ஆர்.வி.சரவணன்
முன்கதை :
காதல் பிரச்சினையால் ஊருக்கே போகாத கதைநாயகன் மாதவன் நண்பனின் திருமணத்துக்காகத் தட்டமுடியாமல் ஊருக்கு வந்த போது திருமண மண்டப வாசலில் இருக்கும் பேனரில் தன் முன்னாள் காதலி மீராவின் போட்டோ இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாக, இங்கே ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாதென நினைத்தபடி திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக ஒருவர் மீது மோத, அவரை ஏறிட்டுப் பார்த்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது.
****
மாதவன், யார் மீது மோதி கொண்டானோ அவரை நிமிர்ந்து பார்த்து சாரி சொல்ல நினைத்தான். ஆனால் அவர் முகத்தை பார்த்ததும் வார்த்தையே வரவில்லை. அதிர்ச்சி தான் மேலிட்டது. மீராவின் அப்பா ராஜன் தான் அங்கே நின்றிருந்தார்.
மாதவனை அவரும் இங்கே எதிர்பார்க்கவில்லை என்பது ராஜனின் அதிர்ச்சியான முகபாவனையிலிருந்து தெரிந்தது. இதற்கு முன்பு அவரை கடைசியாய் சந்தித்த நிகழ்வு ஞாபக செல்களில் புத்துயிர் பெற்றது.
“அவனை அடிக்காதீங்க சார். என் பொண்ணு பத்தின நினைப்பை மட்டும் விட்டுட்டு தள்ளி போய்டச் சொல்லுங்க அது போதும்”
“இவனை எல்லாம் அடி வெளுக்கணும்யா. பாவம்லாம் பார்க்கவே கூடாது.”
“இந்த பாழாப் போன காதல் எதிர்க்க எதிர்க்க தான் வளருமாம். பெருமையா சொல்லிக்குறாங்க. அதான்………. பயமாயிருக்கு” இழுத்தார்.
“காதலா. இவனுங்க எல்லாம் எவளாவது கிடைப்பாளா… ஊர் சுத்திட்டு கழட்டி விடலாமானு அலையற பசங்க. எப்படி காதல் வளருதுனு பார்ப்போம். அதற்கு தகுந்தா மாதிரி உடம்பு தோலை உரிச்சிடலாம்”
இன்ஸ்பெக்டர் தொப்பியை கழட்டி வைத்த படி சேரில் அமர்ந்தார்.
இது வரை வாங்கிய அடிகள் இந்த ஜென்மத்திற்கு போதுமானது என்ற அளவிற்கு உடம்பு முழுக்க வலியும் எரிச்சலும் ஒரு சேர அவஸ்தையை தர, தன் இயலாமை மீது அசாத்திய கோபம் வந்தது மாதவனுக்கு.
மாதவனிடம் வந்து, “இங்க பாரு. என் பொண்ணு பின்னாடி சுத்தறத விட்டுடறேன்னு சொல்லு. அவரை விட சொல்லிடறேன்” ராஜன் சமாதானம் பேசுவது போல் பேசினார்.
“அப்ப இது வரைக்கும் வாங்கின அடியை என்ன பண்ணலாம்? ” மாதவன் கேட்டான்.
இன்ஸ்பெக்டர் லத்தியை எடுத்து அவன் மேல் விட்டெறிந்தார்.
“இங்க பாருப்பா. எனக்கு என் பொண்ணு வேணும். கஷ்டப்பட்டு வளர்க்கிறது உன்ன மாதிரி உதவாக்கரைகளுக்கு தாரை வார்க்கறதுக்கு இல்ல. இந்த நிமிசத்திலிருந்து என் முன்னே நிற்காதே ஓடிடு”
இதோ இன்று அவர் முன்னே நின்று கொண்டிருக்கிறான்.
வெள்ளை வேஷ்டி,சட்டை, தங்க வாட்ச், விரல்களில் மோதிரம் என்று ஏக போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது அவரது தோற்றத்தில் தெரிந்தது.
“உனக்கு பழசெல்லாம் மறக்கிற வியாதி வந்திருக்கா என்ன ?” பதட்டமாகவே இருந்தாலும் நிதானமாகவே வார்த்தைகளை விட்டெறிந்தார் ராஜன்.
“உங்க வீட்டு கல்யாணம்னு எனக்கு தெரியாது. நண்பன் கல்யாணம்னுட்டு வந்தேன். பேனர்ல உங்க குடும்ப படம் பார்த்து தான் விசயமே தெரிஞ்சுது. இதோ கிளம்பிகிட்டே இருக்கேன்.”
அவரின் பதிலை எதிர்பார்க்காமல் கல்யாண மண்டபத்தின் வாசலை நோக்கி வேகவேகமாக நடந்தான்.
அப்போது அவனை கடந்து வேகமாக உள்ளே போன பைக்கில் செல்போன் பேசியபடி போய்க் கொண்டிருந்தவன் ‘இந்தாப் போறாப்புல மாதவன்’ எனச் சத்தமாக செல்லில் யாரிடமோ சொன்னபடி வண்டியை நிறுத்தி, இறங்கி மாதவனை நோக்கி நடந்து கொண்டே ‘மிஸ்டர் மாதவன்’ என்று கூப்பிட்டான்.
எதிரே பேனரில் மீரா தன் குடும்பத்தினருடன் சிரித்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டே கடந்த மாதவன் தன்னைக் கூப்பிடுவதைக் கவனிக்கும் மனநிலையில் இல்லை. அவனின் எண்ணமெல்லாம் மீராவின் அப்பாவுக்கு எப்படியும் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வெறி மட்டுமே நிறைந்திருந்தது.
அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட வேண்டும் என்ற தவிப்புடனே பார்த்து கொண்டிருந்த ராஜனைத் திரும்பி பார்த்தவன் நிறுத்தி நிதானமாக வார்த்தைகளை வெளியிட்டான்.
“நான் எதையுமே மறக்கல… உங்க பொண்ணையும் மறக்கல”
நன்றி : படம் இணையத்திலிருந்து
செவ்வாய்கிழமை தொடரும்