ஆர்.வி.சரவணன்
இதுவரை…
காதல் பிரச்சினையால் ஊர்ப்பக்கமே தலைவைத்துப் படுக்காத மாதவன் நண்பனின் திருமணத்துக்காக ஊருக்கு போன இடத்தில்தான் மணமகள் தன் முன்னாள் காதலியின் தங்கை என்பது. அவளின் அப்பா மாதவனுடன் பிரச்சினை பண்ண, நண்பனுக்காக திருமணத்தில் கலந்து கொள்கிறான். மனசில்லாமல் நண்பர்களுடன் மகிழ்வாய் இருப்பதாய் காட்டிக் கொள்பவன் மீராவைப் பார்க்கிறான். அவளும் அவனைப் பார்க்கிறாள். அதன் பின்கோபத்துடன் வேகமாக அவனை நோக்கி வருகிறாள்.
*****
இனி…
கோபாவேசமாய் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த மீராவை கண் கொட்டாமல் பார்த்தான் மாதவன்.
எப்படியும் தன் மானம் காற்றில் பறக்க போகிறது என்று தெரிந்து விட்டது. அப்போது தான் அது நிகழ்ந்தது. அவனது சீட்டிற்கு இரண்டு வரிசை முன்னே அவள் வந்த போது திடீரென்று மீராவின் தந்தை ராஜன் குறுக்கே புகுந்து அவளது கையை இறுகப் பற்றினார். கண்களால் கூடாது என்று தலையாட்டிச் சைகை செய்தார். மீராவின் அம்மாவும் வேகநடையில் வந்து அவளது இன்னொரு கையை பிடித்துக் கொண்டார். அவர்கள் பிடியிலிருந்து விடுவித்து கொள்ள மீரா முயன்றாள், முடியவில்லை.
‘நீ இப்ப ஏதாவது கலாட்டா பண்ணின்னா ஆபத்து திவ்யாவுக்கு தான்.’ அவளின் அம்மாவின் அட்வைஸ் அவன் காதிலும் விழுந்தது.
‘கல்யாணம் நல்லபடியா நடக்கணும் சூழ்நிலை புரிஞ்சு உன்னை கண்ட்ரோல் பண்ணிக்கோ” என்ற அப்பாவின் வார்த்தைகள் அவளைத் துவள வைத்தது.
மாதவனை அப்படியே விழுங்கி விடுவது போல் மீரா பார்த்து கொண்டிருக்க, மாதவன் அவள் கண்களை நேருக்கு நேராக பார்க்கத் திணறி பார்வையை வேறுபக்கம் திருப்பி கொண்டான்.
‘மாப்பிள்ளை சாப்பிட வரச் சொல்றான். வாங்க போகலாம்’ ஒருவன் வந்து அழைக்கவே, நண்பர்கள் குழு மொத்தமும் எழுந்தது.
மாதவனையும் தோள் தட்டி எழுப்பினான் அவனை அழைத்து வந்த அந்த இளைஞன்.
அங்கிருந்து அகன்றால் போதும் என்ற நிலைமையில் இருந்தபடியால் மாதவன் விருட்டென்று வேகமாக எழுந்தான். அழையாத வீட்டில் விருந்தாளியாய் வந்திருப்பது போன்ற உணர்வே அவனிடம் மேலோங்கி நின்றது. பேருக்கு சாப்பிட்டு விட்டு மொய் கவரை கொடுத்துவிட்டு கிளம்பி விட வேண்டியதுதான் என்ற நினைப்புடன் அவன் நடந்து சென்று சாப்பாட்டு ஹாலுக்குத் திரும்புகையி்ல் ஓரக் கண்ணால் கவனித்தான். மீராவின் தந்தை, தாய் இருவரும் அவனையே பார்த்து கொண்டிருக்க மீராவோ, தப்பிய மானை தவற விட்ட புலியின் சீற்றத்திலிருந்தாள். உள்ளுக்குள் சிலீரென்றது மாதவனுக்கு.
டைனிங் ஹாலுக்குள் நண்பர்கள் குழு நுழைந்தது. அங்கே மனப்பெண்ணுடன் அமர்ந்திருந்த சேகர் ‘மாதவா இங்க வா… இடமிருக்கு பாரு’ என்று கூப்பிட்டு தன் பக்கத்து இருக்கையைக் காட்டினான். அதை திவ்யா விரும்பவில்லை என்பது அவள் முகத்தை திருப்பிக் கொண்ட விதத்திலேயே தெரிந்தது.
“வேணாம்டா. நீ பொண்ணு கூட சாப்பிடு. நான் இங்க உட்கார்ந்துக்கறேன்”
“அட வாடா” என்ற அவனது அதட்டலில் வந்தமர வேண்டிய சூழ்நிலை மாதவனுக்கு.
மற்ற நண்பர்களும் அந்த வரிசையில் இணைந்து அமர்ந்து கொண்டார்கள்.
“டேய் நாங்களும் இருக்கோம். எங்களையும் கொஞ்சம் கவனி” என்றான் ஒருவன்.
“ரொம்ப தூரத்திலிருந்து வந்திருக்கான்டா. பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. அதான்”
“நாங்க மட்டும் பக்கத்து வீட்லேருந்து வந்திருக்கோமா” இன்னொருவன் தன் பங்குக்கு கேள்வி எழுப்பினான்.
இலை முழுக்க விதவிதமான ஐட்டங்கள் இருந்தன. மூனு பொண்ணப் பெத்துட்டேன். எப்படி கல்யாணம் பண்ணப் போறேன்னு புலம்பி கொண்டிருந்த ராஜனா இவ்வளவு விமரிசையாக கல்யாணம் பண்றார், ஆச்சரியமாக இருந்தது.
பாதாம் அல்வாவை எடுத்து மாதவன் வாயில் போட்டு சாப்பிட தொடங்குகையில் தான் மீரா உள்ளே நுழைந்தாள்.
ஒவ்வொரு வரிசையாக பார்த்து சிரிப்புடன் உபசரித்து கொண்டே அவன் இருந்த வரிசைக்கு வந்தாள். இப்போது அவள் முகத்தில் கோபம் இல்லை. எகத்தாளம் இருந்தது. மாதவன் சாப்பிடுவதை நிறுத்தி அவளை கவனிக்க ஆரம்பித்திருந்தான்.
மாதவன் இருக்கைக்கு சற்று முன்னே அதாவது ஐந்து இருக்கைக்கு முன்னே அவள் வந்த போது ‘மீரா’ என்றழைத்தபடி பின்னால் வேகமாக வந்தாள் அந்த மயில்கலர் பட்டுச்சேலைப் பெண், திரும்பி பார்த்து ஆச்சரியப்பட்ட மீராவோ “வாடி ரேகா… இவ்வளவு தாமதமா, ரிசப்சன்லாம் முடிஞ்ச பின்னாடியா வர்றது” உரிமையுடன் கோபித்தாள்.
” அவர் ஆபிஸ் முடிச்சு வர லேட் ஆகிடுச்சு. அதுக்கப்பறம் அவசர அவசரமாக் கிளம்பி, இந்த டிராபிக்ல காரை ஓட்டிட்டு வந்து சேர்ந்திருக்கோம்… எல்லாம் உனக்காகத்தான்.”
” சரி… சரி, ஆமா எங்கே உன் வீட்டுக்காரர்..?”
” உங்கப்பாட்ட பேசிட்டுருக்கார். நீ எப்படி இருக்கே..?”
” எனக்கென்ன. ரொம்ப நல்லா இருக்கேன்” நல்லா என்பதை அழுத்தி சொன்னாள் மீரா.
“பரவாயில்ல மீரா. உன் உழைப்பினால் தான் உன் குடும்பம் இந்த அளவுக்கு உசந்து வந்திருக்கு. தங்கச்சி கல்யாணத்தை எவ்வளவு கிராண்டா பண்றே. பார்க்கவே சந்தோசமாயிருக்குடி” தோள்களில் கை போட்டு அணைத்த படி சொன்னாள் ரேகா.
“நீயாவது இவ்வளவு அக்கறையா விசாரிக்கிறே. சில ஜென்மங்கள் இருக்கு. நேர்ல பார்த்தாக் கூட எதுவுமே விசாரிக்கிறதில்ல. சாப்பிடறதுக்கு மட்டும் தான் வாய் திறக்குதுங்க” மாதவனை பார்த்து கொண்டே நிறுத்தி நிதானமாக வார்த்தைகளைக் கத்தி போல் விட்டெறிந்தாள் மீரா.
மீராவின் இந்த வார்த்தைகள் கேட்ட மாத்திரத்தில் மாதவன் தன் கையிலிருந்த இட்லி விள்ளலை இலையில் போட்டு விட்டு இலையை மூடி வைத்து வேகமாக எழுந்தான்.
கதைக்கான படங்களையும் தேர்வு செய்து தரும் சரவணன் அவர்களுக்கு நன்றி.
வெள்ளிக்கிழமை தொடரும்.
One comment on “தொடத் தொட தொடர்கதை நீ…. – 5”
kumar
மிக அருமையாக நகர்கிறது.
வாழ்த்துகள் அண்ணா.