ஆர்.வி.சரவணன்
எழுத்தாளர் அறிமுகம் :
எழுத்தாளர் ஆர்.வி .சரவணன் அவர்களின் சொந்த ஊர் கும்பகோணம். பணி நிமித்தம் சென்னையில் இருக்கிறார். தற்போது முகநூலில் தொடர்ந்து எழுதி வரும் இவர் இளமை எழுதும் கவிதை நீ…., திருமண ஒத்திகை என்ற இரு நாவல்களை வெளியிட்டுள்ளார். (திருமண ஒத்திகை நாவல் பாக்யா வார இதழில் தொடர்கதையாக வெளி வந்து சிறப்பான வரவேற்பைப் பெற்றது.) கல்கி, குமுதம், குங்குமம், தினமணிக்கதிர் என வார, மாத இதழ்களில் இவரது சிறுகதைகள் இதுவரை 9 சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது. சினிமா என்பது இவருக்கு பொழுதுபோக்கு மட்டுமல்ல. அதில் ஒரு கதாசிரியராக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். கே.பாக்யராஜ் திரைப்படங்களைப் பற்றி ‘இது நம்ம பாக்யராஜ்’ என்ற தலைப்பில் முகநூலில் 35 அத்தியாயங்கள் வரை சினிமா கட்டுரை எழுதி இருக்கிறார். அரியாசனம் என்ற நாவலை தற்போது எழுதி வருகிறார். முகநூலுக்கு முன் குடந்தையூர் என்னும் வலைப்பூவில் கதை, கட்டுரைகள் எழுதி வந்தார்.
*********
“உண்மையான காதல் எங்கிருக்கிறதா நினைக்கறீங்க?”
“எங்க ரெண்டுபேர் கிட்ட…” அசால்டாக பதிலளித்தாள் மீரா.
கேள்வி கேட்டு கொண்டிருந்த நெறியாளர் புன்னகைத்தார். மேடையில் இருந்தவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டார்கள். இதை மாதவனும் மீராவும் கவனித்தார்கள்.
“அத நீங்களே சொல்லிக்க கூடாது. இந்த உலகம் சொல்லணும்”
சொன்ன நெறியாளரை வினோதமாக பார்த்தாள் மீரா.
“நானும் என் காதலரும் இந்த காதலர் தின விழாவுக்காகவே போட்டுட்டு வந்திருக்கிற ட்ரெஸ் எப்படி இருக்கு?”
“நிஜமாவே நல்லாருக்கு. நானே சொல்லணும்னு நினைச்சேன். செம மேட்சிங்”
“குட். இதற்காக எவ்வளவு மணி நேரம் செலவாச்சு தெரியுமா? ஏன் செலவிட்டோம் தெரியுமா? இந்த பங்சன்ல நாங்க ரெண்டு பேர் மட்டும் தனித்துவமா தெரியணும். எல்லாராலும் கவனிக்கப்படணும்னு தான். இப்ப எல்லாராலும் ஈர்க்கப்பட்டோமா இல்லியா. அதே போல் தான் எங்களோடது உண்மையான காதல்னு எங்களுக்கு தெரியுது. இந்த உலகத்துக்கும் ஒரு நாள் தெரிய வரும்.”
கை தட்டினார்கள்.
“நீங்க என்ன சொல்றீங்க..?”மாதவனிடம் கேட்டார்.
“எண்ணம் நான். செயல் அவள்”
கண்டக்டரின் விசில் சத்தம் மாதவனை பழைய ஞாபகத்திலிருந்து மீட்டெடுத்து கொண்டு வந்தது.
பேருந்திலிருந்து இறங்கினான்.
ஏழு வருடங்களுக்கு பின் இன்று தான் திருச்சியில் காலடி வைத்திருக்கிறான். காதல் பிரச்னையில் திருச்சி பக்கம் வரவே கூடாது என்று விரட்டி அடிக்கப்பட்டு, கசப்பான அனுபவங்களுடன் வெளியேறியவன் தான் நண்பனின் திருமணத்திற்காக இன்று வந்து இறங்கியிருக்கிறான்.
பஸ் ஸ்டாப்பிலிருந்து தனியே பிரிந்து சென்ற சாலையில் நடக்க ஆரம்பித்தான்.மணி ஒன்பதாகி விட்டது. ரிசப்ஷன் வேறு முடிந்திருக்கும். நான் உன் தம்பி மாதிரினு ஒரு படத்துல கவுண்டமணிகிட்ட கார்த்திக் கண்ணை கசக்கிற மாதிரி தான் நண்பன் சேகர் தன் கல்யாண பத்திரிகையை வாட்ஸ் அப்பில் அனுப்பி விட்டு கண்ணை கசக்கினான். சரி வரேன் என்று சொல்லி விட்டதால் சொன்ன படி வந்து விட்டான்.
ஒரு ஆட்டோ டிரைவரை நிறுத்தி கல்யாண மண்டபத்திற்கு வழி கேட்டான்.
“நேரா போய் வலது பக்கம் திரும்புங்க”
“தேங்க்ஸ்”
நடக்க ஆரம்பித்தான். தன் மனதுக்கு எவ்வளவு நெருக்கமான ஊர் இது. தனக்கு அன்னியப்பட்டு போன மாதிரி ஒரு பீலிங். அதற்கு காரணம் மீரா.
‘இப்ப எங்கிருப்பா அவ?’
‘என்ன பண்ணிகிட்டிருப்பா?’
‘நாம நினைக்கிற மாதிரி நம்மை நினைச்சுகிட்டிருப்பாளா?’ என்ற கேள்விகள் தினம் ஒரு முறையாவது வரிசை கட்டும். இப்போதும் மனதில் வரிசை கட்ட ஆரம்பித்திருந்தது.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கல்யாண மண்டபத்தை நெருங்கினான்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக கார்கள் டூ வீலர்கள் நின்று கொண்டிருக்க சிலர் தாம்பூல பையுடன் வெளியில் வந்து கொண்டிருந்தார்கள்.
மாதவன் உள்ளே நுழைந்தான்.
வரவேற்பில் யாரும் இல்லை.
குழந்தைகள் பலூன் வைத்து விளையாடி கொண்டிருந்தார்கள்.
டேபிளில் இருந்த சர்க்கரை, கற்கண்டு, அரிசி மிட்டாய், சந்தனம் இவையே அவனை வரவேற்றன.
பேருக்கு சர்க்கரையை இரு விரல்களால் எடுத்து வாயில் போட்டு திரும்பிய போது தான் கவனித்தான்.
அங்கே வைக்கப்பட்டிருந்த வாழ்த்து பேனரில் மீரா இருந்தாள். அதிர்ந்தான்.
‘இவள் வீட்டு கல்யாணமா இது..?’
காதலி வீட்டு கல்யாணத்திற்கா வந்திருக்கோம் என்று திகைத்தவன் அடுத்த நொடியே அங்கிருந்து வெளியில் செல்ல நினைத்துத் திரும்பினான்.
எதிரிலிருந்து உள்ளே நுழைந்து கொண்டிருந்தவர் மேல் மோதிக் கொண்டான்.
சாரி என்று சொல்ல வாயெடுத்து நிமிர்ந்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
நன்றி : படம் இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்
One comment on “தொடத் தொட தொடர்கதை நீ…. – 1”
rajaram
சிறப்பான தொடக்கம்...