்த்து பேசாம எங்கோ பார்த்துப் பேசுது”
“நீங்க முதலாளி இல்லியா .அதான். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பாருங்க. பதிலுக்கு பதில் பேசும்.”
பிரியா தன் அப்பாவை முறைப்பது போல் பார்த்து விட்டு அங்கிருந்து அகன்றாள். கௌரியும் மூர்த்தியும் கிளம்ப விக்கி, “நேத்து இட்லிக்கு ஒரு சாம்பார் பண்ணியிருந்தீங்களே. டேஸ்ட் செமயா இருந்துச்சு”
இதை கேட்டதும் கௌரி ஆச்சரியமாகி ஏதோ சொல்ல வர மூர்த்தி அவளைத் தடுத்து , “தம்பிக்கு பிடிச்சிருக்கா..?” என்றார்.
“நானாவது தொட்டுத் தான் சாப்பிட்டேன். அவன் சாம்பார்லயே உருண்டு புரண்டான்”
மதன் டேய் என்று செல்லமாக அதட்ட, அவர்கள் சிரித்தபடி கிளம்பினார்கள்.
“ஆமா. தைரியமா அவனை அடிச்ச பிரியா எதுக்கு இப்படி கவலைப்படுது. அவ்வளவு பெரிய அப்பாடக்கரா அவன்.”
“அவன் கிடைச்சவுடன் அவன் கி்ட்டயே கேளு”
அப்போது தான் டிவியில் பிரேக்கிங் நியூஸ் என்ற எழுத்துக்கள் திரையில் வந்தது.
‘அண்மைச் செய்தி. இதன் பெயர் காதல் திரைப்படத்தின் இயக்குனர் மதனின் கார் கண்ணாடி உடைப்பு’
இந்த சம்பவம் பொள்ளாச்சியில் உள்ள மதனின் இல்லத்தில் நடைபெற்றிருக்கிறது. உடைத்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள். மதன் பிரபல தயாரிப்பாளர் விஜயராகவனின் மகன் என்பது நாம் அறிந்ததே ……
ரிமோட் எடுத்து ஒலியைக் குறைத்த மதன் சொன்னான்.
“இது ஒரு பிரேக்கிங் நியூஸ்னு சொல்றாங்க பாரு”
“இப்ப உங்கப்பா நியூஸ் பார்த்திட்டு கோபத்துல குதிக்க போறாரு”
“குதிக்கட்டும். இப்படியாவது எக்சர்சைஸ் பண்ணட்டும்.”
********
அதே நேரம் டிவியில் வந்த பிரேக்கிங் நியூஸ் பார்த்த முத்து அதிர்ச்சியானான்.
டென்சனில் அறைக்குள் அங்குமிங்கும் நடக்க ஆரம்பித்தான்.
‘இது போலீஸ் கேசாகாது என்று நினைத்திருக்க, போலீஸ் கேசாகி இருக்கிறதே. இந்த சமயத்தில் பிரியா அப்பாவைச் சந்திக்க முடியாது போலிருக்கே. பிரியாவிடம் நான் தான் கார் கண்ணாடியை உடைத்தேன் என்று சொல்லியிருக்க கூடாதோ. கூடாது தான்’. கண்ணாடியில் தன் முகம் பார்த்து அவனே ‘த்தூ’ என்று துப்பி கொண்டான்.
அவனுக்கு முதலில் கார் கண்ணாடியை உடைக்கும் எண்ணமே இல்லை. உடைத்ததற்கு காரணங்கள் இரண்டு. ஜன்னலில் அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்ட போது, மதன் மூர்த்தியிடம் சினிமாவில் அவளை நடிக்க வைக்கலாமே என்று சொன்னதைப் பார்த்துத்தான் கோபம் வந்து காரை உடைத்தான்.
இந்தக் காரணத்தை பிரியாவிடம் சொன்னால் நீ வேணாம்னா நான் சினிமாவில் நடிக்க கூடாதா. நான் நடிப்பேன்னு சொல்லி விட்டால் என்னாவது? எனவே தான் பிரியாவின் அப்பா வேலைக்கு உலை வைக்க தான் இதை செய்தேன் என்ற இன்னொரு காரணத்தை சொல்லியிருந்தான்.
வேறு ஊர் சென்று மறைந்து கொண்டு விடலாமா..? கண்டுபிடித்து விட்டார்கள் என்றால் அப்பா அம்மாவுக்கு தான் தொந்தரவு. இங்கயே இருந்து விடலாம். என்ன பண்றானுங்கங்கிறதப் பார்ப்போம்.
“என்னடா அங்கயும் இங்கயும் அலைஞ்சுட்டிருக்கே. எதுனா தப்பு பண்ணிட்டியா..?” அவன் அம்மா கேட்டாள்.
“ஆமாம். உனக்குப் பையனா பொறந்த தப்பத்தான் பண்ணிட்டேன்.”
“படிச்சு ஒரு வேலைக்குப் போகத் துப்பில்லே. வாயை பாரேன்”
“பையன் சரியாத்தான் சொல்றான்.” பீடி புகைத்து கொண்டே அவன் அப்பா சொன்னார்.
“குடிகாரா. எட்டி விட்டேன்னா ரோட்ல போய் விழுவே கம்முனு இரு” தாய் அதட்டினாள்.
வெளியில் வந்து வண்டியை எடுத்தான் முத்து. எங்கு செல்வது என்று தெரியவில்லை. பாதை போன போக்கில் எல்லாம் ஓட்டிக் கொண்டிருந்தான்.
எதிரில் வந்த ஒரு பைக் மீது மோத இருந்து விலகி வண்டியை நிறுத்தியவன் எதிரில் வந்த ஆளை முறைப்பதற்காக நிமிர்ந்து பார்த்தான்.
எதிரில் வண்டியில் இருந்தது சப் இன்ஸ்பெக்டர் ராஜவேல்.
அவனது பைக்கின் முன் பக்கம் ஒட்டப்பட்டிருந்த நடிகர் பிரதீப்பின் படத்தையும் அவனையும் ஒரு சேர பார்த்தார்.
அவரது பார்வையில் முறைப்பு இருந்தது.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
அடுத்த திங்கள் தொடரும்.