ஆர்.வி.சரவணன்
இதுவரை…
காதல் பிரச்சினையால் ஊர்ப்பக்கமே தலைவைத்துப் படுக்காத மாதவன் நண்பனின் திருமணத்துக்காக ஊருக்கு போன இடத்தில்தான் மணமகள் தன் முன்னாள் காதலியின் தங்கை என்பது தெரிகிறது. அங்கிருந்து கிளம்ப நினைப்பவனை மீரா எகத்தாளப் பேச்சால் காயப்படுத்துகிறாள்.
*****
இனி
மாதவன் விருட்டென்று வேகமாக எழுந்தவுடன், திவ்யாவிடம் பேசியபடி சாப்பிட்டு கொண்டிருந்த சேகர் திகைத்தான்.
கூடச் சாப்பிட்டுக் கொண்டிருந்த நண்பர்களும் எதற்காக இப்போ சாப்பிடாமல் எந்திரிக்கிறார் எனத் திகைத்தார்கள்.
“என்னடா எழுந்தரிச்சுட்டே..?”
” வாமிட் வர்ற மாதிரி இருக்கு. நீங்க சாப்பிடுங்க “
நெஞ்சில் கை வைத்த படி சேரைத் தள்ளி விட்டு கிளம்பினான்.
” மாத்திரை எதுனா வேணுமாடா..?”
” நோ” என்ற படி கை கழுவும் இடம் நோக்கி விரைந்தான்.
மாதவன் சாப்பிடாமல் எழுந்து சென்றதை தன் தோழி ரேகாவிடம் பேசி கொண்டிருந்த மீரா முதலில் கவனிக்கவில்லை. ஆனால் எதேச்சையாகக் கவனித்தவள் அதிர்ச்சியானாள்.
“என்னாச்சுடா அவனுக்கு..?”
” வர்றப்பவே சரக்கை போட்டுட்டு வந்துட்டாரோ”
“அவன் தண்ணிலாம் அடிக்க மாட்டான்டா”
” ஆமாமாம். சைட் மட்டும் தான் அடிப்பார். அதுவும் பொண்ணோட அக்காவை” அந்த இளைஞன் இன்னொரு நண்பனிடம் கண்ணடித்த படி மெதுவாக சொல்லி சிரித்தான்.
மாதவன் வெறுப்புடன் கைகளை கழுவினான்.
மீரா சொன்ன வார்த்தைகள் அவனை அதிகமாகவே காயப்படுத்தியிருந்தன என்பது அவனது முகத்தில் நன்றாக தெரிந்தது.
கை கழுவி கொண்டு நினைவுகளும் நிஜமும் கொடுத்த வருத்தத்தோடு ஏதோ நியாபகத்தில் நின்றவனை மீராவின் குரல் சுயத்துக்கு கொண்டு வந்தது.
“ம். அப்படி தான்… இது மாதிரித்தான் மனுசாளையும் கை கழுவணும்”
மாதவன் வெகுண்டு போய் நிமிர்ந்தான்.
ஒரு சிறுமி தன் பிஞ்சு கைகளை அலம்புவதை பார்த்து சொல்லி கொண்டிருந்தாள் மீரா. மாதவனுக்கு இனி இவளை விடவே கூடாது என்று தோன்றியது. மறுகணம் அவள் முன்னே சென்று நின்றான்.
“உன் மனசில நீ என்ன நினைச்சுட்டிருக்கே..?” சீறினான்.
“அதை ஏன் நான் உன் கிட்ட சொல்லணும்.”
“ரொம்ப பேசறே நீ”
“மனசு வலிக்குதோ. அப்ப சரியா தான் பேசறேன் “
“இங்க பார். என் பிரண்டோட கல்யாணம்னு தான் நான் பெங்களூர்லருந்து இங்க வந்தேன். உங்க வீட்டு கல்யாணம்னா சத்தியமா வந்திருக்கவே மாட்டேன். “
“அந்த அளவுக்கு எங்க மேல வெறுப்பு வந்துடுச்சுல்ல”
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறிய மாதவன் பின் சொன்னான்.
“நான் பாட்டுக்கு கல்யாணத்துல ஒரு ஓரமா நின்னுட்டு அட்சதை போட்டுட்டு கிளம்பிடுவேன். அது வரைக்கும் நீ என் பக்கம் வந்திடாதே.”
“இது எங்க வீட்டு கல்யாணம். நான் எங்க வரணும் வரக்கூடாதுங்கிறத நீங்க சொல்வீங்களா” கிண்டலாய் கேட்டாள்.
“சரி நான் உன் கண்ல படாம தள்ளி இருந்துக்கறேன்”
இதற்கு அவளது பதிலை எதிர்பார்க்காமல் உடனே தள்ளி சென்றான் மாதவன்.
ஹாலில் சென்று ஆளில்லாத இடத்தில் ஒரு சீட்டில் அமர்ந்து கொண்டான். அங்கிருக்கவே பிடிக்கவில்லை. மண்டபத்தில் வெத்தலை பாக்கு தட்டை சுற்றி ஊர்கதையுடன் சிலரும், சீட்டாட்டம் என்று சிலரும் இருக்க,சிலர் படுப்பதற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தார்கள்.
“சாப்டாச்சா” ஒவ்வொருவரையும் கேட்ட படி வந்து கொண்டிருந்த ஒரு வயதானவர் அவனிடமும் கேட்டார். தலையாட்டினான்.
ஆனால் உண்மையில் பசி வயிற்றை கிள்ளியது. விட்டால் வெளியில் சென்று ரோட்டோர கடையில் எதுனா சாப்பிட்டு வரலாம். சேகர் விட மாட்டான். என்னடா இப்படி ஒரு இம்சை நமக்கு என்று அலுத்து கொண்ட போது தான் ராஜன் அவனை நோக்கி வந்தார்.
அவன் எழுந்திருக்கவே இல்லை. அவர் அதை பற்றி கவலைப்படாமல் அருகில் கிடந்த சேரை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டார்.
“நம்ம விசயம் நம்மோட இருக்கட்டும். மாப்பிள்ளை கிட்ட எதுவும் சொல்லிட வேணாம். ஒரு ஜென்டில்மேனா நடத்துக்க முயற்சி பண்ணு. ப்ளீஸ்”
வார்த்தைகளில் ஒருமை.
மாதவன் வெடித்தான்.
” ஏழு வருசம் முன்னாடி உங்க கிட்டே ஜென்டில் மேனா நடந்துகிட்டதுக்கு தான் உங்க பொண்ணு என்னை இப்ப ரவுண்டு கட்டி அடிச்சிட்டிருக்கு”
ராஜன் ஏதோ சொல்ல வர மாதவன் தடுத்தான்.
“நான் என்ன செய்யணும்ங்கிறத நீங்க முடிவு பண்ணாதீங்க. எனக்குத் தெரியும். நீங்க இப்ப ஜென்டில்மேனா நடந்துக்க முயற்சி பண்ணுங்க”
அவர் குழப்பமாய் புருவங்களை உயர்த்தியவாறே அகன்றார்.
‘செல்பிஷ் பெல்லோ’ முணுமுணுத்தவாறே அவர் செல்வதை பார்த்து கொண்டிருந்தவனுக்கு திடீரென்று ஐடியா வந்தது. செல்போன் ஆப் பண்ணிட்டு இப்படியே கிளம்பிடலாமா. சேகர் என்ன தலையா எடுத்திடுவான். அவனை பின்னாடி சமாதானப்படுத்திக்கலாம்.
மாதவன் வாசலை பார்த்தான். யாருமே இல்லை. அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தான். அவனை யாரும் கவனிப்பது போலும் தெரியவில்லை.
உடனே எழுந்தான்.
வேக நடை போட்டு வாசலை நெருங்கினான். திடீரென்று அந்த குரல் கேட்டது.
“மாதவன் வாட் எ சர்ப்ரைஸ்… வந்ததும் வராததுமா எங்க கிளம்பறீங்க..?”
குரல் கேட்ட திசையில் பார்த்தான். அவனை கூப்பிட்டபடி படியிறங்கி வந்து கொண்டிருந்தாள் ரேகா.
ஒரு வில்லில் இருந்து புறப்பட்டு இலக்கை நோக்கி வரும் அம்பின் வேகம் அவளிடம் இருந்தது.
வில்லாய், படிக்கட்டின் உச்சியில் கைகளை கட்டிக் கொண்ட படி நின்று மாதவனையே பார்த்து கொண்டிருந்தாள் மீரா.
கதைக்கான படங்களையும் தேர்வு செய்து தரும் சரவணன் அவர்களுக்கு நன்றி
செவ்வாய்கிழமை தொடரும்
One comment on “தொடத் தொட தொடர்கதை நீ…. – 6”
thileep
அருமை